Wednesday, November 25, 2009

உன்னை நான் சந்தித்தேன்

எங்கள் ஐந்து பேரையும் ஒன்றாக வைத்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை அம்மாவுக்கு நீண்டநாள் இருந்தது. அது இறுதிவரை ஏனோ சாத்தியப்படவே இல்லை. 1975ம் ஆண்டு முதல் எங்களில் யாராவது ஒருவர் அம்மாவின் பக்கத்தில் இல்லை.

அம்மாவின் விருப்பம் நிறை வேறியது அம்மாவின் மறைவில் தான். 2009 சித்திரையில்தான் நாங்கள் ஒன்றாக நின்றோம். அம்மாவின் துயரங்கள் ஒவ்வொரு வரது மனதில் இருந்தாலும் அக்கா அம்மாவைப் போல் எங்கள் நால்வரையும் கவனித்துக் கொண் டது மனதை கொஞ்சம் ஆற வைத் தது. கீர்த்தியண்ணன் சொல்லுவார் "அம்மா போனதை நம்ப முடியவில்லை. இன்னும் அவ இங்கே நடமாடுகிறா என்ற எண்ணம்தான் இருக்கு" என்று. அம்மாவின் இறுதிக்காலங்களில் அக்காவுக்கு அடுத்ததாக அவர்தான் அம்மாவுடன் அதிகமாக இருந்தவர். அவர் அதிகம் கவலைப் பட்டது அவரின் பேச்சுக்களில் தெரிந்தது. இயற்கையில் சிறிய விசயத்துக்கே அதிக உணர்ச்சி காட்டுவதில் எங்களில் அவர் முதன்மையானவர்.
இந்த நேரத்தில்தான் அவரது சிறுகதைக்கு பரிசு கிடைத்திருப்பதாக ஈழத்தில் இருந்து தொலைபேசி வந்தது. துயரமான வேளையில் தனக்கு வந்த மகிழ்ச்சியான செய்தியை எங்களுடன் பகிர்ந்து கொண்டார்.

அம்மாவிற்கான கடமைகள் முடிந்தவுடன் கீர்த்தியண்ணன் தனது வேலையின் நிமித்தம் அவுஸ்திரேலியாவிற்கு புறப்பட வேண்டியிருந்தது. நாங்கள் மூவரும் இன்னும் ஓரிரு வாரங்கள் அக்காவுடன் இருப்பதற்கு முடிவு செய்திருந்தோம். அன்று கீர்த்தியண்ணன் பயணம் செய்யும் நாள். வீட்டில் துயர் விசாரிக்க வருபவர்களை எதிர் கொள்ள அக்காவை வீட்டில் இருக்கும்படி சொல்லிவிட்டு நாங்கள் மூன்று சகோதரர்களும் அவருடன் வெலிங்டன் விமான நிலையத்துக்கு சென்றோம்.

எல்லோருக்கும் இறுக்கமான முகம். போக வந்தவருக்கும் வழி அனுப்ப வந்தவர்களுக்கும் சோகமான சூழ்நிலை. முதலில் மூத்தவர் ராஜாண்ணையை கட்டித் தழுவி விடை பெற்றார். கீர்த்தியண்ணனின் கண்கள் கலங்கி இருந்தது தெரிந்தது. அடுத்ததாக அவரது இளையவன் சீலாண்ணையைக் கட்டித் தழுவினார். "நீ போறதுக்கு முன்னம் அவுஸ்திரேலியா வந்திட்டுத்தானே போறாய். அப்ப நான் உன்னை அங்கை சந்திக்கலாம்" என்றார். அடுத்ததாக என்னை இறுகத் தழுவிக் கொண்டார். "உன்னை நான் இனி எப்ப பார்ப்பேன்" என்ற அவரது வார்த்தைகள் என் காதோரம் ஒலித்தது. "நான் உன்னை வந்து சந்திப்பேன்" உறுதிமொழியை நான் வழங்கினேன் எனது தோள்பட்டையில் ஈரம். அது எனது அண்ணனின் கண்ணீர் எனத் தெரிந்தது. தன்-என் தழுவல்களில் இருந்து விலகி கீர்த்தியண்ணன் விமானநியைலத்துக்குள் நடக்கத் தொடங்கினார். "என்ன இவன் திரும்பி கை ஒண்டும் காட்டாமல் பேசாமல் போறான்" ராஜாண்ணை கேட்டார். எனக்குத் தெரியும் தான் அழுவதை மற்றவர்கள் பார்த்து கலங்கி விடக் கூடாது என்று அவர் எங்களைப் பார்க்கமலே போகிறார் என்று. "கீர்த்தியண்ணன் அழுது கொண்டு போறார் அவர் திரும்பி எங்களைப் பார்க்க மாட்டார்" என்றேன் மூவரும் மேலும் சோகமாக விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

15.10.2009 அன்று நான் வேலையால் வந்தபோது செய்தி காத்திருந்தது. "கீர்த்தியண்ணனுக்கு சுகமில்லை" என்று. பின்னர் தயங்கித் தயங்கி என் மனைவியிடமிருந்து வந்தது அந்தச் செய்தி. "கீர்த்தியண்ணன் இனி இல்லை" புயலுக்குப் பின் அமைதி என்பார்கள் எங்கள் வாழ்க்கையில் மட்டும் புயலுக்குப் பின் பூகம்பம். அம்மாவின் மறைவையே மறக்க முடியவில்லை. அதற்குள் அண்ணனுமா?

கீர்த்தியண்ணனின் இறுதி வைபவம். நாங்கள் இப்பொழுது நால்வராக நின்றோம். "நான் உன்னை வந்து சந்திப்பேன்" சொன்னபடி நான் சந்திக்க வந்திருந்தேன். "உன்னை நான் இனி எப்ப பார்ப்பேன்" சொன்னவர் என்னைப் பார்க்காமலே கண்களை மூடிப் படுத்திருந்தார்.

Friday, October 16, 2009

தொப்புள்கொடி

Sunday, February 08, 2009

குளத்திலை குளிச்சு சாமி கும்பிடனும்

வீட்டில் ஏதாவது ஒரு புது விடயம் நடை பெறுவதற்கு முன்னால், ஒரு தடவை மண்டலாய் பிள்ளையாரிடம் சென்று வருவது எங்களது குடும்பத்தில்; வழமையாக இருந்தது. எனது தந்தை காலத்தில் மண்டலாய் பிள்ளையார் தரிசனம் வருடந்தோறும் தவறாமல் நடந்து வந்தது. அவரது மறைவுக்குப் பின்னரும் அது தொடர்ந்தது. ஆனால் ஒவ்வொரு வருடமும் என்றில்லாமல் வீட்டில் ஏதாவது விசேசங்கள் நடைபெறும் போது மண்டலாய் பிள்ளையார் தரிசனமும் நடைபெறும்.
அன்றும் அப்படித்தான் எனது அண்ணன் நித்தியகீர்த்தி தனது மேற்படிப்பிற்காக இலண்டன் செல்ல பயணம் ஏற்பாடாகி இருந்தது. அதன் நிமித்தமே அம்மாவின் மண்டலாய் பிள்ளையார் தரிசனத்திற்காக நாங்கள் ஐவரும் அம்மாவுடன் செல்ல வேண்டி இருந்தது. வழமையாக மண்டலாய்க்கான எங்கள் பயணம் காரில்தான் இருக்கும். ஒரு மாற்றத்திற்காக இம்முறை பஸ்ஸில் பயணமாகத் தீPர்மானித்தோம்.மருதங்கேணியைத் தாண்டினால் கடைகள் எதுவும் இல்லை. வனாந்தரமாக இருக்கும். ஒரு குறுகலான பாதையூடாக பஸ் செம்பியன்பற்று வரை செல்லும். அங்கிருந்து கால் நடையாகவே மண்டலாய் செல்ல வேண்டும். இதை எல்லாம் முன்னாலேயே யோசித்து உணவுக்காக தோசை, இடியப்பம் என சிற்றுண்டிகளை காலையில் எழுந்து அம்மாவும், அக்காவும் தயாரித்து விட்டார்கள். வழியில் குடிப்பதற்கு தேனீர் தயாரித்து பிளாஸ்க்கில் ஊற்றி வைத்திருந்தார்கள். எனக்கு சிற்றுண்டிகளை எல்லாம் ஒழுங்காக ஓலைப் பெட்டிகளுக்குள் வைத்து அவற்றை ஒரு காட்போட் பெட்டிக்குள் அடுக்கி கட்டி வைக்கும் வேலை கிடைத்தது. மாற்று உடுப்புகள், ஐயருக்கு கொடுக்க வேண்டிய பொருட்கள் அப்படி இப்படி என்று நாலைந்து பைகள் என பயணத்திற்கான பொதிகளையும் ஒவ்வொருவரும் தூக்கக் கூடிய அளவுக்கு தயார் படுத்தி வைத்தேன்.

