Sunday, December 05, 2004

பெயரைச் சொல்லவா?

மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும்.

மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கு மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான்.

ஓருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார்.

"இதிலையிருந்த ரண்டு புத்தகத்தைக் காணயில்லை. எடுத்தனீரோ?"

எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.
"நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..."

"அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகமும் எங்கை? "

"எனக்குத் தெரியாது.."

"உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்."

நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான்.

"அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.."

மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன்.

"போட்டு வாறன்."

"அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் "
மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது.

அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது என்னை சந்தேகித்ததுää என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டதுää கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது.

"எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..."

நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

"வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.."

"தெரியும்..."

"தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?"

குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன்.

"மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்தது. சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்."

எனக்கு எதுவுமே பேச முடியவில்லை.

"புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.."

"வாழ்த்துக்கள் மாஸ்ரர் "

"அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?"
கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
"அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறேன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாக கையசைத்தார்.

Sunday, November 14, 2004

செக்கென்ன? சிவலிங்கமென்ன?

அவருக்கு சிவப்பு வர்ணம் என்றால் அறவே பிடிக்காது. ஆனாலும் அவர் தீட்டிய அந்த நவீன ஓவியத்தில் சிவப்பே நிரம்பியிருந்தது. இதைப்பற்றி அவரிடமே கேட்டுவிட்டேன். அமைதியாக அவரிடமிருந்து பதில் வந்தது.

"இது சிவனின் உருத்திர தாண்டவம். கோபத்தையும், பார்க்கும் போது பயத்தினையும் கொடுப்பதற்கு இந்த வர்ணம்தான் சிறந்தது. போதாதற்கு சிவனின் நடனத்தை ஒரு சுடலையில் நடப்பதாக வரைந்திருக்கின்றேன். பிணம் ஒன்று எரிந்து கொண்டிருக்கிறது. ஆகவே இங்கே சிகப்புத்தான் சிறந்தது. ஆனாலும் எனக்கு சிகப்பு பிடிக்காது."
அமைதியாக ஆனாலும் விளக்கமாக அவரிடமிருந்து பதில் வந்தது. ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

பார்க்கும் போது முட்ட வரும் காளை மாதிரியிருக்கும் கொஞ்சம் உற்றுப் பார்த்தால் அந்தக் காளைக்குள் ஏ.மார்க் என்ற எழுத்துக்கள் இருக்கும். A,M என்ற எழுத்துக்களின் மேற்பகுதி குத்தவரும் கொம்புகளாகவும் A யின் கீழ்ப்பகுதி இரண்டும் முன்னம் கால்களாகவும் இருக்கும். இறுதியாக வரும் K காளையின் வாலாகவும் பின்னங் கால்களாகவும் இடையில் வரும் AR இனை கச்சிதமாக அதன் உடலாகவும் அமைந்து இருக்கும். இத்தனையும் அடக்கி அற்புதமாக மரத்தில் காளை ஓவியத்திற்குள் தனது பெயரை செதுக்கியிருந்தார். அதுவே அவரின் இலச்சினையாகவும் இருந்தது. தான் வரையும் ஓவியத்தில் அந்த முத்திரையையும் அப்போ அவர் பதித்து வந்தார். தனது புத்தகங்களின் முதற்பக்கத்திலும் இந்த காளை முத்திரையை பதித்திருப்பார்.

எனது நகரில் உள்ள பிரபல்யமான பாடசாலையில்தான் அவர் ஓவிய ஆசிரியராக இருந்தார். அந்தப் பாடசாலையின் மாணவர் விடுதிக்கும் அவரே பொறுப்பாளராகவும் இருந்தார். அந்த விடுதியில் விசாலமான அறையொன்றில் மாலையில் ஆறிலிருந்து பத்துவரை அவரிடம் ஓவியம் பயில எனக்கு வாய்ப்புக் கிட்டியது. நிறைய புத்தகங்கள் வைத்திருப்பார். வாசிக்கத் தருவார். அதில் உள்ள படங்களை வரைய பயிற்சியும் தருவார். மரங்களையும், மாடுகளையும், மனிதர்களையும் அப்படியே கீறுவதில் அர்த்தமில்லை அவற்றில் நவீனங்களைப் புகுத்தி பார்ப்பவர்களுக்குப் பலவற்றைச் சொல்லவைக்கும் சித்திரங்களை வரைய வேண்டும் என்று அடிக்கடி சொல்வார்.

அப்பொழுது தென்னிலங்கையில் சிங்கள இளைஞர்கள் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சியில் ஏற்பட்டிருந்த நேரம். அந்த கிளர்ச்சி இளைஞர்கள் கன்னத்தில் கிருதாவும் குறும் தாடியும் வைத்திருந்தார்கள். அது அந்த நேரத்து நாகரிகமாகவும் இருந்தது. தென்னிலங்கைக்கும் வடஇலங்கைக்கும் சம்பந்தமில்லாத போராட்டமது. ஆனாலும் முழு இலங்கைக்கும் ஊரடங்குச் சட்டமிருக்கும். ஊரடங்குச் சட்டம் அமுலில் இருப்பதால் விடுதியில் சனி, ஞாயிறுகளில் மாணவர்கள் தங்குவதில்லை. அதனால் மார்க் மாஸ்ரரும் வார விடுமுறைக்காக தனது ஊருக்குப் போய்விடுவார்.

ஒரு சனிக்கிழமை காலை, நகரம் களை கட்டியிருந்த நேரம், நகரத்தின் மத்தியில் இருந்த பஸ் நிலையத்தில் தனது ஊருக்குப் போவதற்காக மார்க் மாஸ்ரர் காத்திருந்தார், கூடவே நானும் அவருடன் நின்றிருந்தேன். அப்பொழுது ஜீப் வண்டியொன்று பஸ் நிலையத்துக்குள் வந்து சினிமா பாணியில் கிறீச்சிட்டு நின்றது. அதன் முற்பக்கத்தில் இருந்து காவல்துறை அதிகாரி இறங்கினான். இறங்கியவன் சுற்று முற்றுப் பார்த்தான். அவனுக்குத் தன் பெருமையை யாருக்காவது காட்டவேண்டும் அல்லது யாரையேனும் பயமுறுத்த வேண்டும் என்ற எண்ணமிருந்திருக்க வேண்டும். சிறிது நேர நோட்டத்துக்குப் பின் எங்கள் இருவரையும் நோக்கி வந்தான். எனக்கு அவனைப் பார்க்கப் பயமாக இருந்தது. பயப்படாதையும் என்று மார்க் மாஸ்ரர் எனக்கு ஜாடை காட்டினார். நேராக வந்தவன் மார்க் மாஸ்ரரை நெருங்கி நின்றான். அப்பொழுது மார்க் மாஸ்ரர் கன்னத்தில் நீளமாகக் கிருதா வைத்திருந்தார். அதைக் காட்டி என்ன என்று கேட்டான். மார்க் மாஸ்ரர் சிரிப்பால் பதில் சொன்னார். காவலதிகாரி அலட்சியமாக அவரைப் பார்த்தான். விபரீதமொன்று நிகழ வாய்ப்பிருப்பதாக மனது அச்சப்பட்டது.

காவலதிகாரி ஜீப்பிற்குப் சென்று திரும்பி வந்தான். அவனது கையில் இப்பொழுது குறடு ஒன்று இருந்தது. மார்க் மாஸ்ரரின் நாடியைப் பிடித்து ஒரு பக்கமாகத் திருப்பினான். குறட்டையெடுத்து மார்க் மாஸ்ரரின் கன்னத்து கிருதா மயிர்களைப் பற்றி இழுக்கத் தொடங்கினான். மார்க் மாஸ்ரர் எதுவித சலனங்களையும் காட்டாது பேசாமல் இருந்தார். ஒரு மயிரை இழுத்துப் பிடுங்கும் போதே எவ்வளவு வேதனையிருக்கும்.

அந்த மிருகம் எதுவுமே செய்யாத அந்த அமைதியான மனிதனை வேதனைப் படுத்தி இன்பம் கண்டு கொண்டிருந்தது. எனக்கு ஆச்சி அடிக்கடி சொல்லும் வார்த்தைகள்தான் நினைவில் வந்தன.
நக்கிற நாய்க்கு செக்கென்ன? சிவலிங்கமென்ன?

"சேர்.. அவர் ஒரு மாஸ்ரர்" என்னையறியாமல் வார்த்தைகள் வந்தன. சிறிது நேரம் எங்கள் இருவரையும் அந்தக் காவலதிகாரி பார்த்தான். பிறகு பேசாமல் போய்விட்டான்.

பஸ் வந்தது. ஒன்றுக்கும் யோசியாதையும் சொல்லிவிட்டு மார்க் மாஸ்ரர் பஸ்ஸில் ஏறினார்.

ஓவியர் ஏ.மார்க் அமைதியான மனிதர். அவருக்கு கோபம் வந்து நான் பார்த்ததில்லை.

Wednesday, September 22, 2004

காதலிக்காதே கவலைப்படாதே

அவரை அங்கை ரீச்சரென்றே அழைப்போம். அவரின் முழுப்பெயர் அங்கையற்கண்ணி. அங்கையற்கண்ணி என்ற பெயர் நீண்டு போனதால் அங்கை.

அங்கை - அழகான பெயர். அவ கூடத்தான் அழகு. யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டா. தானுண்டு தன் வேலையுண்டு என்பது அவரின் சுபாவம்.

அங்கை ரீச்சர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியையல்ல. தனிப்பட்ட முறையில் நடனம் பயிற்றுவித்த ஒரு ஆசிரியை. எங்கள் ஊரில் இருந்து 22 மைல் தள்ளிப் போய்தான் நடன வகுப்பெடுத்து வருவார். நடன ஆசிரியை என்பதால் அவரின் நடையிலும் ஒரு நளினமிருக்கும். அழகு ஒன்று நளினமாக நடந்து வந்தால் இளசுகளுக்கு எப்படியிருக்கும்? அவர் போகும் போதும் வரும் போதும் எங்கள் வீதிகளில் நிறைய சைக்கிள்கள் மெதுவாக ஓடும். ஒரு பக்கம் போன சைக்கிள் தேவையில்லாமல் மறுபக்கம் திரும்பி வரும்.

அங்கை ரீச்சரின் தம்பி சுதன் என்னுடன் தான் படித்தான். சுதன்தான் அங்கை ரீச்சரை பஸ் நிலையம் வரை கூட்டிக்கொண்டு போய் விடுவான். மாலையில் பஸ் நிலையத்தில் காத்திருந்து கூட்டிக் கொண்டு வீடு போவான். சுதனுடன் நானும் பல தடவைகள் அங்கை ரீச்சருக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறேன். அங்கை ரீச்சர் என்னை அன்பாக தம்பி என்றே அழைப்பார். மாலையில் வரும்போது சுதனுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏதாவது இனிப்புகள் வாங்கி வந்து தருவார்.

அங்கை ரீச்சருக்கு ஒரு காதல் இருந்தது. அநேகமாக எல்லோருக்கும் அந்த விடயம் தெரியும். அவரின் பக்கத்து வீட்டிலிருந்த கார்த்திகேயண்ணைதான் ரீச்சரின் காதலன். அவரும் நிறைய அன்பானவர். மின்சார வாரியத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ரீச்சரின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் அவர்களது காதல் மிகவும் கண்ணியமாகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் காதல் இருந்ததாக ஊரில் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்களது காதலை யாராவது கேலி செய்தோ கேவலமாகவோ கதைத்ததாக இல்லை. வீதிகளில் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தாலும் வெறும் பார்வையுடன் விலகிச் செல்வார்கள். இத்தனைக்கும் இதுவே நான் பார்த்த முதல் கண்ணியமான காதல்.

