Sunday, May 23, 2010

ஓடி ஓடி உழைக்கணும்


பத்து பத்தரையெண்டால் போதும் பருத்தித்துறை நகரம் களைகட்டிவிடும். மக்கள் பொருட்களை வாங்க பக்கத்து கிராமங்கள் நகரங்களில் இருந்து வரத்தொடங்கி விடுவார்கள்.
தட்டிவான் வைத்திருப்பவர்கள், வியாபாரிகளின் பொருட்களை இறக்குவதும், ஏற்றுவதுமாக அவசரம் காட்டுவார்கள். ஓரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் தொழில் பார்க்க வேண்டும். ஒரு மணிக்குப் பிறகென்றால், வெளியூர் வியாபாரிகள் நகரத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். பிறகு தேடுவாரற்று தட்டிவானுகள் நிற்கும்.

750 இலக்க இ.போ.ச. பஸ் புறப்படுவதுக்கு முன்னால் தாங்கள் வெளிக்கிட வேண்டுமென்று மொறிஸ்வானுகள் கத்திக்கொண்டிருக்கும்.

"யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணம் ..... யாழ்ப்பாணம் ஏறு .. வெளிக்கிடப் போகுது...... நெல்லியடி.. யாழ்ப்பாணம் ஏறு... "

இந்த அல்லோலகல்லோலப் படும் நேரம்தான் எனது கடைக்கு எதிராக இருந்த இலங்கை வங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகமாக காசோலை கொடுத்து வாங்கிப் போடுவோம்.
அனேகமாக ஒருமாதம் தவணை கொடுத்துத்தான் பொருட்கள் வாங்குவோம். பிறகு அவர்கள் தங்கள் வங்கியில் காசோலையைப் போடும்போது இங்கே எங்களது வங்கியில் பணத்தைப் போட்டுவிடுவோம். ஓரு மணிவரை வங்கி வெளியாருக்காகத் திறந்திருக்கும். வங்கியில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்ததால், எவ்வளவு தொகைக்கு அன்றைய திகதிக்கு நான் கொடுத்திருந்த காசோலை வந்திருக்கிறது, வங்கியில் இருப்பு எவ்வளவு? இன்னும் எவ்வளவு பணம் போட வேண்டுமென்ற விபரங்கள் எனக்குக் கிடைத்துவிடும். ஆனாலும் என்ன ஒரு மணிக்குள் பணத்தை வங்கியில் இடவேண்டும். இல்லையென்றால் லண்டனில் உள்ள எம்மவர் சொல்வது மாதிரி cheque துள்ளி விடும்.
நேற்றும் 25.000/= ரூபாவிற்கு காசோலை வந்திருந்தது. பணம் இல்லாததால் போடவில்லை Bank manager உடன் கதைத்து இன்று போடுவதாகச் சொல்லியிருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

இன்று உள்ள பிரச்சினை என்னவென்றால் இன்றும் ஏதாவது காசோலை வரப் போகிறது. அதுக்கும் சேர்த்து காசு வேண்டும். கடைக்குள் பார்த்தேன். வியாபாரம் களைகட்டியிருந்தது. பார்த்திபன் ரொம்ப busy ஆக வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பிடி இப்படி பார்த்தாலும் மதியத்துக்கு முன்னால் வியாபாரம் இரண்டைத் தாண்டாது. மிகுதிக்கு என்ன செய்வது...?

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது கடைக்குள் ஆட்கள் குறைவாக இருந்தனர். எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு உள்ளே போனேன். நான் எதற்காக உள்ளே வருகிறேனென்று பார்த்திபனுக்குத் தெரியும்.

"ரண்டு சேந்திருக்கு.... சில்லறை காசுக்குக் கீழை மடிச்சு வைச்சிருக்கிறன்... "

இரண்டை வைச்சு என்ன செய்யிறது..? யோசனையுடன் நிமிர்ந்து வெளியில் பார்த்தேன். நகரம் வழக்கத்துக்கு மாறாக வேறுவிதமான முறையில் அல்லோலகல்லப் பட்டுக் கொண்டிருந்தது.