விடியலில் பஸ் பிடித்து வெய்யில் வருமுன்னர் செம்பியன் பற்று வந்து சேர்ந்தோம். பஸ்ஸால் இறங்கிய பிறகுதான் விபரீதம் புரிந்தது. மண்டலாய்க்குப் போகும் அந்த வெட்டவெளிப் பாதை மழை வெள்ளத்தால் நிறைந்திருந்தது. வெட்டவெளி நிலம் சமதரையாக இல்லை. எங்கே பள்ளம் எங்கே மேடு என்று தெரியாத அளவு முழங்கால் வரை தண்ணீர் இருந்தது. போதாததற்கு தரை வெள்ளைக் களிமண்ணாக இருந்தது. நடக்கும் பொழுது வழுக்கும் சந்தர்ப்பங்கள் நிறையவே இருந்தன. திகைத்து நின்ற எங்களைப் பார்த்து அம்மா சொன்னார் „தண்ணி ஆழம் இல்லை நடப்பம்' சொன்னது மட்டும் அல்லாமல் தண்ணீரில் இறங்கி அவர் நடக்க ஆரம்பித்தார். கோழிக்குப் பின்னால்தானே குஞ்சுகள். கையில் இருந்த பைகள் பெட்டிகளை தலைக்கு மேலே தூக்கிப் பிடித்துக் கொண்டு நாங்களும் தண்ணீருக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தோம். இருப்பதில் பாரம் குறைந்த பெட்டி கீர்த்தியண்ணனின் கையில் இருந்தது. அதற்குள்தான் சிற்றுண்டிகளை வைத்திருந்தேன். எனக்கு முன்னால் கீர்த்தியண்ணன் நடந்து கொண்டிருந்தார்.

அம்மா அடிக்கடி திரும்பிப் பார்த்தபடி முன்னால் நடந்து கொண்டிருந்தார். கீர்த்தியண்ணனுக்கு முன்னால் போய்க் கொண்டிருந்த ராஜாண்ணை ஒரு இடத்தில் நின்று நிதானமாகச் சொன்னார். „இந்த இடத்தில கடுமையாக வழுக்குது பாத்து கவனமாக வாங்கோ' அவர் சொல்லி முடித்து இரு அடி முன்னால் வைத்திருப்பார். அவருக்குப் பின்னால் வந்த கீர்த்தியண்ணன் கால் வழுக்கி தண்ணீருக்குள் விழுந்து விட்டார். சத்தம் கேட்டு எல்லாரும் நின்று பார்த்தார்கள். தண்ணீருக்குள் விழுந்த கீர்த்தியண்ணனின் கை மட்டும் தண்ணீருக்கு மேல் இருந்தது. அதில் பாதுகாப்பாக சிற்றுண்டிகள் அடங்கிய பெட்டி இருந்தது. நான் ஓடிப்போய் பெட்டியை வாங்கிக் கொண்டேன். ராஜாண்ணை வந்து கீர்த்தியண்ணனைத் தூக்கி விட்டார். „பாத்திங்களே நான் விழுந்தாலும் சாப்பாட்டைக் கை விடேல்லை. இப்ப இதுதான் எங்களுக்கு முக்கியமானது' கீர்தியண்ணன் பெருமையாகச் சொன்னார். சாப்பாடு, தண்ணீருடன் போகாமல் இருந்ததில் எல்லோருக்கும் ஆறுதலாக இருந்தது.

நான் இப்பொழுது அம்மாவுடன் சேர்ந்து நடந்து கொண்டிருந்தேன். அம்மா என்னைப் பார்த்துச் சொன்னார். „கோயிலிலை வந்து விழுந்து கும்பிடச் சொன்னால் செய்ய மாட்டான். இங்கை விழுந்து நாமம் பூசிக் கொண்டு பெரிய பக்திமான் மாதிரி உன்ரை கொண்ணன் வாறான் பார். அவனுக்காகத்தானே வாறம். அங்கை போய்க் குளத்திலை குளிச்சு சாமி குப்பிட்டாலும் சரி. இங்கை குளிச்சு நாமம் பூசினாலும் சரி. பிள்ளையார் ஏற்றுக் கொள்வார்" திரும்பிப் பார்த்தேன் உடல் உடை எல்லாம் ஈரமாக அங்கங்கே வெள்ளைக் களிமண் ஒட்டியபடி ஒரு ஆழ்வார் வடிவத்தில் தண்ணீரில் வழுக்கிறதா எனப்பார்த்து கீர்த்தியண்ணன் அவதானமாக நடந்து வந்து கொண்டிருந்தார்.

Monday, December 29, 2008

நாவல் மரத்தில் அவ்வை

"நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு நாகப்பாம்பு வருமாம். அது வந்ததுக்குப் பிறகுதான் ஐயர் பூசையே ஆரம்பிப்பாராம்"
என்று இரத்தினக்கா கதையைக் கிளப்பிவிட, அம்மாவுக்கு நாகதம்பிரானை தரிசிக்கும் ஆசை வந்து விட்டது.
"போறதெண்டால் சொல்லுங்கோ நானும் வாறன்" என்று இரத்தினக்கா மேலும் சொல்லி வைக்க அம்மாவின் நாகதம்பிரான் தரிசனத்துக்கான தேதி குறிக்கப் பட்டு விட்டது. இரத்தினக்காவுக்கும் தனியே போய் நாகதம்பிரானைத் தரிசிக்க வேண்டிய அலைச்சல் இல்லாமல் பேச்சுத் துணைக்கு அம்மாவையையும் சேர்த்துக் கொள்ள மதியப் பூசை பாம்பு பெரிதும் உதவியது.

என்னையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு இரத்தினக்காவுடன் நாகர் கோவிலுக்கான அம்மாவின் பயணம் ஆரம்பமானது. இந்தப் பயணத்தில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. எனது நண்பர்களுடனான அன்றாட விளையாட்டுக்கள் இல்லாமல் இவர்களுடன் கோவிலில் போய் சும்மா நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் சாமி கும்பிட்டாப் போலை அங்கை நாகப்பழம் பிடுங்கிச் சாப்பிடலாம் என்ற அம்மாவின் ஆசை வார்த்தைகளில் விழுந்து எனது அந்தப் பயணம் தொடங்கியது.

நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு கோவிலில் கூட்டம் இல்லை எங்களோடு சேர்ந்து இன்னும் ஓரிரு ஆட்கள்தான் அங்கே நின்றிருந்தார்கள். பூசைக்கு முன்னர் நாகப்பாம்பு வருகிறதா என எல்லா இடமும் பார்த்தாயிற்று. எந்த அரவமும் வரும் அரவமும் தெரியவில்லை. நான் இரத்தினக்காவிடம் கேட்டும் பார்த்தேன். "இவன் என்ன சும்மா சும்மா கரைச்சல் தாரான்" என சலித்துக் கொண்டார். இதனால் அம்மாவும் என்னைக் கடிந்து கொண்டார்.

ஒருவாறு நாகப் பாம்பு இல்லாமல் பூசையை ஐயர் முடித்து திருநீறு தந்து எல்லாம் முடிந்து இருந்த ஓரிருவரும் கோயிலை விட்டுப் போய் விட்டார்கள். ஐயரும் கோவிலில் தரையில் துண்டைப் போட்டு படுத்துக் கொண்டார். நான் அம்மாவை "இனி நாகக் காட்டிற்குப் போய் நாகப்பழம் பறிக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கினேன். "சரி வா" என்று அம்மா அழைத்துக் கொண்டு சென்றார்.

இரத்தினக்காவின் முகத்தில் வழமைபோல் மகிழ்ச்சியைக் காணவில்லை. நாகக் காட்டிற்குப் போகும் வழியில் "இவனாலைதான் எல்லாம் பிழைச்சுப் போச்சு இவன் விடாமல் அரியண்டம் பிடிச்சதாலைதான் பாம்பே வராமல் போட்டுது" என்று என் மீது குற்றம் சுமத்திக் கொண்டே வந்தார். கடவுள் பக்தியால் அம்மாவும் அதை நம்பியிருப்பார் என்றே நினைத்துக் கொண்டேன். எதுவும் பேசாமல் சேர்ந்து நடந்தேன். "அடுத்தமுறை கோவில் குளம் எண்டு போகக்கை இவனை விட்டிட்டு வாங்கோ" என்று இரத்தினக்கா அம்மாவுக்கு அறிவுரை சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு அப்பாடா என்றிருந்தது.

