Saturday, September 27, 2003

எச்சில்போர்வை

அஜீவனின் குறும்படம் மீதான ஒரு பார்வை

சப்பாத்தை அநாயசமாகக் கழட்டிவிட்டு சோர்வுடன் நடக்கும் கால்களுடன் வீட்டுக்குள் கமரா நுளைகிறது, கூடவே நாங்களும் நுளைவது போன்ற பிரமை.

ஜக்கற்றை கழட்டி கட்டிலில் போடுவது, கடித உறையைக் கிழித்து கிழித்த துண்டைக் கீழே போடுவது போன்ற சிறு சிறு விசயங்களில் கூட நிறைய கவனம் செலுத்தப்பட்டிருப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது

ஒரு வார்த்தை பேச வேண்டிய அவசியமே நாயகனுக்கில்லை. கமராவும் ஒளியமைப்பும் அவனுக்காகப் பேசுகின்றன. கதையை நகர்த்த பின்னணியில் குரல்கள் பேசுகின்றன.
லுயிஸை சுவிசிற்கு அனுப்பிவிட்டு, ஒரு கடிதம் மூலமும் , தொலைபேசி அழைப்பின் மூலமும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பை சுருக்கமாகச் சொல்லியிருக்கிறார் இதை ஆக்கியவன்.

ஓரு இலட்சம் அனுப்பு என்ற கடித வாசகத்தைப் பார்த்து (கேட்டு) லுயிஸ் பெருமூச்சு விடுவதும், இன்னும் இரண்டு கிழமைக்குள் பணம் அனுப்பு என்று சொல்லி துண்டிக்கப்படும் தொலைபேசியின் பின்னணிச் சத்தமும், இருளையே பார்த்து நிற்கும் லுயிஸின் இலயாமையும் நன்றாகச் சொல்லப்பட்டிருக்கின்றன.
அதேபோல் லுயிஸிற்கு தொலைபேசி வந்திருப்பதாகச் சொல்ல வருபவரைக் காட்டாது அவரின் நிழலை லுயிஸின் முதுகில் காட்டி மறையவிடுவது தேர்ந்த கலைஞனின் ஒளியமைப்பினூடான கமாராப் பார்வை.

கலாச்சாரம், சினிமா என்ற வெட்டிப் பேச்சுக்களின் பின்னணியில் லுயிஸ் லிப்றில் 10வது மாடிக்குப் போவதும், பின்னணியில் நண்பனின் அறிவுரை ஒலிக்க மீண்டும் லிப்றில் கீழே பயணிப்பதும் நல்ல சேர்க்கை.

யாழ்ப்பாண நிலமைகள், தங்கையின் கடிதம், தொலைபேசியில் ஒலிக்கும் தந்தையின் குரல், வெட்டிப்பேச்சு பேசும் குரல்கள் எல்லாம் மாறிமாறி ஒலிக்கும்போது, லுயிஸ் தனது வலது கைப் பெருவிரலை அசைப்பது சொல்ல வேண்டியதைச் சொல்லி நிற்கின்றது.

முற்பகுதியில் இயற்கையான ஒலியுடனும் பிற்பகுதியில் வாத்திய இசையுடனும் பின்னணி சேர்த்திருப்பது அருமை.
கதையின் நாயகனை விட்டு நாங்கள் அகலாத வண்ணம் எங்களை வைத்திருப்பதற்காக வேறு பாத்திரங்களை காட்டாதது உங்கள் எண்ணமானால், அறிவுரை தரும் நண்பனின் காலைக் காட்டுவதையும் தவிர்த்திருக்கலாமே.

புலம்பெயர் தமிழ் இளைஞனே உன் தோளில் இத்தனை சுமைகளா?
அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆக்கியவன் அஜீவன்.

முல்லை

Sunday, September 21, 2003

நிழல் யுத்தம்

அஜீவனின் குறும்படம் மீதான ஒரு பார்வை

அரசியலில் ஒரே கட்சியில் உள்ளவர்களுக்குள் நிழல் யுத்தம் நடைபெறுவதுண்டு. அஜீவன் தந்திருப்பதோ குடும்பத்திற்குள் நடைபெறும் நிழல் யுத்தம.;
புலம்பெயர் வாழ்வில்தான் கதையைத் தேர்ந்தெடுத்திருக்கின்றார் அஜீவன்.
ஒரே வீட்டில் வாழும் திருமணம் செய்யப்போகும் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளாமல் தங்களுக்குள் புரியும் ஒரு யுத்தம்.