ஓருநாள் நான் ரீச்சரைப் பார்த்தபோது அவரின்; முகத்தில் மகிழ்ச்சி மறைந்திருந்தது. ஏன் என்று நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணமும் எனக்கிருக்கவில்லை. முகத்தில் மட்டும்தான் அவரது மகிழ்ச்சி மறைந்து போயிருந்தது. செயல்களில் எதுவித மாற்றமும் இருந்ததில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நடன வகுப்புக்குச் சென்று வருவார் திரும்பி வரும்போது எனக்கும் சுதனுக்கும் ஏதாவது இனிப்பு வாங்கிவருவார். ஆனாலும் அவரது முகம் களையிழந்து இருந்தது தெரிந்தது.

ஒருநாள் இரவு அங்கை ரீச்சரின் வீட்டுப் பக்கமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஊரெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டது. கொஞ்ச நேரத்தில் எல்லாமே அமைதியாகிவிட்டது. அன்று என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. சின்னப் பையன் என்று எனக்கு யாரும் எதையும் சொல்லவில்லை. எப்படியாயினும் விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது.

அடுத்தநாளே விடயத்தை அறிந்து கொண்டேன். விடயம் இதுதான். கதைக்கு ஒரு வில்லன் வேண்டுமல்லவா. அதுவும் காதல் கதைக்கு வில்லன் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாது போய்விடும். அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினனே வில்லனாக வந்தான். அதுவும் அங்கை ரீச்சரை விட அவருக்கு பதினான்கு வயது அதிகம்.

அங்கை ரீச்சரின் தாய்க்கும் தனது உறவினனை மணம் முடித்துக் கொடுப்பதிலேயே ஆர்வமிருந்தது. சினிமா காதல் மாதிரி இவர்கள் காதலும் முக்கோணக் காதலானதால் காதலனுக்கும் வில்லனுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது. அதன் இறுதிக் கட்டமே கார்த்திகேயண்ணையின் துப்பாக்கி விளையாட்டு.

கார்த்திகேயண்ணையிடம் முயல் வேட்டைக்குக் கொண்டு செல்லும் துப்பாக்கி இருந்தது. முயல் வேட்டைத் துப்பாக்கி என்றால், சுடும் போது சன்னங்கள் சிதறிப் பாயும். அதில் ஒன்றாவது முயலில் படும் சாத்தியக் கூறு இருக்கும். இந்தத் துப்பாக்கியை வைத்துத்தான் கார்த்திகேயண்ணை விளையாட்டுக் காட்டினார். ஆளைப் பார்த்துச் சுடாமல் பயம் காட்டுவதற்காக வானத்தைப் பார்த்து சுட்டிருக்கின்றார். விளைவு சத்தம் கேட்டு ஊரெல்லாம் திரண்டு விட்டது.

கதையில் பயங்கர ஆயுதங்களை வில்லன்தான் வைத்திருப்பான். கதாநாயகன் வெறும் கையுடன் சென்று சண்டை செய்து எதிரியை வென்று காதலியை மீட்டு வருவான். ஆனால் நிலமை இங்கு வேறுவிதமாக இருந்தது. கதாநாயகன் கையில் ஆயுதமிருந்தது. இது ஊராருக்கு கார்த்திகேயண்ணையை வில்லனாக மாற்றிக் காட்டியது. ஆகவே முடிவு மங்களமாக இல்லாமல் அமங்களமாக இருந்தது. ஊராரின் ஆதரவு அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினருக்கே கிடைத்தது. பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரவோடு இரவாக அங்கை ரீச்சருக்கு அவரது தாய் வழி உறவினர் தாலி கட்டி காதல் கதையை முடித்து வைத்தார்.

எனக்கு அங்கை ரீச்சரை நினைக்க அழுகையே வந்து விடும் போலிருந்தது. கார்த்திகேயண்ணையும் பாவம். இந்த விடயத்திற்குப் பிறகு ஊரில் யாருடனும் அவர் கதைத்ததை நான் காணவில்லை. அழகான அவரின் முகத்தில் தாடி வளர்ந்து கொண்டேயிருந்தது. அந்த அவரது அழகு முகத்தை பின்னாட்களில் முழுமையாக நான் பார்க்கவேயில்லை. அங்கை ரீச்சர் கூட நீண்ட நாட்களாக நடன வகுப்பு எடுக்கப் போகவில்லை. எனது சிறுபராயத்தில் உள்ள விளையாட்டுக்கள் படிப்புக்களுடன் இவர்களது விடயம் பல காலம் மறந்தே போயிற்று.

கொஞ்ச வருடங்களின் பின்னர் அங்கை ரீச்சரை மறுபடி நான் பார்த்தேன். ஆளே முழுவதுமாக மாறியிருந்தார். நடையின் நளினங்கள் இருக்கவில்லை. முகத்தில்; சிரிப்பு சிறிதளவேனும் இல்லை. கண்களின் கீழே புதிதாக வளையங்கள் விழுந்திருந்தன. கன்னத்தில் குழிகள் இருந்தன. கண்கள் குழிக்குள் இருந்தன.

"புருசன் பயங்கரக் குடிகாரன். பாவம் இரண்டு பெட்டைகளைப் பெத்துப் போட்டு உழைக்கப் போறாள். புருசன் சுகமா வீட்டிலையிருந்து குடிச்சுக் கொண்டிருக்கிறான். எப்பிடியிருந்த பெட்டை இப்பிடிப் போனாள். மனுசன் அடிக்கிறவன் போலை" என்று ஊரில் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

இப்போ எல்லாம் அங்கை ரீச்சரைக் கூட்டிக் கொண்டு போவதற்கு சுதன் வருவதில்லை. தனியாக வந்து தனியாகவே அவர் போய்க் கொண்டிருந்தார். ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் நான் நின்ற போது அங்கை ரீச்சர் நடன வகுப்பு எடுத்து முடித்து விட்டு வந்து பஸ்ஸால் இறங்கினார். தூரத்தில் நின்று பார்த்தால் ரீச்சரை அடையாளம் காண முடியாது. அந்தளவுக்கு அவரில் மாற்றம் இருந்தது. காலம் எப்படியெல்லாம் மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது. மனது கனமானது.

"தம்பி எப்பிடியிருக்கிறாய்..? உனக்கு ஒண்டும் வாங்கிட்டு வரேல்லையடா"
இதைச் சொல்லும்போது அவரின் கண்களில் ஏதோ மின்னுவது தெரிந்தது. வாகனங்களின் வெளிச்சம் கண்ணில் நிறைந்திருந்த கண்ணீரில் பட்டு தெறிப்பதைப் புரிந்து கொண்டேன்.

அந்த வயதில் நிலமைகளை சமாளிக்கும் பக்குவம் எனக்குத் தெரியாது. பேசாமல் நின்றேன்.

"படி.. நல்லா படி.. "எனது தோளில் தட்டிச் சொல்லிவிட்டுச் சென்றார்

அடுத்தநாள் காலையில் செய்தி கிடைத்தது அங்கைரீச்சர் விசம் குடித்து இறந்து போனார் என்று.

"அம்மா இனியும் என்னாலை ஏலாது" என்று சொன்னதுதான் அங்கைரீச்சர் சொன்ன கடைசி வார்த்தைகள் என அறிந்தேன். தாய்க்குக் கட்டுப்பட்ட அந்த உயிர் தாயின் மடிலிலேயே பிரிந்தது.

கார்த்திகேயண்ணையை நான் இங்கு வரும் போது கண்டிருக்கிறேன். அந்த அழகு முகத்தை மறைத்த தாடி நரைத்திருந்தது. இப்போ அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு ஒரு எழுபது வயதாவது இருக்கும்.

ஊருக்குப் போனால் கார்த்திகேயண்ணையைத் தேடிச் சென்று கதைக்க வேண்டும். அவரது வைராக்கியத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக கல்யாணமே இல்லாமல் வாழ்ந்து என்ன கண்டீர்கள் எனக் கேட்க வேண்டும். ஊருடன் பகைத்தால் வேருடன் கெடும் என்பது உண்மையா எனவும் கேட்க வேண்டும்.

Sunday, September 12, 2004

காதலிக்காதே கவலைப்படாதே

அவரை நாங்கள் கணேந்திரமாமா என்றே அழைப்போம். அவர் எந்த வழியில் எங்களுக்கு மாமாவானார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் கணேந்திரமாமா என்றே அழைப்பார்கள் ஆகவே சிறுவர்களாகிய நாங்களும் அப்படித்தான் சொல்லிக் கொள்வோம். ஆள் கொஞ்சம் திடகாத்திரமான பேர்வளி. கராத்தே யூடோ எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அவரைக் கண்டால் ஒரு பயம் அதனோடு கூடி ஒரு மரியாதையும்; இருந்தது. அவரோடு உரையாடுவதென்றாலும் சிறிது தள்ளி நின்றுதான் உரையாடிக்கொள்வார்கள். எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான். ஆனாலும் அவரிடம் ஒரு கெட்டபழக்கம் இருந்தது. அது - எப்போதும் அவர் மப்பும் மந்தாரமுமாகத்தானிருப்பார். அவரிடமிருந்து விலகி நின்று உரையாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

கணேந்திரமாமாவின் மகன் கஜேந்திரன் என்னுடன்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பறையில் கஜேந்திரன் தனது தந்தையின் வீர விளையாட்டுக்களைப் பற்றி விளாசிக் கொண்டிருந்தான். முதல் நாள் பெரிய இடத்துப் பெண் படம் பார்த்துவிட்டு அதில் எம்.ஜி.ஆரும் அசோகனும் இரண்டு கைகளில் கம்புகளை வைத்துச் சுழன்று சுழன்று சிலம்பாடியதைக் கண்டு பிரமித்துப் போயிருந்த எனக்கு கஜேந்திரன் தனது தகப்பனைப் பற்றி பெருமையாகச் சொன்னது பிடிக்கவில்லை.

"இதென்ன கராட்டியும் யூடோவும்? இரண்டு கைகளில் கம்புகளை எடுத்துச் சுழட்டினால் கராட்டியும் யூடோவும் பறந்து போடும் "
என்று என் எரிச்சலை வெளிப்படுத்தினேன். கஜேந்திரனின் முகம் கறுத்துவிட்டது. உள்ளுக்குள்ளே எரிகிறான் என்பது அப்படியே தெரிந்தது. இனித் தனது தந்தையைப் பற்றி புளுக மாட்டான் எனத் தெரிந்தது. அந்த வகையில் எனக்கு நிறைந்த திருப்தியாக இருந்தது.

அடுத்தநாள் நானும், மதுரநாயகமும், தேவதாசும் பாடசாலை முடிந்து வந்து கொண்டிருந்தோம். யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. திரும்பிப் பார்த்தால் கணேந்திரமாமா. அவரது வீட்டு வாசலில் இருந்து எங்களை வரும்படி கைகளால் சைகை செய்தார். மூவரும் அவரை நெருங்கினோம். என்னை நெருங்கிய கணேந்திரமாமா எனது கையில் இருந்த புத்தகத்தைப் பக்குவமாக வாங்கி பக்கத்தில் உள்ள கல்லின் மேல் வைத்தார். அவரின் செய்கை புதுமையாக இருந்தது. போதாதற்கு அவரிடமிருந்து வீசிய கெடிய வாசனை ஆள் மப்பில்தானிருக்கிறார் என்பதை உணர்த்தியது. வேலியில் சொருகியிருந்த இரண்டு கம்புகளை எடுத்து எனது இரு கைகளிலும் திணித்தார்.