நாகப்பழ மரங்களைக் கண்டவுடன் ஓடிப்போய் பழங்களைப் பறிக்க எத்தனித்த பொழுது அம்மா எனது கையைப் பிடித்துத் தடுத்தார். "இந்த மரங்களுக்;குக் கீழ் இருக்கும் சருகுகளுக்குள்ளைதான் நாகப் பாம்புகள் இருக்க சாத்தியம் இருக்கு. பொறு. அவசரப்படாதை". தாழ்வானதாக இருந்த ஒரு நாவல் மரத்துக் கிளையில் அம்மா ஏறி அமர்ந்து கொண்டு, வெள்ளை மணலில் கால்களை அழுத்தி ஊஞ்சல் போல் அந்த மரக்கிளையில் ஆடத் தொடங்கி விட்டார். அந்த மரக் கிளையின் ஆட்டத்தில் அதில் இருந்த நன்கு பழுத்த நாகப்பழங்கள் விழத் தொடங்கின. நானும் அக்காவும் அவற்றைப் பொறுக்கி எடுத்து, கொண்டு கையில் வைத்திருந்த பைகளில் சேகரிக்கத் தொடங்கினோம். பழங்களை வெள்ளை மணலில் இருந்து எடுத்து பைகளில் போடும் வேளைகளில் ஒன்றிரண்டை வாயிலும் போட்டுக் கொண்டேன். இதில் அதிகம் பழுத்திருந்த நாகப்பழங்களில் ஒட்டி இருந்த வெள்ளை மணலை காற்சட்டையில் துடைத்தும் போகாததால் அதை வாயால் ஊதி மணலைப் போக்கினேன். இதைப் பார்த்த அம்மா சிரித்தபடி "என்ன பழம் சுடுகுதோ?" என்றார். பழத்தைப் பொறுக்குவதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன் தரையில் குமரன் நாவல் மரத்தில் அவ்வை. நான் இரண்டாம் வகுப்பில் படித்த கதை அப்படியே மாறியிருந்தது.

அம்மா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நாவல் மரத்துக் கிளையில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார்.

Sunday, November 23, 2008

உத்தரவின்றி உள்ளே வா

கடவுள் என்றால் அம்மா கரைந்து உருகிக் கும்பிடுவார். இத்தனைக்கும் அவர் பிள்ளை நான் ஒரு நாத்திகன். அம்மா கேட்டுக் கொண்டால் அவருடன் கோயிலுக்குப் போவேன். கோயிலுக்குள் நுளையாமல் நான் வெளியில் நின்றாலும் சாமியைக் கும்பிட்டு விட்டு வந்து, "நீ கடவுளைக் கும்பிடாட்டிலும் பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நான் கும்பிட்டு விட்டேன்" என்று சொல்லிச் சிரிப்பார்.

நயினாதீவுக்குப் போய் அம்மனை தரிசிக்கும் எண்ணம் அம்மாவிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அன்று கொழும்பில் இருந்து கீர்த்தியண்ணன் வேலை விடுமுறையில் வந்திருந்தார். நயினாதீவு அம்மனைக் காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை அம்மா மெதுவாக வெளிப்படுத்தினார்.


"நயினாதீவு என்ன தூரமே? வேணுமெண்டால் நாளைக்கும் போகலாம்" என்று ராஜாண்ணை சொல்ல அம்மா அதை அப்படியே பிடித்துக் கொண்டார்.
"சரி அப்ப வெளிக்கிடு நாளைக்குப் போவம்" என்று அம்மா சொன்னதை ராஜாண்ணையால் தட்ட முடியவில்லை. அடுத்தநாள் காலையில் நயினாதீவு போக முடிவாயிற்று.


மறுநாள் அதிகாலை நாங்கள் ஐவரும் (அம்மா ராஜாண்ணன், கீர்த்தியண்ணன், அக்கா, நான்) பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்து இறங்கினோம். யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவானுக்கு பஸ்சில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து நயினாதீவுக்கு கப்பல் பயணம். குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்சைத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டோம். கீர்த்தியண்ணன்தான் பணத்துக்கான பொறுப்பு. பஸ் கட்டணங்களை அவரே செலுத்திக் கொண்டு வந்தார். கொண்டக்டரிடம் கட்டணத்தைச் செலுத்த சில்லறைகள் இல்லாததால், நூறு ரூபாய்த் தாளை அவரிடம் கீர்த்தியண்ணன் நீட்டினார். காலமை வெள்ளன நூறு ரூபாய்த் தாளோடு வந்திட்டார் என கொண்டக்ரர் சலித்துக் கொண்டார். மிகுதியைப் பின்னர் தருவதாகச் சொல்லி கொண்டக்ரர் நகர்ந்தார். நான் அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.

"சீலனும் வந்திருந்தால் நிறைவா இருந்திருக்கும்" என்று அம்மா சொன்னா. அப்பொழுது சீலாண்ணன் கொழும்பில் உள்;ள சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரால் அந்தப் பயணத்தில் பங்கு கொள்ள முடியாமற் போனது கவலை தந்தது.


குறிகட்டுவானில் கப்பலில் ஏறி பாதித் தூரம் வந்திருப்போம். கீர்த்தியண்ணனின் முகம் கவலையில் வாடி இருந்தது. என்ன விடயம் என விசாரித்த போதுதான் தெரிந்தது, குறிகட்டுவானுக்கு பயணித்த பொழுது பஸ் கட்டணத்துக்காக கொண்டக்டரிடம் கொடுத்த நூறு ரூபாயின் மிகுதிப் பணத்தை வாங்க மறந்து விட்டார் என்று. எங்களுக்கும் அந்தப் பணம் போனதில் கவலை இருந்தாலும், கப்பல் பயணத்தில் அதை மெதுவாக மறந்து விட்டோம். ஓரளவு அந்தக் கப்பல் பயணம் ஒரு பயம் கலந்த பயணமாகவே இருந்தது. கப்பலின் மட்டமும், கடல் தண்ணீர் மட்டமும் ஏறக்குறைய ஒரே அளவாகவே இருந்தன. கடல் அலைகளில் மோதி ஆடியாடி கப்பல் நகர, கடல் அலையின் தண்ணீர் கப்பலில் இருந்த பயணிகள் மேலே மோத அச்சம் மிகுந்த பயணமாகவே எனக்குப் பட்டது. நயினாதீவு புத்த விகாரைக்குப் பயணிக்கும் சிங்கள யாத்திரிகர்களும் அன்று கப்பலில் இருந்தார்கள். ஓவ்வொருமுறையும் அலையில் மோதி கப்பல் மோசமாக ஆட்டம் போட "சாது சாது" என அந்த சிங்கள யாத்திரிகர்கள் வாய்விட்டு பலமாகச் சொல்லிக் கொண்டு வந்தது எனக்குப் புதுமையாக இருந்தது.


அம்மாவின் விருப்பப்படி நயினாதீவில் சாமி தரிசனம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாண நகரத்துக்கு வந்து சேர்ந்தோம். யாழ் நகரில் சிறது நேரம் சுற்றி வந்த பொழுது, "படம் பார்ப்போமா?" என ராஜாண்ணை கேட்டார். அப்பொழுது யாழ் சிறீதர் தியேட்டரில் ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஸ் நடித்த சிறீதரின் உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படம் நகைச்சுவைத் திரைப் படமாக இருந்ததால் அதையே பார்ப்போம் எனத் தீர்மானித்து அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். காதலிக்க நேரமில்லை போன்று உத்தரவின்றி உள்ளே வா திரைப் படத்தில் நகைச்சுவை அதிகம் இல்லாவிட்டாலும் படத்தை இரசித்துப் பார்த்தோம்.படம் முடிந்து வெளியே வர நன்றாக இருட்டி விட்டிருந்தது.


இனி ஊருக்குப் போகலாம் எனத் தீர்மானித்து பஸ் நிலையம் வந்து எங்களுக்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம். அதுவரை எல்லாவற்றையும் மறந்திருந்த எங்களில், கீர்த்தியண்ணன் மட்டும் சிறிது வாட்டமாக இருந்தார். "காலையில் கொண்டக்ரரிடம் வாங்க மறந்த மிச்சக் காசை நினைச்சிட்டான் போல" என அம்மா எனக்குச் சொன்னார். பஸ் வெளிக்கிடும் நேரத்தை அண்மித்துக் கொண்டிருந்த நேரம், திடீரென கீர்த்தியண்ணன் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினார்.

