Saturday, July 22, 2006

பெரியக்கா

வருடத்தில்ஏதாவது ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் குடும்பமாக மண்டலாய்ப் பிள்ளையார் கோவிலில் இருப்போம்.

ஈச்சை மரங்கள், பாலை மரங்கள் என பலவித பழ மரங்களும் செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் காடு. அதன் நடுவே பிள்ளையார் கோவில். மற்றைய கோவில்களைப் போலல்லாது இங்கு பிள்ளையார் மேற்கே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் தங்குவதற்காக மண்டபங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே போனால் கிழக்குப் புறமாக உள்ள மண்டபத்தில்தான் தங்குவோம்.

எனது பாட்டனார் காலத்தில் இருந்தே மண்டலாய்க்குப் போய் ஒரு நாள் தங்கியிருந்து மண்டகப்படி செய்து அன்னதானம் வழங்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இரவில்தான் பூசை நடக்கும். காடுகளில் பகல் முழுக்கத் தேடி எடுத்து வந்த காய்ந்த மரங்களை மண்டபத்துக்கு முன்னால் போட்டு எரித்து, அதில் குளிர் காய்ந்த படியே முழுநிலவில் பூசைச் சோற்றை அம்மா குழைத்துத் தர கைகளில் வாங்கி சாப்பிடும் போது இருக்கும் ருசியே தனி.

எனது தந்தையார் இறந்த பின்னர் எனது பெரியக்கா அந்தப் பணியைத் தொடர்ந்தார். ஒரு முறை நான் எனது நண்பர்கள் இருவரை எங்களுடன் அழைத்துச் சென்றிருந்தேன். பகல் முழுக்கக் கூதுகலம்தான். மரத்தில் ஏறி இளநீர் பறிப்பது, குளத்தில் விழுந்து கும்மாளம் அடிப்பது என எங்கள் பொழுதுகள் போய்க் கொண்டிருந்தன.

வெய்யில் ஆரம்பித்து விட்டால் வெளியே மணலில் கால் வைக்க முடியாது. நாங்கள் குளத்தில் கும்மாளம் அடித்து விட்டு வெளியே வரும் போது சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். சுடும் மணல்களுக்குள் கால்கள் புதைய, மணலின் சூடு தாளாமல் துள்ளி ஓடி மண்டபத்துக்குள் நுளைந்தோம். அங்கே பெரியவர்கள் மண்டகப்படிக்கான அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாங்கள் மண்டலாய்க்குப் போனால் நாங்கள் தங்கும் மண்டபத்தில் எங்களது பெயர்கள் வந்த திகதி போன்றவற்றை விலாவாரியாக கரித்துண்டுகளினால் எழுதி வைப்போம். நண்பர்களுடன் மண்டபத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த நினைவு வர, இரவில் மரங்கள் போட்டு நெருப்பெரிக்கும் இடத்தில் இருக்கும் கரித்துண்டுகளைப் பொறுக்கி எடுத்து வந்து எல்லோரது பெயர்களையும் பெரிதாக எழுதி வைத்தேன். நண்பர்களும் தங்கள் பங்குக்குக்கு தங்களுக்குத் தெரிந்தவர்களது பெயர்களை எழுதி வைத்தார்கள்.

மதியம் ஈச்சம் பழங்கள் பாலைப் பழங்களைச் சேகரித்து விட்டு மண்டபத்துக்கு களைத்துப் போய் வந்தோம். பெரியவர்கள் மண்டகப்படிக்கான வேலைகளில் இன்னமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வெய்யிலில் சுற்றிவிட்டு வந்ததால் மண்டபத்தினுள்ளே இருட்டு மாதிரியிருந்தது. நான் சுவரில் எழுதி வைத்த பெயர்களுக்குக்குக் கீழே பளிச்சென்று பெரிய எழுத்தில் ஏதோ தெரிந்தது. எழுந்து நின்று வாசித்தேன்.

