Sunday, June 22, 2008

அம்மன் அருள்

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம். ஆகவே சாமிகள் பேரில் ஆசாமிகள் அருள்வாக்கு சொல்லும் போது அப்படியே நம்பி விடுவார்.

எங்கள் ஊருக்கு அயலில் குசவெட்டி என்ற ஊர் இருக்கிறது. மட் பானைகள் செய்பவர்கள் இங்கு அதிகம். அதற்கேற்ற செம்பாட்டு மண்ணும் அங்கிருக்கிறது. இங்கிருக்கும் ஒருவர் உழைப்பதற்கு சுலபமான வழியாகக் கண்டு பிடித்ததுதான் அம்மன் கோவில்.

இவரது தொழில் மட்பானை செய்வதாக இருந்தாலும் இவருக்கு அடிக்கடி அம்மன் அருள் வருவதால் அந்தத் தொழிலை விட்டுவிட்டு வீட்டோடு கோவில் அமைத்து வெள்ளிக் கிழமைகளில் அருள்வாக்கு சொல்லத் தொடங்கி விட்டார். இதில் ஆச்சரியம் என்ன என்றால் வெள்ளிக்கிழமைகளில் மாலை ஆறு மணிக்கு சரியாக அம்மன் இவரிடம் வந்து விடும். அருள் வந்தவுடன் இவர் யார் மேலே தண்ணீர் தெளிக்கிறாரோ அவரை அல்லது அவரது குடும்பத்தை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்சினை என்பதை தானே சொல்லி அதற்கான பரிகாரத்தையும் கூறிவிடுவார். அவர்களது பாதுகாப்புக்கு அம்மன் இருப்பதாகச் சொல்லி வீட்டில் வைப்பதற்கு பாவட்டம் இலைகளையும் கொடுத்து விடுவார். சிலருக்கு நோய் தீர மருந்தாக மண்ணை தண்ணீரில் குழைத்து உருட்டி சிறுசிறு உருண்டைகளாக உட்கொள்ளவும் கொடுத்து விடுவார். அருள்வாக்கு கேட்டவர்களும், நோய்க்கு மருந்து பெற்றவர்களும் பக்தியில் உருகி அம்மனுக்கு என்று காணிக்கைகளை செலுத்தி மகிழ்ச்சி அடைவார்கள்.

அம்மன் அருள் வருபவருக்கு சிறி என்று ஒரு மகன் இருந்தார். ஆள் கொஞ்சம் தண்ணீர் சாமி. பார்த்தார் எங்கள் ஆசாமி, இவரை எப்படிப் பயன் படுத்தலாம் என்று. இறுதியாக வழி ஒன்று கண்டு பிடித்து விட்டார். தனது மகனுக்கு காத்தவராயன் அருள் வந்து விடுகிறது என்று பக்தர்களுக்குச் சொல்லி வைத்து விட்டார். காத்தவராயன் என்ற சிறி மாலையில் கள்ளைக் குடித்து விட்டு வந்து தானும் அருள் வாக்கு என்று புலம்பும். பக்தர் கூட்டமும் அதை நம்பும். காத்தவராயனுக்கு என்று கள்ளும் கொண்டு வந்து பக்தர் கூட்டம் படைத்து தனது பக்தியைக் காட்டி நிற்கும். காத்தவராயனும் அதைக் குடித்துக் குடித்து ஏவறை விட்டபடியே அருள் சொல்லி வந்தவரை ஏய்க்கும்.

இந்த இடத்திற்கு 1962 மாசி மாதம் 21ம் திகதி, எனது தந்தை மரணிப்பதற்கு முதல் நாள் வரவேண்டியிருந்தது. அன்று அம்மன் சொன்ன வாக்குகள் உண்மையாக இருந்ததால் அம்மாவிற்கு சாமி மேல் அதீத நம்பிக்கை வந்து விட்டது. ஆதனால் ஒவ்வொரு வெள்ளியும் அம்மா எங்களையும் அழைத்துக் கொண்டு இந்தக் கோயிலுக்கு வந்து விடுவார்.

