Saturday, July 22, 2006

பெரியக்கா

வருடத்தில்ஏதாவது ஒரு முழுநிலவு நாளில் நாங்கள் குடும்பமாக மண்டலாய்ப் பிள்ளையார் கோவிலில் இருப்போம்.

ஈச்சை மரங்கள், பாலை மரங்கள் என பலவித பழ மரங்களும் செடிகளும், புதர்களும் மண்டியிருக்கும் காடு. அதன் நடுவே பிள்ளையார் கோவில். மற்றைய கோவில்களைப் போலல்லாது இங்கு பிள்ளையார் மேற்கே பார்த்தபடி அமர்ந்திருக்கிறார். கோவிலின் கிழக்குப் பகுதியிலும், மேற்குப் பகுதியிலும் தங்குவதற்காக மண்டபங்கள் இருக்கின்றன. நாங்கள் அங்கே போனால் கிழக்குப் புறமாக உள்ள மண்டபத்தில்தான் தங்குவோம்.

எனது பாட்டனார் காலத்தில் இருந்தே மண்டலாய்க்குப் போய் ஒரு நாள் தங்கியிருந்து மண்டகப்படி செய்து அன்னதானம் வழங்கும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது. இரவில்தான் பூசை நடக்கும். காடுகளில் பகல் முழுக்கத் தேடி எடுத்து வந்த காய்ந்த மரங்களை மண்டபத்துக்கு முன்னால் போட்டு எரித்து, அதில் குளிர் காய்ந்த படியே முழுநிலவில் பூசைச் சோற்றை அம்மா குழைத்துத் தர கைகளில் வாங்கி சாப்பிடும் போது இருக்கும் ருசியே தனி.

எனது தந்தையார் இறந்த பின்னர் எனது பெரியக்கா அந்தப் பணியைத் தொடர்ந்தார். ஒரு முறை நான் எனது நண்பர்கள் இருவரை எங்களுடன் அழைத்துச் சென்றிருந்தேன். பகல் முழுக்கக் கூதுகலம்தான். மரத்தில் ஏறி இளநீர் பறிப்பது, குளத்தில் விழுந்து கும்மாளம் அடிப்பது என எங்கள் பொழுதுகள் போய்க் கொண்டிருந்தன.

வெய்யில் ஆரம்பித்து விட்டால் வெளியே மணலில் கால் வைக்க முடியாது. நாங்கள் குளத்தில் கும்மாளம் அடித்து விட்டு வெளியே வரும் போது சூரியன் உச்சிக்கு வந்து விட்டான். சுடும் மணல்களுக்குள் கால்கள் புதைய, மணலின் சூடு தாளாமல் துள்ளி ஓடி மண்டபத்துக்குள் நுளைந்தோம். அங்கே பெரியவர்கள் மண்டகப்படிக்கான அலுவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வழக்கமாக நாங்கள் மண்டலாய்க்குப் போனால் நாங்கள் தங்கும் மண்டபத்தில் எங்களது பெயர்கள் வந்த திகதி போன்றவற்றை விலாவாரியாக கரித்துண்டுகளினால் எழுதி வைப்போம். நண்பர்களுடன் மண்டபத்தில் இருந்து கதைத்துக் கொண்டிருக்கும் போது எனக்கு அந்த நினைவு வர, இரவில் மரங்கள் போட்டு நெருப்பெரிக்கும் இடத்தில் இருக்கும் கரித்துண்டுகளைப் பொறுக்கி எடுத்து வந்து எல்லோரது பெயர்களையும் பெரிதாக எழுதி வைத்தேன். நண்பர்களும் தங்கள் பங்குக்குக்கு தங்களுக்குத் தெரிந்தவர்களது பெயர்களை எழுதி வைத்தார்கள்.