"எங்கை கம்பை சுழட்டு பாப்பம் "

வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வந்து விழுந்தபோதுதான் எனக்கு விபரீதம் விளங்கியது. அவர் நின்ற தோரணையும் வார்த்தைகள் வந்து விழுந்த விதமும் மதுரநாயகத்துக்கும் தேவதாசுக்கும் அச்சமூட்டியது அப்படியே தெரிந்தது. இல்லாவிட்டால் ஐந்தடி பின்னால் போய் அவர்கள் நின்றிருக்க மாட்டார்கள். கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓடிவிடுவார்கள் என்று தெரிந்தது. மூவரும் சேர்ந்து ஓடினால் நான்தான் முன்னுக்கு வருவேன். ஆனால் அன்று என்னால் அது முடியாது இருந்தது. எனது இரண்டு கைகளிலும் என்னைவிட பெரிய கம்புகள் இருந்தன. அதைவிட எனது காற்சட்டையை சேர்ட்டுடன் சேர்த்து கணேந்திரமாமா இறுகப் பிடித்திருந்தார். அவரின் வாயில் இருந்து அடிக்கடி வந்த வார்த்தைகள், எங்கை கம்பை சுழட்டு பாப்பம்.

எங்களுக்குள் மதுரநாயகம் கொஞ்சம் துணிச்சலானவன். மெதுவாக எனது காற்சட்டையைப் பிடித்திருக்கும் கையை விடுவிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான் கூடவே கணேந்திரமாமாவையும் தாஜா பண்ணிக் கொண்டிருந்தான்.

"இவன் கம்பை சுழட்டிக் காட்டோணுடம் இவனுக்கு நான் கராட்டி என்னெண்டு காட்டவேணும். "
கணேந்திரமாமாவின் வார்த்தைகள் மட்டுமல்ல முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. கண்களை உருட்டி பல்லை நெருமிக் கொண்டிருந்தார். கணேந்திரமாமா காற்சட்டையுடன் பிடித்திருந்த அவரது முரட்டுக்கை எனது வயிற்றுப் பகுதியை உறுத்தியது. திடீரென எனது முகத்தை நோக்கி வந்த கணேந்திரமாமாவின் மற்றைய கையை மதுரநாயகம் பாய்ந்து பிடித்தான். அவனுக்கு அதைத் தடுக்கப் போதிய பலமில்லை. எனது இடது கன்னத்தில் கணேந்திரமாமாவின் கை மோதியது. காற்று ஊதாமலே சிறிய பலூன் போன்று எனது கன்னம் வீங்கிப் போனது. பொறி கலங்கியது என்பார்களே அது எப்படி என்று எனக்கு அப்பொழுது நன்றாக விளங்கியது. அவரது குத்தின் வேகத்தை மதுரநாயகம் தடுத்தும் நிலை இது என்றால் தடைகள் இன்றி குத்து விழுந்திருந்தால் அந்தச் சின்ன முகம் சிதைந்திருக்கும். என்ன நினைத்தாரோ எனது கைகளில் இருந்த கம்புகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே போய்விட்டார். தேவதாஸ் கல்லில் இருந்த எனது புத்தகங்களை எடுத்துக் கொண்டான். மதுரநாயகம் என்னை அணைத்தபடி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

அன்று மாலை கணேந்திரமாமா வீட்டின் வாசலில் ஊர்ப் பெரிசுகள் சில திரண்டு நின்று,
"வாடா வெளியிலை. சின்னப்பெடியனிட்டை வீரம் காட்டுறீயோ? இப்ப வந்து காட்டுடா !
என்று கெட்ட வார்த்தைகள் சேர்த்து கத்திக் கொண்டிருந்தார்கள். கணேந்திரமாமா வெளியே வரவேயில்லை. அன்று மட்டுமல்ல சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அடுத்தநாள் கணேந்திரமாமா வீட்டிலிருந்து எனக்கு பலவகையான இனிப்பகள் வந்து சோந்தன. எது எப்படியோ அதற்குப் பிறகு சண்டைப் படங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை. அப்படி பார்க்க நேரிட்டாலும் அதில் வரும் சண்டைக் காட்சிகளைப் பற்றி யாரிடமும் நான் பேசிக் கொள்வதில்லை.

Monday, August 23, 2004

உயரே பறக்கும் காற்றாடி

மார்கழியில் மழை மேகம் வருகிறதோ இல்லையோ வானத்தில் ஆங்காங்கே பட்டங்கள் முளைத்திருக்கும். தைப்பொங்கல் வரை இது நீடிக்கும். பொங்கல் முடிந்தால் பாடசாலையும் ஆரம்பமாகிவிடும். பட்டம் விடுவதும் முடிந்துவிடும்.

மார்கழி விடுமுறையென்றால் நிறையவே மகிழ்ச்சியாக இருக்கும். ஆளாளுக்குத் தங்கள் பட்டங்களையும் நூல்களையும் தூக்கிக்கொண்டு மரங்கள் இல்லாத காணிகள், திடல்கள் தேடிப் பறப்போம்.

எங்கள் ஊரில் பட்டம் ஏற்றும் போட்டி பொங்கலன்று மாலை வெகு சிறப்பாக நடக்கும். கொக்கு, வெளவால், பிராந்து, மணிக்கூடு, வெளிச்சவீடு, வட்டம், படலம் என்று பலவிதமான பட்டங்களைப் போட்டிக்குப் பறக்கவிடுவார்கள். தனியாகவும் குழுவாகவும் போட்டியில் பங்கு பெறுவார்கள். இந்தப் போட்டியைப் பார்க்க அடிக்கடி பெற்றோருடன் போயிருக்கிறேன். ஆனாலும் இந்தப் போட்டியில் விடும் பட்டங்களிலும் பார்க்க எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் காணியில் பீற்றர் ஆறடி உயரத்தில் பறக்க விடும் படலத்தையே எனக்கு நிறையப் பிடிக்கும்.

பீற்றர் அந்த வருடத்துக்கான தனது பட்டத்தை நத்தார் அன்று பறக்க விடுவான். கமுக மரத்தின் சிலாகையை எடுத்து அதை பெருவிரல் தடிப்பில் அழுத்தமாக சீவி வில்லுப் போல் வளைத்து அதில் பனை மரத்து மட்டையில் எடுத்த நாரைக் கட்டி விடுவான். பட்டத்தை ஏற்றிவிட்டால் போதும் மேலேயிருந்து அந்தப் பட்டம் ஆட, பட்டத்தின் மேற்பகுதியில் கட்டியிருக்கும் நார் காற்றுடன் மோதித் தரும் இசையிருக்கிறதே அது நீண்ட தூரத்திற்குக் கேட்கும். கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். நத்தாரன்றும் புதுவருடத்தன்றும் அவனது பட்டத்திற்கு லைற் வேறு பூட்டிக் கலக்குவான். இதுக்காக பற்றறிகள், விட்டுவிட்டு எரியும் பல்ப்புகள் எல்லாம் நிறையவே வைத்திருப்பான். நட்சத்திரங்கள் நிறைந்த இரவில்; நாதம் தந்து விட்டு விட்டு எரிந்து கொண்டு மேலே ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் அந்தப் பட்டத்தை நாங்கள் யாரும் தொட அனுமதி கிடையாது. பட்டம் மேலே போனாலும் அதன் நூலைக் கூடத் தொட விடமாட்டர்கள். பீற்றரை விட அவனது தம்பி துரைதான் மோசம். பட்டத்திற்குக் கிட்டவே விடமாட்டான்.

பீற்றர் பெரிய பட்டமாக விட்டாலும் துரை சின்ன வெளவால் பட்டத்தைத்தான் பறக்க விடுவான். பட்டத்தை தொட துரை மறுப்பதால், அவனை விட நீண்ட தூரத்திற்கு ஒரு வெளவால் பட்டமொன்றை நானும் பறக்க விட வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இதற்காகவே பிரத்தியேகமாக தேவன் எனக்கு ஒரு வெளவால் பட்டமொன்றை செய்து தந்தான். பட்டம் இருந்தும் பட்டத்தை பறக்க விட நூல் தேவைப் பட்டது. தையலுக்கு அம்மா வைத்திருந்தை நூலை ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் பட்டத்தைப் பறக்க விட்டேன். தேவன் கட்டித் தந்த அந்த அழகான பட்டம் ஆடி அசைந்து மேலே பறக்கத் தொடங்கியது. அம்மாவிடம் வாங்கி வந்த அந்த ஐநூறு மீற்றர் நீள நூலை விட்டுக் கொண்டிருந்தேன். துரை ஒருவித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த தேவதாசுக்கும், தேவனுக்கும் கொள்ளை சந்தோசம். ஒரு கட்டத்திற்கு மேல் பட்டம் மேலே போகவில்லை ஆனாலும் நேராகத் தொலை தூரம் போய்க் கொண்டிருந்தது. இபபோழுது மிகச் சிறிதாகப் பட்டம் தெரிந்தது. கீழே நூல் கட்டை சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. நான் நூலை இன்னும் விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு நூலை விட்டு இதுவரை யாரும் அந்தக் காணியில் பட்டம் விடாததால் அன்று எனக்கு பெருமையாக இருந்தது. துரையின் முகம் இன்னும் கறுத்திருந்தது. அவனைப் பார்க்க எனக்கு சந்தோசம் பொத்துக் கொண்டு வந்தது. நான் இன்னும் நூலை விட்டுக் கொண்டிருந்தேன். பட்டம் இன்னும் சிறிதாக கண்ணுக்கு ஒரு புள்ளியாகத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் கையில் நூல் இருப்பது தெரியவில்லை. கீழே பார்த்தால் சுற்றிச் சுழன்ற நூல் கட்டை அமைதியாக நிலத்தில் இருந்தது. பட்டத்தைப் பார்த்தேன் அது தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. கட்டையின் முடிவில் நூல் கட்டியிருக்காது என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது. நான் விட்ட நூல் காற்றில் மேல் எழும்பி கைக்கு எட்டாத தூரத்தில் பட்டத்துடன் பறந்து போனது. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த துரை தனது வெளவால் பட்டத்தைப் பறக்க விடத் தொடங்கினான். அவனது முகம் பிரகாசமாக இருந்தது.

Tuesday, August 17, 2004

அண்ணன் காட்டிய வழியம்மா

வருடா வருடம் சரஸ்வதி பூசை முடிய அம்மன் கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு வீதி வலம் வருவார். எங்கள் ஊரில் அது பெரிய விழாவாகவே நடைபெறும். அந்த விழாவை மானம்பூ என்றே அழைப்பார்கள். எனக்குப் படிப்பு, செல்வம், வீரம் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் வருடம் தவறாமல் என்னை அங்கு கூட்டிச் செல்வார்கள். அங்கு போனதால் இப்பொழுது கல்வி, செல்வம், வீரம் எல்லாம் நிறைந்து வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

ஓரு மானம்பூ அன்று எனது அண்ணன் என்னை மானம்பூவிற்கு அழைத்துச் செல்வதாக எனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டார். எனது அம்மாவும் அந்தமுறை என்னை அவருடன் அனுப்பி வைத்தார்.

இயற்கையிலேயே இருட்டைக் கண்டால் எனது அண்ணனுக்குப் பயம். அதுவும் இருட்டில் ஒரு பொருள் அசைவதாக உணர்ந்தால் போதும் ஆளும் பயந்து கூட நிற்பவரையும் பயப்பட வைத்துவிடுவார்.

கூட்ட நெரிசலில் நான் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அண்ணனின் கையை விடாமல் பிடித்திருக்கும்படி அம்மா சொல்லியிருந்தா. அதுபோல் நான் அவரின் கையை இறுகப் பற்றியபடி வீட்டிலிருந்து புறப்பட்டேன். பிரதான வீதிக்கு நாங்கள் வந்ததும் என்னை அழைத்துக் கொண்டு என் அண்ணன் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றார். எனக்கு அது புதிராக இருந்தது. கோவில் கூப்பிடும் தூரத்தில் இருக்கையில் எதுக்கு பஸ்? கேட்கவேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை.

பஸ் வந்தது ஏறிக்கொண்டோம். கோவிலையும் தாண்டி பஸ் போனது. நான் அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். பேசாமல் இருக்கும்படி சாடை காட்டினார். பஸ்ஸிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் ஏதும் பேசவில்லை. சிறிது நேரத்தின் பின் ஒரு தரிப்பிடத்தில் பஸ் நின்ற போது இறங்கச் சொன்னார். இறங்கிக் கொண்டோம். நேராக ஒரு சினிமா தியேட்டருக்கு அழைத்துப் போனார். அப்பொழுதுதான் சொன்னார். நாங்கள் கோவிலுக்குப் போகவில்லை சினிமா பார்க்க வந்திருக்கிறோமென்று. வீட்டுக்குப் போய் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி இனிப்பும் வாங்கித் தந்தார்.

