Sunday, September 12, 2004

காதலிக்காதே கவலைப்படாதே

அவரை நாங்கள் கணேந்திரமாமா என்றே அழைப்போம். அவர் எந்த வழியில் எங்களுக்கு மாமாவானார் என்பது எனக்குத் தெரியாது. எல்லோரும் கணேந்திரமாமா என்றே அழைப்பார்கள் ஆகவே சிறுவர்களாகிய நாங்களும் அப்படித்தான் சொல்லிக் கொள்வோம். ஆள் கொஞ்சம் திடகாத்திரமான பேர்வளி. கராத்தே யூடோ எல்லாம் தெரிந்து வைத்திருந்தார். அவரைக் கண்டால் ஒரு பயம் அதனோடு கூடி ஒரு மரியாதையும்; இருந்தது. அவரோடு உரையாடுவதென்றாலும் சிறிது தள்ளி நின்றுதான் உரையாடிக்கொள்வார்கள். எல்லாம் ஒரு முன் எச்சரிக்கைதான். ஆனாலும் அவரிடம் ஒரு கெட்டபழக்கம் இருந்தது. அது - எப்போதும் அவர் மப்பும் மந்தாரமுமாகத்தானிருப்பார். அவரிடமிருந்து விலகி நின்று உரையாடுவதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.

கணேந்திரமாமாவின் மகன் கஜேந்திரன் என்னுடன்தான் படித்துக் கொண்டிருந்தான். அப்பொழுது நான் ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் வகுப்பறையில் கஜேந்திரன் தனது தந்தையின் வீர விளையாட்டுக்களைப் பற்றி விளாசிக் கொண்டிருந்தான். முதல் நாள் பெரிய இடத்துப் பெண் படம் பார்த்துவிட்டு அதில் எம்.ஜி.ஆரும் அசோகனும் இரண்டு கைகளில் கம்புகளை வைத்துச் சுழன்று சுழன்று சிலம்பாடியதைக் கண்டு பிரமித்துப் போயிருந்த எனக்கு கஜேந்திரன் தனது தகப்பனைப் பற்றி பெருமையாகச் சொன்னது பிடிக்கவில்லை.

"இதென்ன கராட்டியும் யூடோவும்? இரண்டு கைகளில் கம்புகளை எடுத்துச் சுழட்டினால் கராட்டியும் யூடோவும் பறந்து போடும் "
என்று என் எரிச்சலை வெளிப்படுத்தினேன். கஜேந்திரனின் முகம் கறுத்துவிட்டது. உள்ளுக்குள்ளே எரிகிறான் என்பது அப்படியே தெரிந்தது. இனித் தனது தந்தையைப் பற்றி புளுக மாட்டான் எனத் தெரிந்தது. அந்த வகையில் எனக்கு நிறைந்த திருப்தியாக இருந்தது.

அடுத்தநாள் நானும், மதுரநாயகமும், தேவதாசும் பாடசாலை முடிந்து வந்து கொண்டிருந்தோம். யாரோ என்னைப் பெயர் சொல்லிக் கூப்பிடுவது கேட்டது. திரும்பிப் பார்த்தால் கணேந்திரமாமா. அவரது வீட்டு வாசலில் இருந்து எங்களை வரும்படி கைகளால் சைகை செய்தார். மூவரும் அவரை நெருங்கினோம். என்னை நெருங்கிய கணேந்திரமாமா எனது கையில் இருந்த புத்தகத்தைப் பக்குவமாக வாங்கி பக்கத்தில் உள்ள கல்லின் மேல் வைத்தார். அவரின் செய்கை புதுமையாக இருந்தது. போதாதற்கு அவரிடமிருந்து வீசிய கெடிய வாசனை ஆள் மப்பில்தானிருக்கிறார் என்பதை உணர்த்தியது. வேலியில் சொருகியிருந்த இரண்டு கம்புகளை எடுத்து எனது இரு கைகளிலும் திணித்தார்.