"இவன் எங்கை போறான். பஸ் வெளிக்கிடப் போகுது" என ராஜாண்ணை சலித்துக் கொண்டார்.

"என்னெண்டு போய்ப் பார்" என அம்மா என்னை அனுப்பி வைத்தார். நானும் அவசரமாக இறங்கி கீர்த்தியண்ணனுக்குப் பின்னால் ஓடினேன்.குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்ஸின் வாசலில் இருந்து, ஒரு காலை பஸ்ஸின் படியிலும் மறு காலை தரையிலும் வைத்துக் கொண்டு பயணிகளுக்கு ரிக்கெற் கொடுத்துக் கொண்டிருந்தார், காலையில் நாங்கள் போன பஸ்ஸில் ரிக்கெற் தந்த அதே கொண்டக்ரர். ரிக்கெற் போட்டுக் கொண்டு நிமிர்ந்த கொண்டெக்ரருக்கு முன்னால் கீர்த்தியண்ணன் நின்றார்.


"எங்கை போகணும்?"

" மிச்சக் காசு"

"மிச்சக் காசோ? ரிக்கெற் எடுத்தனீயே?"

"ஓம் காலமை"

"காலமையோ?"

கீர்த்தியண்ணன் காலைமை எடுத்த ஐந்து ரிக்கெற்றுக்களையும் கொடுத்தார். அவற்றின் பின் பக்கத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் ரிக்கெற்றுக்களை கீர்த்தியண்ணனிடமே திருப்பித் தந்தார்.

"மிச்சக் காசு தரவேண்டியிருந்தால், அதை நான் ரிக்கெற்றுக்குப் பின்னாலை குறிச்சிருப்பன்" மிகச் சாதாரணமாக கொண்டக்டரிடம் இருந்து வார்த்ததைகள் வந்தன.

கீர்த்தியண்ணனின் முகம் கோபத்தில் இருப்பது பஸ் நிலைய வெளிச்சத்தில் துல்லியமாத் தெரிந்தது.

"நீ பிச்சை எண்டு கேட்டிருந்தால் நான் சும்மாவே தந்திருப்பன்"


கீர்த்தியண்ணனின் காரமான வார்த்தைகளில் கொண்டெக்ரர் ஆடிப் போனார். பயணிகள் வேறு இதைக் கவனித்துக் கொண்டிருந்ததால் தனது தன்மானத்தை இழுத்து விட்டு விட்டானே என்று கூனிக் குறுகிப் போன கொண்டெக்ரர் எதுவுமே செய்ய முடியாமல், கணக்குப் பார்த்து மிகுதிப் பணத்தை எண்ணி கீர்த்தியண்ணனின் கையில் வைத்தார். நாங்கள் பயணிக்கப் போகும் பஸ் வெளிக்கிட ஆயத்தமாக இருந்தது. பஸ்ஸின் யன்னல் ஊடகாக கெதியாக வாங்கோ என்ற பாணியில் அக்கா கையை ஆட்டிக் கூப்பிடுவது தெரிந்தது. இருவரும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். இருக்கையில் அமரும் போது அம்மா பார்வையால் என்ன என்று வினாவினார்.
"மிச்சக் காசை கொண்டெக்ரரிடம் வாங்கிட்டார்" என்று நான் சொன்னேன்.

"பாத்தியே நான் கடவுளைக் கும்பிட்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு" என்று அம்மா சொல்லிச் சிரித்தார்.
கீர்த்தியண்ணனைப் பார்த்தேன் பஸ்ஸின் உள்ளே இருந்த மங்கிய வெளிச்சத்திலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பது நன்றாகத் தெரிந்தது.