„போக்கற்றுப் போறவங்களே எதுக்கடா சுவரிலை எழுதுறீங்கள்?“ என அந்த வாசகம் கோபமாகவும் ஏளனமாகவும் கேட்டது. இதை வாசித்த எனது நண்பர்களுக்கு குற்ற உணர்வு வந்து விட்டது. அவர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள். யார் அதை எழுதியதென்பதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. கோபத்தில் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டேன். அப்படியே சீமெந்து நிலத்தில் உறங்கிப் போனேன். குளிர்ந்த கரங்கள் என்னைத் தட்டி எழுப்பியது. கையில் தேனீருடன் பெரியக்கா.
„தேத்தண்ணியைக் குடி மேனை. „ பெரியக்கா என்னை வாஞ்சையுடன் அழைக்கும் போது மேனை என்றுதான் விழிப்பார். தேனீரை வாங்கிக் கொண்டேன். மெதுவாகச் சொன்னார்.

„நாங்கள் இஞ்சை வாறதுக்கு முதல், ஆக்களை அனுப்பி வெள்ளை அடிப்பிச்சனாங்கள். நீ இப்ப அதிலை கரியாலை எழுதிப் போட்டாய். இதைப் பாத்திட்டு இனி வாறவையளும் எழுதுவினம். அதுக்குத்தான் அப்படி எழுதினனான். சரி இப்ப என்ன இன்னுமொருக்கால் வெள்ளையடிச்சால் போச்சு... நீ போய் உன்ரை பெடியங்களோடை விளையாடு. போ..“ என்று அன்பாகச் சொல்லிவிட்டுப் போனா.

ஞாயிறு இரவு படுக்கைக்குப் போகத் தாமதமாகி விட்டது. மறக்காமல் நாலு மணிக்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்தேன். அலாரம் அடித்தது. இருட்டில் தடவி அலாரத்தை நிறுத்தினேன். விடாமல் மணியடித்தது. லைற்றைப் போட்டு விட்டுப் பார்த்தேன் நேரம் மூன்று மணியைக் காட்டியது. நாலுக்குத்தானே அலாரம் வைத்தேன். நித்திரை மயக்கத்தில் மீண்டும் அலாரத்தை நிறுத்த முனைந்த போதுதான் விளங்கியது. அடித்துக் கொண்டிருப்பது தொலைபேசி மணி என்று. இந்த நேரத்தில் யார்? இப்படியான நேரத்தில் வரும் செய்தி நல்லதாக இருக்காதே. பயத்துடன் தொலைபேசியை எடுத்தேன்

"ஹலோ" "நான் மதி"

"என்ன இந்த நேரத்திலை"

"உங்கடை பெரியக்கா செத்துப் போனா"

"என்ன..?"

"ஹார்ட் அற்றாக்............... நான் மற்றையவையளுக்கும் தகவல் சொல்லோணும்."

"ஓகே..."

அப்படியே படுக்கையில் விழித்திருந்தேன். அலாரத்தை முற்றாக நிறுத்தி விட்டேன். இனி நித்திரை இல்லைத்தானே.

பெரியக்கா...., சுவருக்கு இன்னொருக்கால் வெள்ளை அடிச்சால் போச்சு. ஆனால் மனசுக்கு...?

Saturday, July 15, 2006

கிருஸ்ணர் கோவில் பூசை

பத்மநாபன் ஏழாம் வகுப்பில் இருந்து பத்தாம் வகுப்புவரை எனது பள்ளித் தோழனாக இருந்தான். எனது வீட்டுக்கு அருகில்தான் அவனது குடும்பம் வாடகைக்கு குடியிருந்தது. அவனை வீட்டில் முகுந்தன் என்றே அழைப்பார்கள். எங்கள் மத்தியிலும் அவன் முகுந்தனாகவே இருந்தான். ஊரில் உள்ள ஒரு கிருஸ்ணர் கோயிலின் பூசாரியாராக அவனது தந்தையிருந்தார். ஆதலால் அவனது வீட்டில் எல்லோருக்கும் கிருஸ்ணரது நாமங்கள் சூட்டப்பட்டிருந்தன.

