Sunday, November 13, 2005

வாலி வதம்

அப்பொழுது நான் ஆறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியரின் பெயர் சுப்பிரமணியம். அவர் அந்த வருடம்தான் எங்கள் பாடசாலைக்குப் புதிதாக படிப்பிப்பதற்கு மாற்றாலாகி வந்திருந்தார். தமிழ், கணிதம், ஓவியம் மூன்று பாடங்களை அவர் எங்களுக்கு படிப்பித்துக் கொண்டிருந்தார். மூன்றும் எனக்கு விருப்பமான பாடங்கள். நன்றாகவே செய்து கொண்டிருந்தேன். அதிலும் கணிதத்தில் நான் முன்னிலையில் நின்றேன். எனது உறவினர் ஒருவர் அவரை பரமேஸ் அக்கா என்றே அழைப்பேன். பாடசாலை முடிந்த பின்னர் நேரமும் - தூரமும், நேரமும-வேலையும் போன்ற கணக்குகளை எப்படிச் செய்ய வேண்டும் என்று விளக்கமகாகச் சொல்லித் தருவார். அதை அப்படியே பாடசாலையிலும் காட்டியதால் அதிகப் புள்ளிகள் எனக்கு கிடைத்துக் கொண்டிருந்தன. ஆனாலும் சுப்பிரமணிய மாஸ்ரரின் மதிப்பு மட்டும் எனக்கு ஏனோ கிடைக்கவில்லை.

வருட இறுதியில் பர்Pட்சையின் பெறுபேறு தரும் நாளில் பாடசாலையில் ஆசிரியர்கள் மாணவர்களது கலை நிகழ்ச்சி நடைபெறும். கலைநிகழ்ச்சியில் அப்போது தமிழ் புத்தகத்தில் இருந்த வாலி வதம் என்ற நாடகத்தைப் போடப் போவதாக சுப்பிரமணிய மாஸ்ரர் வகுப்பில் சொன்னார். இலக்குவனாக நடிப்பதற்கு என்னைத் தெரிவு செய்தார். மாட்டேன் என்று சொல்ல வார்த்தை வரவில்லை. சொல்லியிருந்தால் அவரது கையில் உள்ள பிரம்பு பேசியிருக்கும். தலையாட்டுவதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை. வாலியாக துரைலிங்கமும், சுக்கிரீவனாக கனகசுந்தரமும் இராமனாக ஆனந்தனும் என்னுடன் சேர்ந்து நடிப்பதற்காகத் தெரிவு செய்யப்பட்டிருந்தார்கள்.

கலைநிகழ்ச்சக்கான நாள் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரரே ஒப்பனையையும் செய்து விட்டார். மேடைக்கு நானும் ஆனந்தனும் போக வேண்டிய நேரம் வந்தது. சுப்பிரமணிய மாஸ்ரர் பார்வையால் ஆணையிட்டார். மேடைக்கு வந்து நின்று பார்த்தபோது மண்டபத்தில் ஆசிரியர்கள் மாணவர்கள் என கூட்டம் நிறைந்திருந்தது. அதிலும் முதல் வரிசையில் ஆசிரியர் கூட்டம் அமர்ந்திருந்ததைப் பார்த்த போது தலையைச் சுற்றிக் கொண்டு வந்தது.
வாலியும் சுக்கிரீவனும் மேடையின் ஒரு மூலையில் நின்று சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள். நானும் இராமனும் மறு மூலையில் நிற்கிறோம். இப்பொழுது இராமன் வாலியை நோக்கி அம்பு எய்ய வேண்டும். பூவரசம் தடியில் வளைத்துக் கட்டிய வில்லை எடுத்து ஆனந்தன் வாலியை நோக்கி அம்பை விட்டான். ஒன்று, இரண்டு, மூன்று... எந்த அம்பும் வாலியை நோக்கிப் போகவேயில்லை. மண்டபத்தில் இருந்து சிரிப்பொலி. கடைக்கண்ணால் பார்த்தேன் சுப்ரமணிய மாஸ்ரர் மேடைக்குள் இருந்து துள்ளிக் கொண்டிருப்பது தெரிந்தது. ஒரு கட்டத்தில் திசை மாறிப் போன அம்பை துரைலிங்கம் ஓடிப்போய் பிடித்துத் தனது மார்புடன் வைத்துக் கொண்டு கீழே விழுந்து விட்டான். இந்தக் கட்டத்தில்தான் நாடகத்தில் உரையாடல் தொடங்குகிறது. கீழே விழுந்திருந்தபடி வாலி கேள்விகள் கேட்கத் தொடங்கினான். அவனது கேள்விகளுக்கு இராமர் பதில் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் இராமர் சார்பாக இலக்குவன் பேச வேண்டும். ஆனால் அவன் அமைதியாக இருந்தான். அவனது நாக்கு மேலண்ணத்தில் ஒட்டி வெகு நேரமான விடயம் யாருக்கும் தெரியாது. ஆனந்தன் எனது கையைச் சுரண்டினான். படுத்திருந்த துரைலிங்கம் காலால் தட்டிப் பார்த்தான். உள்ளிருந்த சுப்ரமணிய மாஸ்ரர் மெலிதான குரலில் வசனத்தின் முதலடியைச் சொல்லிப் பார்த்தார். இலக்குவன் அசையவேயில்லை. அதிசயம் ஏதும் நடந்து திரை மூடாதா என நினைத்தபடி குனிந்த படியே நின்றான். அவன் நினைத்தபடி அதிசயம் நடந்தது. அசரீரியாக குரல் ஒன்று ஒலித்தது. இலக்குவன் பேச வேண்டிய வசனத்தை மேடையின் உள்ளேயிருந்து நாகநாதன் சொல்லிக் கொண்டிருந்தான். இலக்குவன் குனிந்தபடியே நின்றான். நாடகம் ஒருவாறு முடிந்து திரை மூடிய போதுதான் திரை சரியாக மூடுகிறதா என இலக்குவன் நிமிர்ந்து பார்த்தான்.