எனது காலில் ஒரு தடி ஒன்று குத்தியதால் ஏற்பட்ட காயத்திற்கு அம்மா என்னை இங்கேதான் அழைத்து வந்தார். மருந்தாக பாவட்டம் இலையும் மண் உருண்டையும் தான் கிடைத்தது. பேசாமல் வைத்தியசாலைக்குப் போயிருந்திருக்கலாம். ஆனால் அம்மாவின் அம்மன் மீதான நம்பிக்கை அதைத் தடுத்து விட்டது. காயம் பெருத்ததே தவிர மாறவில்லை. ஆனாலும் அம்மாவின் நம்பிக்கையோ மாறவில்லை.

அன்றும் பூசைக்கு முன்னர் அம்மன் பூசாரியின் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருந்தேன். அம்மா வந்திருந்த பக்தர் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தார். அப்பொழுதுதான் கவனித்தேன். பக்தர்கள் கூட்டத்துக்குள் இருந்து கதைத்துக் கொண்டிருந்தவர்களில் பூசாரியின் ஆட்களும் கலந்து இருந்தார்கள். அவர்கள் பக்தர்கள் போல் மற்றவர்களுடன் கலந்திருந்து அவர்கள் பிரச்சினைகளைக் கேட்டு விட்டு வந்து பூசாரியிடம் ஒப்புவித்துக் கொண்டிருந்தார்கள். திண்ணையில் இருந்த என்னை அவர்கள் கவனிக்கவில்லை. அல்லது சட்டடை செய்யவில்லை. அவர்கள் சிவப்பு நிற சாறி கட்டி வந்தவருக்கு உள்ள பிரச்சினை இது, பச்சை நிற சாறி கட்டி வந்தவருக்கான பிரச்சினை இது என ஒவ்வொன்றாக அருள் வருவதற்கு முன்னர் அம்மன் பூசாரிக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள். அன்றைய பூசையில் திண்ணையில் நான் கேட்ட விடயம் சம்பந்தமானவர்களை மட்டும் அம்மன் அழைத்து பரிகாரம் சொல்லிக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு இவர்களது தில்லு முல்லுகளை விளக்கும் பக்குவம், வயது எனக்கு அப்போது இருக்கவில்லை. ஆனாலும் எனது காலிற்கான சிகிச்சை வைத்தியசாலையில் தரப்பட்டு அது குணமானதின் பின்னர் அம்மாவில் இவர்கள் பற்றிய அபிப்பிராயம் குறைந்து மறைந்து போனதை என்னால் காண முடிந்தது.

பின் நாளில் அம்மாவுடனான தொலைபேசி உரையாடல்களில் அம்மா முதலில் கேட்பது "எப்பிடி சுகமாயிருக்கிறாயா?" என்று. நான் "ஓம்" என்று பதில் தந்தவுடன் அவரிடம் இருந்து வருவது இதுதான். "எனக்குத் தெரியும் நீ சுகமாய் இருப்பாய் எண்டு. நான்தானே ஒவ்வொரு வெள்ளியும் இஞ்சை இருக்கிற கோயிலுக்குப் போய், என்ரை பிள்ளைகள் நல்லா இருக்கோணும் எண்டு கடவுளை வேண்டி அர்ச்சனை செய்யிறனான். "

அம்மாவிற்கு கடவுள் நம்பிக்கை அதிகம்.

Friday, June 20, 2008

குறும்பு


புலவர்கள் குறும்புகள் என்ற ஒரு புத்தகத்தை முன்பு ஒரு தடவை வாசித்து இருக்கிறேன். இன்று எனது நினைவுக்கு வந்த ஒரு புலவரின் குறும்பு இதோ.


