
திருவிழா தொடங்கும் போது வீட்டில் கிடாய் (கடா) வாங்கிக் கட்டி விடுவார்கள். அவர்கள் உபவாசமிருந்தாலும் கிடாய்க்கு நல்ல தீனி போட்டு வளர்ப்பார்கள். பிண்ணாக்கு, தவிடு என்று குழைத்து, குழைத்து வலுக் கட்டாயமாக கிடாயிற்குத் தீத்துவார்கள்.
வீட்டுக்கு வருபவர்களிடம் எல்லாம் பெருமையாகத் தங்கள் கிடாய் பற்றிப் பேசிக் கொள்வார்கள். வீட்டுக்கு வந்தவர்களை தவறாமல் கிடாய் கட்டியிருக்கும் இடத்துக்கு கூட்டிச் சென்று பெருமையாகக் காட்டுவார்கள். இவையெல்லாம் திருவிழா வரைதான். திருவிழா முடிந்த மறுநாள் கிடாயின் கதையும் முடியும். அன்று கிடாய் கதை முடிக்கும் வீடுகளிலெல்லாம் வேறொரு திருவிழா மிகவும் சிறப்பாக நடக்கும்.
திருவிழா ஒன்று நடைபெற்றுக் கொண்டிருந்த நேரம் அது. அன்று காவடி, கரகம் என வீதி அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. கரகம் தூக்கி ஆடும் இளைஞர்களெல்லாம் எனக்குத் தெரிந்தவர்கள். அதில் முக்கியமானவர்களாக முத்து, வரதன், மணியம் ஆகியோரைக் குறிப்பிடலாம். கரகம் ஆடுபவர்களுக்கு ஏதாவது உதவி தேவைப்படும் பட்சத்தில் என்னைச் செய்து தரும்படிக் கேட்டுக் கொண்டதால் கரகம் ஆடும் இளைஞர்களுக்குப் பக்கத்தில் நானும் இருந்தேன்.
பெரிதாக செய்வதற்கு எனக்கு ஒன்றுமே இருக்கவில்லை. கரகம் ஆடுபவர்கள் களைத்துப் போனால் குடிப்பதற்கு அவர்களுக்கு குளிர்பானம் தந்தால் போதும்.நாலைந்து கோலா போத்தல்கள் எனது தோளில் தொங்கும் பையில் இருந்தது. இவர்கள் குடித்து முடிந்தால் புதிது புதிதாக கோலாக்கள் என்னிடம் வந்து கொண்டிருந்தன. எனவே எனக்கு பெரிதாக அலட்டிக் கொள்ளும் வேலையில்லை.
கரகங்கள் நகர வீதிகளில் அட்டகாசமாக ஆடி வந்தன. பெண்கள் உடையில் தலையில் வண்ணக் கரகங்களை வைத்து அவர்கள் சுற்றிச் சுழன்றாடி வரும் அழகோ அழகு.
காவடி, தீச்சட்டி, பால்செம்பு என முன்னால் பல போய்க் கொண்டிருந்தாலும், வீதியில் நிற்கும் மக்களெல்லாம் முண்டியடித்துப் பார்க்க விரும்பியதென்னவோ பின்னால் வந்து கொண்டிருந்த இந்த இளைஞர்களின் கரகாட்டத்தைத்தான்.
உடுக்கு, மேளம், பறை இப்படியாக பலவித கருவிகள் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்த ஒலியில் ஆட்டங்கள் அமர்க்களமாக இருந்தன. வாத்தியங்கள் எழுப்பிய ஒலியில் ஆடும் உணர்ச்சி தானாகவே கால்களுக்கு வந்து விடுமோ என்ற பிரமை கூட வந்தது.ஒரு விதத்தில் கரகாட்டக்காரருடன் நானும் வருவது எனக்குப் பெருமையாக இருந்தது.
மணியன் ஆவேசமாக ஆடிக் கொண்டிருந்தான். அவனுக்கு உரு வந்து விட்டதாகப் பேசிக் கொண்டார்கள். அவனது தலையில் இருந்த கரகத்தை பக்கத்தில் இருந்தவர்கள் பக்குவமாக வாங்கிக் கொண்டார்கள். தலையில் கரகமில்லாமலேயே அவன் சுழன்று சுழன்று வேகமாக ஆடிக் கொண்டிருந்தான். ஒருவர் தனது தோளில் இருந்த சால்வையால் அவனைக் கட்டி அவனது முதுகுப் புறமாக சால்வையின் இரு நுனிகளையும் சேர்த்து இறுகப் பிடித்திருந்தார். ஆடும் அவனது கால்கள் தனது கால்களை தாக்காமல் அவதானமாகவே அவர் காலடியை எடுத்து வைத்துக் கொண்டிருந்தார். கண்டிப்பாக அவருக்கு இது குறித்த முன் அனுபவம் இருந்திருக்க வேண்டும்.
பல வீதிகள் ஊடாக பல மணி நேரம் நடந்த களைப்பில் எனது தோளில் தொங்கும் பையில் இருந்த கோலாவை எடுத்து ஒரு முடக்கு குடித்தேன். அவ்வளவுதான், சிந்திக்க எண்ணவில்லை வீதியில் அப்படியே துப்பி விட்டேன். கரகம் ஆடிய வண்ணம் இதைப் பார்த்துக் கொண்டிருந்த முத்து ஆடியபடியே என்னை நெருங்கி வந்தான். கரகத்தின் மேளச் சத்தத்துக்கும் மத்தியிலும் காதிற்குள் கிசுகிசுத்தான்,
"நீங்கள் இதெல்லாம் குடிக்கக் கூடாது. இது கரகம் ஆடுறவையளுக்கு மட்டும்தான். "
சொல்லிவிட்டு ஆடியபடியே அப்பால் நகர்ந்தான்.
அடப் பாவிகளா என்று கத்தவேண்டும் போலிருந்தது. சாராயத்தின் கலர் தெரியாமலிருப்பதற்கு சிறிது கோலா கலந்து அதை கோலா போத்தலுக்குள் விட்டு வைத்திருந்தார்கள். பார்ப்பவர்களுக்கு அது கோலா. குடிப்பவர்களுக்கு அது சாராயம்.
இப்போ எனக்கு விளங்கியது, இவர்கள் வேகமாகச் சுழன்றாடிவரும் இரகசியம்.
பறை அடிப்பவர்களுக்கு முன்னால் மணியன் அபிநயம் பிடித்து மூர்க்கத்தனமாக ஆடிக்கொண்டிருந்தான்.
பத்திரகாளி கோவில் காவடி என்றால் அந்த நகரத்து இளைஞர்களுக்கு எல்லாம் பயங்கரக் கொண்டாட்டம்தான்.
No comments:
Post a Comment