Thursday, January 07, 2010

அன்பால் விளைந்த பழியம்மா

கபொத உயர்தரம் படித்துக் கொண்டிருந்த நேரமது.

மாலைவேளைகளில் சந்தியில் நிற்கும் பெரியகுட்டி, சின்னக்குட்டி, பாலு ஆகியோரின் பழக்கம் எனக்கு மெதுவாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுடைய வீடுகளும் சந்திக்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஏறக்குறைய எனது வயதுதான் அவர்களுக்கும். அவர்கள் என்னோடு சேர்ந்து படிக்காவிட்டாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை அவர்களுடன் பழக வைத்தது. சந்தியில் நிற்பவர்கள் காவாலிகள் என்ற கருத்து இருந்த நேரம். ஆகவே அவர்களுடனான எனது பழக்கம் பட்டும் படாமலுமே இருந்தது. பாடசாலை மாணவிகளைக் கிண்டலடிப்பதும், ரசிப்பதுவுமே அந்த நேரத்தில் அவர்களது மாலை வேளையின் முக்கிய கடமையாக இருந்தது.
ஒருநாள் எனது மூத்த அண்ணன் ராஜாண்ணை யாழ்ப்பாணம் போவதற்கு பஸ்ஸிற்காக சந்தியில் காத்து நின்றார். யாழ்ப்பாணத்தில் கணக்காளராக வேலை செய்து கொண்டிருந்த சிவஞானசுந்தரம் என்பவரும் பஸ்ஸிற்காக அங்கே காத்துக் கொண்டு நின்றார். அவர் எனது அண்ணனை அணுகி,
"நீ மூர்த்தியற்றை மகன்தானே?" என்று கேட்டிருக்கின்றார்.
அண்ணனும் "ஓம்" என்று பதிலளித்திருக்கிறார். அடுத்து சிவஞானசுந்தரத்தாரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனது அண்ணனை நிச்சயம் புரட்டிப் போட்டிருக்கும்.

"மூர்த்தியர் எவ்வளவு கௌரவமான மனுசன். அவரின்ரை பேரை ஏன் கெடுக்கிறாய்? சந்தியி லை நின்று போறவாற பெட்டைகளோடை சேட்டை விட்டுக் கொண்டு... சீ.. என்ன மானம் கெட்ட செயல்.."

அண்ணனுக்குப் புரிந்திருக்கும். அர்ச்சனை எந்த சாமிக்கு விழ வேண்டும் என்று. யாழ்ப்பாணப் பயணத்தை விட்டு விட்டு வேகமாக வீட்டிற்குத் திரும்பி என்னைத் தேடியிருக்கின்றார். நல்லவேளை அப்பொழுது நான் வீட்டில் இல்லை. பின்னர் அக்கா சொல்லித்தான் எனக்கு அந்த விசயம் தெரியும். போக வேண்டிய பஸ்ஸைத் தவற விட்டு அடுத்த பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று மாலை திரும்பிய ராஜாண்ணையின் கண்ணில் அன்று படாமல் நான் ஒளித்துக் கொண்டேன்.

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் எனும் கோயிலை கோபம் மூடுது
காற்றடித்தால் மேகம் கலைந்து ஓடுது
நேரம் போனால் கோபம் மாறி மனது மாறுது

என்று ஒரு பாடல் இருக்கின்றது. ராஜாண்ணையின் மனதும் அதுபோலத்தான் என எனக்குத் தெரியும். அடுத்தநாள் காலையில் என்னைக் கூப்பிட்டு சந்தியில் நிற்காதே படிக்கிற வேலையைப் பார் என அறிவுரை தந்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு உறுத்தல். சிவஞானசுந்தரத்தாரின் மகள்களை நான் ஏறெடுத்தே பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவர்களை அழகிகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள அவர்களிடம் எதுவுமே இல்லை. எதுக்காக என்னைப் போட்டுக் கொடுத்தார்கள்? நீண்ட காலமாகியும் இந்த ஒரு கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.

Friday, January 01, 2010

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்

எனது தந்தை இறந்த நேரம். அப்பொழுது எனக்கு ஏழு வயது. வீடு எனது தந்தையின் உறவுகளால், மற்றும் துக்கம் விசாரிக்க வந்தவர்களால் நிறைந்திருந்தது. இரவு படுக்கைக்குக் கூட இடம் போதாமல் சிரமமாக இருந்தது. பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் எல்லா அறைகளையும் எடுத்துக் கொண் டார்கள். பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோரும் அறைக்கு வெளியேயே படுக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எங்களில் மூத்தவனான ராஜாண்ணை இளைஞனாக இருந் ததால் அவரது படுக்கையும் அறைக்கு வெளியேதான் இருந்தது. அன்று இரவு எல்லோரும் நீண்ட நேரமாக எனது தந்தையின் அருமைகளையும் பெருமைகளையும் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்குப் போனார்கள்.

அறைக்குள் அம்மாவின் அருகே படுத்திருந்தேன். திடீரென ராஜாண்ணை அலறும் சத்தம் கேட்டது. எல்லோரும் எழுந்து அறைக்கு வெளியே வந்தார் கள். அதில் அம்மாதான் முதலில் ஓடி வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நானும் வந்திருந்தேன். வெளியே படுத்திருந்தவர்கள் படுக்கையில் இருந்த படியே எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். ராஜாண்ணையின் உடல் வியர்த் திருந்தது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்.

"பிள்ளை பயந்து போட்டான் போல இருக்கு'"

"இருட்டிலை எதையோ கண்டு பயந்திட்டான்.. உடம்பெல்லாம் வேர்த்திருக்கு...'"

ஒவ்வொருத்தரும் தங்கள் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டார்கள்.

"என்னடா? என்ன? ஏன் கத்தினனீ?" என்று அம்மா, ராஜாண்ணையை மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

"யாரோ என்ரை காலைப் பிடிச்சு இழுத்திச்சினம்" பயத்துடன் ராஜாண்ணையிடம் இருந்து பதில் வந்தது.

"தகப்பன்தான் வந்து இழுத்தாரோ?"

"மூத்த பிள்ளைதானே ஆசையிலை வந்திருப்பார்" நித்திரைக் கலக்கத்திலும் பயத்திலும் இருந்தவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அந்தச் சூழலை இன்னும் பயமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

"சரி.. சரி.. நீ உள்ளை வந்து படு" என்று அம்மா ராஜாண்ணையைக் கூட்டிக் கொண்டு அறைக்குள் போனார்.


எனக்கு இன்று கூட அந்தக் காட்சி நினைவில் நிற்கிறது.

"உண்மையிலேயே அப்பர் வந்து காலை இழுத்தவரா? இல்லாட்டில் வெளியே படுக்கப் பயந்து அண்டைக்கு அப்படி ஒரு நாடகம் ஆடி உள்ளே வந்து படுத்தனீயா?" என்று அடுத்தமுறை ராஜாண்ணையைச் சந்திக்கும் போது கேட்க வேண்டும்.