Sunday, May 23, 2010

ஓடி ஓடி உழைக்கணும்


பத்து பத்தரையெண்டால் போதும் பருத்தித்துறை நகரம் களைகட்டிவிடும். மக்கள் பொருட்களை வாங்க பக்கத்து கிராமங்கள் நகரங்களில் இருந்து வரத்தொடங்கி விடுவார்கள்.
தட்டிவான் வைத்திருப்பவர்கள், வியாபாரிகளின் பொருட்களை இறக்குவதும், ஏற்றுவதுமாக அவசரம் காட்டுவார்கள். ஓரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் தொழில் பார்க்க வேண்டும். ஒரு மணிக்குப் பிறகென்றால், வெளியூர் வியாபாரிகள் நகரத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். பிறகு தேடுவாரற்று தட்டிவானுகள் நிற்கும்.

750 இலக்க இ.போ.ச. பஸ் புறப்படுவதுக்கு முன்னால் தாங்கள் வெளிக்கிட வேண்டுமென்று மொறிஸ்வானுகள் கத்திக்கொண்டிருக்கும்.

"யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணம் ..... யாழ்ப்பாணம் ஏறு .. வெளிக்கிடப் போகுது...... நெல்லியடி.. யாழ்ப்பாணம் ஏறு... "

இந்த அல்லோலகல்லோலப் படும் நேரம்தான் எனது கடைக்கு எதிராக இருந்த இலங்கை வங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகமாக காசோலை கொடுத்து வாங்கிப் போடுவோம்.
அனேகமாக ஒருமாதம் தவணை கொடுத்துத்தான் பொருட்கள் வாங்குவோம். பிறகு அவர்கள் தங்கள் வங்கியில் காசோலையைப் போடும்போது இங்கே எங்களது வங்கியில் பணத்தைப் போட்டுவிடுவோம். ஓரு மணிவரை வங்கி வெளியாருக்காகத் திறந்திருக்கும். வங்கியில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்ததால், எவ்வளவு தொகைக்கு அன்றைய திகதிக்கு நான் கொடுத்திருந்த காசோலை வந்திருக்கிறது, வங்கியில் இருப்பு எவ்வளவு? இன்னும் எவ்வளவு பணம் போட வேண்டுமென்ற விபரங்கள் எனக்குக் கிடைத்துவிடும். ஆனாலும் என்ன ஒரு மணிக்குள் பணத்தை வங்கியில் இடவேண்டும். இல்லையென்றால் லண்டனில் உள்ள எம்மவர் சொல்வது மாதிரி cheque துள்ளி விடும்.
நேற்றும் 25.000/= ரூபாவிற்கு காசோலை வந்திருந்தது. பணம் இல்லாததால் போடவில்லை Bank manager உடன் கதைத்து இன்று போடுவதாகச் சொல்லியிருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

இன்று உள்ள பிரச்சினை என்னவென்றால் இன்றும் ஏதாவது காசோலை வரப் போகிறது. அதுக்கும் சேர்த்து காசு வேண்டும். கடைக்குள் பார்த்தேன். வியாபாரம் களைகட்டியிருந்தது. பார்த்திபன் ரொம்ப busy ஆக வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பிடி இப்படி பார்த்தாலும் மதியத்துக்கு முன்னால் வியாபாரம் இரண்டைத் தாண்டாது. மிகுதிக்கு என்ன செய்வது...?

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது கடைக்குள் ஆட்கள் குறைவாக இருந்தனர். எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு உள்ளே போனேன். நான் எதற்காக உள்ளே வருகிறேனென்று பார்த்திபனுக்குத் தெரியும்.

"ரண்டு சேந்திருக்கு.... சில்லறை காசுக்குக் கீழை மடிச்சு வைச்சிருக்கிறன்... "

இரண்டை வைச்சு என்ன செய்யிறது..? யோசனையுடன் நிமிர்ந்து வெளியில் பார்த்தேன். நகரம் வழக்கத்துக்கு மாறாக வேறுவிதமான முறையில் அல்லோலகல்லப் பட்டுக் கொண்டிருந்தது.

தட்டிவான்களை காணவில்லை.

மொறிஸ்வான்கள் அதிவேகமாக ஓடத்தொடங்கியிருந்தன. இல்லை பறந்தன என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

என்னாச்சு..ஏன் இந்த ரகளை.?
ஓடு..ஓடு என்ற சத்தங்கள் மட்டும்தான்.
நானும் பார்த்திபனும் கடைக்கு வெனியில் வந்து நின்று பார்த்தோம். என்ன ஏது என்று புரியவில்லை.

நகரத்துக்கு என்னாச்சு...?

'அண்ணை கடையைப் பூட்டுங்கோ.. பெடியள் bank அடிக்கிறாங்கள்... „

பார்த்திபன் பொருளின் நல்ல கவனம். கடைக்கு வெளியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் விபரம் அறிந்து ஆமியோ, பொலிசோ வரப்போகுது.
எங்களுக்குத் தெரிந்தவர்களும் பொருட்களை உள்ளே வைக்க எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

பார்த்திபனோ அதை அங்கை வைக்காதை இதை இஞ்சை வைக்காதை.. அது உடைஞ்சு போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னதை யாரும் காதில் வாங்கிக் கொள்ள இல்லை.

ஆச்சு.. கடை பூட்டியாச்சு.
இப்பொழுது நாங்களும் ஓடத் தொடங்கினோம். பார்த்திபன் என்னைவிடப் பருமனானவன். ஆனால் எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். வியாபாரம் செய்து வந்த பணத்தையெல்லாம் ஒரு பையில் போட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
அப்பாடா இண்டைக்கு bank க்கு காசு போடத் தேவையில்லை. bank அடிச்சபடியால் கொஞ்ச நாளைக்கு bank திறக்காது. bank க்கு காசுபோட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. எனக்குள் சந்தோசப் பட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்திபனை மட்டும் முந்த முடியாமலிருந்தது.
திடீரென வேட்டுக்கள் சத்தம்.
பார்த்திபன் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவனது ஓட்டம் இன்னும் அதிகரித்தது போல இருந்தது. திடீரென அவனது காலில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவனுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த என்னால் அதைக் காணமுடிந்தது. அவனது ஓட்டமும் குறைந்து.. நின்றுவிட்டான்.

ரவையொன்று அவனது காலை பதம் பார்த்து விட்டிருந்தது.
இதுக்குத்தானே இவ்வளவு வேகமாக ஓடினனீயென்று கேக்க வாய் வந்தது. ஆனால் கேக்கவில்லை.
பிறகு பார்த்திபனை ஊரில் உள்ள வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்த்தது.. அன்று மாலையில் ஆமிவந்து காயப் பட்டவர்களை வைத்தியசாலையில் தேடியபோது, பயத்தில் முழுசிக் கொண்டிருந்த பார்த்திபனை சந்தேகத்தின் நிமித்தம் பிடித்துக் கொண்டு பலாலி முகாமிற்குக் கொண்டு சென்றதெல்லாம் வேறு கதை.