ஒரு புலவன் நோயின் தாக்கத்தினால் படுக்கையில் விழுந்து மரணத்திற்கான நாழிகையை எண்ணிக் கொண்டிருக்கிறான். அந்தப் புலவனால் உணவையோ நீரையோ உட் கொள்ள முடியாத நிலை. அவனது பேத்தி அவன் அருகில் இருந்து அந்தப் புலவனுக்கான பணிவிடைகள் செய்து கொண்டிருக்கிறாள். அவள் ஒரு துணியை பாலினில் தோய்த்து அந்தப் புலவனின் வாயில் ஒவ்வொரு துளிகளாக விட்டுக் கொண்டிருக்கிறாள். பால் வாய்க்குள் விழுந்ததும் புலவனின் முகம் மாறிவிடுகிறது. இதை அவதானித்த அவனது பேத்தி, "தாத்தா பால் கசக்கிறதா? " எனக் கேட்டாள்.

புலவனிடம் இருந்து பதில் உடனேயே வந்தது "பாலும் கசக்கவில்லை துணியும் கசக்கவில்லை"

பேத்தி அப்பொழுதுதான் துணியைப் பார்த்தாள் அது அழுக்காக இருந்தது. மரணத்தின் இறுதி நேரத்தில் கூட குறும்பு அந்தப் புலவனை விட்டுப் போகவில்லை.


சமீபத்தில் மறைந்த எனது தாயார் தனது இறுதி நேரத்தினை நெருங்கிக் கொண்டு இருக்கும் போது எனது அக்காதான் அவரைக் கவனித்துக் கொண்டிருந்தாள். அக்காவுக்கு சிறிய இடைவேளை தேவைப்பட்ட பொழுது எனது அண்ணனின் மகள் காயத்திரியை அம்மாவைக் கவனித்துக் கொள்ளும்படி சொல்லிச் சென்று விட்டாள்.

அம்மா ஒரு தேனீர் பிரியை. அவருக்கு ஏதாவது குடிக்க வேண்டும் போல் இருந்திருக்கிறது. இதை அவதானித்த காயத்திரி "அப்பம்மா tea போட்டுத் தரட்டா" என்று கேட்டிருக்கிறாள்.




அம்மாவிடம் இருந்து உடனடியாகப் பதில் வந்தது "நீயோ? tea போடப் போறியோ..? ஐயையோ எனக்கு வேண்டாம்"

