பரீட்சை மண்டபத்தில், தங்கள் வீடுகளுக்கு அருகில் இருந்த கோயில்களின் கடவுள்களின் பெயர்களை சிலர் உரத்துச் சொல்லி பரீட்சையில் சித்தியடைய வைக்கும் படி வேண்டிக் கொண்டிருந்தார்கள். எனது கைக்குக் கிடைத்த பரீட்சை வினாத்தாளைப் பார்த்ததும் எனக்கு மனது முழுதும் குதூகலித்தது. நான் எதிர்பார்த்ததை விட வினாக்கள் சுலபமாக இருந்தன. கட்டுரைக்கு பல விடயங்கள் கேட்டிருந்தார்கள் அதில் „நீர் கண்ட கனவு பற்றி எழுதவும்' என்று ஒன்று எனது கண்ணில் பட்டது. உடனடியாக எனக்கு நினைவுக்கு வந்தது, எனது அண்ணன் நித்தியகீர்த்தி எழுதிய கட்டுரை ஒன்று. ஹாட்லிக் கல்லூரி ஆண்டு மலர் ஒன்றில் நான் கண்ட பயங்கரக் கனவு என்ற தலைப்பில் அவர் அதை எழுதியிருந்தார். வகுப்பறையில் பாடம் நடக்கும் போது தூங்கிய மாணவன் கண்ட கனவு பற்றிய கட்டுரை அது. அந்தக் கட்டுரையை நான் பலமுறை வாசித்திருந்ததால் அது எனக்கு மனப் பாடமாகவே இருந்தது. ஆகவே அந்தக் கட்டுரையை கிளிப்பிள்ளை போல் அப்படியே எனக்குத் தரப்பட்ட தாளில் எழுதத் தொடங்கினேன்.எல்லாக் கேள்விகளுக்கும் பதில் எழுதிய பின்னர் மனதில் ஒரு திருப்தி ஏற்பட்டது. கட்டுரையை எழுதி முடித்து விட்டு மற்றவர்கள் என்ன செய்கிறார்கள் என ஒரு தரம் அந்த மண்டபத்தை நோட்டம் விட்டேன். கூப்பிட்ட கடவுள்கள் உதவிக்கு வராததால் சிலர் விழி பிதுங்கி நின்றதைப் புரிந்து கொண்டேன். சிலர் மும்முரமாக எழுதிக் கொண்டிருந்தனர். பரீட்சை எழுதுவதற்கான நேரம் முடிந்தது என அறிவிக்கப் பட்ட பின்னர் எழுதியவற்றை கொடுத்து விட்டு மண்டபத்தை விட்டு வெளியே வந்தேன்.
பாடசாலைக்கு என்னுடன் கூட வரும் தணிகாசலத்தை காணவில்லை. அவன் முன்னமே போய் விட்டதாக சக மாணவர்கள் சொன்னார்கள். பரீட்சையில் அவனுக்கு திருப்தி இல்லை என்பது புரிந்தது. வழமையாக இருவரும் சேர்ந்துதான் செல்வோம். இன்று தனியாகப் போக வேண்டி இருந்தது. மற்றவர்களிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு அன்று வழமைக்கு மாறாக ஒழுங்கை ஊடாக எனது சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன். சைக்கிளில் நான் அமர்ந்து இருந்து மிதித்ததை விட எழுந்திருந்து மிதித்ததுதான் அதிகம் அந்தளவுக்கு மனம் களிப்பில் இருந்தது. அறுபதுபாகைக் கிணற்றடிக்கு முன்பாக நான் வந்து கொண்டிருந்த ஒழுங்கையில் இடது பக்கமாக ஒரு ஒழுங்கை பிரிந்து செல்கிறது. அது ஒரு ஏற்றமான பகுதி. அதில் சைக்கிள் ஓட முடியாது உருட்டிக் கொண்டுதான் செல்ல வேண்டும். அதில் இரண்டாவது வீடு என்னுடன் படிக்கும் சிவராஜாவின் வீடு. நான் வேகமாக சைக்கிளில் வந்த பொழுது சிவராஜாவின் தம்பி அவனுக்கு நாலு வயதிருக்கும் என்று நினைக்கிறேன், அந்த ஏற்றமான பகுதியில் இருந்து ஓடி வந்திருக்கிறான். அலம்பலினால் கட்டப் பட்ட வேலி அவன் வந்த பாதையை மறைத்திருந்தது. நானும் எதிர்பார்க்கவில்லை. சைக்கிளால் தூக்கி எறியப் பட்ட பொழுதுதான் விபரீதம் விளங்கியது. ஒழுங்கை மண்ணில் அதிர்ச்சியில் விழுந்திருந்த அவனை ஓடிப் போய்த் தூக்கினேன் அவனது பிஞ்சுக் கால் வில் போல் வளைந்திருந்தது. பக்கத்தில் இருந்த அமரசிங்கமண்ணன் கடைக்குள் அவனைத் தூக்கிக் கொண்டு ஓடினேன். பரீட்சை முடிந்து சிவராஜா வந்து கொண்டிருந்தான். எனது கையில் அவனது