Wednesday, October 25, 2006

அந்த ஒரு மாதம்

புத்தாம் வகுப்பில் நான் படித்துக் கொண்டிருக்கும் போது எனது பாடசாலையில் புதிதாக இணைந்தவன்தான் வைத்திலிங்கம். பாடசாலையில் இருந்து ஐந்து கிலோ மீற்றர் தூரத்திலேயே அவனது நகரம் இருந்தது. அவன் படிப்பில் சொல்லிக் கொள்ளும் வண்ணம் திறமையானவன் இல்லை. அதனால்தான் எங்கள் பாடசாலைக்கு மாறி வந்திருக்கிறானா என்ற எண்ணம் எனது வகுப்பறையில் பரவலாக இருந்தது.

அவனது நகரத்தில் மகாத்மா தியேட்டர், லக்சுமி தியேட்டர் என இரண்டு சினிமா அரங்கங்கள் இருந்தன. இதில் மகாத்மா தியேட்டரில் தினமும் மாலை நான்கு மணிக்கு ஆங்கிலப் படம் காண்பிப்பார்கள். வைத்திலிங்கம் இந்தப் படங்களைப் பார்த்து விட்டு வந்து வகுப்பறையில் படங்களைப் பற்றி விளாசித் தள்ளுவான். அவனது விலாசக் கதைகளைக் கேட்பதற்காகவே அவனைச் சுற்றி ஒரு கூட்டம் இருக்கும். அந்தக் கூட்டத்திற்குள் நானும் இருந்தேன். வைத்திலிங்கம் ஆங்கிலப் படத்துக் காட்சிகளை விபரிக்கும் போது அந்தப் படங்களைப் பார்க்கும் ஆவல் என்னை மெதுவாகப் பற்றிக் கொண்டது.

பாடசாலை முடிந்து மாலையில் அவனது நகரத்துக்குப் போவதற்கு வீட்டில் இலகுவாக அனுமதி பெற முடியாது. அடுத்ததாக படம் பார்ப்பதற்கு எனது சட்டைப் பை பணத்தைப் பார்க்க வேண்டும். இந்த இரு பிரச்சினைகளுக்கும் வைத்திலிங்கமே வழி சொல்லித் தந்தான். அவனது நகரத்தில் பிரபல்யமான தனியார் கல்வி நிலையம் ஒன்று இருந்தது. கல்விப் பொதுத் தராதர சாதாரண, உயர்தர வகுப்புகளுக்கான பாடங்கள் மாலையில் அங்கே கற்பிக்கப் பட்டுக் கொண்டிருந்தன. அந்த நிலையத்தில் மாலையில் படிக்கப் போவதாக சொல்லி தனது நகரத்துக்கு வந்து விடலாம் என்றான். பணத்துக்கு...? அவர்கள் என்ன சும்மாவா சொல்லித் தரப் போகிறார்கள் மாதா மாதம் காசு கொடுக்க வேண்டும்தானே. வீட்டிலே வாங்கிக் கொள் என்று புத்தியை செயலிழக்க வைத்தான்.

அண்ணனிடம் போய் நின்றேன். சிறிய வயதில் எனது தந்தையை இழந்த பின் எனக்குத் தமையனாக, தந்தையாக எல்லாமாக அவரே இருந்தார். சகோதரர்களின் வாழ்க்கை வளத்துக்காக தனது இளமைக் கனவுகளைத் தொலைத்தவர். அவர் முன்னால் கூசாமல் பொய் சொல்லி நின்றேன். மறு பேச்சு பேசவில்லை மாதக் கட்டணத்தையும் தந்து கவனமாகப் படி என்ற அறிவுறுத்தலையும் தந்தார். இவ்வண்ணம் எனது ஆங்கிலப் படங்கள் பார்க்கும் படலம் தொடங்கியது.

ஒரு மாதம்தான் இந்த ஆட்டம் எல்லாம். தன்னலம் கருதாத தமையனிடம் பொய் சொல்லியிருக்கிறேன் என்று மனசாட்சி உறுத்திக் கொண்டிருந்தது. அண்ணனைக் காணும் போது அந்த உணர்வு இன்னும் அதிகமாக இருந்தது. அடுத்த மாதம் நானாகவே அண்ணனிடம் சொன்னேன் அங்கே படிப்பு நல்லாக இல்லை.. நானாகவே படித்துக் கொள்கிறேன் என்று.

முற்றத்துக்கு முன்னால் இருந்த வேப்பமரத்தக்குக் கீழே கதிரையைப் போட்டு விட்டு இரவு பகலாகப் பரீட்சைக்குப் படித்தேன். பரீட்சையின் பெறுபேறும் அசத்தல்தான். எல்லோருக்கும் மகிழ்ச்சி தரும்படி சித்தியடைந்திருந்தேன். நான் சித்தியடைந்ததில் அண்ணனுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி. நான் மேலே படிப்பதற்கு எந்தக் கல்லூரி நல்லதென்று தேட ஆரம்பித்து விட்டார்.

ஆனாலும் அந்த ஒரு மாதம் அவரை ஏமாற்றியிருக்கிறேன் என்ற குற்ற உணர்வு என்னை விட்டு அகலவில்லை. இன்று கூட ஆங்கிலப் படங்கள் பார்க்கும் போது அண்ணனுக்குப் பொய் சொன்ன நிகழ்வு வந்து என்னை மெதுவாக குத்தி விட்டுச் செல்லும்.