Saturday, April 03, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

அம்மாவிடம் ஒரு சிங்கர் தையல் மெசின் இருந்தது. சிறுவர்களாக நாங்கள் இருந்த போது, அம்மா அதில் தைத்துத் தந்த உடைகளைத்தான் நாங்கள் அணிந்து கொண்டோம். ஏன் எனது மகனுக்கும், மகளுக்கும் கூட அம்மா அதில் உடைகள் தைத்துத் தந்திருக்கின்றார். நான் நினைக்கிறேன் அந்தத் தையல் மெசினை எனது தந்தை அம்மாவிற்கு பரிசளித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அம்மா ஏன் அந்த தையல் மெசினை துடைத்து எண்ணை விட்டு ஒரு குழந்தை போல் பராமரித்து நீண்ட காலமாக தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.

அன்றைய காலங்களில் பொங்கல், தீபாவளி நேரங்களில் அந்த மெசினுக்கு ஓவர்டைம். எங்கள் எல்லோரையும் நித்திரைக்கு அனுப்பி விட்டு அம்மா உடைகளைத் தைக்க ஆரம்பித்துவிடுவார். தையல்மெசின் போடும் அந்த சத்தத்தைத் தாலாட்டாக ஏற்றுக் கொண்டு, புது உடைகளைப் பற்றிய கனவுகளுடன் நாங்களும் நல்ல பிள்ளைகளாக நித்திரை ஆகிவிடுவோம். காலையில் நித்திரையால் எழுந்து பார்த்தால் அழகான வடிவமைப்போடு உடைகள் தயாராக இருக்கும். அம்மா தனது காலை உணவை தயாரிக்கும் பணியில் இருப்பார். எங்களுக்கு வயிறும், மனதும் நிறைய அவர் செய்த பணிகள் இன்னும் ஏராளம்.

எனது தந்தை மறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் குடும்பம் தள்ளாடிய நேரம். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றம் சூழலில் தீபாவளி உடைகளைப் பற்றிய பேச்சு. நாங்களோ சிறுவர்கள். பிள்ளைகளுக்கு இந்தமுறை ஏதும் உடைகளை வாங்கிக் தைத்துக் கொள்ள வசதி இல்லையே என்று அம்மா மனதுக்குள் கவலைப் பட்டிருப்பார். நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும் இந்த விடயத்தில் அம்மாவுக்கு சிரமம் ஏதும் தரவே இல்லை.

அடுத்த நாள் தீபாவளி. அமளிதுமளி ஏதும் எங்கள் வீட்டில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம் எனக்கு படிக்கும் நேரம். படித்துக் கொண்டிருந்த எனது கண்ணில் தட்டுப் பட்டது மேசையில் சீலாண்ணன் படித்து விட்டு வைத்திருந்த பேசும் படம். அக்கம் பக்கம் பார்த்து விட்டு பாடப் புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு பேசும் படத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

'நல்லா படிக்கிறாய் போலை'
அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு பேசும் படத்தை மேசையில் போட்டேன். போட்ட வேகத்தில் விரிந்த பக்கத்தில் கையை உயர்த்திய போஸ்ஸில் எம்.ஜி.ஆர். படம். அம்மா பேசும் படத்தை எடுத்து அந்தப் பக்கத்தை உற்றுப் பார்த்து விட்டு, என்னைப் பார்த்து "பாடப் புத்தகத்தைப் படி" என்று சொல்லி விட்டு பேசும் படத்தையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அன்று அம்மா தனது வேலைகளை முடித்து விட்டு தையல் மெசினை எடுத்து துடைத்துக் கொண்டிருந்தார். முன்னர் தைத்து விட்டு மிஞ்சி இருந்த துணிகளை எடுத்து ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நித்திரைக்குப் போய் விட்டேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், தையல் மெசினுக்குப் பக்கத்தில் இரண்டு உடைகள் மடித்து வைக்கப் பட்டிருந்தன. ஒன்று பல வர்ணங்களில் அழகிய பெண்களுக்கான உடை. அக்கா, '"இது எனக்கு அம்மா தைத்தது'" என அதை எடுத்துக் கொண்டார். மற்றது வெள்ளை சேர்ட். அதில் கொலருக்குக் கீழே பச்சை நிறத்தில் ஒரு போர்டர். அந்த போர்டரில் அழகான இரண்டு தெறிகள். எங்கேயோ அந்த சேர்டை பார்த்த ஞாபகம். தையல் மெசினுக்கு அருகில் இருந்த பேசும் படத்தை எடுத்துப் புரட்டினேன். கையை மேலே தூக்கிய வண்ணம் எம்.ஜி.ஆர். அதே சேர்ட்டைத்தான் போட்டிருந்தார். கையில் இருந்த சேர்ட்டையும், படத்தில் இருந்த சேர்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அச்சு அசலாகவே இருந்தது.

குளித்துவிட்டு வந்து சேர்ட்டைப் போட்டுப் பார்த்தேன். அழகாகப் பொருந்தி இருந்தது. அக்காவைப் பார்ததேன் வண்ண மயமாக சட்டையில் ஜொலித்தக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு திருமாவும், குட்டியும் அக்காவைப் பார்த்து சொல்லிக் கொண்டார்கள், "நாங்களும் உன்ரை கொம்மாவைக் கொண்டு இப்பிடி ஒண்டு தைக்கோணும். இந்த உடுப்போடை உன்னைப் பார்க்க பஞ்சவர்ணக் கிளி மாதிரி இருக்கு" என்று.

"எம்.ஜி.ஆர். மாதிரி சேர்ட் போட்டிருக்கிறான்" என்று எனது நண்பர் வட்டத்தில் நான் அன்று ஒரு கதாநாயகன். எனது வாழ்நாளில் நான் அதிகம் பாவித்தது அந்த ஒரு சேர்ட்தான் என்று நினைக்கிறேன். பின்னாளில்; எங்கள் ஊர் சென்றல் தியேட்டரில் பணத்தோட்டம் காண்பித்த போது நண்பர்களுடன் போய்ப் பார்த்தேன்.

'"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே..................'" என்று எம்.ஜி.ஆர். கையைக் காற்றில் வீசிப் பாடிக் கொண்டிருந்தார். அதில் அவர் போட்டிருந்த சேர்ட் போலவே நானும் சேர்ட் போட்டுக் கொண்டு அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

எஞ்சி இருந்த துண்டுத் துணிகளில் மற்றவர் மெச்சும்படி அன்றைய நிலையை வெற்றிகரமாகக் கையாண்ட எனது தாயை நினைத்துக் கொள்கிறேன். அம்மா என்ற அந்த அற்புதக் கலைஞியை எண்ணிப் பார்த்து வியக்கிறேன்.