உயிர் விட்டுப் போகும் வேளையில் கூட சிலரை குறும்புகள் விட்டுப் போகாது

Wednesday, June 11, 2008

அம்மா சொன்ன வழி

அங்கொன்று இங்கொன்றாக போராளிகள் தாக்குதல்களைத் தொடங்கிய கால கட்டம் அது. எங்காவது ஒரு தாக்குதல் நடந்தால் உடனடியாக இராணுவம் அந்த இடத்தை சுற்றி வளைக்கும். வீடு வீடாகச் சென்று இளைஞர்களை இழுத்து வந்து வெயிலில் காய வைக்கும். பலரை இராணுவ முகாம்களுக்கு இழுத்துச் செல்லும். இவ்வாறான இந்தக் கொடுமைகளில் இருந்து தப்புவதற்கு, எங்காவது தாக்குதல் நடந்தால் ஒழுங்கைகள் ஊடாக சைக்கிளில் இளையோர் கூட்டம் அடுத்த நகரங்களை நோக்கி பறந்து விடும்.
இப்படியான ஒரு காலகட்டத்தில் நான் வீட்டில் நின்றிருந்தேன். எனது நகரத்துக்கு அயல் கிராமத்தில் அன்று போராளிகள் வைத்த குண்டு வெடித்து சில இராணுவம் சிதறிப் போயிருந்தது. அதனால் நகரம் முழுதும் இராணுவ நடமாட்டம். வியாபார நிலையங்கள் எல்லாம் பூட்டி இருந்தன. பாடசாலை நடக்கவில்லை. ஆலயங்களில் சாமிகளைத் தனியே விட்டு பூட்டி விட்டு பூசாரிகளும் ஓடி விட்டிருந்தார்கள்.
அன்று எனது அம்மாவுக்கு காய்ச்சல் கண்டு இருந்தது. அது மாலையில் அதிகமாகி விட்டது. கண்டிப்பாக அம்மாவை டொக்டரிடம் கூட்டிக் கொண்டு போக வேண்டிய நிலைமை. காரில் பிராதன வீதியால் போவதென்றால் இராணுவத்தை சந்தித்தாக வேண்டும். உள் ஒழுங்கைகளால் காரில் போனால், அதன் சத்தம் இராணுவத்தை ஒழுங்கைகளுக்கு அழைத்து வந்து விடும். இந்த சிக்கல்கள் இல்லாமல் இருக்க வேண்டும் என்றால் ஒன்றில் ஒழுங்கைகளால் நடந்து போக வேண்டும் அல்லது சைக்கிளில் போக வேண்டும். அம்மாவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன். அவ்வளவு தூரம் நடப்பது சாத்தியம் இல்லை. ஆகவே சைக்கிளில் தன்னை வைத்து ஏற்றிச் செல்லும்படி அம்மா சொன்னார்.
"சைக்கிளில் சரியாக இருப்பீங்களா?" என்று கேட்டேன். முன்னே பின்னே சைக்கிளில் சவாரி செய்யாதவர் அவர். ஆதலினால்தான் அப்படிக் கேட்டேன்.
"ஓம்" "என்றார்.
இந்த நேரத்தில் டொக்டர் முருகானந்தத்தின் தனியார் வைத்தியசாலையில் ஆட்கள் அதிகமாக இருக்க மாட்டார்கள். ஆகவே உடனடியாக அம்மாவை பரிசோதிக்கச் செய்து மருந்து வாங்கிவிடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.
அம்மாவை முன்னுக்கு இருத்தி சைக்கிளை மெதுவாக ஓடத் தொடங்கினேன். ஒழுங்கையில் மழை வெள்ளங்கள் இழுத்து வந்த மணல் அதிகம் இருந்ததால் ஓடும்போது சைக்கிளில் தள்ளாட்டம் தெரிந்தது. ஆனாலும் பயப்படாமல் அம்மா இருந்தார். தன்னை விழுத்த மாட்டேன் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது. மெதுவாக விசுவகுல ஒழுங்கையால் பிரதான வீதிக்கு வந்து வீதியின் அருகில் இருக்கும் டொக்டர் முருகானந்தத்தின் வைத்தியசாலையை வந்தடைந்தேன். என்ன ஆச்சரியம் அவரது வைத்திய நிலையம் நோயாளர்களால் நிறைந்திருந்தது. என்னைப் போல் பலர் உள் ஒழுங்கைகளால் வந்து சேர்ந்திருந்திருந்தார்கள் என்பதை அங்கிருந்த சைக்கிள்களைப் பார்த்ததும் புரிந்து கொண்டேன். இதில் இன்னும் ஒரு விபரீதம் நிகழ வாய்ப்பிருந்ததை மனது மெதுவாக சொல்லியது. தற்செயலாக இராணுவ வாகனம் இந்தப் பாதையால் போகும் பொழுது இவ்வளவு சைக்கிள்களைப் பார்த்து விட்டு சும்மா போகாது. ஏதாவது நடந்தால் ஓட முடியாது. அம்மாவை விட்டு விட்டு எப்படி ஓடுவது?