நாயகியாக வரும் ராதிகாவின் பார்வையும், முகபாவமும்; விரக்தியைக் காட்டுவதால் கதைக்கு நன்றாக ஒத்துப் போகின்றது. ஆனால் இதைத் தவிர வேறு பாவங்கள் இந்த முகத்தில் பார்க்க முடியாது என்ற தோரணையில் நிழல் யுத்தத்தில் அவர் வலம் வருவது ஒரு குறையே. பிறந்தநாளுக்குத்தான் அந்தப்பரிசு என்று வாங்கி வைத்திருக்கும் அந்தப் பரிசை பாலகிருஸ்ணன் எடுத்து எறிந்து உண்மை நிலையை விளக்கும்போது குறைந்த பட்சம் ஒரு புன்னகையையாவது அவர் தந்திருக்க வேண்டாமோ? கோயிலுக்குப் போவதற்காக தன்னை அலங்கரிக்கும் போதும் முகத்தில் விரக்தியைக் காட்டவேண்டிய கட்டாயம்தான் என்ன?

வெள்ளிக்கிழமை கோயிலுக்குக் கூட்டிச் செல்லாததற்கு “சாமி என்னப்பா ஓடவே போகுது? „ என்று சமாளிப்பதும், ராதிகா பிரச்சனையைத் தொடங்கும் போது நாட்காட்டியில் பௌர்ணமியா, அமாவாசையா என்று பாலகிருஸ்ணன் பார்ப்பதும் அருமையான காட்சிகளாக வந்திருக்கின்றன.

வேலைத் தளத்தில் நடக்கும் பிரச்சினைகள், அல்லது பாலகிருஸ்ணனின் வேலையிடத்தில் உள்ள அவருக்கான வேலை அழுத்தங்கள் அழுத்தமாகச் சொல்லப்படவில்லை. அடுத்தகாட்சியில் வேலை செய்யிற இடத்திலைதான் “வெள்ளைக்கார நாய் குலைக்குதெண்டு பாத்தால்...........இஞ்சை வந்தால் நீ.. „
என்ற வாசகங்களாலேயே முதற்காட்சியைப் புரிந்து கொள்ள முடிகிறது.

கதவு திறக்கும் ஓசை, பாத்திரத்தோடு பருப்பு கருகும் ஓசை, குழாயால் தண்ணீர் ஓடும் ஓசை என்று இயற்கையான சத்தங்களோடு நிழல் யுத்தத்தில் ஒன்றிப்போனால் திடீரென பின்னணி இசை பெரிய சத்தத்தோடு வந்து யதார்த்தத்தை விலக்கி வைக்கின்றது.

பாத்திரங்களை இயற்கையாகவே உரையாடவிட்டிருக்கின்றார் பாலகிருஸ்ணன். பாராட்டுக்கள்.
கமரா, படத்தொகுப்பு என்பன அஜீவனுக்கு அருமையாக வந்திருக்கின்றன. இந்தத் துறையில் அவருக்கான அனுபவங்களை அவை கட்டியம் கூறுகின்றன.
மொத்தத்தில் புலம் பெயர் வாழ்வில் எங்களவர்களின் குடும்பச் சண்டையை அழகாகப் படம்பிடித்துத் தந்திருக்கின்றார்கள் அஜீவன் குழுவினர். இவர்களிடமிருந்து மேலும் பல படைப்புக்கள் வரவேண்டும். நாம் அதைப் பார்த்து மகிழ வேண்டும்.

இறுதியாக ஒரு கேள்வி - இந்தக் குறும்படத்தின் மூலம், கணவன் பிழை செய்தாலும், உங்களைக் குறை சொன்னாலும் அதைப் பெரிதுபடுத்தாமல் பெண்களே அவர்களை அனுசரித்துப்போங்கள் என்றா சொல்ல வருகிறீர்கள்? உங்களுக்கு அசாத்தியத் துணிச்சல்.

நேற்று எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. எதிர் முனையில் எனது நண்பன். “இண்டைக்கு எங்கடை வீட்டிலை பருப்பு சட்டியோடை கருகிப் போச்சுது„ என்றான். அவன் வீட்டிலும் நிழல் யுத்தம்.

யேர்மனியிலிருந்து
முல்லை