Sunday, November 02, 2008

நினைவில் நின்றவள்

அன்று க.பொ.த.ப. (கல்விப் பொதுத் தராதரப் பத்திர) சாதாரணப் பரீட்சை ஆரம்பம். முதல் பாடம் தமிழ். ஏகாம்பர மாஸ்ரர் அழகாகத் தமிழை வகுப்பறையில் சொல்லிக் கொடுத்ததால் செய்யுள், இலக்கணம் எல்லாம் அறிந்து வைத்திருந்தேன். கட்டுரை எதைப் பற்றி வரப் போகின்றது என்ற ஒரு பயம் மட்டும் மனதுக்குள்ளே சிறியளவில் ஒளித்திருந்தது. ஆனாலும் திறமையாக எழுதுவேன் என்ற நம்பிக்கை மட்டும் இருந்தது. காலையில் வீட்டில் இருந்து பரீட்சைக்குப் போகுமுன் „சோதனையை நல்லா எழுது' என்ற அம்மாவின் வாழ்த்துகளும் கிடைத்ததால் தெம்புடனே பரீட்சை மண்டபத்துக்குள் நுளைந்தேன்.
பரீட்சை மண்டபத்தில், தங்கள் வீடுகளுக்கு அருகில் இருந்த கோயில்களின் கடவுள்களின் பெயர்களை சிலர் உரத்துச் சொல்லி பரீட்சையில் சித்தியடைய வைக்கும் படி வேண்டிக் கொண்டிருந்தார்கள். எனது கைக்குக் கிடைத்த பரீட்சை வினாத்தாளைப் பார்த்ததும் எனக்கு மனது முழுதும் குதூகலித்தது. நான் எதிர்பார்த்ததை விட வினாக்கள் சுலபமாக இருந்தன. கட்டுரைக்கு பல விடயங்கள் கேட்டிருந்தார்கள் அதில் „நீர் கண்ட கனவு பற்றி எழுதவும்' என்று ஒன்று எனது கண்ணில் பட்டது. உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது, எனது அண்ணன் நித்தியகீர்த்தி எழுதிய கட்டுரை ஒன்று. ஹாட்லிக் கல்லூரி ஆண்டு மலர் ஒன்றில் நான் கண்ட பயங்கரக் கனவு என்ற தலைப்பில் அவர் அதை எழுதியிருந்தார். வகுப்பறையில் பாடம் நடக்கும் போது தூங்கிய மாணவன் கண்ட கனவு பற்றிய கட்டுரை அது. அந்தக் கட்டுரையை நான் பலமுறை வாசித்திருந்ததால் அது எனக்கு மனப் பாடமாகவே இருந்தது. ஆகவே அந்தக் கட்டுரையை கிளிப்பிள்ளை போல் அப்படியே எனக்குத் தரப்பட்ட தாளில் எழுதத் தொடங்கினேன்.எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய பின்னர் மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. கட்டுரையை எழுதி முடித்து விட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு தரம் அந்த மண்டபத்தை நோட்டம் விட்டேன். கூப்பிட்ட கடவுள்கள் உதவிக்கு வராததால் சிலர் விழி பிதுங்கி நின்றதைப் புரிந்து கொண்டேன். சிலர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தனர். பரீட்சை எழுதுவதற்கான நேரம் முடிந்தது என அறிவிக்கப் பட்ட பின்னர் எழுதியவற்றை கொடுத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
பாடசாலைக்கு என்னுடன் கூட வரும் தணிகாசலத்தை காணவில்லை. அவன் முன்னமே போய் விட்டதாக சக மாணவர்கள் சொன்னார்கள். பரீட்சையில் அவனுக்கு திருப்தி இல்லை என்பது புரிந்தது. வழமையாக இருவரும் சேர்ந்துதான் செல்வோம். இன்று தனியாகப் போக வேண்டி இருந்தது. மற்றவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அன்று வழமைக்கு மாறாக ஒழுங்கை ஊடாக எனது சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். சைக்கிளில் நான் அமர்ந்து இருந்து மிதித்ததை விட எழுந்திருந்து மிதித்ததுதான் அதிகம் அந்தளவுக்கு மனம் களிப்பில் இருந்தது. அறுபதுபாகைக் கிணற்றடிக்கு முன்பாக நான் வந்து கொண்டிருந்த ஒழுங்கையில் இடது பக்கமாக ஒரு ஒழுங்கை பிரிந்து செல்கிறது. அது ஒரு ஏற்றமான பகுதி. அதில் சைக்கிள் ஓட முடியாது உருட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதில் இரண்டாவது வீடு என்னுடன் படிக்கும் சிவராஜாவின் வீடு. நான் வேகமாக சைக்கிளில் வந்த பொழுது சிவராஜாவின் தம்பி அவனுக்கு நாலு வயதிருக்கும் என்று நினைக்கிறேன், அந்த ஏற்றமான பகுதியில் இருந்து ஓடி வந்திருக்கிறான். அலம்பலினால் கட்டப் பட்ட வேலி அவன் வந்த பாதையை மறைத்திருந்தது. நானும் எதிர்பார்க்கவில்லை. சைக்கிளால் தூக்கி எறியப் பட்ட பொழுதுதான் விபரீதம் விளங்கியது. ஒழுங்கை மண்ணில் அதிர்ச்சியில் விழுந்திருந்த அவனை ஓடிப் போய்த் தூக்கினேன் அவனது பிஞ்சுக் கால் வில் போல் வளைந்திருந்தது. பக்கத்தில் இருந்த அமரசிங்கமண்ணன் கடைக்குள் அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினேன். பரீட்சை முடிந்து சிவராஜா வந்து கொண்டிருந்தான். எனது கையில் அவனது தம்பியைத் தூக்கி வைத்திருப்பதையும் எனது சைக்கிள் ஒழுங்கையில் விழுந்து கிடப்பதையும் கண்டவுடன் அவனுக்கு விபத்து பற்றித் தெரிந்திருக்கும். சிவராஜாவும் அமரசிங்கம் கடைக்குள் ஓடி வந்தான். மெதுவாகக் கூட்டம் கூடத் தொடங்கியது. சிவராஜாவின் தாய் விபரம் அறிந்து தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்தார். சிவராஜா என்னை மெதுவாக அழைத்து, „மச்சான் நீ போ மச்சான். இங்கை நிண்டி எண்டால் பிரச்சினையாகிப் போடும். நான் பாக்கிறன். நீ முதலிலை போ' என்றான். அமரசிங்கம் அண்ணனும் அதையே சொன்னார். சிவராஜா விழுந்திருந்த எனது சைக்கிளை எடுத்து கோணலாகிப் போயிருந்த ஹாண்டிலை நிமிர்த்தி என்னிடம் தந்து „மாறு மச்சான் நான் பாக்கிறன்' என்று சொல்லி என்னை வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்தான்.வீட்டுக்குப் போக மனம் ஒப்பவில்லை. தனியாளாக நிற்பது சிரமமாக இருந்தது. யாராவது பக்கத்தில் நின்று ஆறுதல் தந்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஒழுங்கையால் வலது பக்கமாகத் திரும்பி ஓராம்கட்டையில் பிரதான வீதியை வந்து சேர்ந்தேன். என்னுடன் படிக்கும் வைத்திலிங்கம், மகேசன் இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சொந்த இடம் நெல்லியடி. அவர்களது சைக்கிள் ஓட்டத்துடன் நானும் இணைந்து கொண்டேன். அன்றைய பரீட்சையைப் பற்றியே கதைத்துக் கொண்டு வந்தார்கள். நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே சைக்கிளை ஓடிக் கொண்டிருந்தேன். அடுத்தநாள் நடைபெற இருக்கும் இந்துசமயப் பரீட்சை பற்றிக் கதை வந்த பொழுது. தேவாரம், திருவாசகம், திருவருட்பயன் என்று பலவற்றைப் பற்றிக் கதைத்துக் கொண்டு மூவரும் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தோம். கிராமக்கோடு, சாரையடி, மந்திகை, மாலிசந்தி என்ற இடங்களைத் தாண்டும் பொழுது நான் அதைப்பற்றி எண்ணாமல் அவர்களுடன் கதைத்துக் கொண்டு சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தேன்.
நெல்லியடிச் சந்தி மகேசனும், வைத்திலிங்கமும் பிரிய வேண்டிய இடம். „மச்சான் வீட்டை போய்ப் படிக்கத் தேவை இல்லை சந்தேகம் எல்லாம் தீர்த்துப் போட்டாய். நாளைக்கு வெள்ளன வா ஏதும் தெரியாட்டில் சொல்லித்தா' என்று வைத்திலிங்கம் சொல்லும் போதுதான் மீண்டும் நான் தனியாக நிற்பதை உணர்ந்தேன். இருவரும் எனக்கு நன்றி சொல்லிப் பிரிந்த பொழுது சிவராஜாவின் தம்பியின் விபத்து வந்து மனதை வருத்தியது. மனது மிகவும் சஞ்சலமாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நிமிர்ந்த என் கண்ணில் பட்டது லக்சுமி தியேட்டரில் இருந்த சினிமா விளம்பரப் பலகை. ரவிச்சந்திரன், கே.ஆர். விஜயா, நாகேஸ் நடித்த முக்தா பிலிம்ஸின் நினைவில் நின்றவள் முழுநீழ நகைச்சுவைச் சித்திரம் என்று அதில் போடப்பட்டிருந்தது. சட்டைப் பையில் கை விட்டுப் பார்த்தேன். பரீட்சை முடிய கன்ரீனில் சாப்பிடுவதற்கு அம்மா தந்த பணம் இருந்தது. நாளைக்குப் பரீட்சை. ஆனாலும் எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. சைக்கிளைக் கொண்டு போய் அதை நிறுத்தும் இடத்தில் பத்து சதம் கட்டணம் கொடுத்து நிறுத்தி விட்டு, ரிக்கெற் வாங்கிக் கொண்டு படம் பார்க்க திரையரங்குக்குள் நுளைந்தேன்.
படம் முடிந்து வெளியே வந்ததும் அம்மாவின் நினைவு வந்தது. என்னை எல்லா இடமும் தேடி இருப்பார். என்னுடன் வரும் தணிகாசலத்துக்குக் கூட நான் எங்கே போனேன் என்று தெரியாது. அம்மாவை தவிக்க விட்டு விட்டேனோ என்ற குற்ற உணர்வு ஒட்டிக் கொண்டது. வேகமாகச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.கிராமக்கோட்டுச் சந்தியில் வலது பக்கம் திரும்பியதும் „தம்பி' என்ற வார்த்தை என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தாமோதரம் அண்ணையின் தேனீர்க்கடை வாசலில் அண்ணனது நண்பன் துரை கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தார். அவரது பெயர் மரியநேசன். ஆனாலும் அவர் எங்கள் ஊருக்குத் துரை.
„எங்கை போட்டு வாறாய்?' சைக்கிளால் நான் இறங்க என்னுடன் சேர்ந்து அவரும் நடந்தார்.
„படத்துக்கு'
„நாளைக்குச் சோதனை எல்லோ?'
„ம்'
„கொம்மா உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறா. சொல்லிப் போட்டுப் போயிருக்கலாம்தானே? „
நான் பதில் சொல்லவில்லை.
நாங்கள் சென்று கொண்டிருந்த வீதியின் முடக்கைக் கடந்த உடன் அம்மா எங்களது வீட்டின் வாசலில் நிற்பது தெரிந்தது. அம்மாவைத் தாண்டி முதலியாருடைய வாசிகசாலையடியில் சிலர் சைக்கிளுடன் நிற்பதும் தெரிந்தது. என்னைக் கண்டதும் அவர்கள் சைக்கிளில் ஏறி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டு வந்த துரையண்ணன் தனது சாரத்தை மடித்துக் கட்டினார்.
„நீ ஒண்டுக்கும் பயப்படாதை நான் இருக்கிறன்' என்றார். பிரச்சனையின் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். வந்தவர்கள் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். அதில் ஒருவனைப் பிடித்து துரையண்ணன் சைக்கிளோடு தள்ளிவிட மற்றையவர்கள் சற்று விலகிக் கொண்டார்கள்.
„தனித்தனிய வரப்போறீங்களோ சேர்ந்து வரப் போறீங்களோ?' துரையண்ணனின் கர்ச்சனைக்குப் பயந்து சிறு எலிகளெல்லாம் வெகுண்டோடின.
„வந்தவையளைத் தெரியுமோ?' என்று கேட்டார். ஓம் அறுபதுபாகைக் கிணத்தடிப் பெடியள் என்றேன். துரையண்ணன் தள்ளியதால் விழுந்திருந்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைசியாளாக ஓட வெளிக்கிட துரையண்ணன் எட்டி அவனைப் பிடித்தார்.
„பிரச்சனையை இதோடை விட்டிடவேணும். பிறகு ஏதாவது ஆட்டம் காட்டினால் வீடு புகுந்து அடிப்பன். ஏதாவது கதைக்கோணும் எண்டால் பெரியாக்களை வரச் சொல்லு. விளங்கிச்சோ' அவனை எச்சரித்து அனுப்பி விட்டு, „இனிமேல் இப்பிடி ஏதாவது பிரச்சினை எண்டால் என்னட்டை வந்து சொல்லோணும். பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது' என்று அறிவுரை சொன்னபடி என்னை அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைத்தார்.
„எங்கையடா போனனீ? „ அம்மாவின் கேள்வியில் கவலையும் கோபமும் தெளித்தது.
„நாளைக்கு அவனுக்கு சோதணை போய்ப் படிக்கட்டும்' என்று அம்மாவிடம் துரையண்ணன் சொல்ல மெதுவாக நான் வீட்டுக்குள் சென்றேன்.அடுத்தநாள் நான் பரீட்சைக்குச் செல்ல அம்மா யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சிவாராஜாவின் தம்பியைப் போய்ப் பார்த்து, அவனது தாயாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். நான் பரீட்சை மண்டபத்தில் சிவராஜாவைக் கண்டு வருத்தம் தெரிவித்தேன். அவன் நட்புடன் சொன்னான். „அது மச்சான் விபத்து. ஆரிலையும் பிழை சொல்லேலாது. நேற்று உன்னை கொஞ்சப் போர் தேடினவையள் என்று அறிஞ்சன் அவையளுக்கும் நான் சொல்லிப் போட்டன். இந்த விசயத்திலை தலையிடக் கூடாதெண்டு. நீ கவலைப்படாதை மச்சான் சோதனையை எழுது' அவனது பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனாலும் வைத்தியசாலையில் அது விபத்து எனப் பதியப் பட்டதால், பொலிஸ் நிலையத்தில் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டி இருந்தது. அம்மாவும் துரையண்ணையும், நானும் போனோம். பொலிஸ் நிலையத்தில் எங்களுக்காக இரத்தினமண்ணை காத்திருந்தார். அவரது பெயர் சூசைதாசன். இரத்தினம் என்பது அவரது வீட்டுப் பெயர். இவர் துரையண்ணனின் அண்ணன். அட்வகேட் ஆர்.ஆர். தர்மரத்தினத்தின் அலுவலகலத்தில் வேலை செய்பவர். அதனால் பொலிஸில் எல்லோரiயும் பழக்கம். துரையண்ணன் ஒரு போத்தல் சாராயம் வாங்கி வந்திருந்தார். இன்ஸ்பெக்டரைத் திருப்தி செய்ய எனச் சொன்னார்.
„ஒருநாளும் இந்தப்பக்கம் வராத என்னை வரவைச்சிட்டாய்' என்று அம்மா என்னிடம் நகைச்சுவையாகச் சொன்னார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் சாராயப் போத்தலுடன் உள்ளே போனார்கள். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வெளியில் வந்தார்.
„நீயா அது. இனி சைக்கிளைப் பாத்து ஓட்டு.. என்ன?' தோளில் தட்டி சிரித்துவிட்டு உள்ளே போனார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் „எல்லாம் சரி நீங்கள் போங்கோ' என்றனர். அம்மாவுடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நல்லவேளை அண்ணன் மூவரும் கொழும்பில். பரீட்சை நேரத்தில் சினிமாவுக்குப் போனது அதுவும் வீட்டுக்குச் சொல்லாமல் போனது என இரண்;டு குற்றங்களுக்கும் என்னை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தபடி அம்மாவின் கையைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினேன்.
பிற்குறிப்பு
இந்த நிகழ்வில் எனக்கு பல விடயங்கள் இன்றும் அடிக்கடி நினைவில் வந்து போகும். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆன பிறகும் என்னால் அன்றைய அந்த விபத்தை மறக்க முடியவில்லை. அந்தச் சிறுவனுக்கு இன்று 44, 45 வயது இருக்கும். மெதுவான வளைவோடு இருக்கும் அந்தக் காலைப் பார்த்து இன்னும் அவன் என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றானோ என்ற குற்ற உணர்வு என்னிடம் இருந்து மறையவில்லை.
பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது என்று எனக்கு அறிவுரை சொன்ன துரையண்ணன், பின்னாளில் தனக்கொரு பிரச்சினை வந்த பொழுது கோழையாகிப் போய் பொலிடோல் குடித்து தற்கொலை செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை
அந்த வருட பரீட்சையில் திறமைச்சித்தியடைந்திருந்தேன். இது அம்மாவைக் கலங்க வைத்ததற்கு அவருக்கு நான் தந்த பரிசு.