பாடசாலை பரீட்சையின் பெறுபேறு அறிக்கையை அம்மாவிடம் தந்து விட்டு நின்றேன். பெறுபேறைப் பார்த்ததும் அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. எனது கால்களின் பின்புறம் விண் விண் என்று வலித்துக் கொண்டிருந்தது. அணிலுக்கு இராமன் போட்டது மூன்று கோடுகள் . சுப்பிரமணிய மாஸ்ரர் பிரம்பால் எனக்குப் போட்டது ஆறு கோடுகள். எனது வலியைச் சொல்லி அம்மாவின் மகிழ்ச்சியைக் கெடுக்க நான் விரும்பவில்லை.

நகரத்தில் இருக்கும் பெரிய பாடசாலையில் அடுத்த வருடம் சேர்ந்துவிட வேண்டும். அதற்கான பரீட்சை எடுக்க வேண்டும். என மனதில் நினைத்துக் கொண்டேன். ஊரில் உள்ள பாடசாலையில் படிப்பித்துக் கொண்டிருந்தாலும் பின்னாளில் ஏனோ சுப்ரமணிய மாஸ்ரரை நான் சந்திக்கக் கிட்டவில்லை.

Friday, July 29, 2005

மின்சாரப் பாய்ச்சல்

தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதாக சுங்கான், கந்தசாமி இருவரும் கைது செய்யப்பட்ட நேரமது. சுங்கானின் கடையின் உதவியாட்கள், வானொலி திருத்துவது தொடர்பாக பயிற்சி பெற வந்தவர்கள், நண்பர்கள் என பலர் விசாரணைகளுக்காக அழைத்துச் செல்லப் பட்டார்கள். நெருங்கிப் பழகியவர்களில் சிலர் தொல்லை வேண்டாமென ஊரை விட்டே பறந்துவிட்டார்கள்.

நீண்ட காலமாக சுங்கானின் வானொலி திருத்தும் நிலையம் பூட்டப் பட்டே இருந்தது. கடையை வாடகைக்குக் கொடுத்தவர் வாடகையுமில்லாமல், கடையுமில்லாமல் தலையில் துண்டு போடாத குறையாக அல்லாடிக் கொண்டிருந்தார். பொலிசாரின் புலன் விசாரணைக்கு அவரும் தப்பவில்லை. தனக்கு நடந்த விசாரணை பற்றி அவர் வெளியே சொல்லவுமில்லை. ஆனாலும் புலன் விசாரணையில் அவருக்கு நல்ல கவனிப்பு இருந்ததாக ஊரில் பேசிக் கொண்டார்கள்.