தம்பியைத் தூக்கி வைத்திருப்பதையும் எனது சைக்கிள் ஒழுங்கையில் விழுந்து கிடப்பதையும் கண்டவுடன் அவனுக்கு விபத்து பற்றித் தெரிந்திருக்கும். சிவராஜாவும் அமரசிங்கம் கடைக்குள் ஓடி வந்தான். மெதுவாகக் கூட்டம் கூடத் தொடங்கியது. சிவராஜாவின் தாய் விபரம் அறிந்து தலையில் அடித்துக் கொண்டு ஓடி வந்தார். சிவராஜா என்னை மெதுவாக அழைத்து, „மச்சான் நீ போ மச்சான். இங்கை நிண்டி எண்டால் பிரச்சினையாகிப் போடும். நான் பாக்கிறன். நீ முதலிலை போ' என்றான். அமரசிங்கம் அண்ணனும் அதையே சொன்னார். சிவராஜா விழுந்திருந்த எனது சைக்கிளை எடுத்து கோணலாகிப் போயிருந்த ஹாண்டிலை நிமிர்த்தி என்னிடம் தந்து „மாறு மச்சான் நான் பாக்கிறன்' என்று சொல்லி என்னை வலுக் கட்டாயமாக அனுப்பி வைத்தான்.வீட்டுக்குப் போக மனம் ஒப்பவில்லை. தனியாளாக நிற்பது சிரமமாக இருந்தது. யாராவது பக்கத்தில் நின்று ஆறுதல் தந்தால் நன்றாக இருக்கும் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு ஒழுங்கையால் வலது பக்கமாகத் திரும்பி ஓராம்கட்டையில் பிரதான வீதியை வந்து சேர்ந்தேன். என்னுடன் படிக்கும் வைத்திலிங்கம், மகேசன் இருவரும் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார்கள். இருவருக்கும் சொந்த இடம் நெல்லியடி. அவர்களது சைக்கிள் ஓட்டத்துடன் நானும் இணைந்து கொண்டேன். அன்றைய பரீட்சையைப் பற்றியே கதைத்துக் கொண்டு வந்தார்கள். நானும் அவர்கள் கேட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்லிக் கொண்டே சைக்கிளை ஓடிக் கொண்டிருந்தேன். அடுத்தநாள் நடைபெற இருக்கும் இந்துசமயப் பரீட்சை பற்றிக் கதை வந்த பொழுது. தேவாரம், திருவாசகம், திருவருட்பயன் என்று பலவற்றைப் பற்றிக் கதைத்துக் கொண்டு மூவரும் சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தோம். கிராமக்கோடு, சாரையடி, மந்திகை, மாலிசந்தி என்ற இடங்களைத் தாண்டும் பொழுது நான் அதைப்பற்றி எண்ணாமல் அவர்களுடன் கதைத்துக் கொண்டு சைக்கிள் ஓடிக் கொண்டிருந்தேன்.
நெல்லியடிச் சந்தி மகேசனும், வைத்திலிங்கமும் பிரிய வேண்டிய இடம். „மச்சான் வீட்டை போய்ப் படிக்கத் தேவை இல்லை சந்தேகம் எல்லாம் தீர்த்துப் போட்டாய். நாளைக்கு வெள்ளன வா ஏதும் தெரியாட்டில் சொல்லித்தா' என்று வைத்திலிங்கம் சொல்லும் போதுதான் மீண்டும் நான் தனியாக நிற்பதை உணர்ந்தேன். இருவரும் எனக்கு நன்றி சொல்லிப் பிரிந்த பொழுது சிவராஜாவின் தம்பியின் விபத்து வந்து மனதை வருத்தியது. மனது மிகவும் சஞ்சலமாக இருந்தது. என்ன செய்வது என்று யோசித்துக் கொண்டு நிமிர்ந்த என் கண்ணில் பட்டது லக்சுமி தியேட்டரில் இருந்த சினிமா விளம்பரப் பலகை. ரவிச்சந்திரன், கே.ஆர். விஜயா, நாகேஸ் நடித்த முக்தா பிலிம்ஸின் நினைவில் நின்றவள் முழுநீழ நகைச்சுவைச் சித்திரம் என்று அதில் போடப்பட்டிருந்தது. சட்டைப் பையில் கை விட்டுப் பார்த்தேன். பரீட்சை முடிய கன்ரீனில் சாப்பிடுவதற்கு அம்மா தந்த பணம் இருந்தது. நாளைக்குப் பரீட்சை. ஆனாலும் எனக்கு ஒரு ஆறுதல் தேவைப்பட்டது. சைக்கிளைக் கொண்டு போய் அதை நிறுத்தும் இடத்தில் பத்து சதம் கட்டணம் கொடுத்து நிறுத்தி விட்டு, ரிக்கெற் வாங்கிக் கொண்டு படம் பார்க்க திரையரங்குக்குள் நுளைந்தேன்.