முகுந்தனிடம் எந்த ஒரு விடயத்தையும் நுணுக்கமாக ஆராயும் திறன் இருந்ததை நான் அவதானித்தேன். உதாரணத்திற்கு ஒன்று, தில்லானா மோகனாம்பாள் வெளிவந்த நேரமது. அந்தப் படத்தைப் பார்த்து விட்டு அதில் வரும் மறைந்திருந்து பார்க்கும் மர்மமென்ன என்ற பாடலில் வரும், புண்பட்ட சேதியைக் கேட்டவுடன் இந்தப் பெண் பட்ட பாட்டை யார் அறிவார்? என்ற வரிகளைச் சொல்லி "இதில் பிழையிருக்கு ஏனென்றால் நாயகன் புண் பட்டதை நாயகி நேரடியாகவே காண்கிறாள் அப்படியிருக்க எப்படி புண் பட்ட சேதியைக் கேட்டதென்று பாடமுடியும்? புண் பட்டதைப் பார்த்தவுடன் என்றெல்லோ பாடியிருக்க வேண்டும்" என்று வாதாடத் தொடங்கி விட்டான். யோசித்துப் பார்த்தால் எனக்கும் அது சரியாகவே பட்டது. முகுந்தனது ஆழ்ந்து கவனிக்கும் அந்த விடயங்கள் எனக்கு நிறையப் பிடித்திருந்தது. இதன் பின்னர் திரைப் படங்களைப் பார்க்கும் போது நானும் கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒரு வெள்ளிக்கிழமை பாடசாலை முடிந்து வரும்போது முகுந்தன் சொன்னான். "இன்று இரவு கிருஸ்ணர் கோவிலில் விசேட பூசை ஒன்று இருக்குது.. சாமி வடக்கு வீதிக்கு வந்தவுடன் பிரத்தியேகமாக ஒரு நாடகம் மாதிரி நடித்துக் காட்டுவினம். போய்ப் பார். மிக நல்லா இருக்கும்" என்றான். அவன் வாக்கு தப்பாது என எனக்கு நன்றாகத் தெரியும். எனக்கு கோவிலுக்குப் போய் அந்த நிகழ்ச்சியைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை மனதுக்குள் மெதுவாகத் துளிர்த்தது. "நீ போய்ப் பார்த்து விட்டு திங்கட்கிழமை அதைப் பற்றி எனக்குச் சொல்ல வேண்டும்" என்று அன்புக் கட்டளையையும் தந்து விட்டுப் போனான்.

முகுந்தன் சொன்னதை அம்மாவிற்குச் சொல்ல, "சரி வா" என்று கோயிலுக்குக் கூட்டிப் போனார். கிருஸ்ணரும் வடக்கு வீதிக்கு வந்து விட்டார். சாமியை நிறுத்தி விட்டு ஐயர் பூசையை ஆரம்பித்தார். விசேசம் ஏதாவது நிகழ்கிறதா என சுற்று முற்றும் பார்த்தேன். தீப்பந்தங்களும், அந்த வெளிச்சத்தில் தெரிந்த பக்தர்களும்தான் பரமாத்மாவைச் சுற்றி இருந்தனவே தவிர விசேசங்கள் எதுவும் நிகழ்வதாய்த் தெரியவில்லை. ஐயர் பூசையை முடித்துவிட்டு பக்தர்களைப் பார்த்தார். அது அவரது அனுமதி போலும். திடீரென ஒரு இளைஞர் கூட்டம் என்னை நோக்கிப் பாய்ந்தது. தீப்பந்த வெளிச்சத்தில் சுற்றியிருந்தவர்கள் சிரிப்பது தெரிந்தது. ஏதோ ஒன்று நடக்கப் போகிறது என நினைத்துக் கொண்டேன். ஓடு.. ஓடு.. என்று மூளை அறிவித்துக் கொண்டிருந்தது. ஓடத் தொடங்கினேன். அந்த வெள்ளை மணலில் ஓடுவது சிரமமாக இருந்தாலும் ஏன் ஓடுகிறேன் என்று தெரியாமல், எங்கே ஓடிக் கொண்டிருக்கிறேன் என்று அறியாமல் ஓடிக் கொண்டிருந்தேன். என்னைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் வேட்டி கட்டியிருந்ததால் என்னளவுக்கு அவர்களால் ஓட முடியவில்லை. இருட்டு வேறு எனக்கு உதவியது. நாச்சிமார்களுக்குக் கட்டப் பட்டிருந்த கோயிலுக்குள் புகுந்து ஒளிந்து கொண்டேன்.