பொறுத்துப் பொறுத்துப் பார்த்த கடை உரிமையாளர், பதினேழு கிலோ மீற்றர் தூரத்தில் வசித்து வந்த சுங்கானின் தாயை ஒருநாள் ஊருக்குக் கூட்டிக் கொண்டு வந்தார். சுங்கானின் தாயின் மேற்பார்வையில் கடையைத் திறந்து பொருட்களை அகற்றுவது என்று கடையின் உரிமையாளின் ஏற்பாடு. ஆனால் கடையைத் திறக்க உரிமையாளர் உட்பட அனைவருக்கும் பயம். சுங்கான் ஏடாகூடமாக உள்ளே ஏதாவது செய்து வைத்து, கடையைத் திறக்கும் போது ஏதாவது ஆகிவிடுமோ என்ற பயம் எல்லோருக்கும் இருந்தது. துணிந்து முன்னுக்கு வந்து கடையைத் திறக்க முற்பட்டவர்களை ஏற்கனவே பயந்து போயிருந்தவர்கள் பயமுறுத்திக் கொண்டிருந்தார்கள். நேரம் போனதே தவிர யாருக்கும் கடையைத் திறக்கும் துணிவு வரவில்லை.

இறுதியாக சுங்கானிடம் வானொலி திருத்தும் கடையில் பணியாற்றிய செல்லையா என்பவர் கடையைத் திறக்க முன் வந்தார். இவர் சட்டத்தரணி மூலமாக பொலீசிடம் சரணடைந்து, வெற்றிகரமாக விசாரணைகளை முடிந்து விழுப் புண்கள் இல்லாமல் வெளிவந்தவர். செல்லையா கடையினைத் திறக்கும் போது, ஏதோ ஆண்டவன் தரிசனத்துக்கு ஏங்கும் பக்தர்கள் போல் வெளியே ஆவலாக மக்கள் கூட்டம் அலை மோதியது. ஒருவாறாக கடையைத் திறந்து, அங்கு ஆபத்தில்லை என்றவுடன் பலருக்கு ஆறுதலாக இருந்தது சிலருக்கு ஒன்றுமே ஆகவில்லையே என்று சப் என்றானது.

கடையில் உள்ள பொருட்களெல்லாம் சுங்கானின் தாய் பொறுப்பேற்றதன் பின்னர் கடை அம்மணமாக இருந்தது. இப்பொழுது அந்தக் கடையை வாடகைக்கு எடுக்க சில முதலாளிகள் உள்ளே புகுந்து நோட்டம் விட்டுக் கொண்டிருந்தார்கள். அதில் சுங்கானின் பக்கத்துக் கடையான லக்சுமி பகவான் தேனீர் கடை முதலாளியும் அடங்குவார். அவர் எதற்காக நோட்டம் விட வந்தார் என்றால், அவருக்கு சில மாதங்களாக மின்சார வாடகை அதிகமாக வந்திருந்தது. ஒருவேளை அது சுங்கானின் உபயமாக இருக்குமோ என்ற எண்ணம் இருந்திருக்கிறது. அப்பொழுது சுங்கானைக் கேட்க அவர் விரும்பவில்லை. இப்போ தெளிவு படுத்த நோட்டம் விட்டவருக்கு உண்மை வெளிச்சமானது. அவரது கடைக்குப் போகும் மின்சார வயரில் இருந்துதான் சுங்கான் கடைக்கு மின்சாரம் கொடுத்திருந்தார்.

கடைக்குள் இருந்தே லக்சுமி பகவான் முதலாளி சத்தமாகச் சொன்னார்,
"முதலிலை அந்த வயரைப் பிடுங்குங்கோ"

Saturday, July 09, 2005

கறுப்புக் கொடி



22.05.1972 அன்று சிங்கள அரசு, சிறிலங்கா என்ற நாமம் சூட்டி தன்னை குடியரசு நாடாக அறிவித்த நாள். நகரமே அன்று அமைதியாக இருந்தது. தமிழ் மக்களின் பகுதிகளில் கடைகள் எல்லாமே பூட்டப் பட்டு அமைதியாக இருந்தன. தமிழ்மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த வகையில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

கறுத்தக் கொடி ஒன்று நகரத்தின் கடையொன்றின் ஓட்டின் முகப்பில் இருந்து கடற்கரைக் காற்றின் துணையுடன் அட்டகாசமாகக் ஆடிக் கொண்டிருந்தது. இந்தக் கொடியின் ஆட்டம் பவனி வந்து கொண்டிருந்த பொலீஸின் கண்களில் பட்டுவிட்டது. பவனி வந்த அத்தனை பொலீஸாரும் சிங்களவர்கள். அப்பொழுதெல்லாம் அப்படித்தான், தமிழ்ப் பகுதிகளில் சிங்களவரே பொலீஸ் துறையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். ஒரு சில இடங்களில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்.