படம் முடிந்து வெளியே வந்ததும் அம்மாவின் நினைவு வந்தது. என்னை எல்லா இடமும் தேடி இருப்பார். என்னுடன் வரும் தணிகாசலத்துக்குக் கூட நான் எங்கே போனேன் என்று தெரியாது. அம்மாவை தவிக்க விட்டு விட்டேனோ என்ற குற்ற உணர்வு ஒட்டிக் கொண்டது. வேகமாகச் சைக்கிளை மிதிக்க ஆரம்பித்தேன்.கிராமக்கோட்டுச் சந்தியில் வலது பக்கம் திரும்பியதும் „தம்பி' என்ற வார்த்தை என்னைத் திரும்பிப் பார்க்க வைத்தது. தாமோதரம் அண்ணையின் தேனீர்க்கடை வாசலில் அண்ணனது நண்பன் துரை கையைக் கட்டியபடி நின்று கொண்டிருந்தார். அவரது பெயர் மரியநேசன். ஆனாலும் அவர் எங்கள் ஊருக்குத் துரை.
„எங்கை போட்டு வாறாய்?' சைக்கிளால் நான் இறங்க என்னுடன் சேர்ந்து அவரும் நடந்தார்.
„படத்துக்கு'
„நாளைக்குச் சோதனை எல்லோ?'
„ம்'
„கொம்மா உன்னைத் தேடிக் கொண்டிருக்கிறா. சொல்லிப் போட்டுப் போயிருக்கலாம்தானே? „
நான் பதில் சொல்லவில்லை.
நாங்கள் சென்று கொண்டிருந்த வீதியின் முடக்கைக் கடந்த உடன் அம்மா எங்களது வீட்டின் வாசலில் நிற்பது தெரிந்தது. அம்மாவைத் தாண்டி முதலியாருடைய வாசிகசாலையடியில் சிலர் சைக்கிளுடன் நிற்பதும் தெரிந்தது. என்னைக் கண்டதும் அவர்கள் சைக்கிளில் ஏறி என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார்கள். அதுவரை கேள்விகள் கேட்டுக் கொண்டு வந்த துரையண்ணன் தனது சாரத்தை மடித்துக் கட்டினார்.
„நீ ஒண்டுக்கும் பயப்படாதை நான் இருக்கிறன்' என்றார். பிரச்சனையின் தாக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டேன். வந்தவர்கள் என்னைச் சுற்றிக் கொண்டார்கள். அதில் ஒருவனைப் பிடித்து துரையண்ணன் சைக்கிளோடு தள்ளிவிட மற்றையவர்கள் சற்று விலகிக் கொண்டார்கள்.
„தனித்தனிய வரப்போறீங்களோ சேர்ந்து வரப் போறீங்களோ?' துரையண்ணனின் கர்ச்சனைக்குப் பயந்து சிறு எலிகளெல்லாம் வெகுண்டோடின.
„வந்தவையளைத் தெரியுமோ?' என்று கேட்டார். ஓம் அறுபதுபாகைக் கிணத்தடிப் பெடியள் என்றேன். துரையண்ணன் தள்ளியதால் விழுந்திருந்தவன் சைக்கிளை எடுத்துக் கொண்டு கடைசியாளாக ஓட வெளிக்கிட துரையண்ணன் எட்டி அவனைப் பிடித்தார்.
„பிரச்சனையை இதோடை விட்டிடவேணும். பிறகு ஏதாவது ஆட்டம் காட்டினால் வீடு புகுந்து அடிப்பன். ஏதாவது கதைக்கோணும் எண்டால் பெரியாக்களை வரச் சொல்லு. விளங்கிச்சோ' அவனை எச்சரித்து அனுப்பி விட்டு, „இனிமேல் இப்பிடி ஏதாவது பிரச்சினை எண்டால் என்னட்டை வந்து சொல்லோணும். பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது' என்று அறிவுரை சொன்னபடி என்னை அழைத்து வந்து அம்மாவிடம் ஒப்படைத்தார்.
„எங்கையடா போனனீ? „ அம்மாவின் கேள்வியில் கவலையும் கோபமும் தெளித்தது.
