Thursday, May 20, 2004

மணியக்கா

"மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... "

இந்த வார்த்தைகளுக்கு எங்களிடம் அன்று வேறு பொருளிருந்தது. அதற்குக் காரணமே மணியக்காதான். ஊரில் எல்லோரும் அவவை மணி என்றுதான் அழைப்பார்கள். நாங்கள் சிறியவர்களானதால் மணியக்கா என்று கூப்பிடுவோம். இந்த மணியக்கா இருக்கிறாவே, அவ வாயைத் திறந்தால் பொய்களாகவே உதிரும். அதனால்தான் நாங்கள் மச்சான் இவன் பொய் சொல்லுறான்டா... என்று சொல்வதற்குப் பதிலாக, பொய்க்கு அடைமொழியாக மணியென்று வைத்து, மச்சான் இவன் மணி சொல்லுறான்டா... என்று சொல்லுவோம்.
மணி என்ற இந்த மணியக்காவை இப்பொழுதும் தோசை சாப்பிடும் போது நான் நினைத்துக் கொள்வேன்.

அப்போ எனக்கு அதிக வயதில்லை. ஒன்பது பத்து வயதுதானிருக்கும்.
மணியக்காவும் அவர் கணவர் மாசிலாமணியும் எங்கள் ஊருக்குப் பிழைப்புத் தேடி வந்தவர்கள். மாசிலாமணியண்ணை ஒரு கில்மன் கார் வைத்திருந்தார். காலையிலும் மாலையிலும் பாடசாலைக்கு பிள்ளைகளை காரில் கொண்டு சென்று கூட்டிவருவது அவரது தொழிலாக இருந்தது. இடைப்பட்ட நேரங்களில் வாடகைக்கு அவரது கார் வரும். எங்களது கிராமத்தில் வாடகைக்கான காராக அவரது கார் மட்டுமே இருந்தது. ஆகவே அவர்களது வருமானம் நன்றாகவே இருந்தது.
சில வேளைகளில் இரவு இரண்டாம் காட்சி சினிமாவிற்கு அவரது கார் வாடகைக்குப் போனால் , வீட்டில் மணியக்காவிற்குத் துணையாக நான்தான் அழைக்கப்படுவேன். காரணம் அவர்களுடைய வீட்டுக்கு அடுத்தது எங்களது வீடு.
ஒருநாள் மாசிலாமணியண்ணையின் கார் இரண்டாம் காட்சி சினிமாவிற்கு வாடகைக்குப் போய் விட்டது. மணியக்கா என்னைத் துணைக்கு வந்து இருக்கும்படிக் கேட்டுக் கொண்டா. நான் அவவீட்டிற்குப் போன நேரம் மணியக்கா நல்லெண்ணைத் தோசை, முட்டைத் தோசை, நெய்த் தோசை என விதம் விதமான தோசைகளாகச் சுட்டுச் சாப்பிட்டுக் கொண்டிருந்தா. என்னையும் சாப்பிடும்படிக் கேட்டா ஆனால் எனக்குப் பசியில்லாததால் மறுத்துவிட்டேன்.

அன்று இரவு சிறிது நேரம் படித்துவிட்டு நித்திரையாகிவிட்டேன். இடையில் நித்திரை குழம்பிவிட்டது. மாசிலாமணியண்ணையும் மணியக்காவும் சமையலறையில் கதைக்கும் சத்தம் கேட்டது. தண்ணீர் குடிக்க வேண்டும் போல் தோன்றியதால் எழுந்து சமையல் அறைப் பக்கம் போனேன்.
மாசிலாமணியண்ணையின் குரலில் கடுமை தெரிந்தது.

