கடவுள் என்றால் அம்மா கரைந்து உருகிக் கும்பிடுவார். இத்தனைக்கும் அவர் பிள்ளை நான் ஒரு நாத்திகன். அம்மா கேட்டுக் கொண்டால் அவருடன் கோயிலுக்குப் போவேன். கோயிலுக்குள் நுளையாமல் நான் வெளியில் நின்றாலும் சாமியைக் கும்பிட்டு விட்டு வந்து, "நீ கடவுளைக் கும்பிடாட்டிலும் பரவாயில்லை. உனக்கும் சேர்த்து நான் கும்பிட்டு விட்டேன்" என்று சொல்லிச் சிரிப்பார்.
நயினாதீவுக்குப் போய் அம்மனை தரிசிக்கும் எண்ணம் அம்மாவிடம் நீண்ட நாட்களாக இருந்தது. அன்று கொழும்பில் இருந்து கீர்த்தியண்ணன் வேலை விடுமுறையில் வந்திருந்தார். நயினாதீவு அம்மனைக் காண வேண்டும் என்ற தனது எண்ணத்தை அம்மா மெதுவாக வெளிப்படுத்தினார்.
"நயினாதீவு என்ன தூரமே? வேணுமெண்டால் நாளைக்கும் போகலாம்" என்று ராஜாண்ணை சொல்ல அம்மா அதை அப்படியே பிடித்துக் கொண்டார்.
"சரி அப்ப வெளிக்கிடு நாளைக்குப் போவம்" என்று அம்மா சொன்னதை ராஜாண்ணையால் தட்ட முடியவில்லை. அடுத்தநாள் காலையில் நயினாதீவு போக முடிவாயிற்று.
மறுநாள் அதிகாலை நாங்கள் ஐவரும் (அம்மா ராஜாண்ணன், கீர்த்தியண்ணன், அக்கா, நான்) பஸ் எடுத்து யாழ்ப்பாணம் வந்து இறங்கினோம். யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகட்டுவானுக்கு பஸ்சில் பயணிக்க வேண்டும். அங்கிருந்து நயினாதீவுக்கு கப்பல் பயணம். குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்சைத் தேடிப் பிடித்து அமர்ந்து கொண்டோம். கீர்த்தியண்ணன்தான் பணத்துக்கான பொறுப்பு. பஸ் கட்டணங்களை அவரே செலுத்திக் கொண்டு வந்தார். கொண்டக்டரிடம் கட்டணத்தைச் செலுத்த சில்லறைகள் இல்லாததால், நூறு ரூபாய்த் தாளை அவரிடம் கீர்த்தியண்ணன் நீட்டினார். காலமை வெள்ளன நூறு ரூபாய்த் தாளோடு வந்திட்டார் என கொண்டக்ரர் சலித்துக் கொண்டார். மிகுதியைப் பின்னர் தருவதாகச் சொல்லி கொண்டக்ரர் நகர்ந்தார். நான் அம்மாவுக்குப் பக்கத்தில் அமர்ந்திருந்தேன்.
"சீலனும் வந்திருந்தால் நிறைவா இருந்திருக்கும்" என்று அம்மா சொன்னா. அப்பொழுது சீலாண்ணன் கொழும்பில் உள்;ள சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். அவரால் அந்தப் பயணத்தில் பங்கு கொள்ள முடியாமற் போனது கவலை தந்தது.
குறிகட்டுவானில் கப்பலில் ஏறி பாதித் தூரம் வந்திருப்போம். கீர்த்தியண்ணனின் முகம் கவலையில் வாடி இருந்தது. என்ன விடயம் என விசாரித்த போதுதான் தெரிந்தது, குறிகட்டுவானுக்கு பயணித்த பொழுது பஸ் கட்டணத்துக்காக கொண்டக்டரிடம் கொடுத்த நூறு ரூபாயின் மிகுதிப் பணத்தை வாங்க மறந்து விட்டார் என்று. எங்களுக்கும் அந்தப் பணம் போனதில் கவலை இருந்தாலும், கப்பல் பயணத்தில் அதை மெதுவாக மறந்து விட்டோம். ஓரளவு அந்தக் கப்பல் பயணம் ஒரு பயம் கலந்த பயணமாகவே இருந்தது. கப்பலின் மட்டமும், கடல் தண்ணீர் மட்டமும் ஏறக்குறைய ஒரே அளவாகவே இருந்தன. கடல் அலைகளில் மோதி ஆடியாடி கப்பல் நகர, கடல் அலையின் தண்ணீர் கப்பலில் இருந்த பயணிகள் மேலே மோத அச்சம் மிகுந்த பயணமாகவே எனக்குப் பட்டது. நயினாதீவு புத்த விகாரைக்குப் பயணிக்கும் சிங்கள யாத்திரிகர்களும் அன்று கப்பலில் இருந்தார்கள். ஓவ்வொருமுறையும் அலையில் மோதி கப்பல் மோசமாக ஆட்டம் போட "சாது சாது" என அந்த சிங்கள யாத்திரிகர்கள் வாய்விட்டு பலமாகச் சொல்லிக் கொண்டு வந்தது எனக்குப் புதுமையாக இருந்தது.