மதியம் ஈச்சம் பழங்கள் பாலைப் பழங்களைச் சேகரித்து விட்டு மண்டபத்துக்கு களைத்துப் போய் வந்தோம். பெரியவர்கள் மண்டகப்படிக்கான வேலைகளில் இன்னமும் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். வெளியே வெய்யிலில் சுற்றிவிட்டு வந்ததால் மண்டபத்தினுள்ளே இருட்டு மாதிரியிருந்தது. நான் சுவரில் எழுதி வைத்த பெயர்களுக்குக்குக் கீழே பளிச்சென்று பெரிய எழுத்தில் ஏதோ தெரிந்தது. எழுந்து நின்று வாசித்தேன்.

„போக்கற்றுப் போறவங்களே எதுக்கடா சுவரிலை எழுதுறீங்கள்?“ என அந்த வாசகம் கோபமாகவும் ஏளனமாகவும் கேட்டது. இதை வாசித்த எனது நண்பர்களுக்கு குற்ற உணர்வு வந்து விட்டது. அவர்கள் என்னைக் கடிந்து கொண்டார்கள். யார் அதை எழுதியதென்பதை ஒருவரும் எனக்குச் சொல்லவில்லை. கோபத்தில் ஒரு மூலையில் ஒதுங்கிக் கொண்டேன். அப்படியே சீமெந்து நிலத்தில் உறங்கிப் போனேன். குளிர்ந்த கரங்கள் என்னைத் தட்டி எழுப்பியது. கையில் தேனீருடன் பெரியக்கா.
„தேத்தண்ணியைக் குடி மேனை. „ பெரியக்கா என்னை வாஞ்சையுடன் அழைக்கும் போது மேனை என்றுதான் விழிப்பார். தேனீரை வாங்கிக் கொண்டேன். மெதுவாகச் சொன்னார்.

„நாங்கள் இஞ்சை வாறதுக்கு முதல், ஆக்களை அனுப்பி வெள்ளை அடிப்பிச்சனாங்கள். நீ இப்ப அதிலை கரியாலை எழுதிப் போட்டாய். இதைப் பாத்திட்டு இனி வாறவையளும் எழுதுவினம். அதுக்குத்தான் அப்படி எழுதினனான். சரி இப்ப என்ன இன்னுமொருக்கால் வெள்ளையடிச்சால் போச்சு... நீ போய் உன்ரை பெடியங்களோடை விளையாடு. போ..“ என்று அன்பாகச் சொல்லிவிட்டுப் போனா.

ஞாயிறு இரவு படுக்கைக்குப் போகத் தாமதமாகி விட்டது. மறக்காமல் நாலு மணிக்கு அலாரம் வைத்து விட்டுப் படுத்தேன். அலாரம் அடித்தது. இருட்டில் தடவி அலாரத்தை நிறுத்தினேன். விடாமல் மணியடித்தது. லைற்றைப் போட்டு விட்டுப் பார்த்தேன் நேரம் மூன்று மணியைக் காட்டியது. நாலுக்குத்தானே அலாரம் வைத்தேன். நித்திரை மயக்கத்தில் மீண்டும் அலாரத்தை நிறுத்த முனைந்த போதுதான் விளங்கியது. அடித்துக் கொண்டிருப்பது தொலைபேசி மணி என்று. இந்த நேரத்தில் யார்? இப்படியான நேரத்தில் வரும் செய்தி நல்லதாக இருக்காதே. பயத்துடன் தொலைபேசியை எடுத்தேன்

"ஹலோ" "நான் மதி"

"என்ன இந்த நேரத்திலை"

"உங்கடை பெரியக்கா செத்துப் போனா"

"என்ன..?"

"ஹார்ட் அற்றாக்............... நான் மற்றையவையளுக்கும் தகவல் சொல்லோணும்."

"ஓகே..."

அப்படியே படுக்கையில் விழித்திருந்தேன். அலாரத்தை முற்றாக நிறுத்தி விட்டேன். இனி நித்திரை இல்லைத்தானே.

பெரியக்கா...., சுவருக்கு இன்னொருக்கால் வெள்ளை அடிச்சால் போச்சு. ஆனால் மனசுக்கு...?