தட்டிவான்களை காணவில்லை.

மொறிஸ்வான்கள் அதிவேகமாக ஓடத்தொடங்கியிருந்தன. இல்லை பறந்தன என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

என்னாச்சு..ஏன் இந்த ரகளை.?
ஓடு..ஓடு என்ற சத்தங்கள் மட்டும்தான்.
நானும் பார்த்திபனும் கடைக்கு வெனியில் வந்து நின்று பார்த்தோம். என்ன ஏது என்று புரியவில்லை.

நகரத்துக்கு என்னாச்சு...?

'அண்ணை கடையைப் பூட்டுங்கோ.. பெடியள் bank அடிக்கிறாங்கள்... „

பார்த்திபன் பொருளின் நல்ல கவனம். கடைக்கு வெளியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் விபரம் அறிந்து ஆமியோ, பொலிசோ வரப்போகுது.
எங்களுக்குத் தெரிந்தவர்களும் பொருட்களை உள்ளே வைக்க எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

பார்த்திபனோ அதை அங்கை வைக்காதை இதை இஞ்சை வைக்காதை.. அது உடைஞ்சு போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னதை யாரும் காதில் வாங்கிக் கொள்ள இல்லை.

ஆச்சு.. கடை பூட்டியாச்சு.
இப்பொழுது நாங்களும் ஓடத் தொடங்கினோம். பார்த்திபன் என்னைவிடப் பருமனானவன். ஆனால் எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். வியாபாரம் செய்து வந்த பணத்தையெல்லாம் ஒரு பையில் போட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
அப்பாடா இண்டைக்கு bank க்கு காசு போடத் தேவையில்லை. bank அடிச்சபடியால் கொஞ்ச நாளைக்கு bank திறக்காது. bank க்கு காசுபோட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. எனக்குள் சந்தோசப் பட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்திபனை மட்டும் முந்த முடியாமலிருந்தது.
திடீரென வேட்டுக்கள் சத்தம்.
பார்த்திபன் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவனது ஓட்டம் இன்னும் அதிகரித்தது போல இருந்தது. திடீரென அவனது காலில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவனுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த என்னால் அதைக் காணமுடிந்தது. அவனது ஓட்டமும் குறைந்து.. நின்றுவிட்டான்.

ரவையொன்று அவனது காலை பதம் பார்த்து விட்டிருந்தது.
இதுக்குத்தானே இவ்வளவு வேகமாக ஓடினனீயென்று கேக்க வாய் வந்தது. ஆனால் கேக்கவில்லை.
பிறகு பார்த்திபனை ஊரில் உள்ள வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்த்தது.. அன்று மாலையில் ஆமிவந்து காயப் பட்டவர்களை வைத்தியசாலையில் தேடியபோது, பயத்தில் முழுசிக் கொண்டிருந்த பார்த்திபனை சந்தேகத்தின் நிமித்தம் பிடித்துக் கொண்டு பலாலி முகாமிற்குக் கொண்டு சென்றதெல்லாம் வேறு கதை.

Sunday, May 09, 2010

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்


'உங்களுக்கு திருமணமாச்சா?'

' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றே பதில் சொல்வேன்'

மன்மதலீலை படத்தில் வரும் இந்த உரையாடல் அப்போ நல்ல பிரபல்யம்.

எனது வியாபார நிலையத்தில் எப்பொழுதும் வியாபாரம் ஓகோ என்று இருக்கும்.
எனது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் கலா ஒருநாள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுத் துலைத்துவிட்டாள்.

'உங்களுக்கு திருமணமாச்சா?'

நானும் மன்மதலீலை கமல் பாணியில்,
' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றெ பதில் சொல்வேன்'
என்று அவளிடம் சொல்லி வைத்தேன்.