சினிமாவில் காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா என்று பாட்டு வந்தபோது மானம்பூ திருவிழாவும் வீதிகள் தோறும் வழங்கப்படும் அவல், கற்கண்டு எல்லாம் நினைவில் வந்தது. நடிகர்கள் யார் யாரென்று அப்போ தெரியாது. ஓடினார்கள், பாடினார்கள், ஓவர்கோட் போட்டபடி கடற்கரை வெய்யிலில் நின்றார்கள,; சண்டை போட்டார்கள், சிரித்தார்கள், அழுதார்கள் இதையெல்லாவற்றையும் அண்ணன் வாங்கித் தந்த இனிப்பை ருசித்தபடி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு படம் முடிந்தது. வெளியில் வந்தோம். சினிமா பார்க்க வந்தவர்கள் சிதறிப் போய் விட்டார்கள். எனது அண்ணன் மட்டும் பரபரப்பாக இருந்தார். அருகில் இருந்த தேனீர் கடையில் ஏதோ விசாரித்தார் பிறகு எனக்குச் சொன்னார் பஸ் எல்லாம் போய்விட்டது நடந்துதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று. முதலாவது எங்கள் வீடு மூன்று மைல்கள் தூரத்திலிருந்தது. இரண்டாவது இந்த நேரம் மானம்ப10 முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். மூன்றாவது எனது அண்ணருக்கு இருட்டைக் கண்டால் பயம். நாங்கள் போக வேண்டிய பாதையின் இரு புறமும் பயிர் செய்யும் நிலங்களே இருந்தன. எங்கும் இருட்டு.

வேறு வழியில்லாததால் நடக்க ஆரம்பித்தோம். நான் அண்ணனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் எனது கையைப் பிடித்தபடி எனது அண்ணன் நடந்து கொண்டிருந்தார். பயம் இல்லாமலிருப்பதற்காக ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்தார்.

அது மழைக் காலமாக இருந்தபடியால் வீதியின் இருபுறமும் உள்ள நிலத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தவளைகள் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தத்திற்குப் பயந்து போன அண்ணன் என்னையும் இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அவரது வேகத்துக்கு நான் ஓடமுடியாமலிருந்ததினால் என் கையை விட்டுவிட்டு என்னை ஓடி வரும்படிச் சொல்லிவிட்டு அவர் முன்னுக்கு ஓடத் தொடங்கிவிட்டார். அவருடன் ஓட என்னால் முடியவில்லை. என்னை விட்டுவிட்டு வீட்டுக்குப் போகவும் அவரால் முடியாது. திரும்பி வந்து எனக்கு அடிக்காத குறையாக என்னை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அந்த மழைக் காலத்திலும் வியர்வை ஒழுக ஒழுக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் அம்மா பார்த்துக் கொண்டிருந்தா. மானம்பூ முடிய அப்படியே கோவிலுக்குப் போய் சாமி இறக்கி உள்ளே போகும் வரை இருந்து விட்டு வருவதாக அம்மாவிற்கு அண்ணன் சொன்னார்.

அண்ணனுடன் அன்று என்ன படம் பார்த்தேன் என்று நான் சொல்லத்தானே வேண்டும்.
தாய் சொல்லைத் தட்டாதே

Sunday, August 08, 2004

பள்ளிக்கூடம் போகலாம்

ஒன்பதாவது வகுப்பு.
இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு.

அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள்.
இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. இன்று அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறான். விஞ்ஞானம் படித்த சட்டத்தரணி.

ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது.

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை.

பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள்.

பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள்.
அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார்.

மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப் பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது?

கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று.

ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்.

அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை.
முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தா, அதுவும் மனமேயில்லாமல்.

கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப் பட்டது. உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது.

அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது.
நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்.

பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான்.

எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார்.

இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டா என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன்.

அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள்.

முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார்.

பாPட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன்.

தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப் பட்டோம்.

நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வௌ;வேறையா?
தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது.

வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

Sunday, August 01, 2004

பாட்டுப் பாடவா?

தங்கராஜா மாஸ்ரர் என்றால் அப்போது எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மதிப்பு இருந்தது.

பிரபல்யமான பாடசாலையின் அதிபராக இருந்தும்கூட நாலுமுழ வேட்டியுடனும் சால்வையுடனும்தான் வலம் வருவார். ஆனாலும் எனக்குப் பிடிக்காத ஒன்று அவரது கையில் எப்போதும் இருந்தது. அது... நீண்ட பிரம்பு. நெருப்பில் சுட்டு அதன் நுனி கறுத்திருக்கும். எப்பொழுதும் பளபளத்துக் கொண்டேயிருக்கும் அது என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும். மாணவர்களுடன் அதிகமாக அவர் பேசி நான் பார்த்ததில்லை. தலை குனிந்து, மூக்கில் சரிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியின் மேலாக நெற்றியைச் சுருக்கி அவர் பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே அச்சம் என்ன என்பதை உணர்த்தும்.

நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியர் சாம்பசிவம் அவர்கள்தான் சங்கீத ஆசிரியராகவும் இருந்தார். இவர் சீர்காழி கோவிந்தராஜனுடன் சங்கீதம் பயின்றவர். சீர்காழியின் நண்பரும் கூட.

அதிபரது அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில் மைக் பொருத்தியிருக்கும். பாடசாலை தொடங்கும் போதும் முடியும் போதும் ஐந்து நிமிடம் முன்பாக, சாம்பசிவம் ஆசிரியரால் தெரிவு செய்து அனுப்பப்படும் மாணவன் அந்த மைக் முன்னால் நின்று தேவாரம் பாடவேண்டும்.

வகுப்பறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் தேவாரத்தை பயபக்தி(?)யுடன் மாணவர்கள் எழுந்து நின்று கேட்டு இறுதியாக அரகரமகாதேவா சொல்லுவார்கள்.

அன்று தேவாரம் பாடவேண்டியவனாக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தங்கராஜா மாஸ்ரரின் அறையைத் தாண்டிச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. அப்படித் தாண்டிப் போனாலும் தேவாரத்தை மறக்காமல் இசையுடன் பாடுவேனா என்ற அச்சமும் சேர்ந்திருந்தது. திருட்டு விழி என்பார்களே அதனிலும் மோசமாக நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நிமிடங்களில் பாடசாலை முடியப் போகிறது. பாடசாலை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மைக்குக்கு முன்னால் நிற்க வேண்டும்.

சாம்பசிவம் மாஸ்ரர் என்னைப் பார்த்தார்.
நீ இப்ப போகலாம் என்பது போல் அவரது பார்வை சொன்னது. நான் தலையைக் குனிந்து கொண்டென். வெளிறிய என் விழி, நான் தலைகுனிந்த விதம் நிலமையை அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"என்ன தேவாரம் பாடமில்லையே..? உனக்கு ஒரு கிழமை முன்னமே சொல்லிட்டன்.. இப்ப முழுசிக் கொண்டு நிக்கிறாய்... உன்னை...
சங்கர்.. நீ போ.."

எனக்குப் பக்கத்தில் இருந்த சங்கருக்கு ஆணை போனது. அவன் சாம்பசிவம் மாஸ்ரரின் அன்பைப் பெற்ற மாணவன். நல்ல இசையுடன் பாடக்கூடியவன்.
குருவின் ஆணைபெற்ற சிஸ்யன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து போனான்.

இப்போது ஒலி பெருக்கியில் சங்கரின் குரல்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் பாடல் ஒலித்தது. என்ன வேகமாக ஓடிப்போய்ப் பாடியதால் பாடலை விட மூச்சுச் சத்தம்தான் பெரிதாகக் கேட்டது.

அடுத்து திருப்புகழ்.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்.. அதுவும் முடிந்தது. இப்போது வரவேண்டியது நமப்பார்வதிபதேயே. அதுக்கு நாங்கள் கோரஸாக அரகரமகாதேவா சொல்ல வேண்டும்.

ஆனால் ஒலிபெருக்கியில் ஒலித்ததோ "அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. "என்ற அவலக் குரல். இதுக்குப் போய் யாராவது அரகரமகாதேவா சொல்லுவார்களா.?

சாம்பசிவம் மாஸ்ரரின் முகத்தில் வியர்வை முத்துக்கள். சால்வையெடுத்து துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். தங்கராஜா மாஸ்ரரின் பார்வையை விட மோசமான பார்வை அது.

அவலக் குரல் ஓய்ந்து இப்போது அதட்டலான குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. "சாம்பசிவம் ஆசிரியர் உடனடியாக எனது அறைக்கு வரவும் "

மௌனமாக மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு சாம்பசிவம் மாஸ்ரர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

ஓலிபெருக்கியில் சங்கீதக் குரலில் அன்று தேவாரம், திருப்புகழ் பாடி நமப்பார்பதிபதே சொல்லி முடித்தார் சங்கீத பூசணம் சாம்பசிவம் மாஸ்ரர்.

அடுத்தநாள் காலை வகுப்பறையில் ஆசிரியரின் முன்னால் நான்.

"சங்கர் சேட்டைக் கழட்டிக் காட்டு"

சங்கர் வெறும் முதுகைக் காட்டினான். முதுகின் நடுவில் இல்லாமல் வலது பக்கமாக மேலிருந்து இடது பக்கம் கீழ் நோக்கியவாறு இரண்டு பெரிய தளும்புகள். தங்கராஜா மாஸ்ரரின் பிரம்பின் கோலங்கள்.

"பார்.. உன்னாலை எனக்கு அர்ச்சனை.. அவனுக்கு பிரசாதம்.,.."
வார்த்தைகளால் சாம்பசிவம் மாஸ்ரர் எனக்கு அபிசேகம் செய்து கொண்டிருந்தார்.

"உனக்கென்ன தேவாரம் பாடமில்லையே? "

"இல்லை.... சேர் எனக்குத் தெரியும் "

"அப்ப பாடு பாப்பம் "
சாம்பசிவம் மாஸ்ரர் கையில் இப்போ பிரம்பு.

கண்ணை மூடிக்கொண்டு நவரோசு ராகத்தில் பாடத் தொடங்கினேன்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூழை தவித்தருளாய்
அலைந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானாத்துறை அம்மானே


"அப்ப ஏன் நேற்றுப் பாடயில்லை?"

நேற்று இரவிரவாகத்தான் பாடமாக்கினேன் என்பதை அவருக்கு எப்படிச் சொல்வேன்?
ஆதலால் வழமைபோல் தலையைக் குனிந்து கொண்டேன்

Sunday, July 25, 2004

ஆடவரெல்லாம் ஆடவரலாம்

பத்திரகாளி கோவில் காவடி என்றால் அந்த நகரத்து இளைஞர்களுக்கு எல்லாம் பயங்கரக் கொண்டாட்டம்தான். நகரமே களை கட்டி நிற்கும்.

திருவிழா தொடங்கும் போது வீட்டில் கிடாய் (கடா) வாங்கிக் கட்டி விடுவார்கள். அவர்கள் உபவாசமிருந்தாலும் கிடாய்க்கு நல்ல தீனி போட்டு வளர்ப்பார்கள். பிண்ணாக்கு, தவிடு என்று குழைத்து, குழைத்து வலுக் கட்டாயமாக கிடாயிற்குத் தீத்துவார்கள்.

வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பெருமையாகத் தங்கள் கிடாய் பற்றிப் பேசிக் கொள்வார்கள். வீட்டுக்கு வந்தவர்களை தவறாமல் கிடாய் கட்டியிருக்கும் இடத்துக்கு கூட்டிச் சென்று பெருமையாகக் காட்டுவார்கள். இவையெல்லாம் திருவிழா வரைதான். திருவிழா முடிந்த மறுநாள் கிடாயின் கதையும் முடியும். அன்று கிடாய் கதை முடிக்கும் வீடுகளிலெல்லாம் வேறொரு திருவிழா மிகவும் சிறப்பாக நடக்கும்.

திருவிழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அன்று காவடி, கரகம் என வீதி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. கரகம் தூக்கி ஆடும் இளைஞர்களெல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள். அதில் முக்கியமானவர்களாக முத்து, வரதன், மணியம் ஆகியோரைக் குறிப்பிடலாம். கரகம் ஆடுபவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் பட்சத்தில் என்னைச் செய்து தரும்படிக் கேட்டுக் கொண்டதால் கரகம் ஆடும் இளைஞர்களுக்குப் பக்கத்தில் நானும் இருந்தேன்.

பெரிதாக செய்வதற்கு எனக்கு ஒன்றுமே இருக்கவில்லை. கரகம் ஆடுபவர்கள் களைத்துப் போனால் குடிப்பதற்கு அவர்களுக்கு குளிர்பானம் தந்தால் போதும்.நாலைந்து கோலா போத்தல்கள் எனது தோளில் தொங்கும் பையில் இருந்தது. இவர்கள் குடித்து முடிந்தால் புதிது புதிதாக கோலாக்கள் என்னிடம் வந்து கொண்டிருந்தன. எனவே எனக்கு பெரிதாக அலட்டிக் கொள்ளும் வேலையில்லை.

கரகங்கள் நகர வீதிகளில் அட்டகாசமாக ஆடி வந்தன. பெண்கள் உடையில் தலையில் வண்ணக் கரகங்களை வைத்து அவர்கள் சுற்றிச் சுழன்றாடி வரும் அழகோ அழகு.

காவடி, தீச்சட்டி, பால்செம்பு என முன்னால் பல போய்க் கொண்டிருந்தாலும், வீதியில் நிற்கும் மக்களெல்லாம் முண்டியடித்துப் பார்க்க விரும்பியதென்னவோ பின்னால் வந்து கொண்டிருந்த இந்த இளைஞர்களின் கரகாட்டத்தைத்தான்.

உடுக்கு, மேளம், பறை இப்படியாக பலவித கருவிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த ஒலியில் ஆட்டங்கள் அமர்க்களமாக இருந்தன. வாத்தியங்கள் எழுப்பிய ஒலியில் ஆடும் உணர்ச்சி தானாகவே கால்களுக்கு வந்து விடுமோ என்ற பிரமை கூட வந்தது.ஒரு விதத்தில் கரகாட்டக்காரருடன் நானும் வருவது எனக்குப் பெருமையாக இருந்தது.

மணியன் ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உரு வந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். அவனது தலையில் இருந்த கரகத்தை பக்கத்தில் இருந்தவர்கள் பக்குவமாக வாங்கிக் கொண்டார்கள். தலையில் கரகமில்லாமலேயே அவன் சுழன்று சுழன்று வேகமாக ஆடிக் கொண்டிருந்தான். ஒருவர் தனது தோளில் இருந்த சால்வையால் அவனைக் கட்டி அவனது முதுகுப் புறமாக சால்வையின் இரு நுனிகளையும் சேர்த்து இறுகப் பிடித்திருந்தார். ஆடும் அவனது கால்கள் தனது கால்களை தாக்காமல் அவதானமாகவே அவர் காலடியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக அவருக்கு இது குறித்த முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும்.

பல வீதிகள் ஊடாக பல மணி நேரம் நடந்த களைப்பில் எனது தோளில் தொங்கும் பையில் இருந்த கோலாவை எடுத்து ஒரு முடக்கு குடித்தேன். அவ்வளவுதான், சிந்திக்க எண்ணவில்லை வீதியில் அப்படியே துப்பி விட்டேன். கரகம் ஆடிய வண்ணம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து ஆடியபடியே என்னை நெருங்கி வந்தான். கரகத்தின் மேளச் சத்தத்துக்கும் மத்தியிலும் காதிற்குள் கிசுகிசுத்தான்,

"நீங்கள் இதெல்லாம் குடிக்கக் கூடாது. இது கரகம் ஆடுறவையளுக்கு மட்டும்தான். "
சொல்லிவிட்டு ஆடியபடியே அப்பால் நகர்ந்தான்.

அடப் பாவிகளா என்று கத்தவேண்டும் போலிருந்தது. சாராயத்தின் கலர் தெரியாமலிருப்பதற்கு சிறிது கோலா கலந்து அதை கோலா போத்தலுக்குள் விட்டு வைத்திருந்தார்கள். பார்ப்பவர்களுக்கு அது கோலா. குடிப்பவர்களுக்கு அது சாராயம்.

இப்போ எனக்கு விளங்கியது, இவர்கள் வேகமாகச் சுழன்றாடிவரும் இரகசியம்.

பறை அடிப்பவர்களுக்கு முன்னால் மணியன் அபிநயம் பிடித்து மூர்க்கத்தனமாக ஆடிக்கொண்டிருந்தான்.

பத்திரகாளி கோவில் காவடி என்றால் அந்த நகரத்து இளைஞர்களுக்கு எல்லாம் பயங்கரக் கொண்டாட்டம்தான்.

Friday, July 16, 2004

கணேசன்

ஆஜானுபாகுவான தோற்றம் என்ற வார்த்தையை பல சரித்திரக் கதைகளில் வாசித்திருக்கின்றேன். அந்தத் தோற்றத்திற்கான உருவத்தை கற்பனையில் பல தடவைகள் தேடியும் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் பொருத்தமான ஒரு முழுமையான தோற்றத்தை என்னால் பெற முடியாதிருந்தது.

நான் கற்பனையில் தேடிய உருவம் ஒருநாள் எனக்கு நேரில் வந்து நின்றது. உயரம், பருமன், இறுக்கமான உடலமைப்பு என்று எல்லாமே ஒன்றாக அமைந்த அவன்தான் கணேசன்.

அவனுடைய நண்பர்கள் மத்தியில் அவனைச் செல்லமாக கஜபாகு என்றே அழைப்பார்கள். இருட்டில் தெரியவேண்டும் என்பதற்காகத்தானோ என்னவோ எப்பொழுதுமே அவன் வெள்ளை வேட்டி சட்டையுடன்தான் வலம் வருவான்.
கணேசன் என்னுடைய பால்ய நண்பனோ, பாடசாலைத் தோழனோயில்லை. எனது இருபதுகளின் நடுப்பகுதியில்தான் நான் அவனைச் சந்தித்தேன்.

கொத்துறொட்டி (பரோட்டா) சாப்பிடுவதற்காக அடிக்கடி எனது நண்பர் குலாமுடன் மாலைகளில் நகரத்திலுள்ள நானா கடைக்குப் போவேன். கணேசனும் தனது சகாக்களுடன் அங்கு வருவான். என்னைவிட அவனுக்கு இரண்டு வயது அதிகம். கடற்தொழில் செய்து கொண்டிருந்தான். கடையில் சாப்பிட்டுவிட்டு தொழிலுக்குப் போகையில் கடலில் சாப்பிடுவதற்கும் பார்சல் இரண்டு கட்டிக்கொண்டு போவான். கடையில் சாப்பிடும் போதும் ஒரு கொத்துறொட்டி அவனுக்குப் போதாது. எப்பொழுதும் இரண்டு கொத்துறொட்டிதான் அவன் கணக்கு. சிலசமயங்களில் தனக்குப் போடும் கொத்துறொட்டிக்கு எக்ஸ்ராவாக இரண்டு றொட்டி போட்டுக் கொத்தச் சொல்லுவான்

அடிக்கடி கடையில் சந்திப்பதால் அதுவே எங்களுக்குள் ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது. இந்த அறிமுகம் பின்னாடி நட்பாக பரிணமித்தது.

அவன் எப்பொழுதும் என் நிழலாக இருந்தான். எனது வாழ்க்கையில் அக்கறை கொண்டவனாக இருந்தான். அவன் என் அருகில் இருக்கும்போது பயம் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. அவன் அருகிலிருந்ததால் எவ்வளவு பிரச்சினையான விடயமாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் தைரியம் எனக்கு வந்தது.

எனது இடத்திலிருந்து அவனது ஊர் ஆறுமைல் தொலைவில் இருந்தது. ஒருநாள் எனது மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு அவனது ஊருக்குப் போயிருந்தேன்.

தனது படகில் அவர்களை அழைத்துச் சென்று கடலைக் காட்ட விரும்புவதாகச் சொன்னான். சரியென்று ஒத்துக்கொண்டு நானும் பிள்ளைகளும் அவனும் அவனது படகில் கடலில் சென்றோம். இடைநடுவில் இயந்திரம் நின்றுவிட்டது. படகு கடலில் நடனம் ஆடத் தொடங்கியது. அவன் அருகில் இருந்தபோதும் இப்போது எனக்கு பயம் பிடித்துக் கொண்டது. போதாதற்கு எனது பிள்ளைகளும் படகில் இருந்தார்கள். கணேசன் அமைதியாக இருந்தான்.

"இப்ப என்னடா செய்யிறது? "

"ம்... வேறை ஏதும் படகு வந்தால்தான்... இல்லாட்டில் இப்பிடியேதான் இருக்கோணும்... "

கரையைத் தெரியவில்லை. அப்போ எல்லாம் கைத் தொலைபேசியைப் பற்றி கற்பனை கூடக் கிடையாது. சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் யாருக்குமே சுத்தமாகக் கேட்காது.

"ஆரும் வராட்டில்...? "

"வராட்டில்.. இப்பிடியே கடல் இழுக்கிற பக்கமா போகத்தானிருக்கு.. "

"எப்பிடியோ ஒரு கரைக்குப் போகலாம்தானே.. ? "கொஞ்சம் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்

"ஆருக்குத் தெரியும்? கரைக்குப் போறமோ.. இல்லாட்டில் நடுக்கடலுக்கு இழுத்துக் கொண்டு போகுதோ..? "
சர்வசாதாரணமாக அவனிடமிருந்து பதில் வந்தது.

பிள்ளைகளைப் பார்த்தேன் படகில் மோதித் தெறிக்கும் கடல்தண்ணீரையும் கடலையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். கரையில் நின்று கடலைப் பார்த்திருக்கிறார்கள். கடலுக்குள் படகில் நிற்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கும். விபரீதம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. தெரிந்து கொள்ளும் வயதா அவர்களுக்கு.

வேறு வழியில்லை நான் கடலை வெறுமையாகப் பார்த்தேன்.
அப்பொழுதுதான் கணேசன் இன்னுமொரு குண்டைப் போட்டான்.
"எனக்கு நீந்தத் தெரிஞ்சால் கரைக்குப்போய் உதவி கேக்கலாம்.. நீந்தவும் பழகேல்லை.. "

"உன்னுடைய தொழிலே கடலிலைதான்... நீந்தத் தெரியேல்லையெண்டால்.. ?"
எனது கேள்வியில் எரிச்சல் இருந்தது. அதைப் புரிந்து கொள்ளாதவகையில்

அவனது பதில் அலட்சியமாக வந்தது
"என்னத்துக்கெண்டு விட்டுட்டன்.. இந்த உடம்போடை கஸ்ரமடா.. "

என்னை நோவதா அவனை நோவதா என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. கடல் நீர் ஆட்டத்தில் படகு சுத்திச் சுத்தி வந்ததால் எனது மகள் வாந்தியெடுக்கத் தொடங்கிவிட்டாள்.

"ஆள் சத்தியெடுக்கத் துடங்கிட்டா... கரைக்குப் போவம்.."

"எப்பிடி..? எஞ்சின் பழுதாப் போச்செல்லோ..? "

கணேசன் சிரித்துப் பார்ப்பது என்பது அபூர்வமான விடயம். இப்பொழுது அவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு.