Friday, August 22, 2008

இரத்ததானம்

எனது அண்ணன் குணசீலன் பாடசாலையில் படிக்கும் போது, அங்கிருந்த சாரணர் சேவையிலும் இருந்தார். ஒருநாள் பாடசாலை முடிந்து மாலையில் வீடு வந்த போது தான் இன்று இரத்ததானம் செய்ததாக அம்மாவிடம் கூறினார். தனது பிள்ளை இரத்தம் கொடுத்து விட்டு வந்திருக்கிறானே உடல் தளர்ந்து போவானோ என்ற கவலை எனது அம்மாவிற்கு வந்து விட்டது. கொடுத்த இரத்தம் தானாக உடலில் வந்து விடும் எதுவுமே ஆகாது என்று அண்ணன் எவ்வளவு சொல்லியும் அம்மா சமாதானம் அடையவில்லை. தனது பிள்ளையின் இரத்தம் ஒன்றுதான் அவரின் நினைவாக இருந்தது.
அம்மாவுக்கு மனது பொறுக்கவில்லை. "சாரணர் இயக்கத்தில் வேறுதுவும் செய்யலாம்தானே. எதுக்காக இரத்தத்தைக் குடுத்திட்டு வந்திருக்கிறான்" என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரத்ததானம் என்பது பெரிய விடயம். உடல் பருத்தவர்கள்தான் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்த நேரம். ஆகவே அம்மாவின் மன வேதனைக்கு அர்த்தம் இருந்தது.
அண்ணனுக்கு கவனிப்பு அதிகமானது. பால் முட்டை என்று அம்மா கொடுக்கக் கொடுக்க மகிழ்ச்சியோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அந்த வயதில் இரத்ததானம் என்ற விடயம் எனக்குப் புதிது. நரம்பை வெட்டி இரத்தம் எடுப்பார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அண்ணனிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது சரியான பதில் தர அவர் விரும்பவில்லை. ஆனால் இரத்ததானம் கொடுத்ததற்கு பத்திரமும் பத்து ரூபா பணமும் தந்ததாகச் சொல்லி அவற்றை பெருமையாகக் காட்டினார்.
அம்மாவின் ஸ்பெசல் கவனிப்பில் அண்ணன் ஒரு சுற்று பெருத்து விட்டார். இதை எல்லாம் கவனித்த எனக்கு பத்து ரூபாவும், அம்மாவின் கவனிப்பும் கண்களின் முன்னே சுழன்றாடத் தொடங்கி விட்டது. எனக்கும் இரத்ததானம் கொடுக்கும் ஆசை மனதில் ஊறி விட்டது.
எனது வகுப்பாசிரியர் சுப்பிரமணிய மாஸ்ரரிடம் ஒருநாள் இரத்தம் கொடுக்கும் எனது எண்ணத்தை வெளிப் படுத்தினேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு "எங்களது பாடசாலையில் அப்படி இரத்ததானம் செய்யும் வழமை இல்லை" என்றார். "பாடசாலையில் இல்லாவிட்டால் வேறு எங்கே நான் இரத்ததானம் செய்யலாம்" என்று அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்து விட்டு என்னை கண்களால் ஊடுருவிப் பார்த்தார். எனக்கு விளங்கி விட்டது. எனது உடல்வாகு இரத்ததானம் கொடுக்கும் வகையில் இல்லை என்று. நான் மெலிதாக இருநத்தால் எனக்கு அப்பொழுது நூடில்ஸ் என்ற பட்டப் பெயரும் இருந்தது. ஆகவே சுப்பிரமணியம் மாஸ்ரரின் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கியது.
"இரத்ததானம் குடுக்கிறதுக்கு வயசும் முக்கியம். உன்னட்டை எல்லாம் எடுக்க மாட்டாங்கள். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை. சோளகக் காத்து அடிச்சால் பறந்து போயிடுவாய். போ.. போய் படிக்கிற அலுவலைப் பார்."
சுப்பிரமணிய மாஸ்ரரின் அறிவுரையோடு எனது இரத்ததானம் வழங்கும் எண்ணம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அண்ணனை அம்மா கவனித்து உணவழித்த அந்த பாசமுள்ள காட்சிகள் மட்டும் இன்றும் வந்து போகும்.