இப்பொழுதெல்லாம் கலா கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்க வருவாள். வரும்போது தனக்கு மட்டுமல்லாமல் அயலவர்களுக்கு நண்பர்களுக்கென்று எல்லோருக்கும் சேர்த்து பொருட்கள் வாங்கிப் போவாள்.
வியாபார நிலையத்தில் கூட்டம் அதிகமானால், தான்தான் நிலையத்தின் உரிமையாளர் போல் வந்திருப்பவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். இதனால் அங்கு வேலை செய்யும் எல்லோருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று.

ஒரு திருமணவிழாவிற்குப் போக வேண்டும். எனது மனைவியை மகனை அழைத்துக் கொண்டு கடைக்கு வரச் சொல்லியிருந்தேன். அங்கிருந்து குடும்பமாக திருமண விழாவிற்குப் போவதாக தீர்மானித்திருந்தோம். சொன்ன நேரத்துக்கு மனைவி மகனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். எனது வேலைகள் முடிந்தபாடில்லை. வங்கியில் அன்று பணம் போடுவதுதான் இறுதி வேலையாக இருந்தது. கடையில் அன்று பார்த்து கூட்டம் அதிகம். ஆகவே நானே பணத்தை வங்கியில் போடுவது எனத் தீர்மானித்து பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு ஓடினேன்.

வங்கியிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது போல் இருந்தது. வரிசையில் நின்று ஒருவாறாக பணத்தை கணக்கில் வரவு செய்து கொண்டேன்.
அப்பாடா ஒருவழியாக வேலை முடிந்தது. இனி திருமண விழாவிற்குப் போகலாமென்று நினைத்துக் கொண்டு கடைக்;கு வந்தால், எனது மனைவியின் முகம் மாறியிருந்தது. நேரம் போனதால் வந்த எரிச்சலாக்கும் என நினைத்துக் கொண்டேன்.

'இந்தப் பொம்பிளைகளே இப்பிடித்தான் புருசன் படுற பாடு இவையளுக்கு எங்கே தெரியப் போகிறது?'
மனதுக்குள் சபித்துக் கொண்டேன்.

'வாங்கோ'

அட யாரது எனது நிலையத்துக்குள்ளே என்னையே வரவேற்பது? ஆச்சரியத்துடன் உள்ளே நோட்டம் விட்டால்.. அங்கே கலா.

'அப்ப உங்களுக்கு இன்னும் கலியாணமே ஆகேல்லை...? '

'இந்தக் கேள்விக்கு எப்பவுமே ... ' வந்த வார்த்தை விபரீதத்தை அறிந்து அப்பிடியே நின்று விட்டது.

சிலவினாடி மௌனமாக நிற்க வேண்டிய கட்டம். அப்படியே நின்றேன். என்னைக் கடந்து கலா செல்வது தெரிந்தது.

அன்று பார்த்த கலாவை நான் இதுவரை மீண்டும் சந்திக்கவேயில்லை.


அதுக்குப் பிறகு எப்பிடி எனது மனைவியை சமாதானப் படுத்தினேன் என்று நான் இங்கே எழுத விரும்பவில்லை.

அதன்பிறகு யாரும் கேட்காமலேயே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
„எனக்கு கலியாணம் எப்போவா ஆச்சு. மூன்று பிள்ளைகள் இருக்கினம்' என்று

Sunday, May 02, 2010

மெல்லப் போ மெல்லப் போ


எனக்கு அப்பொழுது ஒன்பது வயது. எனது அக்காவுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நெல்லியடி லக்சுமி தியேட்டரில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு அந்தப் படம் பார்க்க ஆசை. ஆனால் யார் கூட்டிப் போவது? அம்மாவிடம் கேட்டால் என்னாகும் என்று அக்காவுக்குத் தெரியும். மெதுவாக எனது காதுக்குள் போட்டு வைத்தார். „சிவாஜி நடிச்ச கர்ணன் படம் ஓடுதாம். நல்ல படமாம். பள்ளிக் கூடத்திலை பிள்ளைகள் கதைச்சினம். உனக்கு பார்க்க ஆசையில்லையே?' எனக்குள் படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு, அக்கா அதில் குளிர் காயலாம் எனக் கணக்குப் போட்டுக் கொண்டாள்.