„நாளைக்கு அவனுக்கு சோதணை போய்ப் படிக்கட்டும்' என்று அம்மாவிடம் துரையண்ணன் சொல்ல மெதுவாக நான் வீட்டுக்குள் சென்றேன்.அடுத்தநாள் நான் பரீட்சைக்குச் செல்ல அம்மா யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டிருந்த சிவாராஜாவின் தம்பியைப் போய்ப் பார்த்து, அவனது தாயாருக்கு ஆறுதல் சொல்லிவிட்டு வந்தார். நான் பரீட்சை மண்டபத்தில் சிவராஜாவைக் கண்டு வருத்தம் தெரிவித்தேன். அவன் நட்புடன் சொன்னான். „அது மச்சான் விபத்து. ஆரிலையும் பிழை சொல்லேலாது. நேற்று உன்னை கொஞ்சப் போர் தேடினவையள் என்று அறிஞ்சன் அவையளுக்கும் நான் சொல்லிப் போட்டன். இந்த விசயத்திலை தலையிடக் கூடாதெண்டு. நீ கவலைப்படாதை மச்சான் சோதனையை எழுது' அவனது பேச்சு எனக்கு ஆறுதலாக இருந்தது. ஆனாலும் வைத்தியசாலையில் அது விபத்து எனப் பதியப் பட்டதால், பொலிஸ் நிலையத்தில் ஒரு வாக்குமூலம் கொடுக்க வேண்டி இருந்தது. அம்மாவும் துரையண்ணையும், நானும் போனோம். பொலிஸ் நிலையத்தில் எங்களுக்காக இரத்தினமண்ணை காத்திருந்தார். அவரது பெயர் சூசைதாசன். இரத்தினம் என்பது அவரது வீட்டுப் பெயர். இவர் துரையண்ணனின் அண்ணன். அட்வகேட் ஆர்.ஆர். தர்மரத்தினத்தின் அலுவலகலத்தில் வேலை செய்பவர். அதனால் பொலிஸில் எல்லோரiயும் பழக்கம். துரையண்ணன் ஒரு போத்தல் சாராயம் வாங்கி வந்திருந்தார். இன்ஸ்பெக்டரைத் திருப்தி செய்ய எனச் சொன்னார்.
„ஒருநாளும் இந்தப்பக்கம் வராத என்னை வரவைச்சிட்டாய்' என்று அம்மா என்னிடம் நகைச்சுவையாகச் சொன்னார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் சாராயப் போத்தலுடன் உள்ளே போனார்கள். சிறிது நேரத்தில் இன்ஸ்பெக்டர் வெளியில் வந்தார்.
„நீயா அது. இனி சைக்கிளைப் பாத்து ஓட்டு.. என்ன?' தோளில் தட்டி சிரித்துவிட்டு உள்ளே போனார். இரத்தினண்ணனும், துரையண்ணனும் „எல்லாம் சரி நீங்கள் போங்கோ' என்றனர். அம்மாவுடன் வீதியில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். நல்லவேளை அண்ணன் மூவரும் கொழும்பில். பரீட்சை நேரத்தில் சினிமாவுக்குப் போனது அதுவும் வீட்டுக்குச் சொல்லாமல் போனது என இரண்;டு குற்றங்களுக்கும் என்னை உண்டு இல்லை என்று பண்ணியிருப்பார்கள் என்று நினைத்தபடி அம்மாவின் கையைப் பிடித்தபடி நடக்கத் தொடங்கினேன்.
பிற்குறிப்பு
இந்த நிகழ்வில் எனக்கு பல விடயங்கள் இன்றும் அடிக்கடி நினைவில் வந்து போகும். ஏறக்குறைய நாற்பது ஆண்டுகள் ஆன பிறகும் என்னால் அன்றைய அந்த விபத்தை மறக்க முடியவில்லை. அந்தச் சிறுவனுக்கு இன்று 44, 45 வயது இருக்கும். மெதுவான வளைவோடு இருக்கும் அந்தக் காலைப் பார்த்து இன்னும் அவன் என்னைத் திட்டிக் கொண்டிருக்கின்றானோ என்ற குற்ற உணர்வு என்னிடம் இருந்து மறையவில்லை.
பிரச்சினைகளை நேரை நிண்டு சமாளிக்கோணும் பயப்படக் கூடாது என்று எனக்கு அறிவுரை சொன்ன துரையண்ணன், பின்னாளில் தனக்கொரு பிரச்சினை வந்த பொழுது கோழையாகிப் போய் பொலிடோல் குடித்து தற்கொலை செய்ததை என்னால் ஏற்றுக் கொள்ள இயலவில்லை
அந்த வருட பரீட்சையில் திறமைச்சித்தியடைந்திருந்தேன். இது அம்மாவைக் கலங்க வைத்ததற்கு அவருக்கு நான் தந்த பரிசு.