"உமக்கெல்லோ சொன்னனான். என்னைப் பாத்துக் கொண்டிருக்க வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடுமெண்டு. நான் போற இடத்திலை எங்கையாவது ஒரு தேத்தண்ணிக் கடையிலை ரண்டு வடையச் சாப்பிட்டிட்டு ஒரு பிளேன் ரீயைக் குடிச்சிட்டு இருப்பன்.
நீர் அப்பா விசர் வேலை பாத்துக் கொண்டிருக்கிறீர். சமைச்சு வைச்சிட்டு என்னத்துக்குப் பாத்துக் கொண்டிருக்கிறீர்? நேரத்துக்குச் சாப்பிடுறதுதானே? அது...அந்த.. புருசன் சாப்பிட்டாப்போலைதான் பெண்சாதி சாப்படோணுமெண்டிறதெல்லாம் இஞ்சை வேண்டாம். நேரத்துக்குச் சாப்பிடும் விளங்கிச்சோ.. சமைச்சுப் போட்டு தான் சாப்பிடாமல் புருசனைப் பாத்துக் கொண்டிருக்கிறாவாம் அவ..
எனக்கு வாற கோவத்துக்கு... "

"என்ன இன்னுமொண்டு நெய் விட்டு முறகலாச் சுடட்டே..?"

இந்தக் கட்டத்தில் நான் சமையலறைக்குள் நுளைந்தேன். மாசிலாமணியண்ணை என்னைக் கண்டவுடன் ,

"என்ன தேவன் நித்திரை வரேல்லையே..? தோசை சாப்பிடன்.. வா.. தண்ணியெடுத்து வாயைக் கொப்புளிச்சிட்டு வா தோசை சாப்படலாம். "என்றார்.

எனக்கு அந்த நேரம் சாப்பிட வேண்டும் போல் தோன்றவில்லை. வேண்டாமென்று சொல்லிவிட்டு தண்ணீர் எடுத்துக் குடித்தேன்.
மாசிலாமணியண்ணை என்னைப் பார்த்துச் சொன்னார்.

"தேவன் பாத்தியே மணியக்காவை. தோசைக்கு மாவைக் கரைச்சு வைச்சிட்டு தோசையைச் சுட்டுச் சாப்பிடாமல் நான் வருமட்டும் பாத்துக் கொண்டிருக்கிறாவாம்.. நான் சாமத்திலை வருவன் . ஏதாவது பெரிய ஓட்டம் வந்தால் அடுத்தநாள்தான் வருவன். அப்ப நான் வருமட்டும் சாப்பிடாமலிருக்கிறதே? இவவை என்ன செய்யலாம் சொல்லு. "

நான் திரும்பி மணியக்காவைப் பார்த்தேன். அவவின் தலை ஓரளவு குனிந்திருந்தது. விழிமட்டும் மேலெழுந்து என்னைப் பார்த்துக் கொண்டிருந்தது. வாய்க்குள் வைத்த தோசையில் பாதி வெளியில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது.
அவவின் பார்வை,
டேய்... நான் ஏற்கனவே சாப்பிட்டதை இப்ப சொன்னியோ... பிறகு என்னட்டை உதை வேண்டுவாய்..
என்று சொல்வதைப் போல் இருந்தது.
கண்ணைக் கசக்கிப் போட்டு மீண்டும் அவவை பார்த்தேன்.

டேய் ... நான் ஏற்கனவே சாப்பிட்டதைச் சொல்லாதையடா.. மனுசன் ஏமாந்து போடும். பாவம்.
என்று அவவின் பார்வை கெஞ்சுவது போல் இருந்தது.
நான் எதுவுமே பேசவில்லை . தண்ணியைக் குடித்துவிட்டு சமையலறையில் இருந்து வெளியே வந்தேன்.

"தேவனுக்கு நல்ல நித்திரைக் கலக்கம் போலை... போய் படுக்கட்டும்.."
மாசிலாமணியண்ணை சொல்வது காதில் விழுந்தது.
மணியக்காவின் பதிபக்தியை மெச்சியபடியே அந்த சாமத்திலும் மாசிலாமணியண்ணை தோசை சுட்டுக் கொண்டிருந்தார்.

அடுத்தநாள் எங்கள் வட்டத்துக்குள் நான் சொல்லக் கொண்டேன்.
"டேய்.. நேற்று ராத்திரி மணியக்கா பெரிய்ய்ய்யயய மணி சொன்னவவடா"

இன்றுகூட எனது கோப்பையில் சுடச்சுட தோசை வந்து விழும்போதெல்லாம் மணியக்கா நினைவில் வந்து போவா.

முல்லை