எப்படி கர்ணன் படத்தைப் பார்க்கலாம் என்று எனக்குள் நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். எந்த வழியில் கணக்குப் போட்டாலும் படம் பார்க்க காசு பிரச்சினையாக இருந்தது. படம் பார்ப்பதற்கான காசை என் அம்மாவிடம் கேட்க விரும்பவில்லை. சிரமங்களுக்கு மத்தியில் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. இதற்குள் சினிமா என்று கேட்டால், „அதொன்றும் இப்ப வேண்டாம் பேசாமல் படி' என்ற பதில்தான் வரும். இந்தப் பதிலை நான் பல தடவைகள் கேட்டு, சலித்துப் போயிருக்கிறேன். அக்காவும் என்னைக் காணும் நேரம் எல்லாம் „கர்ணன் நல்ல படமடா' என்று சொல்லி, படம் பார்க்கும் எனது எண்ணத்துக்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

எனது விளையாட்டுத் தோழன் தேவனின் அண்ணன் பிலிப், லக்சுமி தியேட்டரில் பிலிம் ஒப்பரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சும்மாதான் கேட்டேன். „கர்ணன் நல்ல படமோ' என்று.

„ஏன் பாக்கப் போறியே? வேணுமென்றால் சனிக்கிழமை மெட்னி சோவுக்கு வா. ரிக்கெற் இல்லாமல் உள்ளை விடுறன்' என்றார்.

அதுதானே எனக்கு வேண்டியதாக இருந்தது. „நானும் அக்காவும் வருகிறோம்' என்றேன்.

„சரி வாங்கோ' என்றார்

இந்த விடயத்தை அக்காவிடம் சொன்னேன். அம்மாவிடம் கேட்டுப் பார்ப்போம் என்று சொன்னாள். ஒருவாறு இருவருமாக அம்மாவிடம் படம் பார்க்கும் ஆசையைச் சொன்னோம். எடுத்த எடுப்பிலேயே அம்மாவிடம் இருந்து மறுப்பு வந்தது. பின்னர் கெஞ்சிக் கேட்டதால் „கவனமாகப் போய் வரவேணும்' என்று பல எச்சரிக்கைகள் தந்து அனுமதி தந்தார்.

சனிக்கிழ
மையும் வந்தது. காலை பத்து முப்பதுக்கு மெட்னி சோ ஆரம்பித்து விடும். எனது கையில் பத்து சதம்தான் இருந்தது. அக்காவையும் அழைத்துக் கொண்டு கிராமக் கோட்டடியில் பஸ் எடுத்து, இருவருக்கும் பஸ் கட்டணமாக இருந்த பத்து சதத்தையும் கொடுத்து விட்டு கையில், பையில் சுத்தமாக ஒன்றும் இல்லாமல் நெல்லியடிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போன நேரம் படம் ஆரம்பித்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. ஆனாலும் சொன்ன சொல் தவறாமல் மேல் மாடியில் இருந்து நாங்கள் வருகிறோமா என பிலிப்பண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் கீழே இறங்கி வந்து „என்ன லேற்றா வாறிங்கள்?' எனக் கேட்டபடியே எங்களை முதலாம் வகுப்பில் கொண்டு போய் இருத்தினார். படம் தொடங்கியதில் சிறிய அதிருப்தி இருந்தாலும் சிறிது நேரத்தில் படத்துடன் ஒன்றிப் போனோம். இடைவேளை வந்தது. கடலை, வடை என தியேட்டருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சோடா விற்பவர் சோடாப் போத்தல்களில், சோடா ஓப்னரால் தட்டி சத்தம் எழுப்பி தனது வியாபாரத்தை விமரிசையாக நடத்திக் கொண்டிருந்தார். கூடவே எங்களது எரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒருவாறு இடைவேளை முடிந்து படம் ஆரம்பமானது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்தால் வெப்பக் காற்று முகத்தில் வீசியது. பிலிப் அண்ணனைத் தேடி, நன்றி சொல்லிப் புறப்பட்டோம். பஸ் நிலையம் வந்தோம். பருத்தித்துறைக்குப் போவதற்கு பஸ் நின்றது. ஆனால் கையில் காசுதான் இல்லை. வீடு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. மதிய நேரம். கொளுத்தும் வெயில். பசி வேறு சாப்பிடு என்றது. ஆனாலும் வீடு போய்ச் சேர்வதற்கு ஒரே வழிதான் இருந்தது. அது நடப்பது என்பதே. அக்காவிடம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். „நடப்போம்' என்றாள்.