"எங்கை கம்பை சுழட்டு பாப்பம் "

வார்த்தைகள் அவரது வாயில் இருந்து வந்து விழுந்தபோதுதான் எனக்கு விபரீதம் விளங்கியது. அவர் நின்ற தோரணையும் வார்த்தைகள் வந்து விழுந்த விதமும் மதுரநாயகத்துக்கும் தேவதாசுக்கும் அச்சமூட்டியது அப்படியே தெரிந்தது. இல்லாவிட்டால் ஐந்தடி பின்னால் போய் அவர்கள் நின்றிருக்க மாட்டார்கள். கொஞ்சம் சந்தர்ப்பம் கிடைத்தால் ஓடிவிடுவார்கள் என்று தெரிந்தது. மூவரும் சேர்ந்து ஓடினால் நான்தான் முன்னுக்கு வருவேன். ஆனால் அன்று என்னால் அது முடியாது இருந்தது. எனது இரண்டு கைகளிலும் என்னைவிட பெரிய கம்புகள் இருந்தன. அதைவிட எனது காற்சட்டையை சேர்ட்டுடன் சேர்த்து கணேந்திரமாமா இறுகப் பிடித்திருந்தார். அவரின் வாயில் இருந்து அடிக்கடி வந்த வார்த்தைகள், எங்கை கம்பை சுழட்டு பாப்பம்.

எங்களுக்குள் மதுரநாயகம் கொஞ்சம் துணிச்சலானவன். மெதுவாக எனது காற்சட்டையைப் பிடித்திருக்கும் கையை விடுவிப்பதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தான் கூடவே கணேந்திரமாமாவையும் தாஜா பண்ணிக் கொண்டிருந்தான்.

"இவன் கம்பை சுழட்டிக் காட்டோணுடம் இவனுக்கு நான் கராட்டி என்னெண்டு காட்டவேணும். "
கணேந்திரமாமாவின் வார்த்தைகள் மட்டுமல்ல முகத்தைப் பார்க்கவே பயமாயிருந்தது. கண்களை உருட்டி பல்லை நெருமிக் கொண்டிருந்தார். கணேந்திரமாமா காற்சட்டையுடன் பிடித்திருந்த அவரது முரட்டுக்கை எனது வயிற்றுப் பகுதியை உறுத்தியது. திடீரென எனது முகத்தை நோக்கி வந்த கணேந்திரமாமாவின் மற்றைய கையை மதுரநாயகம் பாய்ந்து பிடித்தான். அவனுக்கு அதைத் தடுக்கப் போதிய பலமில்லை. எனது இடது கன்னத்தில் கணேந்திரமாமாவின் கை மோதியது. காற்று ஊதாமலே சிறிய பலூன் போன்று எனது கன்னம் வீங்கிப் போனது. பொறி கலங்கியது என்பார்களே அது எப்படி என்று எனக்கு அப்பொழுது நன்றாக விளங்கியது. அவரது குத்தின் வேகத்தை மதுரநாயகம் தடுத்தும் நிலை இது என்றால் தடைகள் இன்றி குத்து விழுந்திருந்தால் அந்தச் சின்ன முகம் சிதைந்திருக்கும். என்ன நினைத்தாரோ எனது கைகளில் இருந்த கம்புகளை வாங்கிக் கொண்டு வீட்டுக்குள்ளே போய்விட்டார். தேவதாஸ் கல்லில் இருந்த எனது புத்தகங்களை எடுத்துக் கொண்டான். மதுரநாயகம் என்னை அணைத்தபடி வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு போய் விட்டான்.

அன்று மாலை கணேந்திரமாமா வீட்டின் வாசலில் ஊர்ப் பெரிசுகள் சில திரண்டு நின்று,
"வாடா வெளியிலை. சின்னப்பெடியனிட்டை வீரம் காட்டுறீயோ? இப்ப வந்து காட்டுடா !
என்று கெட்ட வார்த்தைகள் சேர்த்து கத்திக் கொண்டிருந்தார்கள். கணேந்திரமாமா வெளியே வரவேயில்லை. அன்று மட்டுமல்ல சில நாட்களாக அவர் வெளியே வரவில்லை. அடுத்தநாள் கணேந்திரமாமா வீட்டிலிருந்து எனக்கு பலவகையான இனிப்பகள் வந்து சோந்தன. எது எப்படியோ அதற்குப் பிறகு சண்டைப் படங்கள் பார்ப்பதில் எனக்கு அவ்வளவாக நாட்டமில்லை. அப்படி பார்க்க நேரிட்டாலும் அதில் வரும் சண்டைக் காட்சிகளைப் பற்றி யாரிடமும் நான் பேசிக் கொள்வதில்லை.