எவ்வளவு நேரம் காத்திருக்க வேண்டுமோ என்ற சிந்தனையுடன் வைத்திய நிலையத்துக்குள் நுளைந்தேன். அங்கே நோயாளர்களை ஒவ்வொருவராக மனோராணி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தாள். என்னைக் கண்டதும் என்ன என்பது போல் விழியை உயர்த்தி சாடையால் வினாவினாள். நான் அம்மாவைக் காட்டினேன். வாங்கோ அம்மா என்று அன்பாக அழைத்து வைத்தியரிடம் அனுப்பி வைத்தாள். வைத்தியரும் நாளைக்கு சுகமாகி விடும் என்று அன்பாகப் பேசி ஒரு ஊசியை அம்மாவுக்கு போட்டு விட்டார். இயற்கையில் ஊசி போடுவது என்றால் அம்மாவுக்குப் பயம் ஆனாலும் அன்று எதுவித எதிர்ப்பும் காட்டாமல் போட்டுக் கொண்டார். வெளியே வந்து வைத்தியருக்கான செலவைச் செலுத்தி விட்டுப் பார்த்தால், "நாங்கள் முன்னுக்கு வந்தனாங்கள். எப்பிடி இப்ப வந்த அவையளை நீங்கள் உள்ளை அனுப்பலாம்" என்று மனோராணியுடன் சிலர் வாதிட்டுக் கொண்டிருந்தார்கள். அவளும் ஏதோ சமாதானம் சொல்லிக் கொண்டு எங்களைப் பார்த்து புன்னகைத்து விடை கொடுத்தாள்.
சைக்கிளில் அம்மாவை இருத்தி வீடு நோக்கி மெதுவாக ஓடிக் கொண்டருந்தேன். அம்மா மௌனமாக இருந்தார்.
"என்ன பேசாமல் இருக்கிறீங்கள் போட்ட ஊசி நோகுதோ? "
"ஊசி நோகுதோ இல்லையோ நீ அப்பிடிச் செய்திருக்கக் கூடாது." எனக்கு எதைப் பற்றி அம்மா கதைக்கிறார் என்று விளங்கவில்லை. அம்மாவே தொடர்ந்தார். "அவ்வளவு சனம் இருக்கக்கை நீ என்னெண்டு உன்ரை அம்மாவை மட்டும் உடனடியாகக் காட்ட முடிஞ்சுது. "
"அந்தப் பிள்ளையை எனக்குத் தெரியும். "
"உனக்கு அந்தப் பிள்ளையைத் தெரியும் எண்டாப் போலை மற்றையவையளைப் பற்றி நீ சிந்திக்கேல்லை. உன்ரை அலுவல் முடிஞ்சால் சரி. உன்ரை அம்மாவைப் போலை எத்தனை பேர் அங்கை இருந்திருப்பினம். அதுகளுக்கு என்ன அவசரம் இருந்திச்சோ? திரும்ப வரக்கை பாத்தனியே? அந்தப் பிள்ளையை சனங்கள் பேசிக் கொண்டிருக்கிறதை. இனிமேல் பட்டு உனக்குத் தெரிஞ்ச ஆக்களெண்டோ இல்லாட்டில் உன்ரை செல்வாக்கைப் பயன் படுத்தியோ உன்ரை அலுவலைப் பாக்கிறதை நிப்பாட்டிப் போட்டு, சரியான வழியிலை போ. "
அம்மாவின் வார்த்தைகள் எனக்கு ஊசியால் குத்துவது போல இருந்தது. அம்மாவுக்கு காய்ச்சலுக்குப் போட்ட ஊசியை விட அம்மா எனக்குப் போட்ட ஊசி நன்றாக வேலை செய்யத் தொடங்கியது. எத்தனையோ பெரியவர்களை, அரசியல்வாதிகளை, அறிஞர்களை சந்தித்திருக்கிறேன். அனாலும் எனக்கு அவரைத் தெரியும் இவரைத் தெரியும் என்று எந்த அலுவல்களையும் இன்றுவரை நான் யாரையும் கொண்டு செய்விப்பதும் இல்லை. செய்வதும் இல்லை, சிபாரிசுகளுக்குப் போனதும் இல்லை.