நடக்க ஆரம்பித்தோம். மாலுசந்தி, மூத்தனார் கோயில், தெருமூடி மடம் எனக் கடந்து மந்திகையை அண்மித்திருந்தோம். அப்பொழுது அக்கா சொன்னாள் „இண்டைக்குத் துலைஞ்சம். அங்கை பார் ரத்தினண்ணை சைக்கிளிலை வாறார். நாங்கள் நடந்து வாறதைக் கண்டிட்டு கீர்த்தியண்ணனிட்டை போய்ச் சொல்லப் போறார்'

ரத்தினண்ணை எங்களைக் கண்டதும் ஆச்சரியமாகப் பார்த்தார். „எங்கை போட்டு வாறீங்கள்?' படம் பார்த்து விட்டு வருவதாகச் சொன்னோம். „ஏன் பஸ் இல்லையே?' „காசை துலைச்சுப் போட்டேன்;' வாயில் இருந்து பொய் பாய்ந்து வந்தது. அக்கா என்னை நிமிர்ந்து பார்த்தாள். 'நல்ல வடிவா பொய் சொல்லுறாய்' என்று அந்தப் பார்வை சொன்னது. 'நல்ல வெயில், நெல்லியடியிலை இருந்து நடந்தே வந்து கொண்டிருக்கிறீங்கள்?' சொல்லிவிட்டு எனது சேட் பொக்கெற்றில் ஐம்பது சதத்தை போட்டு விட்டு, 'மந்திகைச் சந்தியிலை பஸ் வரும் ஏறிப் போங்கோ' என்று சொல்லி விட்டுப் போனார்.

„நெல்லியடிக்குப் போனது, படம் பாத்தது, வெய்யிலுக்குள்ளாலை நடந்து வந்தது, ரத்தினண்ணையிட்டை காசு வாங்கினது எண்டு இண்டைக்கு கீர்த்தியண்ணனிட்டை வேண்டப் போறம்' அக்கா சொல்லிக் கொண்டாள். இதுக்குள் நான் பொய் சொன்னதை நீ போட்டுக் கொடுத்தால் அதுக்கும் இருக்கு என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் ஐம்பது சதத்தை சேட் பொக்கெற்றில் இருந்து கையில் எடுத்துக் கொண்டேன். பட இடைவேளையில் கடலை, வடை விற்று எனக்கு எரிச்சலை உண்டாக்கியவர்கள் நினைவுக்கு வந்தார்கள். அக்காவையும் அழைத்துக் கொண்டு மந்திகை ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்த கடைக்குப் போய் கடலைப் பருப்பு வடை, உழுந்து வடைகளை வாங்கி அக்காவுக்கும் சாப்பிடக் கொடுத்து, நானும் சாப்பிட்டுக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடக்கும் போது ரத்தினண்ணை வருகிறாரா என அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

வீட்டில் அர்ச்சனை நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை ரத்தினண்ணை கீர்த்தியண்ணனுக்கு சொல்லவில்லையோ? அல்லது பாவம் சின்னதுகள் என்று கீர்த்தியண்ணன் பேசாமல் விட்டு விட்டாரோ? தெரியவில்லை.
எது எப்படியோ அக்காவுக்கு கர்ணன் படம் காட்டியாச்சு. நானும் பார்த்தாச்சு.