Saturday, July 02, 2005

கழிப்பறை நெருப்பு

எழுபதுகளின் ஆரம்பம் சிறுசிறு கடைகளாக இருந்த எங்கள் நகரத்தில் ஒரு பெரிய கட்டிடம் பல கடைகளை உள்ளடக்கி பெரிதாக எழுந்து நின்றது. அந்தக் கட்டிடத்திற்குச் சொந்தக்காரரான வீரபாகு முதலாளி நகரத்தின் பெரிய புள்ளி. பல பழைய கடைகள் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அழகையும் தரத்தையும் பார்த்து புழுங்கிக் கொண்டன. அந்தளவுக்கு நவீன உத்திகளுடன் அது கட்டப்பட்டிருந்தது.

அப்பொழுதெல்லாம் நகரத்தின் பொதுக் கழிப்பறைகளை நகரசபை ஊழியர்கள் வந்து காலையில் சுத்தம் செய்து விட்டுப் போய் விடுவார்கள். காலையில் நகரம் களை கட்டத் தொடங்கிய பிற்பாடு அந்தக் கழிப்பறைகள் பக்கம் போக முடியாது. அந்தளவுக்கு பாவனையாளர்கள் அதை அழகு படுத்தி வைப்பார்கள். தவறிப் போய் உள்ளே நுளைந்தால் நாலு நாள் உபவாசம் கண்டிப்பாக இருக்க வேண்டும். சாப்பிடும் போது நினைவு வந்து குமட்டி விடும்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் பின் பகுதியிலும் கழிப்பறைகள் இருந்தன. நவீன முறையில் கட்டப்பட்ட அவை எப்போழுதும் பளீச் என்று இருக்கும். அந்தக் கட்டிடத்தில் உள்ள கடை உரிமையாளர்களை மட்டுமல்லாமல் தனக்குத் தெரிந்த வேறு சில கடை உரிமையாளர்களையும் அதைப் பாவிக்க அவர் அனுமதி தந்திருந்தார்.

வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் அருகே ஒரு வானொலி திருத்தும் கடை இருந்தது. அதன் உரிமையாளர் பத்மநாதன். அவருக்கு சுங்கான் என்ற பட்டப் பெயர் இருந்ததால் பலருக்கு அவர் பெயர் தெரியாமல் போயிற்று. நன்கு பரிச்சயமானவர்கள் அவரை சுங்கான் என்றே கூப்பிடுவார்கள். அவரது கடைக்குப் பக்கத்தில் ஒரு மருந்துக் கடை. அதன் உரிமையாளர் பெயர் கந்தசாமி. இருவருமே எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் அல்ல. ஆனாலும் அவர்கள் இருவரது கடைகளும் பிரபல்யமானவை. வீரபாகு முதலாளியுடன் இருவரும் இறுக்கமான நட்பை பேணிவந்ததால் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறை சலுகை இந்த இருவருக்கும் இருந்தது.

குலசேகரம் என்பவர் நகரத்தில் சைக்கிள் திருத்தும் கடை வைத்திருந்தார். ஆள் கொஞ்சம் வில்லங்கமான பேர்வழி. அடிதடி அத்தனையும் அத்துப்படி. இவர் யாரையும் கேட்காமல வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைகளைப் பயன் படுத்தத் தொடங்கிவிட்டார். என்னை யார் கேட்பது என்ற ஒரு துணிச்சல். இவரது இந்த நடவடிக்கை சுங்கானுக்குப் பிடிக்கவில்லை. ஏதாவது செய்து இவரை அந்தப் பக்கம் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எங்களுடன் கதைக்கும் போது சுங்கான் சொன்னார். அது ஒருநாள் நடந்தேறியது.

வழமைபோல் குலசேகரம் காலையில் வீரபாகு முதலாளியின் கட்டிடத்தின் கழிப்பறைக்குச் சென்றிருக்கின்றார். கழிப்பறையின் வெளியே ஆறுதலாக சுங்கான் பல்லுத் துலக்கிக் கொண்டிருந்திருக்கிறார். உள்ளே போன குலசேகரம் அலறிப் புடைத்துக் கொண்டு வெளியே ஓடத் தொடங்கி விட்டார். வெளியே நின்றிருந்த சுங்கான் என்ன ஏது என்று விசாரித்திருக்கிறார். "நெருப்படா.. கக்கூசுக்குள்ளை நெருப்படா." சொல்லிக் கொண்டு ஓடிய குலசேகரம் பின்னர் அந்தப் பக்கம் வரவேயில்லை. கழிப்பறைக்குள் இவர் வரும் நேரம் பார்த்து சுங்கான் பொசுபரசைத் தூவி வைத்தது எங்களைப் போன்ற சிலருக்கே தெரிந்திருந்தது.

சுங்கான் என்ற பத்மநாதன் கொடிகாமம் பத்மநாதன் என்பதும் மருந்துக் கடை உரிமையாளர் கந்தசாமி, சிறிசபாரத்தினத்தின் தமையனார் என்பதும் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை. இவர்கள் இருவரும் தீவிரவாதத்தில் ஈடுபட்டவர்கள் என்று இலங்கை புலனாய்வுத் துறையால் கைது செய்யப்பட்ட போது இவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த வீரபாகு முதலாளியும் கைது செய்யப்பட்டது தனிக்கதை.