Sunday, December 05, 2004

பெயரைச் சொல்லவா?

மார்க் மாஸ்ரர் எங்காவது செல்ல நேரிட்டால் தனது அறைத் திறப்பை சிவபாதம் கடையில் கொடுத்து விட்டுச் செல்வார். மாலையில் நான் ஓவியம் பயிலச் செல்லும் முன் சிவபாதம் கடைக்கு ஒரு தடவை சென்று விட்டுத்தான் மார்க் மாஸ்ரரின் அறைக்குப் போவேன். திறப்பு சிவபாதம் கடையில் இருந்தால் மார்க் மாஸ்ரர் எத்தனை மணிக்கு தனது அறைக்கு வருவார் என்ற தகவலும் அங்கிருக்கும்.

மார்க் மாஸ்ரரிடம், ஓவியம் சம்பந்தமாக எத்தனை கேள்விகளைக் கேட்டாலும் ஆசையாகச் சொல்லித் தருவார். எத்தனையோ நுட்பங்களைக் காட்டியும் தருவார். எல்லாவற்றுக்கு மேலாக நான் college of fine arts இல் பயில வேண்டும் என்பதில் அவர் முனைப்பாக இருந்தார். இந்த வேளையில்தான் எனது பாடசாலையில் பயிலும் சகமாணவனான சேகரும் ஓவியம் பயில விருப்பம் தெரிவித்ததால் மார்க் மாஸ்ரரிடம் அறிமுகம் செய்து வைத்தேன். எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் அவனையும் என்னுடன் சேர்ந்து வந்து தன்னிடம் ஓவியம் பயில ஒப்புதல் தந்தார். சிலவேளைகளில் எனக்கு நேரம் போதாதிருந்தால் சேகரே சிவபாதம் கடைக்குப் போய் மார்க் மாஸ்ரரின் அறைத் திறப்பை வாங்கி வருவான்.

ஓருநாள் என்று மில்லாதவாறு மார்க் மாஸ்ரரின் முகத்தில் சந்தோசத்தைக் காணமுடியவில்லை. சந்தேகமோ, சலிப்போ அவரது முகத்தில் நிறைந்திருந்தது. நானும் சேகரும் வரைதலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தோம். மார்க் மாஸ்ரர் சிவபாதத்துடன் கதைத்துக் கொண்டிருந்தார். திடீரென மார்க் மாஸ்ரர் என்னைக் கூப்பிட்டார்.

"இதிலையிருந்த ரண்டு புத்தகத்தைக் காணயில்லை. எடுத்தனீரோ?"

எடுத்தனீரோ என்ற வார்த்தைகள் எனக்கு அறவே பிடிக்கவில்லை.
"நானெடுக்கேல்லை.. நானெடுக்கிறதெண்டால் உங்களிட்டை சொல்லிப் போட்டுத்தானே கொண்டு போவன்..."

"அப்ப.. இதிலையிருந்த ரண்டு புத்தகமும் எங்கை? "

"எனக்குத் தெரியாது.."

"உமக்குத் தெரியோணும்.. நீர்தான் இதுக்குப் பொறுப்பு... நானில்லையெண்டால் சிவபாதத்திட்டை போய் திறப்பு வாங்கி வந்து ரூமை கவனிக்கிறது நீர்தானே..? நீர்தான் இதுக்குப் பதில் சொல்லோணும்."

நான் சேகரைப் பார்த்தேன். எந்தவித குழப்பமுமில்லாமல் படத்தைக் கீறிக் கொண்டிருந்தான்.

"அந்தப் புத்தகங்கள் சுலபமாகக் கிடைக்காது.. நான் கனபேரிட்டை சொல்லித்தான் அதை வாங்கி வைச்சிருந்தனான்.. எப்பிடியோ அந்தப் புத்தகங்கள் இஞ்சை திரும்பி வரவேணும்.."

மார்க் மாஸ்ரர் சொல்லிக் கொண்டேயிருந்தார். எனக்குள் நான் சிறுமையாகப் போனது போன்ற உணர்வு. எனது தன்மானத்தை தட்டிவிட்டது போன்ற பிரமை. அன்று பயின்று முடிந்து புறப்படும் போது ஏதோ ஒப்புக்குத்தான் சொன்னேன்.

"போட்டு வாறன்."

"அடுத்த முறை வரக்கை புத்தகங்களையும் கொண்டு வாரும் "
மார்க் மாஸ்ரர் சொல்வது காதில் கேட்டது.

