Thursday, January 06, 2011

வெளுத்துக் கட்டு

அவருடைய பெயரை நாங்கள் சொல்லி அழைக்க வேண்டிய தேவை அப்பொழுது எங்களுக்கு இருக்கவில்லை. தனது பெயர் சின்னத்துரை என்று அவர் ஒரு தடவை என்னிடம் சொன்னதாக சிறியதாக ஒரு நினைவு இருக்கிறது. ஏதாவது தேவைக்கு அவரை அழைக்க வேண்டி வந்தால் கட்டாடியார் என்று அழைத்துக் கொள்வோம்.
எங்கள் தந்தையார் காலத்தில் இருந்தே நாங்கள் போட்டு அழுக்கான உடைகளை எடுத்துச் சென்று தோய்த்து அழகாக மினுக்கிக் கொண்டு வந்து தருவார். அவரது பிரசன்னம் மாதத்துக்கு ஒரு தடவை எங்கள் வீட்டில் இருக்கும். தேவைகள் அதிகமானால் அவரது வருகை சில வேளைகளில் மாதம் இருமுறையாக அமைந்து விடுவதும் உண்டு. பலரது வீட்டில் உடைகளைப் பெற்று அவர் சலவை செய்வதால் ஒவ்வொரு குடும்பத்திற்கும் சட்டையின் உட்புறத்தில் கறுப்பு மையால் வௌ;வேறு குறியிட்டுக் கொள்வார். எங்களது உடைகளில் .T. என்று அவர் குறியிட்டிருப்பார். இதனால் உடைகள் மாறாது ஒழுங்காக அந்தந்த வீட்டிற்குப் போய்ச் சேர்ந்து விடும்.
எனது அக்கா இந்திராணிதான் உடைகளைக் கணக்குப் பார்த்துக் கொப்பியில் எழுதி வைத்துக் கொண்டு அவரிடம் கொடுப்பார். தோய்த்து அழகாக மடித்து அவர் திருப்பிக் கொண்டு வரும்பொழுது எழுதி வைத்திருக்கும் கொப்பியின் பக்கத்தை திறந்து வைத்து கட்டாடியார் உடைகளை ஒவ்வொன்றாக எடுத்து வைத்து சொல்லும் போது அவை சரியாக இருக்கிறதா என பார்த்துப் பெற்றுக் கொள்வார். அவருக்கு மாதாந்தமாக அம்மா பணம் கொடுத்து விடுவார்.
என்னிடம் இருந்த உடைகளில் எனக்கு அதிகமாகப் பிடித்தது ஒரு மென்மஞ்சள் சாரம். அந்தச் சாரத்தில் போடப்பட்டிருக்கும் பச்சைக் கோட்டுக்கு மேல் மெலிதான ஒரு கோடாக கருமஞ்சள் கலந்திருக்கும். உண்மையில் அது என்னுடையது இல்லை. ராஜாண்ணை தனக்கு என்று வாங்கியது. அது அழகாக இருந்ததாலும் என்னிடம் இருந்த மஞ்சள் வர்ண சேர்ட்டுக்கு இணைவாக அது இருந்ததாலும் அதை நான் எடுத்துக் கொண்டேன். ராஜாண்ணையும் ஒன்றும் செல்லாமல் பையன் ஆசைப்படுகிறான் என்று அதை என்னிடம் அப்படியே விட்டு விட்டார். அதிகமான நேரங்களில் அந்தச் சாரமும் மஞ்சள் சேர்ட்டும் அணிந்திருப்பேன். தூரத்தில் வந்து கொண்டிருக்கும் அந்தக் காலத்து வயசுப் பெண்களுக்கு என்னை இலகுவாக அடையாளம் காட்ட அந்தச் சாரம் அப்பொழுது உதவி இருக்கும்.
ஒரு தடவை வீட்டில் எங்கு தேடியும் அந்தச் சாரத்தைக் காணவில்லை. இறுதியாக அக்காவிடம் கேட்டுப் பார்த்தேன். „தோய்க்கிறதுக்கு கட்டாடியிட்டை போட்டிட்டன்' என்று பதில் வந்தது. இதைக் கேட்டதும் எனக்கு கோபம் கோபமாக வந்தது. கட்டாடி அடிச்சுத் தோய்த்தால் கண்டிப்பாக சாரம் கிழிந்து விடும். அல்லது வெள்ளாவியில் போட்டு அவித்தால் சாயம் போய் விடும். எதுவானாலும் சாரம் சாரமாக வராது. கிழிந்து சரம் சரமாகத் தொங்கப் போகிறது என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன். ஆனாலும் அக்கா என் கண்ணில் படும் போதெல்லாம் „கட்டாடி வந்து போயிற்றாரா?' என்று கேட்பேன்;. ஒருநாள் மாலை விளையாடி விட்டு வீடு வந்த போது. கட்டாடியார் வெளுத்துக் கொண்டு வந்த உடைகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தது தெரிந்தது. அவசர அவசரமாக அந்த உடைகளுக்குள் எனது சாரத்தைத் தேடினேன். எனது அழகான அந்தச் சாரத்தைக் காணவில்லை.
„என்ன சாரத்தையே தேடுறாய்? அது எங்கேயோ தவறீட்டுதாம். இந்தமுறை அவர் கொண்டு வர இல்லை. தேடி எடுத்து அடுத்தமுறை மறக்காமல் கொண்டு வாறாராம்' அக்கா சொன்னது கேட்டது. எனது மனது வாடிப் போனது ஏமாற்றத்துடன் திரும்பிய எனக்கு வேப்ப மரத்தடியில் இருந்து அக்கா கொடுத்த தேனீரை ருசித்துக் குடித்துக் கொண்டிருந்த கட்டாடியார் தென்பட்டார். „உங்கடை சாரத்தை தேடி எடுத்துக் கொண்டு வந்து தாறன் தம்பி' என்று கட்டாடியார் என்னைப் பார்த்துச் சொன்னார். „ஒண்டும் அவசரம் இல்லை நீங்கள் அடுத்த முறை வரக்கை கொண்டு வாங்கோ' என்று கட்டாடியாரைப் பார்த்து சொல்லும் போதுதான் அவரைக் கவனித்தேன். அவர் கட்டியிருந்த மென்மஞ்சள் நிறத்திலான அந்த சாரத்தில் பச்சைக் கோட்டுக்கு மேல் மெலிதான ஒரு கோடாக கருமஞ்சள் கலந்திருந்தது. அக்காவிடம் போய்ச் சொன்னேன் „என்ரை சாரத்தை ஆர் கட்டினாலும் அது அவருக்கு வடிவைக் குடுக்கும். இப்ப கட்டாடியாரும் வடிவா இருக்கிறார். போய்ப் பார். என்று.
எதுவுமே தெரியாமல் தேனீரைக் குடித்துக் கொண்டிருந்த கட்டாடியாரைப் போய்ப் பார்த்து விட்டு வந்து அக்கா சிரிக்கத் தொடங்கினாள்.