
அம்மாவுக்கு மனது பொறுக்கவில்லை. "சாரணர் இயக்கத்தில் வேறுதுவும் செய்யலாம்தானே. எதுக்காக இரத்தத்தைக் குடுத்திட்டு வந்திருக்கிறான்" என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரத்ததானம் என்பது பெரிய விடயம். உடல் பருத்தவர்கள்தான் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்த நேரம். ஆகவே அம்மாவின் மன வேதனைக்கு அர்த்தம் இருந்தது.
அண்ணனுக்கு கவனிப்பு அதிகமானது. பால் முட்டை என்று அம்மா கொடுக்கக் கொடுக்க மகிழ்ச்சியோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அந்த வயதில் இரத்ததானம் என்ற விடயம் எனக்குப் புதிது. நரம்பை வெட்டி இரத்தம் எடுப்பார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அண்ணனிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது சரியான பதில் தர அவர் விரும்பவில்லை. ஆனால் இரத்ததானம் கொடுத்ததற்கு பத்திரமும் பத்து ரூபா பணமும் தந்ததாகச் சொல்லி அவற்றை பெருமையாகக் காட்டினார்.
அம்மாவின் ஸ்பெசல் கவனிப்பில் அண்ணன் ஒரு சுற்று பெருத்து விட்டார். இதை எல்லாம் கவனித்த எனக்கு பத்து ரூபாவும், அம்மாவின் கவனிப்பும் கண்களின் முன்னே சுழன்றாடத் தொடங்கி விட்டது. எனக்கும் இரத்ததானம் கொடுக்கும் ஆசை மனதில் ஊறி விட்டது.
எனது வகுப்பாசிரியர் சுப்பிரமணிய மாஸ்ரரிடம் ஒருநாள் இரத்தம் கொடுக்கும் எனது எண்ணத்தை வெளிப் படுத்தினேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு "எங்களது பாடசாலையில் அப்படி இரத்ததானம் செய்யும் வழமை இல்லை" என்றார். "பாடசாலையில் இல்லாவிட்டால் வேறு எங்கே நான் இரத்ததானம் செய்யலாம்" என்று அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்து விட்டு என்னை கண்களால் ஊடுருவிப் பார்த்தார். எனக்கு விளங்கி விட்டது. எனது உடல்வாகு இரத்ததானம் கொடுக்கும் வகையில் இல்லை என்று. நான் மெலிதாக இருநத்தால் எனக்கு அப்பொழுது நூடில்ஸ் என்ற பட்டப் பெயரும் இருந்தது. ஆகவே சுப்பிரமணியம் மாஸ்ரரின் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கியது.
"இரத்ததானம் குடுக்கிறதுக்கு வயசும் முக்கியம். உன்னட்டை எல்லாம் எடுக்க மாட்டாங்கள். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை. சோளகக் காத்து அடிச்சால் பறந்து போயிடுவாய். போ.. போய் படிக்கிற அலுவலைப் பார்."
சுப்பிரமணிய மாஸ்ரரின் அறிவுரையோடு எனது இரத்ததானம் வழங்கும் எண்ணம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அண்ணனை அம்மா கவனித்து உணவழித்த அந்த பாசமுள்ள காட்சிகள் மட்டும் இன்றும் வந்து போகும்.