எவ்வளவு நேரம் அங்கே இருந்தேன் என்று தெரியவில்லை. என் பெயர் சொல்லி அம்மா கூப்பிடுவதைக் கேட்டு வெளியில் வந்தேன். "நீ கேட்டுத்தானே இந்தப் பூசைக்கு வந்தனான். இந்தக் கோயிலைச் சுத்தி எல்லா இடமும் உன்னைத் தேடி எனக்கு அலுத்துப் போச்சு... " என்று அம்மாவிடம் நிறையத் திட்டு வாங்கினேன்.

வீட்டுக்குத் திரும்பி வரும் போது அம்மாவிடம் கேட்டேன் "எதுக்கு என்னை அவையள் கலைச்சவையள்..?"

அம்மா சிரித்துக் கொண்டே சொன்னா "இந்தப் பூசையில் வடக்கு வீதிக்கு சாமி வந்தாப் போலை பாஞ்சாலிக்கு கண்ணன் ஆடை கொடுத்த நிகழ்வை நடத்திக் காட்டுவினம். இதை பொம்பிளைகளைக் கொண்டு செய்யிறது நல்லதில்லை எண்டு சின்னப் பிள்ளைகள் ஆரின்ரையாவது உடுப்பை கழட்டி சாமிக்கு முன்னாலை வைச்சிடுவினம். அவரும் அழத் தொடங்க, அதிலை இருக்கிற சனங்களும் கண்ணா.. கண்ணா எண்டு கூப்பிட ஐயர் அந்த உடுப்பை திருப்பிக் குடுப்பார். இண்டைக்கு உன்னட்டை இருந்து உடுப்பைக் கழட்டி சாமிக்குக் குடுக்கறதுக்குத்தான் பாத்திருக்கிறாங்கள். நீதானே ஓடிட்டாய்.. "

"உடுப்பெண்டு... "

"எல்லாத்தையும்தான்... அம்மணமாத்தான் நிக்கோணும்... அப்பத்தானே.. உடுப்பைத்தா... எண்டு கதறி அழ முடியும்.. நிகழ்ச்சியும் தத்ரூபமாயிருக்கும்... "

திங்கட்கிழமை பாடசாலைக்குப் போகும் போது முகுந்தன் இணைந்து கொண்டான்.
"கோயிலிலை நல்லா ஓடினாயாம். அப்பா சொன்னார். "முகுந்தன் என்னைப் பார்க்காமலே சொன்னான்.

"ஓடாமல் இருந்திருந்தால் எல்லாத்தையும் கழட்டிப் போட்டு உரிஞ்சுவிட்டு நிண்டான் எண்டு உன்ரை கொப்பர் சொல்லியிருப்பார்" என்றேன் எரிச்சலுடன்.

"ஏண்டா கோவிக்கிறாய்.. ஒரு நிகழ்ச்சிதானே... நானும் ஒருக்கால் மாட்டுப் பட்டிருக்கிறன். வரவர இந்தப் பூசைக்கு சின்னாக்கள் வாறது இல்லை எண்டு அப்பா வீட்டிலை கதைச்சவர்... அதுதான் உன்னை அனுப்பிப் பாத்தன்.. கிருஸ்ணர் கோயிலிலை நாமம்தானே பூசுவினம்.. நான் பூசினால் என்ன இதுக்குப் போய் கோவிக்கிறாய்... "எண்டான்.
அவனது பேச்சு வல்லமை எனது கோபத்தைத் தடுத்தது.

அடுத்த வருசம் கிருஸ்ணர் கோவிலுக்கு புது ஐயர் வந்ததால் முகுந்தனின் தந்தைக்கு அந்த வேலை போயிற்று. அவர்களும் எங்கள் கிராமத்தை விட்டுப் போக வேண்டியதாயிற்று. போகும் போது முகுந்தன் "அந்தப் பூசையை மனசிலை வைச்சிருக்கிறீயோ? "என்று கேட்டான்.

"மனசிலை வைச்சிருப்பன். ஆனால் உன்னைக் கோவிக்க மாட்டேன் "என்றேன்

முகுந்தனைக் கண்டு நாற்பது வருடங்களாயிற்று நினைவு மட்டும் மறையவில்லை.