Monday, June 02, 2008

மணிப்புறா


பக்கத்து வீட்டு நக்கீரன் வளர்க்கும் புறாக்களைப் பார்க்க எனக்கும் புறா வளர்க்கும் எண்ணம் மெதுவாக வந்து தொற்றிக் கொண்டது. அழகான மரச் சட்டங்களால் நக்கீரன் புறா கூடு அமைத்திருந்தான். புறாக்கள் கூட்டை விட்டு வெளியே வருவதும், பறப்பதும், அவை உலா வருவதும் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது.

அம்மாவிடம் நானும் புறா வளர்க்கப் போகிறேன் என்று ஒருநாள் கேட்டு வைத்தேன். கேட்டவுடனேயே அங்கிருந்து மறுப்பு வந்தது. எனது ஆசையை உடனுக்குடன் நிறை வேற்றி வைக்கும் அவர் அன்று மறுத்தது என்னை மிகுந்த சோகத்தில் தள்ளியது. ஆனாலும் நானும் விடாமல் அவரை நச்சரித்துக் கொண்டிருந்தேன். அம்மா அசைந்து கொடுக்கவே இல்லை. ஆனாலும் என் ஆசை மட்டும் போகவே இல்லை.

படித்த வாலிபர்களுக்கு தொழில் வாய்ப்புத் தருவதற்காக விசுவமடுப் பகுதியில் மூன்று ஏக்கர் நிலத்தை விவசாயம் செய்வதற்கு அரசாங்கம் இலவசமாகக் கொடுத்துக் கொண்டிருந்தது. எனது ஊரைச் சேர்ந்த சோமு என்பவருக்கும் அங்கு நிலம் கிடைத்திருந்தது. சோமண்ணனுடன் ஒருநாள் கதைக்கும் போது எனது புறா வளர்க்கும் ஆசையை சொல்லி வைத்தேன்.

ஒரு மாலை நேரம் ஒரு சோடி மணிப்பறாக்களுடன் சோமண்ணை என்னிடம் வந்தார். எனக்காக அவர் விசுவமடுவில் இருந்து அந்த சோடி மணிப்புறாவை கொண்டு வந்திருந்தார். பார்க்க மிகுந்த அழகாக இருந்தது. நக்கீரன் கூட வந்து ஆச்சரியமாகப் பார்த்துப் போனான். பழக்கம் இல்லாததால் அவற்றை கூண்டுக்குள் வளர்க்கும் படியும், இல்லாவிட்டால் பறந்து போய் விடும் என்றும் சோமண்ணை எச்சரித்திருந்ததால் நான் அவற்றுக்கென கம்பிகளால் செய்த ஒரு கூண்டை வாங்கி அதற்குள் அவற்றை வளர்க்கத் தொடங்கினேன்.

ஒருநாள் பாடசாலை முடிந்து வந்து பார்த்தால் கூண்டு திறந்திருந்தது. மணிப்புறாக்கள் அங்கு இல்லை. நான் கூண்டை பூட்டி விட்டுத்தான் பாடசாலை போனேனா? என்ற சந்தேகம் வந்து விட்டது. பூனை பிடித்து தின்றிருக்குமா? என்ற பயமும் ஏற்பட்டது. அழுகையும், பயமும் சேர அப்படியே தரையில் அமர்ந்து விட்டேன்.

எனது தோளில் குளிர்மையான கை தொட, நிமிர்ந்து பார்த்தேன். தேனீருடன் அம்மா நின்றிருந்தார். எனது அருகில் அமர்ந்து, „உயிர்களை வதைக்கிறது, அவற்றை கூண்டுக்குள்ளை அடைக்கிறது எல்லாம் பாவம். புறவைகள் சுதந்திரமானவை அவைகளைக் கூண்டுக்குள்ளை அடைச்சு பறக்க விடமால் செய்ய நாங்கள் யார்? உனக்கிருக்கிற அண்ணன் அக்கா சொந்த பந்தம் அதுகளுக்கும் இருக்கும் தானே. உன்னைப் பிடிச்சு கூண்டுக்குள்ளை போட்டால் உனக்கு எவ்வளவு கஸ்ரமாக இருக்கும். அதுபோலத்தான் அதுகளுக்கும். கூண்டுக்குள்ளை மணிப்புறா வளர்க்கிறது உனக்கு ஆசையாக இருக்கும். ஆனால் அதுகளுக்கு வேதனையாக இருக்கும். நான்தான் அவைகளை பறக்க விட்டனான்.“ எனது தலையைக் கோதிவிட்டு அம்மா எழுந்து போய் விட்டார்.
அந்த நேரத்தில் எனக்கிருந்த சோகத்தில் அதிகமாக நான் யோசிக்கவில்லை. ஆனாலும் உயிர்களிடத்தில் எனது தாய்க்கு இருந்த பிரியம் எனக்கு ஆச்சரியத்தைத் தந்தது. இன்றுவரை வீட்டில் எந்தக் கூண்டும் இல்லை. சொல்லிக் கொள்ள செல்லப் பிராணிகள் கூட இல்லை