கொடியை இலக்கு வைத்து பொலீஸ் ஜீப் நகரத்தின் அந்தக் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சுங்கான் தனது வானொலி திருத்தும் நிலையத்தைப் பூட்டிவிட்டு, அதற்கு முன்னால் கதிரையைப் போட்டு அதில் இருந்தபடி சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். போலீஸைக் கண்டதும் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாக நகர்ந்து அருகில் இருந்த வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்குள் மறைந்து கொண்டது. சுங்கான் மட்டும் கையில் இருந்த புத்தகத்தை விரித்து வைத்தபடி தன்னை நோக்கி வரும் பொலீஸ் ஜீப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேகமாக வந்து கிறீச்சிட்டு நின்ற ஜீபபில் இருந்த பொலீஸ் படு வேகமாக இறங்கியது. ஆனால் சுங்கானிடம் எந்த விதப் பதட்டமும் இல்லை. ஒருகாலை வெளியிலும் மறு காலை ஜீப்பின் உள்ளேயுமாக வைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் கோபமாக சுங்கானைப் பார்த்தார். சுங்கான் ஏற்றி வைத்த கறுப்புக் கொடி மட்டும் படபடத்துக் கொண்டிருந்ததே தவிர சுங்கானிடம் எவ்விதமான அசைவும் இருக்கவில்லை. பொலிஸார் சுற்றி நிற்க நடுவில் கதிரையில் சுங்கான் அமைதியாக இருந்தார். ஜீப்பில் இருந்த வண்ணம் இன்ஸ்பெக்டர் அதட்டலாகக் கேட்டார்,

"ஆரு கொடி ஏத்தினது?"

"நான்தான்"
சுங்கானின் பதிலில் அமைதியிருந்தது. அமைதியான அவரின் பதில் இன்ஸ்பெக்டருக்கு கண்டிப்பாக ஒரு தயக்கத்தைத் தந்திருக்கும். ஆனாலும் அவரிடமிருந்து உடனடியாகக் கட்டளை வந்தது.

"ஓட்டிலை ஏறி கொடியை உடனை இறக்கு"

"இறக்கிறதுக்காக நான் கறுப்புக் கொடியை ஏத்தேல்லை எதிர்ப்புக் காட்டத்தான் ஏற்றியிருக்கிறன்" சுங்கான் எதுவித பயமுமில்லாமல் பதில் தந்தார்.
சுங்கானின் பதிலின் வேகத்துக்கேற்ப ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்கி நின்றார். ஒரு விபரீதம் நிகழப் போகும் வாய்ப்பு அங்கே உருவாகியிருந்தது தெரிந்தது. வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்களின் துவாரங்களுக்குள் பயந்த பல கண்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தன. இன்ஸ்பெக்டர் என்ன நினைத்தாரோ தெரியாது ஒரு பொலீஸைக் கூப்பிட்டு ஓட்டில் ஏறி அந்தக் கொடியை இறக்கும் படி பணித்தார். அருகில் இருந்த குளாயைப் பிடித்து அந்த பொலிஸ் ஏற முற்பட்ட போது சுங்கானிடமிருந்து அமைதியாகப் பதில் வந்தது, "ஏறி கொடியைப் பிடிச்சு உனக்கேதாவது ஆச்சுதெண்டால் இன்ஸ்பெக்டர்தான் பொறுப்பு.. நானில்லை." ஏற முற்பட்டவன் இன்ஸ்பெக்டரைத் திரும்பிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் கண்களும் சுங்கானின் கண்களும் நேரடியாக சந்தித்துக் கொண்டன. சுங்கான் வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவர்களுக்கும் தெரியும். ஒரு வேளை மின்சாரத்தைக் கொடியில் இணைத்திருக்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்திருக்கும். சிறிது நேரம் அங்கு அமைதியாக இருந்தது. என்ன நினைத்தாரோ இன்ஸ்பெக்டர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு எதுவுமே சொல்லாமல் ஜீப்பில் ஏறிப் போய்விட்டார். ஜீப் மறைந்ததும் கதிரையைத் தூக்கிக் கொண்டு சுங்கானும் வீரவாகு கிட்டங்கியின் தகர மறைப்புக்குள் வந்துவிட்டார். கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்,
"உண்மையிலை கொடிக்கு கரண்ட் குடுத்திருக்கிறீயோ? "

"ஏறித் தொட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்... கரண்டுமில்லை மண்ணுமில்லை எண்டு... பயந்திட்டாங்கள்.. "

ஒன்றுமே இல்லா இடத்திலையும் தனது பயத்தை வெளிக்காட்டாமல் மற்றவர்களைப் பயப்படுத்துவதற்குத் திறமை வேண்டும். அதை அன்று நான் சுங்கானிடம் கண்டேன்.