"சும்மா வெறும் கடலிலை ஓடிக் கொண்டிருந்தால் என்னயிருக்கு.. ? அதுதான் எஞ்சினை நிப்பாட்டிவிட்டனான். பயந்திட்டியோ? "

கடலுக்குள்ளை அவ்வளவு தண்ணியிருந்தும், என் நெஞ்சுக்குள்ளே அப்போதான் தண்ணி வந்த மாதிரியிருந்தது.

"நானிருக்க உனக்கென்னடா பயம். ? "

உண்மைதான். அதை சிறிது நேரம் நான் மறந்து போயிருந்தேன்.

நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போது எங்கள் நட்புகளின் நெருக்கமும் தள்ளிப் போனது

கடல் பரப்பை கடற்படை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டதால் தொழிலுக்குப் போக முடியாமல் துன்பப் பட்டவர்களின் பட்டியலில் கணேசனும் இருந்தான்.

ஒருநாள் அவன் கிராமத்தை நோக்கி கடலில் இருந்து கடற்படை தொடர்ச்சியாக குண்டுகளைச் செலுத்திக் கொண்டிருந்தது. குண்டுகள் விழுந்து வெடிக்கும் சத்தம் ஆறுமைல் தள்ளியிருந்த எனது வீட்டிலும் அதிர்வைத் தந்தது.அன்று மாலையில் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு குடும்பத்துடன் பல மைல்கள் உள்வீதியால் நடந்து என்னிடம் வந்தான். நிறையவே களைத்துப் போயிருந்தான். அவன் குடும்பம் தங்க எனது வீட்டிலேயே ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

சிறிது காலம்தான் இருந்தான். அடிக்கடி வெளியில் போய் வருவான். இயற்கையிலேயே அவன் முகம் இறுக்கமானதால் அவனிடமிருந்து எந்த விதமான உணர்ச்சிகளையும் காண முடியாதிருந்தது.

"கொஞ்ச நாளைக்கு இவையள் உன்ரை பொறுப்பிலை இஞ்சை இருக்கட்டும்.. நான் பிறகு வந்து உன்னைச் சந்திக்கிறன்" என்று ஒருநாள் சொல்லிப் போனவன் நீண்ட நாட்களாக வராமலிருந்தான். அவனிடமிருந்து தகவல் கிடைக்கவில்லை. அவன் மனைவி ராணியக்காவும் அவனைப் பற்றி எதுவுமே எனக்குச் சொல்லவில்லை. அவன் எங்கே போனான் என்பதை அறிய நானும் ஆர்வம் காட்டவில்லை.

இராணுவம் நகரங்களைக் கொளுத்தி வேடிக்கை பார்த்த கால கட்டமது. எனது நகரமும் அவர்கள் விளையாட்டுக்குத் தப்பவில்லை. அவர்கள் இட்ட தீயில் எனது தொழில் நிலையம் முற்றாக அழிந்து போயிற்று. இனி அங்கிருப்பதை நான் விரும்பவில்லை. வெளிநாடு செல்வது என முடிவெடுத்தேன். ஐரோப்பிய நாடு அல்லது கனடா போவதென்றே முடிவெடுத்திருந்தேன்.
இந்த நிலையில் ஒரு மதியம் கணேஸ் திரும்ப வந்தான். இன்னும் நிறையக் கறுத்திருந்தான்.
அவனிடம் கதைத்தக் கொண்டிருந்த பொழுதுதான், அவன் இந்தியா போக விரும்பும் குடும்பங்களை படகின் மூலம் அங்கே கொண்டுபோய் விடுவதாகச் சொன்னான். நான் விரும்பினால் என்னையும் அங்கே கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னான். நான் எனது நிலைப்பாட்டைச் சொன்னேன். நிறைய நேரம் பேசாமலிருந்தான். நாங்கள் பிரியப் போவதை அவன் ஜீரணிக்க முடியாமல் இருந்தான் என்பதை உணர முடிந்தது

"சரியடாப்பா.. நானும் இவையளைக் கூட்டிக்கொண்டு போய் இந்தியாவிலை விடப் போறன்.. இனி இஞ்சை இருக்கேலாது... எங்கை போனாலும் என்னை வந்து பிறகு சந்திக்கோணும்.."
வாக்குறுதி வாங்கிக் கொண்டு தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு தனது ஊருக்குப் போனான்.

நான் புலம் பெயர்ந்து இங்கு வரும்போது அவன் சில குடும்பங்களைக் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குப் போயிருந்தான். இன்னும் ஓரிரு தினங்களில் அவன் வந்து விடுவான் என்ற நிலமையிருந்த போதும் அவனைச் சந்திக்காமலேயே நான் புறப்படவேண்டிய தேவையிருந்தது. அதனால் ராணியக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு இங்கு வந்துவிட்டேன்.

இங்கு வந்த போது நாட்டு நிலமைகளை BBC வானொலியில் அறிந்து கொள்ள வாய்ப்பிருந்தது.

"இந்தியாவுக்குப் படகின் மூலம் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் இருபத்திநாலு பேர் கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் மூழ்கடிப்பு"
BBC அதிர்ச்சியான செய்தியொன்றைச் சொன்னது. எனக்கு கணேசன்தான் நினைவில் வந்து நின்றான்.

எனது அறையில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்
"காசை வேண்டிக் கொண்டு கூட்டிக் கொண்டு போவாங்கள். நேவி வந்தால் ஆக்களை அப்பிடியே விட்டிட்டு கடலிலை குதிச்சு நீந்திக் கரைக்கு வந்திடுவாங்கள்.. அவங்களுக்கென்ன தப்பிடுவாங்கள் சனங்கள்தான் பாவம்.."

எனக்கு கணேசனின் நினைவுதான் வந்தது. ஆனாலும் புலம்பெயர் சூழலில் இந்த விடயத்தை மறந்து போனேன்.

சில நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து கடிதம் வந்தது. எனது மகன் ஓரிரு வரிகள் கிறுக்கியிருந்தான்.



அப்பொழுதுதான் என் ஞாபகத்துக்கு வந்தது

ஓ... எனது கணேசனுக்கு நீந்தத் தெரியாது..

Sunday, June 27, 2004

சந்தைக்கு வந்த கிளி

எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது.
எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும்.

முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம்.

மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும்.

இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள்.

இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள்.

ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும்.

சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.

எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார்.

நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா சிரித்துக் கொண்டே,
„ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா.
ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா.

நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது.

கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன்.

தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன்.

"வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?"
வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன்.

ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது.

" பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி.

" என்ன விலை?"

விலையைச் சொன்னார்.

அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது.

வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன்.
இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன்.

பெரிதாக இடி விழத் தொடங்கியது.
இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான்.
தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது.

"...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................."

பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை.

கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன்.

" என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..."
அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.
ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன்.

பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

முல்லை

Friday, June 11, 2004

ஆயிரத்தில் ஒருவன்

லண்டன் போயிருந்த போது, நீண்ட வருடங்களின் பின் றஞ்சித்தை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதுவும் தற்செயலாகத்தான்.

அவன் லண்டனில்தான் வசிக்கின்றான் என்பது எனக்கு முன்னரே தெரியாது. தவிர அவனைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் எனக்கு இல்லாதிருந்ததையும் நான் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.

லண்டனில் தெரிந்தவர் ஒருவர் சொல்லத்தான் அவன் அங்கு இருப்பதை அறிந்து கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டும் என்று அவனைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்குப் போனேன்.

தோழமை மாறாத அதே நட்புடன் வரவேற்றான்

சமீபத்தில் நடந்த ஒரு வாகன விபத்தில் உயிர் பிழைத்து மீண்ட விசயத்தை விலாவாரியாகச் சொன்னான்.

றஞ்சித்தை எனக்கு ஒன்பது வயதில் இருந்தே தெரியும். இருவருக்கும் ஒரே வயதுதான்.

எனது ஊரிலிருந்து 22 மைல் தொலைவில்தான் அவனது ஊர் இருந்தது. அவனது ஊர் படிப்பு வாசம் குறைந்த பகுதியானதால் படிப்பதற்காக சிறு வயசிலேயே எங்கள் ஊருக்கு வந்துவிட்டான். எனது ஊரில் அவனது உறவினர் சிலர் இருந்தபடியால் எங்கள் ஊரில் தங்கிப் படிப்பது அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை.

இருவரும் ஒரே வகுப்பு.
அவன் கணக்கில் பூனை. நான் புலி.
நான் செய்யும் கணக்குகளை அப்படியே பிரதி எடுத்துக் கொள்வான்.

பாடசாலை முடிந்து மாலையில் என்னுடன்தான் சுற்றுவான். எங்களின் அடுத்த கூட்டு தேவதாஸ். தேவதாஸ் படிப்பது வேறு பாடசாலையானாலும் விளையாட்டு என்றால் எங்களுடன்தான்.
விளையாட ஒன்றும் இல்லையென்றால் மாசிலாமணியண்ணையின் வீட்டு மதிலில் இருந்து கதைத்துக் கொண்டிருப்போம்.
கடை கண்ணிக்குப் போவதற்கு அவர்களுக்கு எங்களது உதவி தேவைப்படும் என்பதால், நாங்கள் மதிலில் இருப்பதை அவரோ அல்லது மணியக்காவோ கண்டு கொள்வதில்லை.
மாசிலாமணியண்ணைக்கு ஒரு தம்பி இருந்தான். எங்களையொத்த வயதுதான் அவனுக்கும்.
அவனது பெயர் ஞாபகமில்லை. அவனை சின்னக்குட்டியென்றே நாங்கள் கூப்பிடுவோம்.
எப்போதாவது தமையனைப் பார்க்க தனது கிராமத்திலிருந்து வருவான். வந்தாலும் ஓரிரு தினம்தான் அங்கு தங்குவான். இம்முறையும் அவன் வந்திருந்தான்.

நாங்கள் மூவரும் மதிலில் இருந்துகொண்டே சமீபத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தோம்.

றஞ்சித் ஏறக்குறைய ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போலவே ஆகியிருந்தான். பனை மட்டையில் வாள் போல் சீவி செதுக்கி இடுப்பில் சொருகியிருந்தான்.

இடுப்பில் கைவைத்த வண்ணம் எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்கும் காட்சி அந்தப் படத்தின் கட்அவுட் ஆக இருந்தது. றஞ்சித்தும் அடிக்கடி அப்படி போஸ் கொடுப்பான்.
சின்னக்குட்டி எங்களுடன் சேர்ந்து கொள்வதற்காக மதிலில் தாவி ஏறி றஞ்சித்துக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏனோ றஞ்சித் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சின்னக்குட்டியை மதிலைவிட்டு இறங்கச் சொன்னான். சின்னக்குட்டி மறுத்துவிட்டான். தான் தனது அண்ணன் வீட்டு மதிலில் உட்கார்ந்திருப்பதாகவும், தன்னை இறங்கச் சொல்வதற்கு றஞ்சித்துக்கு உரிமையில்லையென்பது அவனது வாதம். சின்னக்குட்டியின் இந்த வாதம் றஞ்சித்துக்கு கடுப்பேத்திவிட்டது.
ஒரு கட்டத்தில் றஞ்சித் சின்னக்குட்டியை மதிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் கீழே குதித்து ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போல் போஸ் கொடுத்துக் கொண்டு நின்றான்.
சின்னக்குட்டிக்கு அவனது தன்மானத்தை இழுத்துவிட்டது போன்ற நிலை. ஓடிப்போய் நிலத்தில் இருந்த ஓரு பனைமட்டைத் துண்டை எடுத்துக் கொண்டான்.

படத்தில் அட்டைக் கத்தியென்றால், இங்கே மட்டைக் கத்தி.
பட்..பட் என்ற சத்தத்துடன் மட்டைகள் மோதிக் கொண்டன.

படத்தில் சண்டை நடக்கும்போது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் பேசிக் கொள்வார்கள்.

நம்பியார்- மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?

