Friday, July 16, 2004

கணேசன்

ஆஜானுபாகுவான தோற்றம் என்ற வார்த்தையை பல சரித்திரக் கதைகளில் வாசித்திருக்கின்றேன். அந்தத் தோற்றத்திற்கான உருவத்தை கற்பனையில் பல தடவைகள் தேடியும் பார்த்திருக்கின்றேன். ஆனாலும் பொருத்தமான ஒரு முழுமையான தோற்றத்தை என்னால் பெற முடியாதிருந்தது.

நான் கற்பனையில் தேடிய உருவம் ஒருநாள் எனக்கு நேரில் வந்து நின்றது. உயரம், பருமன், இறுக்கமான உடலமைப்பு என்று எல்லாமே ஒன்றாக அமைந்த அவன்தான் கணேசன்.

அவனுடைய நண்பர்கள் மத்தியில் அவனைச் செல்லமாக கஜபாகு என்றே அழைப்பார்கள். இருட்டில் தெரியவேண்டும் என்பதற்காகத்தானோ என்னவோ எப்பொழுதுமே அவன் வெள்ளை வேட்டி சட்டையுடன்தான் வலம் வருவான்.
கணேசன் என்னுடைய பால்ய நண்பனோ, பாடசாலைத் தோழனோயில்லை. எனது இருபதுகளின் நடுப்பகுதியில்தான் நான் அவனைச் சந்தித்தேன்.

கொத்துறொட்டி (பரோட்டா) சாப்பிடுவதற்காக அடிக்கடி எனது நண்பர் குலாமுடன் மாலைகளில் நகரத்திலுள்ள நானா கடைக்குப் போவேன். கணேசனும் தனது சகாக்களுடன் அங்கு வருவான். என்னைவிட அவனுக்கு இரண்டு வயது அதிகம். கடற்தொழில் செய்து கொண்டிருந்தான். கடையில் சாப்பிட்டுவிட்டு தொழிலுக்குப் போகையில் கடலில் சாப்பிடுவதற்கும் பார்சல் இரண்டு கட்டிக்கொண்டு போவான். கடையில் சாப்பிடும் போதும் ஒரு கொத்துறொட்டி அவனுக்குப் போதாது. எப்பொழுதும் இரண்டு கொத்துறொட்டிதான் அவன் கணக்கு. சிலசமயங்களில் தனக்குப் போடும் கொத்துறொட்டிக்கு எக்ஸ்ராவாக இரண்டு றொட்டி போட்டுக் கொத்தச் சொல்லுவான்

அடிக்கடி கடையில் சந்திப்பதால் அதுவே எங்களுக்குள் ஒரு அறிமுகத்தைத் தந்திருந்தது. இந்த அறிமுகம் பின்னாடி நட்பாக பரிணமித்தது.

அவன் எப்பொழுதும் என் நிழலாக இருந்தான். எனது வாழ்க்கையில் அக்கறை கொண்டவனாக இருந்தான். அவன் என் அருகில் இருக்கும்போது பயம் என்ற எண்ணம் எனக்கு வந்ததில்லை. அவன் அருகிலிருந்ததால் எவ்வளவு பிரச்சினையான விடயமாக இருந்தாலும் அதைத் தீர்க்கும் தைரியம் எனக்கு வந்தது.

எனது இடத்திலிருந்து அவனது ஊர் ஆறுமைல் தொலைவில் இருந்தது. ஒருநாள் எனது மகனையும் மகளையும் அழைத்துக்கொண்டு அவனது ஊருக்குப் போயிருந்தேன்.

தனது படகில் அவர்களை அழைத்துச் சென்று கடலைக் காட்ட விரும்புவதாகச் சொன்னான். சரியென்று ஒத்துக்கொண்டு நானும் பிள்ளைகளும் அவனும் அவனது படகில் கடலில் சென்றோம். இடைநடுவில் இயந்திரம் நின்றுவிட்டது. படகு கடலில் நடனம் ஆடத் தொடங்கியது. அவன் அருகில் இருந்தபோதும் இப்போது எனக்கு பயம் பிடித்துக் கொண்டது. போதாதற்கு எனது பிள்ளைகளும் படகில் இருந்தார்கள். கணேசன் அமைதியாக இருந்தான்.

"இப்ப என்னடா செய்யிறது? "

"ம்... வேறை ஏதும் படகு வந்தால்தான்... இல்லாட்டில் இப்பிடியேதான் இருக்கோணும்... "

கரையைத் தெரியவில்லை. அப்போ எல்லாம் கைத் தொலைபேசியைப் பற்றி கற்பனை கூடக் கிடையாது. சத்தம் போட்டுக் கூப்பிட்டாலும் யாருக்குமே சுத்தமாகக் கேட்காது.