அதன் பின்னர் நான் அந்தப் பக்கம் செல்லவேயில்லை. ஒன்று அந்தப் புத்தகங்களை யார் எடுத்தது அது இப்போ எங்கே இருக்கிறது என்பது பற்றி எதுவுமே எனக்குத் தெரியாது. மற்றது என்னை சந்தேகித்ததுää என்னிடம் அதைப்பற்றி அவர் கேட்டதுää கேட்டமுறை எனக்குப் பிடிக்கவில்லை.

நீண்ட நாட்களின் பின்னர் நகரத்தில் நண்பர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தேன். எனக்கு பின்புறமாக இருந்து ஒரு கை எனது தோளில் விழுந்தது. முன்னால் நின்ற நண்பர்களின் கண்களில் மரியாதை தெரிந்தது. அவசரமாகத் திரும்பிப் பார்த்தேன். மார்க் மாஸ்ரர். வார்த்தைகள் வர மறுத்தன. அவரே எனக்காவும் பேசினார் போல் இருந்தது.

"எப்பிடி இருக்கிறீர்..? அந்தப் பக்கம் பிறகு ஆளையே காணேல்லை..."

நண்பர்கள் விடைபெற்றுக் கொண்டார்கள்.

"வாரும் பஸ் ஸ்ரான்ட்டுக்குத்தான் போறன். அதுமட்டும் கதைச்சுக் கொண்டு போவம். அலுவல் ஒண்டு இருந்ததாலைதான் பள்ளிக் கூடத்துக்கு வந்தனான்.. இப்ப நான் இங்கை படிப்பிக்கிறேல்லை.. மாறி அங்கை போட்டன்.."

"தெரியும்..."

"தெரிஞ்சு கொண்டும் என்னை வழியனுப்ப நீர் வரேல்லை? ம்.. கோவம் எல்லாருக்கும் வாறதுதான்.. ஆனால் இந்த வயசிலை உமக்கு இவ்வளவு கோவம் கூடாது... நான் அப்பிடித்தான் கேக்கவேணும்.. சேகரை எனக்குத் தெரியாது.. நீர்தான் கூட்டிக்கொண்டு வந்து விட்டனீர்.. நீர்தானே அதுக்குப் பொறுப்பு.. அதுசரி அந்தப் புத்தகங்கள் எங்கேயிருக்குது எண்டாவது தெரியுமே?"

குனிந்து பார்த்தபடியே தலையசைத்து "தெரியாது" என்று பதில் சொன்னேன்.

"மோகன் ஆர்ட்ஸ் கடையிலை இருக்குது. சேகர்தான் கொண்டே குடுத்தது. சேகரும் அவனும் நல்ல சிநேகிதம்.. அங்கை புத்தகங்கள் இருந்ததை சிவபாதம் பாத்திட்டு வந்து என்னட்டை சொன்னாப் போலைதான் எனக்கு புத்தகங்கள் காணாமல் போன விசயமே தெரியும். வீணா ஏன் படிக்கிறவனை குழப்புவான் எண்டிட்டுதான் உம்மட்டை உரிமையோடை கேட்டன். அவனும் திருப்பிக் கொண்டுவந்து புத்தகங்களை வைப்பான் எண்டு பாத்தன். நீர் கோவிச்சுக் கொண்டு போனதுதான் மிச்சம்."

எனக்கு எதுவுமே பேச முடியவில்லை.

"புதுவீடு கட்டியிருக்கிறன். குடிபோகக்கை ஓரு அறைக்கு உம்முடைய பெயின்றிங் இருக்கோணும் என்று ஆசைப்பட்டன்.. நீர் வரவேயில்லை........... கதையோடை கதையா எனக்கு ஒரு மகன் பிறந்திருக்கிறான்.."

"வாழ்த்துக்கள் மாஸ்ரர் "

"அவனுக்கு என்ன பெயர் தெரியுமோ?"
கேட்டுவிட்டு வாஞ்சையுடன் என்னைப் பார்த்தார். நானும் நிமிர்ந்து அவரைப் பார்த்தேன்.
"அவனுக்கு உம்முடைய பெயரைத்தான் வைச்சிருக்கிறேன். " சொல்லிவிட்டு புறப்படத் தயாராக இருந்த பஸ்ஸில் ஏறி அமர்ந்து கொண்டு யன்னலூடாக கையசைத்தார்.