எம்.ஜி.ஆர் - சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்.

புழுதிகள் கிளம்பின.

நானும் தேவதாசும் பல்கணியில் அதுதான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் சின்னக் குட்டியின் மட்டையை றஞ்சித் கையால் பிடித்துவிட்டான்.

அடுத்து என்ன?

ஆவல் மிகுதியால் நாங்கள் இருவரும் தரையில் நின்றோம்.

சின்னக்குட்டியால் ஓடித் தப்பமுடியாது என்பது தெரிந்தது. ஓடினால் றஞ்சித் துரத்தித் துரத்தி மட்டையால் விளாசுவான் என்பது தெரிந்தது. றஞ்சித்தின் கடைவாயில் புன்சிரிப்பு. வெற்றிக் களிப்பில் கதாநாயகன்.

எதிர்த்துப் போராடுவதே சின்னக்குட்டிக்கு ஒரே வழியாக இருந்தது. றஞ்சித்தின் கையில் இருந்து தனது மட்டையை மீட்பதற்காக தனது பலத்தையெல்லாம் திரட்டி இழுத்தான்.

பயங்கரமான அலறல் சத்தம்.
கையைப் பிடித்தவண்ணம் றஞ்சித் கதறிக் கொண்டிருந்தான். அவனது உள்ளங்கையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.

மட்டையில் கருக்கு இருந்ததை யாருமே கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த அமளியில் ஓடிய சின்னக்குட்டி பிறகு அந்தப் பக்கம் வரவேயில்லை.

எங்கள் கதாநாயகன் உள்ளங்கையில் போட்ட தையலுடன் உடுப்பு மாத்தவே கஸ்ரப் பட்தெல்லாம் திரைமறைவுச் செய்திகள்.

“ஆக்சிடெண்ட்டிலை இவர் தப்பினதே பெரிய புண்ணியம். காரைப் பாக்கமாட்டீங்கள் அப்பிடி சப்பளிஞ்சு போச்சு. ஏதோ மனுசன் தப்பிட்டுது அது போதும் “
றஞ்சித்தின் மனைவி தேனீரைத் தந்து எனக்குச் சொன்னார்.

“எனக்கடா ஆயுள் கெட்டி. டபுள் ஆயுள்.. இஞ்சைபார் கையை“
தனது உள்ளங்கையை எனக்குக் காட்டினான்.

உண்மை ஆயுள் ரேகைக்குப் பக்கத்தில் அதை மிஞ்சும் வகையில் அதைவிட ஆழமாக பதிந்திருந்தது இன்னும் ஒரு ரேகை.

அட அது சின்னக்குட்டியின் கருக்கு மட்டை இழுத்த வடு.

Thursday, June 10, 2004

திருவிழாண்ணு வந்தால்....

அப்போ எனக்கு பதினைந்து வயது.
வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன்.
வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.
நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை.

அன்று தீர்த்தத் திருவிழாவிற்கு வந்தது கடவுள் மேல் கொண்ட பக்தியாலல்ல. விளக்கமாகச் சொல்லத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.

சாமி ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் சாமிக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன.

முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதாலோ என்னவோ பச்சையும் எங்களைக் கண்டுவிட்டது. கண்டதும் வெருண்டு தாயின் பின் ஒளிந்து கொண்டது. எங்களது பார்வைகள் தாயின் பின் ஒளிந்திருந்த தாரகையைத் தேடின.

எப்படியும் மேகத்தை நீங்கி நிலவு தெரியும் எனக் காத்திருந்தோம். நினைப்பு வீணாகவில்லை. நிலவு வெளி வந்தது. நாங்கள் தன்னைப் பார்க்கிறோமா என்று பார்ப்பதுக்கு முதலில் அவள் தலை தெரியும் பிறகு விழி நோக்கும். அண்ணல்கள் நாங்களும் நோக்க தாயின் பெரிய உருப்படிக்குள் அந்த நிலவு மீண்டும் மறையும். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.

எங்களுக்குள் குதூகலம் குடிகொண்டது. இப்படி ஒரு தடவை அவள் எட்டிப் பாக்கும் போது “பாக்கிறாளடா..பாக்க்கிறாளடா„ என்று என்னை அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டேன்.
“எங்கை பாக்கிறாள்? எங்கை பாக்கிறாள்? „
என்று ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல் நிச்சயமாக கலையரசனுடையதோ மகேந்திரனுடையதோ இல்லை. ஆனால் எனக்கு நன்றாகப் பரீட்சயமான குரல்தான். குரல் எனக்குப் பின்னால் மேலிருந்து வந்தது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எனது தமிழ் வாத்தியார் ஏகாம்பர மாஸ்ரர்.

இப்போ நிலவு போய் மேகம் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.
பக்கத்தில் பார்த்தேன் கலையரசனுமில்லை மகேந்திரனுமில்லை. நிலமை அறிஞ்சு இருவரும் ஓடிவிட்டார்கள். எங்கள் மொழியில் சொல்வதானால் மாறிட்டாங்கள்.

ஏகாம்பர மாஸ்ரர் எனது கையைப் பிடித்துக் கொண்டார்.
“தேவன் அந்தப் பச்சைப் பாவாடை போட்டிருக்கிறாள் அதையே சொல்லுறாய்? „ கேட்டது ஏகாம்பர மாஸ்ரர்.
தலையைக் குனிந்து கொண்டு விழியை உயர்த்தினேன் பச்சை என்னை பாவமாகப் பார்ப்பது போலிருந்தது.

“தேவன் என்ன பயப்பிடுறாய்.? உனக்கு வயசு வந்திட்டுது நீ பெட்டைகளைப் பாக்கலாம். பிழையில்லை. அந்த பச்சைக்குப் பக்கத்திலையிருக்கிற மஞ்சளும் அவ்வளவு மோசமில்லை. நீயென்ன சொல்லுறாய்.? „
வார்த்தைகளால் வாத்தியார் கொன்று கொண்டிருந்தார்.

மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டேன்.
வெளியேறும் போது, “நாளையான் கட்டுரைக்கு கடற்கரைத் தீர்த்தத்தைப் பற்றி எழுது என்ன? „
ஏகாம்பர மாஸ்ரரின் வார்த்தைகள் காதில் விழ எனக்கு கலருகள் எதும் கண்ணில் தெரியாமல் இருட்டுக்குள் நடப்பது போலிருந்தது.

Thursday, May 20, 2004

மணியக்கா

"மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... "

இந்த வார்த்தைகளுக்கு எங்களிடம் அன்று வேறு பொருளிருந்தது. அதற்குக் காரணமே மணியக்காதான். ஊரில் எல்லோரும் அவவை மணி என்றுதான் அழைப்பார்கள். நாங்கள் சிறியவர்களானதால் மணியக்கா என்று கூப்பிடுவோம். இந்த மணியக்கா இருக்கிறாவே, அவ வாயைத் திறந்தால் பொய்களாகவே உதிரும். அதனால்தான் நாங்கள் மச்சான் இவன் பொய் சொல்லுறான்டா... என்று சொல்வதற்குப் பதிலாக, பொய்க்கு அடைமொழியாக மணியென்று வைத்து, மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... என்று சொல்லுவோம்.
மணி என்ற இந்த மணியக்காவை இப்பொழுதும் தோசை சாப்பிடும் போது நான் நினைத்துக் கொள்வேன்.

அப்போ எனக்கு அதிக வயதில்லை. ஒன்பது பத்து வயதுதானிருக்கும்.
மணியக்காவும் அவர் கணவர் மாசிலாமணியும் எங்கள் ஊருக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். மாசிலாமணியண்ணை ஒரு கில்மன் கார் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் பாடசாலைக்கு பிள்ளைகளை காரில் கொண்டு சென்று கூட்டிவருவது அவரது தொழிலாக இருந்தது. இடைப்பட்ட நேரங்களில் வாடகைக்கு அவரது கார் வரும். எங்களது கிராமத்தில் வாடகைக்கான காராக அவரது கார் மட்டுமே இருந்தது. ஆகவே அவர்களது வருமானம் நன்றாகவே இருந்தது.
சில வேளைகளில் இரவு இரண்டாம் காட்சி சினிமாவிற்கு அவரது கார் வாடகைக்குப் போனால் , வீட்டில் மணியக்காவிற்குத் துணையாக நான்தான் அழைக்கப்படுவேன். காரணம் அவர்களுடைய வீட்டுக்கு அடுத்தது எங்களது வீடு.
ஒருநாள் மாசிலாமணியண்ணையின் கார் இரண்டாம் காட்சி சினிமாவிற்கு வாடகைக்குப் போய் விட்டது. மணியக்கா என்னைத் துணைக்கு வந்து இருக்கும்படிக் கேட்டுக் கொண்டா. நான் அவவீட்டிற்குப் போன நேரம் மணியக்கா நல்லெண்ணைத் தோசை, முட்டைத் தோசை, நெய்த் தோசை என விதம் விதமான தோசைகளாகச் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா. என்னையும் சாப்பிடும்படிக் கேட்டா ஆனால் எனக்குப் பசியில்லாததால் மறுத்துவிட்டேன்.

அன்று இரவு சிறிது நேரம் படித்துவிட்டு நித்திரையாகிவிட்டேன். இடையில் நித்திரை குழம்பிவிட்டது. மாசிலாமணியண்ணையும் மணியக்காவும் சமையலறையில் கதைக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியதால் எழுந்து சமையல் அறைப் பக்கம் போனேன்.
மாசிலாமணியண்ணையின் குரலில் கடுமை தெரிந்தது.

"உமக்கெல்லோ சொன்னனான். என்னைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடுமெண்டு. நான் போற இடத்திலை எங்கையாவது ஒரு தேத்தண்ணிக் கடையிலை ரண்டு வடையச் சாப்பிட்டிட்டு ஒரு பிளேன் ரீயைக் குடிச்சிட்டு இருப்பன்.
நீர் அப்பா விசர் வேலை பாத்துக் கொண்டிருக்கிறீர். சமைச்சு வைச்சிட்டு என்னத்துக்குப் பாத்துக் கொண்டிருக்கிறீர்? நேரத்துக்குச் சாப்பிடுறதுதானே? அது...அந்த.. புருசன் சாப்பிட்டாப்போலைதான் பெண்சாதி சாப்படோணுமெண்டிறதெல்லாம் இஞ்சை வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடும் விளங்கிச்சோ.. சமைச்சுப் போட்டு தான் சாப்பிடாமல் புருசனைப் பாத்துக் கொண்டிருக்கிறாவாம் அவ..
எனக்கு வாற கோவத்துக்கு... "

"என்ன இன்னுமொண்டு நெய் விட்டு முறகலாச் சுடட்டே..?"

இந்தக் கட்டத்தில் நான் சமையலறைக்குள் நுளைந்தேன். மாசிலாமணியண்ணை என்னைக் கண்டவுடன் ,

"என்ன தேவன் நித்திரை வரேல்லையே..? தோசை சாப்பிடன்.. வா.. தண்ணியெடுத்து வாயைக் கொப்புளிச்சிட்டு வா தோசை சாப்படலாம். "என்றார்.

எனக்கு அந்த நேரம் சாப்பிட வேண்டும் போல் தோன்றவில்லை. வேண்டாமென்று சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தேன்.
மாசிலாமணியண்ணை என்னைப் பார்த்துச் சொன்னார்.

"தேவன் பாத்தியே மணியக்காவை. தோசைக்கு மாவைக் கரைச்சு வைச்சிட்டு தோசையைச் சுட்டுச் சாப்பிடாமல் நான் வருமட்டும் பாத்துக் கொண்டிருக்கிறாவாம்.. நான் சாமத்திலை வருவன் . ஏதாவது பெரிய ஓட்டம் வந்தால் அடுத்தநாள்தான் வருவன். அப்ப நான் வருமட்டும் சாப்பிடாமலிருக்கிறதே? இவவை என்ன செய்யலாம் சொல்லு. "

நான் திரும்பி மணியக்காவைப் பார்த்தேன். அவவின் தலை ஓரளவு குனிந்திருந்தது. விழிமட்டும் மேலெழுந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. வாய்க்குள் வைத்த தோசையில் பாதி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவவின் பார்வை,
டேய்... நான் ஏற்கனவே சாப்பிட்டதை இப்ப சொன்னியோ... பிறகு என்னட்டை உதை வேண்டுவாய்..
என்று சொல்வதைப் போல் இருந்தது.
கண்ணைக் கசக்கிப் போட்டு மீண்டும் அவவை பார்த்தேன்.