"ஆரும் வராட்டில்...? "

"வராட்டில்.. இப்பிடியே கடல் இழுக்கிற பக்கமா போகத்தானிருக்கு.. "

"எப்பிடியோ ஒரு கரைக்குப் போகலாம்தானே.. ? "கொஞ்சம் நம்பிக்கையை வரவழைத்துக்கொண்டு கேட்டேன்

"ஆருக்குத் தெரியும்? கரைக்குப் போறமோ.. இல்லாட்டில் நடுக்கடலுக்கு இழுத்துக் கொண்டு போகுதோ..? "
சர்வசாதாரணமாக அவனிடமிருந்து பதில் வந்தது.

பிள்ளைகளைப் பார்த்தேன் படகில் மோதித் தெறிக்கும் கடல்தண்ணீரையும் கடலையும் ரசித்துக் கொண்டிருந்தார்கள். கரையில் நின்று கடலைப் பார்த்திருக்கிறார்கள். கடலுக்குள் படகில் நிற்பது அவர்களுக்கு வித்தியாசமாக இருந்திருக்கும். விபரீதம் அவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது. தெரிந்து கொள்ளும் வயதா அவர்களுக்கு.

வேறு வழியில்லை நான் கடலை வெறுமையாகப் பார்த்தேன்.
அப்பொழுதுதான் கணேசன் இன்னுமொரு குண்டைப் போட்டான்.
"எனக்கு நீந்தத் தெரிஞ்சால் கரைக்குப்போய் உதவி கேக்கலாம்.. நீந்தவும் பழகேல்லை.. "

"உன்னுடைய தொழிலே கடலிலைதான்... நீந்தத் தெரியேல்லையெண்டால்.. ?"
எனது கேள்வியில் எரிச்சல் இருந்தது. அதைப் புரிந்து கொள்ளாதவகையில்

அவனது பதில் அலட்சியமாக வந்தது
"என்னத்துக்கெண்டு விட்டுட்டன்.. இந்த உடம்போடை கஸ்ரமடா.. "

என்னை நோவதா அவனை நோவதா என்பது எனக்குத் தெரியாமல் இருந்தது. கடல் நீர் ஆட்டத்தில் படகு சுத்திச் சுத்தி வந்ததால் எனது மகள் வாந்தியெடுக்கத் தொடங்கிவிட்டாள்.

"ஆள் சத்தியெடுக்கத் துடங்கிட்டா... கரைக்குப் போவம்.."

"எப்பிடி..? எஞ்சின் பழுதாப் போச்செல்லோ..? "

கணேசன் சிரித்துப் பார்ப்பது என்பது அபூர்வமான விடயம். இப்பொழுது அவன் உதட்டில் ஒரு புன்சிரிப்பு.

"சும்மா வெறும் கடலிலை ஓடிக் கொண்டிருந்தால் என்னயிருக்கு.. ? அதுதான் எஞ்சினை நிப்பாட்டிவிட்டனான். பயந்திட்டியோ? "

கடலுக்குள்ளை அவ்வளவு தண்ணியிருந்தும், என் நெஞ்சுக்குள்ளே அப்போதான் தண்ணி வந்த மாதிரியிருந்தது.

"நானிருக்க உனக்கென்னடா பயம். ? "

உண்மைதான். அதை சிறிது நேரம் நான் மறந்து போயிருந்தேன்.

நாட்டில் பிரச்சனைகள் தொடங்கிய போது எங்கள் நட்புகளின் நெருக்கமும் தள்ளிப் போனது

கடல் பரப்பை கடற்படை முற்றாக ஆக்கிரமித்துக் கொண்டதால் தொழிலுக்குப் போக முடியாமல் துன்பப் பட்டவர்களின் பட்டியலில் கணேசனும் இருந்தான்.

ஒருநாள் அவன் கிராமத்தை நோக்கி கடலில் இருந்து கடற்படை தொடர்ச்சியாக குண்டுகளைச் செலுத்திக் கொண்டிருந்தது. குண்டுகள் விழுந்து வெடிக்கும் சத்தம் ஆறுமைல் தள்ளியிருந்த எனது வீட்டிலும் அதிர்வைத் தந்தது.அன்று மாலையில் மூட்டை முடிச்சுக்களைத் தூக்கிக் கொண்டு குடும்பத்துடன் பல மைல்கள் உள்வீதியால் நடந்து என்னிடம் வந்தான். நிறையவே களைத்துப் போயிருந்தான். அவன் குடும்பம் தங்க எனது வீட்டிலேயே ஒழுங்கு செய்து கொடுத்தேன்.

சிறிது காலம்தான் இருந்தான். அடிக்கடி வெளியில் போய் வருவான். இயற்கையிலேயே அவன் முகம் இறுக்கமானதால் அவனிடமிருந்து எந்த விதமான உணர்ச்சிகளையும் காண முடியாதிருந்தது.