Saturday, August 09, 2008

பெரிய மனது


அக்கா அணிந்திருக்கும் சங்கிலியில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரன் அழகானதாயிருக்கும். அந்தப் பென்ரனைச் சுற்றி தங்கத்தால் நுணுக்கமான முறையில் வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். இதயம் போன்ற அமைப்பில் மின்னும் அந்தப் பென்ரனை சிறிய வயதிலேயே நான் ரசித்திருக்கிறேன் என்றால் அது எந்தளவு பெறுமதியானது என்பது விளங்கும்.
சிறிய வயதுதான். அந்த வயதில் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு போவதென்றால் கொள்ளை ஆனந்தம். அந்தக் கால கட்டத்தில் அம்மாவிற்கு இரண்டு நிழல்கள் இருக்கும். வலது பக்கம் நான் இடது பக்கம் எனது அக்கா. அன்றும் அப்படித்தான் எங்களது நிழல்கள் தொடர அம்மா கந்தையாமாமா வீட்டிற்கு வந்திருந்தார்.
எனது தந்தையாரின் மாமன் மகன்தான் கந்தையாமாமா. எனது தந்தையார் எங்களது ஊரில் பெரிய மனிதனாக வலம் வந்தவர் அவரின் மறைவிற்குப் பின்னர் அந்த இடத்தைப் பிடிக்க பெரும் முயற்சி செய்தவர் கந்தையாமாமா. அவர் சிறிய வயதிலேயே ஓய்வூதியத்தை எடுத்து விட்டார். வீட்டின் முன்னால் கதிரையைப் போட்டுக் கொண்டு கிட்லர் மீசையோடு மிடுக்காக உட்காந்திருப்பார். கையில் வேப்பிலைக் கொத்தை எப்பொழுதும் வைத்திருப்பார். காலில் உள்ள எக்ஸிமாவில் ஈக்கள் மொய்க்காத வண்ணம் அந்த வேப்பிலைக் கொத்தால் கலைத்துக் கொண்டிருப்பது அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று.
ஈட்டில் இருந்த எங்களது காணி ஒன்றை மீட்டெடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையார் காலமாகிய நேரம். அவரது ஓய்வூதியம் வந்து சேர சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலமை. இந்த நேரத்தில் காணிப் பிரச்சினை. அம்மா கந்தையாமாமாவிடம் சொன்னார், "ஒண்டு இரண்டு மாதத்திலை பென்சன் வந்திடும். இதுவரை தராத காசெல்லாம் சேர்த்து வரும். இந்தக் காணியை இன்னும் இரண்டு மூண்டு மாசத்திலை மீட்கிறம் எண்டு அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ "
எனது தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்துக் கதைக்கத் தயங்கும் கந்தையாமாமாவிடம் இருந்து உடன் பதில் வந்தது "அதென்னெண்டு.. அதெல்லாம் காசு வந்தாப்போலைதான் தெரியும்.. காசு வருமெண்டதை நம்பி என்னாலை போய்க் கதைக்கேலாது"
அந்த சின்ன வயதிலேயும் அவரது பேச்சு எனக்கு எரிச்சலைத் தந்தது. இரண்டு மாதத் தவணை கேட்பதில் இவருக்கென்ன குறைந்து போய்விடும். இரண்டு மாதத்திலை காசு வராட்டில் காணி போகட்டும். இதில் இவருக்கென்ன கௌரவக் குறைச்சல் என்று நினைத்துக் கொண்டேன். அம்மா எதுவுமே கதைக்கவில்லை. வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். இடமும் வலமும் நிழல்கள் தொடர்ந்தன.
அன்றும் நிழல்கள் இரு பக்கமும் தொடர அம்மா நடந்து கொண்டிருந்தார். இம்முறை நாங்கள் சென்றது எங்களது காணிக்குள். அது வேலி இல்லாத காணியானதால் அதனூடக ஒரு நடை பாதையை அமைத்து விட்டார்கள். சூசையப்பர் கோவிலுக்கு முன்னால் அந்தக் காணி இருந்நது. ஒற்றைப் பனைமரம் ஒன்று அங்கிருந்தது. அம்மா சொன்னார் "போற வாற ஆக்கள் போத்தல்களை எல்லாம் உடைச்சுப் போட்டிருக்கினம் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு கரையிலை போடுங்கோ" என்று. நானும் அக்காவும் அம்மாவுடன் சேர்ந்து போத்தல் துண்டுகளைப் பொறுக்கி ஒரு கரையில் வைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் கவனித்தேன் அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரனைக் காணவில்லை. எங்கேயோ தொலைத்து விட்டு பேசாமல் இருக்கிறாளா என்று எனக்குள் எண்ணம் ஓடியது. எங்களுக்குச் சற்றுத் தள்ளி போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மாவை நோக்கி மெதுவாக நகர்ந்து. "அக்கா பென்ரனை துலைச்சுப் போட்டாள்" என்று அம்மாவிடம் சத்தம் இல்லாமல் கோள் மூட்டினேன். அம்மா என்னை நிமிர்ந்து பார்க்காமல் சொன்னார் "அதை வித்துத்தான் இந்தக் காணியை மீண்டனான்" அம்மாவைப் பார்த்தேன் கண்கள் கலங்கியிருந்தன. அக்காவின் பக்கம் திரும்பினேன். அவள் ஏதும் நடக்காதது போல் பேசாமல் போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.கந்தையாமாமா மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எனது அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான அழகிய பென்னரன் இன்னும் இருந்திருக்கும் என்று அந்த சின்ன மனது கவலைப் பட்டது.
அந்தக் காணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எனது தந்தையார் விரும்பி இருந்தார். அதனால்தான் அம்மாவும் அந்தக் காணியில் அதிக ஈடுபாடு காட்டியிருந்தார். சூசையப்பர் கோவிலின் நிழல் அந்தக் காணியில் விழுவதாலும் சேமக்காலை அந்தக் கோவிலோடு அண்டியிருப்பதாலும் அந்தக் காணியில் வீடு கட்டி வாழ்வது நல்லதாக இருக்காது என்று ஊரார் சொன்னதால் அங்கு வீடு கட்டும் எண்ணத்தை அம்மா கைவிட்டு விட்டார்.
பின்னாளில் எனது பெரியம்மாவின் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்ட போது எனது அம்மா அந்தக் காணியை விற்று அவர்களுக்குப் பத்தாயிரம் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பத்தாயிரம் என்பது பெரிய தொகை. அதை அம்மா மகிழ்வோடு கொடுத்திருந்தார். அந்தத் திருமணத்திற்குப் பெரிய மனிதனாக வந்து முதற் பந்தியில் இருந்து உணவருந்தியவர் கந்தையாமாமா.


Saturday, July 26, 2008

கடவுளின் கனி

கருணை என்கின்ற பொழுது கடவுளையும் முந்தி மனதில் நிற்பவள் தாய்தான். தாயைப் பற்றி நினைக்கும் போதே உள்ளம் குழந்தைத் தனத்துக்குத் தானாக வந்து போகிறது.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம். மணிக்கணக்கில் அல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் அவற்றை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுவார். மரங்களின் வளர்ச்சியில் குதூகலிப்பார். அவை பூக்கும் போது பூரித்துப் போவார். அவை காய்த்து கனி தரும் போது களிப்பெய்துவார்.


ஒரு தடவை வீட்டின் மதிற் சுவர் ஓரமாக எனது அம்மா ஒரு கொய்யா மரத்தை நட்டு வைத்தார். அவர் நட்டு வைத்த இடம் பூச் செடிகளுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த இடம்.

"பூச்செடிகளின் மத்தியில் இது எதற்கு?" என்று கேட்டேன்.

"அவை பூக்க மட்டும்தான் செய்யும் இது காய்க்கவும் செய்யும்" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

அம்மாவின் செயற்பாடுகள் எதுவானாலும் அதற்கு வீட்டில் மறு பேச்சுக் கிடையாது. ஆகவே கொய்யா மரத்திற்கு வளர வாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. அம்மாவின் பராமரிப்பில் கொய்யாவுக்கு அதிக மகிழ்ச்சி போலும். வேகமாக வளர்ந்து மதிலை விட உயரமாக நின்றது. வெகு விரைவிலேயே இரண்டு கனிகளை வெளிக் காட்டியது. கொய்யாக் கனிகளைக் காட்டி எனது அம்மா பெருமைப் பட்டுக் கொள்வார். உண்மையிலேயே அவரின் பெருமையில் அர்த்தம் இருந்தது. கனிகள் ஏறக்குறைய ஒரு தேங்காயின் அளவுக்குப் பெருத்து மஞ்சளும், பச்சையும் கலந்து அழகான நிறச் சேர்க்கையுடன் இருந்தன. கொய்யா மரத்தைக் கடந்து செல்லும் போது பழத்தின் வாசனை பறித்துச் சாப்பிடு என்று சொல்லும்.