டேய் ... நான் ஏற்கனவே சாப்பிட்டதைச் சொல்லாதையடா.. மனுசன் ஏமாந்து போடும். பாவம்.
என்று அவவின் பார்வை கெஞ்சுவது போல் இருந்தது.
நான் எதுவுமே பேசவில்லை . தண்ணியைக் குடித்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தேன்.

"தேவனுக்கு நல்ல நித்திரைக் கலக்கம் போலை... போய் படுக்கட்டும்.."
மாசிலாமணியண்ணை சொல்வது காதில் விழுந்தது.
மணியக்காவின் பதிபக்தியை மெச்சியபடியே அந்த சாமத்திலும் மாசிலாமணியண்ணை தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் எங்கள் வட்டத்துக்குள் நான் சொல்லக் கொண்டேன்.
"டேய்.. நேற்று ராத்திரி மணியக்கா பெரிய்ய்ய்யயய மணி சொன்னவவடா"

இன்றுகூட எனது கோப்பையில் சுடச்சுட தோசை வந்து விழும்போதெல்லாம் மணியக்கா நினைவில் வந்து போவா.

முல்லை

Tuesday, May 18, 2004

குட்டு

இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

அந்த சம்பவம் எனக்கு பதினைந்து வயது இருக்கும்போது நடந்தது. நாற்பது வருடங்களின் பின்னரும் இன்னமும் அந்த சம்பவம் பசுமையாக இருக்கிறது.

அன்று நானும் எனது அண்ணனும் ஒரு உறவினரது வீட்டிற்குப் போய்விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். நேரம் இரவு பத்துமணியைத் தாண்டியிருக்கும்.
எனது அண்ணனுக்கு என்னைவிட ஐந்து வயதுகள்தான் அதிகம். தோற்றத்தில் நல்ல உயரமாகவும், பருமனாகவும் இருப்பார்.
அன்று அவரது காலில் ஏதோ காயம் ஏற்பட்டதால் அவரால் சைக்கிள் ஓட முடியவில்லை. உறவினர் வீட்டில் இருந்து திரும்பும்போது நான்தான் சைக்கிளை ஓட்டிவந்தேன். எனது கால்களுக்கு சைக்கிள் பெடல்கள் எட்டாததால் நான் இருபக்கமும் வளைந்து வளைந்து பெடல்களை மிதிக்க வேண்டியிருந்தது. அது எனக்கு சிரமமாக இருந்தாலும் எனது அண்ணனை முன்னால் வைத்து சைக்கிள் ஓடும்போது எனக்கு ஏகப்பட்ட குசியாக இருந்தது.
உறவினர் வீடும் எங்களது வீடும் ஒன்றரை கிலோமீற்றர் து}ரமேயிருக்கும். பிரதான பாதையூடாகவே நாங்கள் வந்து கொண்டிருந்தோம். வாகனங்கள் ஏதும் வந்தால் எனது அண்ணன் முன்னெச்சரிக்கை தந்து பாதையின் ஓரமாக சைக்கிளை ஓட்டு என்பார்.
ஓரு தடவை அவர் சொன்னார், “முன்னுக்கு வாறது ஜீப் போலை இருக்கு. லைற் மேலையிருக்கு.. „
எனக்கும் பார்க்கும் போது அப்படித்தான் இருந்தது.
“பொலிசாயிருக்கும்... கையை எடு.. நான் இறங்குறன்.. „ அண்ணன் பொலீஸ் என்றதும் எனக்கு கையும் ஓடவில்லை. காலும் ஓடவில்லை. அதனால் கையையும் காண்டிலில் இருந்து எடுக்கும் எண்ணமும் வரவில்லை.
ஆனால் எனது அண்ணன் எனது கையை காண்டிலில் இருந்து எடுத்துவிட்டு சைக்கிளில் இருந்து இறங்கிவிட்டான். ஆனால் அது நேரம் கடந்துவிட்டது. பொலிஸ் ஜீப் எங்களுக்கு முன்னால் நின்றது. நானும் சைக்கிளில் இருந்து உடனேயே இறங்கிவிட்டேன்.
“ஏய் கிட்ட வா.. „
பொலிஸ் இன்ஸ்பெகடர் ஜீப்பில் இருந்தபடியே கூப்பிட்டான்.
அண்ணன்தான் கிட்டே போனார். நான் போகவில்லை. பொலீஸ் அடிக்கும் என்று பயம்.
“டேய்.. நீ..மல்லன்மாதிரியிருக்கிறது... அந்தப்பொடியனை சைக்கிள் ஓடச் சொல்லுறது..? „
டபிள் போனால், லைற் இல்லாமல் போனால் சைக்கிள் காற்றை எடுத்துவிட்டு நடந்து போகச் சொல்லுவார்கள். இது அன்றைய பொலீஸாரின் எழுதாத சட்டம். கொஞ்சம் ஏடாகூடமான பொலிஸாயிருந்தால் அடிகூட விழும்.
இப்பொழுது எங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்ற பயத்துடன் நான் சற்று எட்டவே நின்று கொண்டேன்.
அண்ணன் தனது காலில் உள்ள காயத்தைக் காட்டி சம்பவத்துக்கான நிலையை விளங்கப்படுத்தினான். போலிஸ் இன்ஸ்பெக்டர் அண்ணனுடைய கதையைக் காதில் வாங்கிக் கொள்ளவில்லையோ அல்லது காதில் வாங்கிக் கொள்ளாதமாதிரியோ தெரியவில்லை என்னை நோக்கி வந்தான். அப்படியே சைக்கிளைப் போட்டுவிட்டு ஓடிவிடலாமோ என்று ஒரு யோசனை. ஆனால் இன்ஸ்பெக்டihப் பாத்தவுடன் எனக்கு காலிருப்பதே மறந்துவிட்டது.

“நீ தனியவே ஓடுறதுக்கு இது பெரிய சைக்கிள். நீ இன்னுமொரு ஆளை வைச்சு ஓடுறது...? இந்தா இதிலையிருக்கிற கல்லிலை ஏறிநில். „

இன்ஸ்பெக்டரின் தோற்றம் மட்டுமல்ல குரலும் பயத்தைத் தந்தது. வேறுவழி..? பேசாமல் அவன் சொன்னமாதிரியே பாதையின் ஓரத்தில் இருந்த அந்த பெரிய கல்லின் மேல் ஏறி நின்று கொண்டேன்.
அந்தக் காட்சியை கே.பி. சுந்தராம்பாள் பார்த்திருந்தால் பழநியப்பா ஞானப்பழநியப்பா பாடலை இன்னுமொருதடவை பாடியிருப்பார்.

இப்பொழுது எனது அண்ணன் எனதருகே அழைத்து வரப்பட்டு எனக்கு நேரேதிரே நிறுத்தப்பட்டார்.

“டபிள் போறது குத்தம்தானே... அதுக்கு... நீ செஞ்ச குத்தத்துக்கு இவன் உனக்கு பத்துக் குட்டு குட்டுவான். உன்னை... சின்னப் பொடியன் உன்னை... சைக்கிள் ஓடச்சொல்லிட்டு இந்த எருமை முன்னாலை இருந்ததுக்கு நீ இவனுக்கு பத்துக் குட்டு குட்டுறாய். சரி குட்டு. „
என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் இப்படிச் சொன்னவுடன் எனக்குத் தர்மசங்கடமாகப் போய்விட்டது. எனக்கு எதிரில் நிற்பது எனது அண்ணன். அவர் எனக்குக் குட்டுவது சரி. நான் இளையவன் எப்படி அவருக்குக் குட்டுவது?

முதல்தடவையாக நான் எனது வாயைத் திறந்தேன்.
“சேர் அவர் என்ரை அண்ணன். „

“சட்டத்துக்கு முன்னாலை அண்ணன் தம்பி எல்லாம் பாக்கிறதில்லை. நீ அவனுக்கு இப்ப பத்துக் குட்டு குட்டுறது. „
இன்ஸ்பெக்டர் குரலால் பயமுறுத்தினான்.

குட்டாமல் விட்டால் இன்ஸ்பெக்டரிட்டை உதை வாங்கணும். குட்டினால் வீட்டை போய் அண்ணனிட்டை உதை வாங்கணும்.

அண்ணன் நிலமையைப் புரிந்து கொண்டு தனக்குக் குட்டும்படி ஜாடை காட்டினான்.
வீட்டிலை பிரச்சினை வந்தால் அம்மா நீதான் காப்பாத்தோணும் அம்மாவை மனதில் நினைத்துக் கொண்டு எனது முதல் குட்டை மெதுவாக மிகமிக மெதுவாக வைத்தேன்.

“அடேங் என்ன செய்யிறது? தலையைத் தடவுறது? குட்டோணும்.. குட்டத் தெரியாது...? குட்டுறது எப்பிடிண்ணு காட்டட்டா„
இன்ஸ்பெக்டர் நெருங்கி வந்தான்.
அண்ணனின் முகத்தைப் பார்த்தேன் அமைதியாக இருந்தார். எனக்கும் வேறு வழி தெரியவில்லை. எனது இரண்டாவது குட்டு வேகமாக.. பலமாக இறங்கியது. இப்பொழுது அண்ணன் முகம் இறுகியிருந்தது. இன்ஸ்பெக்டர் கிறுக்கன் நெருங்கி நிற்கிறான். ஒன்றும் செய்ய முடியாத நிலையில் நான். கண்ணை மூடிக்கொண்டேன். எனது மற்றைய குட்டுக்குள் தொடர்ந்து இறங்கி முடிந்தன.
இனி அண்ணன் எனக்குக் குட்டவேண்டிய நேரம். எல்லா கோபத்தையும் சேர்த்து அண்ணனின் குட்டு இறுக்கமாக இருக்கப் போகிறதென்று நினைத்துக் கொண்டேன்.

“சரி... நீ சின்னப் பெடியன்... உனக்கு அவன் குட்டத் தேவையில்லை. நீ இனி டபிள் ஓடக்கூடாது விளங்கிச்சோ..? இப்பிடியே சைக்கிளை எடுத்துக் கொண்டு திரும்பிப் பாக்காமல் வீட்டுக்கு ஓடோணும். ஓடு.. „
என்னைப் பார்த்து இன்ஸ்பெக்டர் சொன்னவுடன் நான் விட்டால் போதும் என்ற நிலையில் இருந்ததால் உடனேயே சைக்கிளை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு ஓடிவந்து விட்டேன். பாவம் அண்ணன் நடந்து வீட்டுக்குப் போகும்படியான தண்டனை அவருக்கு.
வீட்டுக்கு வந்தவுடன் எனது அம்மாவுக்கு விசயத்தைச் சொல்லிவிட்டு நான் அண்ணன் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் ஒளித்துக் கொண்டேன். பின்னர் வீடு வந்து அண்ணன் அம்மாவின் சமாதானத்தைக்கூடக் கேட்காமல் என்னை எல்லா இடமும் தேடியும் நான் கிடைக்கவில்லை. அடுத்தநாள் சமாதானமாகிய அண்ணன் என்னைப் பார்த்துக் கேட்டார்

“அவன் இறுக்கிக் குட்டச் கொன்னால் இப்பிடியே குட்டுறது? எனக்கு இன்னும் தலை விண்விண் என்று வலிக்குது. „

இன்றும்கூட தொலைபேசியில் அண்ணனின் குரலைக் கேட்கும் போது , அந்த நினைவு வந்து போகும்.

முல்லை