அம்மாவின் விருப்பப்படி நயினாதீவில் சாமி தரிசனம் முடிந்து மீண்டும் யாழ்ப்பாண நகரத்துக்கு வந்து சேர்ந்தோம். யாழ் நகரில் சிறது நேரம் சுற்றி வந்த பொழுது, "படம் பார்ப்போமா?" என ராஜாண்ணை கேட்டார். அப்பொழுது யாழ் சிறீதர் தியேட்டரில் ரவிச்சந்திரன், காஞ்சனா, நாகேஸ் நடித்த சிறீதரின் உத்தரவின்றி உள்ளே வா திரைப்படம் காண்பித்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் படம் நகைச்சுவைத் திரைப் படமாக இருந்ததால் அதையே பார்ப்போம் எனத் தீர்மானித்து அந்தத் திரைப்படத்தைப் பார்த்தோம். காதலிக்க நேரமில்லை போன்று உத்தரவின்றி உள்ளே வா திரைப் படத்தில் நகைச்சுவை அதிகம் இல்லாவிட்டாலும் படத்தை இரசித்துப் பார்த்தோம்.படம் முடிந்து வெளியே வர நன்றாக இருட்டி விட்டிருந்தது.
இனி ஊருக்குப் போகலாம் எனத் தீர்மானித்து பஸ் நிலையம் வந்து எங்களுக்கான பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டோம். அதுவரை எல்லாவற்றையும் மறந்திருந்த எங்களில், கீர்த்தியண்ணன் மட்டும் சிறிது வாட்டமாக இருந்தார். "காலையில் கொண்டக்ரரிடம் வாங்க மறந்த மிச்சக் காசை நினைச்சிட்டான் போல" என அம்மா எனக்குச் சொன்னார். பஸ் வெளிக்கிடும் நேரத்தை அண்மித்துக் கொண்டிருந்த நேரம், திடீரென கீர்த்தியண்ணன் பஸ்ஸை விட்டு இறங்கி ஓடினார்.
"இவன் எங்கை போறான். பஸ் வெளிக்கிடப் போகுது" என ராஜாண்ணை சலித்துக் கொண்டார்.
"என்னெண்டு போய்ப் பார்" என அம்மா என்னை அனுப்பி வைத்தார். நானும் அவசரமாக இறங்கி கீர்த்தியண்ணனுக்குப் பின்னால் ஓடினேன்.குறிகட்டுவானுக்குப் போகும் பஸ்ஸின் வாசலில் இருந்து, ஒரு காலை பஸ்ஸின் படியிலும் மறு காலை தரையிலும் வைத்துக் கொண்டு பயணிகளுக்கு ரிக்கெற் கொடுத்துக் கொண்டிருந்தார், காலையில் நாங்கள் போன பஸ்ஸில் ரிக்கெற் தந்த அதே கொண்டக்ரர். ரிக்கெற் போட்டுக் கொண்டு நிமிர்ந்த கொண்டெக்ரருக்கு முன்னால் கீர்த்தியண்ணன் நின்றார்.
"எங்கை போகணும்?"
" மிச்சக் காசு"
"மிச்சக் காசோ? ரிக்கெற் எடுத்தனீயே?"
"ஓம் காலமை"
"காலமையோ?"
கீர்த்தியண்ணன் காலைமை எடுத்த ஐந்து ரிக்கெற்றுக்களையும் கொடுத்தார். அவற்றின் பின் பக்கத்தைப் பார்த்து விட்டு எதுவும் பேசாமல் ரிக்கெற்றுக்களை கீர்த்தியண்ணனிடமே திருப்பித் தந்தார்.
"மிச்சக் காசு தரவேண்டியிருந்தால், அதை நான் ரிக்கெற்றுக்குப் பின்னாலை குறிச்சிருப்பன்" மிகச் சாதாரணமாக கொண்டக்டரிடம் இருந்து வார்த்ததைகள் வந்தன.
கீர்த்தியண்ணனின் முகம் கோபத்தில் இருப்பது பஸ் நிலைய வெளிச்சத்தில் துல்லியமாத் தெரிந்தது.
"நீ பிச்சை எண்டு கேட்டிருந்தால் நான் சும்மாவே தந்திருப்பன்"
கீர்த்தியண்ணனின் காரமான வார்த்தைகளில் கொண்டெக்ரர் ஆடிப் போனார். பயணிகள் வேறு இதைக் கவனித்துக் கொண்டிருந்ததால் தனது தன்மானத்தை இழுத்து விட்டு விட்டானே என்று கூனிக் குறுகிப் போன கொண்டெக்ரர் எதுவுமே செய்ய முடியாமல், கணக்குப் பார்த்து மிகுதிப் பணத்தை எண்ணி கீர்த்தியண்ணனின் கையில் வைத்தார். நாங்கள் பயணிக்கப் போகும் பஸ் வெளிக்கிட ஆயத்தமாக இருந்தது. பஸ்ஸின் யன்னல் ஊடகாக கெதியாக வாங்கோ என்ற பாணியில் அக்கா கையை ஆட்டிக் கூப்பிடுவது தெரிந்தது. இருவரும் ஓடிப்போய் பஸ்ஸில் ஏறிக் கொண்டோம். இருக்கையில் அமரும் போது அம்மா பார்வையால் என்ன என்று வினாவினார்.
"மிச்சக் காசை கொண்டெக்ரரிடம் வாங்கிட்டார்" என்று நான் சொன்னேன்.
"பாத்தியே நான் கடவுளைக் கும்பிட்டதுக்கு பலன் கிடைச்சிருக்கு" என்று அம்மா சொல்லிச் சிரித்தார்.
கீர்த்தியண்ணனைப் பார்த்தேன் பஸ்ஸின் உள்ளே இருந்த மங்கிய வெளிச்சத்திலும் அவர் மகிழ்ச்சியாக இருப்பது நன்றாகத் தெரிந்தது.