"கொஞ்ச நாளைக்கு இவையள் உன்ரை பொறுப்பிலை இஞ்சை இருக்கட்டும்.. நான் பிறகு வந்து உன்னைச் சந்திக்கிறன்" என்று ஒருநாள் சொல்லிப் போனவன் நீண்ட நாட்களாக வராமலிருந்தான். அவனிடமிருந்து தகவல் கிடைக்கவில்லை. அவன் மனைவி ராணியக்காவும் அவனைப் பற்றி எதுவுமே எனக்குச் சொல்லவில்லை. அவன் எங்கே போனான் என்பதை அறிய நானும் ஆர்வம் காட்டவில்லை.

இராணுவம் நகரங்களைக் கொளுத்தி வேடிக்கை பார்த்த கால கட்டமது. எனது நகரமும் அவர்கள் விளையாட்டுக்குத் தப்பவில்லை. அவர்கள் இட்ட தீயில் எனது தொழில் நிலையம் முற்றாக அழிந்து போயிற்று. இனி அங்கிருப்பதை நான் விரும்பவில்லை. வெளிநாடு செல்வது என முடிவெடுத்தேன். ஐரோப்பிய நாடு அல்லது கனடா போவதென்றே முடிவெடுத்திருந்தேன்.
இந்த நிலையில் ஒரு மதியம் கணேஸ் திரும்ப வந்தான். இன்னும் நிறையக் கறுத்திருந்தான்.
அவனிடம் கதைத்தக் கொண்டிருந்த பொழுதுதான், அவன் இந்தியா போக விரும்பும் குடும்பங்களை படகின் மூலம் அங்கே கொண்டுபோய் விடுவதாகச் சொன்னான். நான் விரும்பினால் என்னையும் அங்கே கூட்டிக் கொண்டு போவதாகச் சொன்னான். நான் எனது நிலைப்பாட்டைச் சொன்னேன். நிறைய நேரம் பேசாமலிருந்தான். நாங்கள் பிரியப் போவதை அவன் ஜீரணிக்க முடியாமல் இருந்தான் என்பதை உணர முடிந்தது

"சரியடாப்பா.. நானும் இவையளைக் கூட்டிக்கொண்டு போய் இந்தியாவிலை விடப் போறன்.. இனி இஞ்சை இருக்கேலாது... எங்கை போனாலும் என்னை வந்து பிறகு சந்திக்கோணும்.."
வாக்குறுதி வாங்கிக் கொண்டு தனது குடும்பத்தை அழைத்துக் கொண்டு தனது ஊருக்குப் போனான்.

நான் புலம் பெயர்ந்து இங்கு வரும்போது அவன் சில குடும்பங்களைக் கூட்டிக்கொண்டு இந்தியாவுக்குப் போயிருந்தான். இன்னும் ஓரிரு தினங்களில் அவன் வந்து விடுவான் என்ற நிலமையிருந்த போதும் அவனைச் சந்திக்காமலேயே நான் புறப்படவேண்டிய தேவையிருந்தது. அதனால் ராணியக்காவிடம் மட்டும் சொல்லிவிட்டு இங்கு வந்துவிட்டேன்.

இங்கு வந்த போது நாட்டு நிலமைகளை BBC வானொலியில் அறிந்து கொள்ள வாய்ப்பிருந்தது.

"இந்தியாவுக்குப் படகின் மூலம் சென்று கொண்டிருந்த இலங்கைத் தமிழ் அகதிகள் இருபத்திநாலு பேர் கடலில் வைத்து இலங்கைக் கடற்படையினரால் மூழ்கடிப்பு"
BBC அதிர்ச்சியான செய்தியொன்றைச் சொன்னது. எனக்கு கணேசன்தான் நினைவில் வந்து நின்றான்.

எனது அறையில் இருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள்
"காசை வேண்டிக் கொண்டு கூட்டிக் கொண்டு போவாங்கள். நேவி வந்தால் ஆக்களை அப்பிடியே விட்டிட்டு கடலிலை குதிச்சு நீந்திக் கரைக்கு வந்திடுவாங்கள்.. அவங்களுக்கென்ன தப்பிடுவாங்கள் சனங்கள்தான் பாவம்.."

எனக்கு கணேசனின் நினைவுதான் வந்தது. ஆனாலும் புலம்பெயர் சூழலில் இந்த விடயத்தை மறந்து போனேன்.

சில நாட்களுக்குப் பிறகு ஊரிலிருந்து கடிதம் வந்தது. எனது மகன் ஓரிரு வரிகள் கிறுக்கியிருந்தான்.



அப்பொழுதுதான் என் ஞாபகத்துக்கு வந்தது

ஓ... எனது கணேசனுக்கு நீந்தத் தெரியாது..