அம்மாவிடம் சொன்னேன், "அணில் கொறிக்கப் போகுது. இல்லை என்றால் பறவைகள் கொத்தப் போகின்றன" என்று.

"எதுவுமே நடக்காது" என்று உறுதியாகச் சொன்னார்.

"நானாவது சாப்பிடுகிறேன்" என்றேன்.

"பொறு, பழம் இன்னும் பெருக்க வாய்ப்பிருக்கு. உனக்குக் கிடைக்கும். ஆனால் முதல் பழம் கடவுளுக்கு. இரண்டாவதுதான் உனக்கு" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


ஒருநாள் காலை எனது அம்மா என்னை அவசரமாக அழைத்தார். ஓடிப் போய்ப் பார்த்தால் கொய்யா மரத்தடியில் சோகமாக நின்றார். அவரது சோகத்தைக் கண்டதும் எனது கண்கள் உயர்ந்து நின்ற கொய்யா மரத்தைப் பார்த்தன. அது தனது ஒரு கனியை தொலைத்திருந்தது. மதிலுக்கு மேலால் வளர்ந்திருந்ததால் வீதியால் போகிறவர் யாரோ பறித்து விட்டார்கள் என்பது தெளிவாயிற்று. கடவுளுக்கு நேர்ந்ததை களவாணி கொண்டு போய் விட்டான்.

எனது அம்மா எவ்வளவு கவலை அடைந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

"இனியும் பார்த்துக் கொண்டிராமல் அடுத்ததை பறிச்சு கடவுளுக்குக் குடுங்கோ" என்று சொல்லி விட்டு நான் போய் விட்டேன்.

அன்று மாலை வீடு திரும்பிய போது மேசையில் தட்டில் கொய்யாக் கனி வெட்டி வைக்கப் பட்டிருந்தது.

"கடவுளுக்குக் குடுக்கேல்லையா?" என்றேன்

"பேச்சு மாறக் கூடாது. இரண்டாவது கனி உனக்குத்தானே" என்று அம்மாவிடம் இருந்து புன்னகையுடன் பதில் வந்தது.

கடந்த04.04.2008 இல் எனது தாயார் மரணம் அடைந்த செய்தி வர துயரத்துடன் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றிருந்தேன். எல்லாம் முடிந்து நியூசிலாந்தில் எனது சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் காலைச் சூரியனை மலைகளின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அக்காவின் மகன் ஜனகன் சொன்னான் "இதில் இருக்கும் மரங்கள் அத்தனையும் அம்மம்மாதான் வளர்த்தார். அந்த அப்பிள் மரமும் அவர் வளர்த்ததுதான்"

வேலி ஓரமாக பூச் செடிகளுக்கு மத்தியில் இருந்த அப்பிள் மரத்தை நெருங்கிப் பார்த்தேன். மரம் ஒன்றும் உயரமாக வளரவில்லை. ஆனால் சிவந்த காய்கள் அதில் அழகாக இருந்தன. அம்மாவின் பிரியத்தில் அவை கனி தந்திருக்க வேண்டும் என்று மனது சொன்னது. அன்று கொய்யா. இன்று அப்பிள்.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.

Saturday, July 19, 2008

சொல்லவேயில்லை


திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தேன். கூடவே எனது பால்ய நண்பன் தணிகாசலமும் சேர்ந்திருந்தான். வல்லிபுரக் கோவில் குளத்தில் - அதைக் குளம் என்று தான் சொல்வது வழக்கம். உண்மையில் அது ஒரு குட்டை. மழைக்காலத்தில் அதில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான் எங்களது நீச்சல் தடாகம். இங்குதான் தென்னை ஒல்லி இரண்டினை இளக்கயிற்றால் கட்டி அதன் மேல் படுத்திருந்து நீச்சல் பழகியிருந்தேன். நீச்சல் என்பதை முறையாக யாருமே எனக்குக் கற்றுத் தரவில்லை. நானும் தணிகாசலமும் ஒல்லிகளைக் கட்டிக் கொண்டு நீரில் தாளாமல் இருப்பதற்காக கைகளையும் கால்களையும் வேகமாக அடித்து ஓரளவு நேரம் தண்ணீரில் மூழ்காமல் இருக்கக் கற்றுக் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும்.

இந்த நீச்சலையே அன்று நானும் தணிகாசலமும் பாலாவியில் அடித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குச் சற்றுத் தள்ளி எனது அம்மாவும் பாலாவியில் குளித்துக் கொண்டிருந்தார் எனது நீச்சலை அவர் அடிக்கடி பார்ப்பது தெரிந்தது. இத்தனைக்கும் நாங்கள் அதிக ஆழமான இடத்தில் நீச்சல் அடிக்கவில்லை. நெஞ்சளவு தண்ணீரிலேயே நின்று வித்தை காட்டிக் கொண்டிருந்தோம்.

பாலாவியில் சீமெந்தினால் செய்யப் பட்ட பெரிய பெரிய குழாய்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அவை தண்ணீர் மட்டத்தோடு காட்சி தந்தன. எங்களது நீச்சல் மகிமையைக் கண்ட ஒரு பெரிசு குளித்து விட்டுப் போகும் போது, "தம்பிமாரே அந்தக் குழாய்கள் இருக்கிற பக்கம் போயிடாதையுங்கோ அது ஆழமான பகுதி. அதுவும் அந்தக் குழாய்க்குள்ளை போனீங்களோ அவ்வளவுதான்" என்று எச்சரித்து விட்டுப் போனது. அந்தப் பக்கமே போவதில்லை என்ற தீர்மானத்தை உடனே நிறைவேற்றினோம்.

நாங்கள் கவனமாகத்தான் இருந்தோம் ஆனால் எனது அம்மா அந்தக் குழாய்களை நோக்கி நகர்வது தெரிந்தது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பாதி நீந்தியும் தண்ணீருக்குள் நடந்தும் அம்மாவை நெருங்கினேன். அம்மா மகிழ்ச்சியாக தண்ணீருக்குள் நின்றார். ஊரில் மழை பெய்தால் மழையில் நனைவதும் அதில் குளிப்பதும் அம்மாவிற்கு மகிழ்ச்சியான விடயம். ஆகவே பாலாவியில் அவர் மகிழ்ச்சியாக நின்றதில் அதிசயம் இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன் "அந்தக் குழாய் இருக்கிற பக்கம் போகாதையுங்கோ ஆழமாம்." அம்மா எனது பேச்சை அசட்டை செய்வது தெரிந்தது. மழையில் குளிப்பது போல் இல்லை பாலாவி ஆற்றில் குளிப்பது என்று மீண்டும் எச்சரித்தேன். அம்மாவுக்கு நீச்சல் தெரியாது ஏதாவது விபரீதம் நடந்தால் கரைக்கு இழுத்து வர எங்களுக்கும் சரிவர நீச்சல் தெரியாது. ஆனாலும் அம்மா மெதுவாக தண்ணீரில் நகர்ந்து கொண்டிருந்தார். "அம்மா" என்று கூப்பிட்டேன். "உனக்குப் பயம் என்றால் நில். எனக்குப் பயம் இல்லை" என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. இப்பொழுது அம்மா என்னை விட்டு சற்று தண்ணீருக்குள் முன்னுக்குப் போய்விட்டார். அவர் இருக்கும் இடத்திற்குப் போக தண்ணீரில் தாண்டு விடுவேனோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனாலும் மெதுவாக அம்மாவை நோக்கி நகர்ந்தேன். நான் அம்மாவை நெருங்கிய போது அம்மா தண்ணீரில் இருந்து மேலே வந்தார். அழகாக வட்டம் அடித்து நீந்தத் தொடங்கி விட்டார். "வா ஏலுமெண்டால் வந்து பிடி" என்று சொல்லியவாறு அழகாக நீந்திக் கொண்டிருந்தார்.

எனது அம்மாவுக்கு இவ்வளவு அழகாக நீந்தத் தெரியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தண்ணீரில் நீச்சல் என்ற பெயரில் தத்தளிக்கும் எனது நீச்சலை நினைக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. அம்மாவின் நீச்சலை இரசித்த படி தணிகாசலம் இருக்கும் இடத்தை நீந்தாமல் நடந்து வந்து சேர்ந்தேன்.

"உன்ரை அம்மா வடிவா நீந்துறா. அவவுக்கு நீச்சல் தெரியும் எண்டு நீ எனக்கு சொல்லவேயில்லை" என்று தணிகாசலம் கேட்டான்.
அம்மா எனக்கும் சொல்லவேயில்லை என்ற விடயத்தை நான் அவனுக்குச் சொல்லவேயில்லை.