Saturday, July 02, 2005

கழிப்பறை நெருப்பு

எழுபதுகளின் ஆரம்பம் சிறுசிறு கடைகளாக இருந்த எங்கள் நகரத்தில் ஒரு பெரிய கட்டிடம் பல கடைகளை உள்ளடக்கி பெரிதாக எழுந்து நின்றது. அந்தக் கட்டிடத்திற்குச் சொந்தக்காரரான வீரபாகு முதலாளி நகரத்தின் பெரிய புள்ளி. பல பழைய கடைகள் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அழகையும் தரத்தையும் பார்த்து புழுங்கிக் கொண்டன. அந்தளவுக்கு நவீன உத்திகளுடன் அது கட்டப்பட்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் நகரத்தின் பொதுக் கழிப்பறைகளை நகரசபை ஊழியர்கள் வந்து காலையில் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்கள். காலையில் நகரம் களை கட்டத் தொடங்கிய பிற்பாடு அந்தக் கழிப்பறைகள் பக்கம் போக முடியாது. அந்தளவுக்கு பாவனையாளர்கள் அதை அழகு படுத்தி வைப்பார்கள். தவறிப் போய் உள்ளே நுளைந்தால் நாலு நாள் உபவாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சாப்பிடும் போது நினைவு வந்து குமட்டி விடும்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் பின் பகுதியிலும் கழிப்பறைகள் இருந்தன. நவீன முறையில் கட்டப்பட்ட அவை எப்போழுதும் பளீச் என்று இருக்கும். அந்தக் கட்டிடத்தில் உள்ள கடை உரிமையாளர்களை மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த வேறு சில கடை உரிமையாளர்களையும் அதைப் பாவிக்க அவர் அனுமதி தந்திருந்தார்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அருகே ஒரு வானொலி திருத்தும் கடை இருந்தது. அதன் உரிமையாளர் பத்மநாதன். அவருக்கு சுங்கான் என்ற பட்டப் பெயர் இருந்ததால் பலருக்கு அவர் பெயர் தெரியாமல் போயிற்று. நன்கு பரிச்சயமானவர்கள் அவரை சுங்கான் என்றே கூப்பிடுவார்கள். அவரது கடைக்குப் பக்கத்தில் ஒரு மருந்துக் கடை. அதன் உரிமையாளர் பெயர் கந்தசாமி. இருவருமே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் இருவரது கடைகளும் பிரபல்யமானவை. வீரபாகு முதலாளியுடன் இருவரும் இறுக்கமான நட்பை பேணிவந்ததால் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறை சலுகை இந்த இருவருக்கும் இருந்தது.

குலசேகரம் என்பவர் நகரத்தில் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். ஆள் கொஞ்சம் வில்லங்கமான பேர்வழி. அடிதடி அத்தனையும் அத்துப்படி. இவர் யாரையும் கேட்காமல வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைகளைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டார். என்னை யார் கேட்பது என்ற ஒரு துணிச்சல். இவரது இந்த நடவடிக்கை சுங்கானுக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது செய்து இவரை அந்தப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுடன் கதைக்கும் போது சுங்கான் சொன்னார். அது ஒருநாள் நடந்தேறியது.

வழமைபோல் குலசேகரம் காலையில் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைக்குச் சென்றிருக்கின்றார். கழிப்பறையின் வெளியே ஆறுதலாக சுங்கான் பல்லுத் துலக்கிக் கொண்டிருந்திருக்கிறார். உள்ளே போன குலசேகரம் அலறிப் புடைத்துக் கொண்டு வெளியே ஓடத் தொடங்கி விட்டார். வெளியே நின்றிருந்த சுங்கான் என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார். "நெருப்படா.. கக்கூசுக்குள்ளை நெருப்படா." சொல்லிக் கொண்டு ஓடிய குலசேகரம் பின்னர் அந்தப் பக்கம் வரவேயில்லை. கழிப்பறைக்குள் இவர் வரும் நேரம் பார்த்து சுங்கான் பொசுபரசைத் தூவி வைத்தது எங்களைப் போன்ற சிலருக்கே தெரிந்திருந்தது.

சுங்கான் என்ற பத்மநாதன் கொடிகாமம் பத்மநாதன் என்பதும் மருந்துக் கடை உரிமையாளர் கந்தசாமி, சிறிசபாரத்தினத்தின் தமையனார் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் இருவரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட போது இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வீரபாகு முதலாளியும் கைது செய்யப்பட்டது தனிக்கதை.