Monday, August 23, 2004

உயரே பறக்கும் காற்றாடி

மார்கழியில் மழை மேகம் வருகிறதோ இல்லையோ வானத்தில் ஆங்காங்கே பட்டங்கள் முளைத்திருக்கும். தைப்பொங்கல் வரை இது நீடிக்கும். பொங்கல் முடிந்தால் பாடசாலையும் ஆரம்பமாகிவிடும். பட்டம் விடுவதும் முடிந்துவிடும்.

மார்கழி விடுமுறையென்றால் நிறையவே மகிழ்ச்சியாக இருக்கும். ஆளாளுக்குத் தங்கள் பட்டங்களையும் நூல்களையும் தூக்கிக்கொண்டு மரங்கள் இல்லாத காணிகள், திடல்கள் தேடிப் பறப்போம்.

எங்கள் ஊரில் பட்டம் ஏற்றும் போட்டி பொங்கலன்று மாலை வெகு சிறப்பாக நடக்கும். கொக்கு, வெளவால், பிராந்து, மணிக்கூடு, வெளிச்சவீடு, வட்டம், படலம் என்று பலவிதமான பட்டங்களைப் போட்டிக்குப் பறக்கவிடுவார்கள். தனியாகவும் குழுவாகவும் போட்டியில் பங்கு பெறுவார்கள். இந்தப் போட்டியைப் பார்க்க அடிக்கடி பெற்றோருடன் போயிருக்கிறேன். ஆனாலும் இந்தப் போட்டியில் விடும் பட்டங்களிலும் பார்க்க எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் காணியில் பீற்றர் ஆறடி உயரத்தில் பறக்க விடும் படலத்தையே எனக்கு நிறையப் பிடிக்கும்.

பீற்றர் அந்த வருடத்துக்கான தனது பட்டத்தை நத்தார் அன்று பறக்க விடுவான். கமுக மரத்தின் சிலாகையை எடுத்து அதை பெருவிரல் தடிப்பில் அழுத்தமாக சீவி வில்லுப் போல் வளைத்து அதில் பனை மரத்து மட்டையில் எடுத்த நாரைக் கட்டி விடுவான். பட்டத்தை ஏற்றிவிட்டால் போதும் மேலேயிருந்து அந்தப் பட்டம் ஆட, பட்டத்தின் மேற்பகுதியில் கட்டியிருக்கும் நார் காற்றுடன் மோதித் தரும் இசையிருக்கிறதே அது நீண்ட தூரத்திற்குக் கேட்கும். கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். நத்தாரன்றும் புதுவருடத்தன்றும் அவனது பட்டத்திற்கு லைற் வேறு பூட்டிக் கலக்குவான். இதுக்காக பற்றறிகள், விட்டுவிட்டு எரியும் பல்ப்புகள் எல்லாம் நிறையவே வைத்திருப்பான். நட்சத்திரங்கள் நிறைந்த இரவில்; நாதம் தந்து விட்டு விட்டு எரிந்து கொண்டு மேலே ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் அந்தப் பட்டத்தை நாங்கள் யாரும் தொட அனுமதி கிடையாது. பட்டம் மேலே போனாலும் அதன் நூலைக் கூடத் தொட விடமாட்டர்கள். பீற்றரை விட அவனது தம்பி துரைதான் மோசம். பட்டத்திற்குக் கிட்டவே விடமாட்டான்.

பீற்றர் பெரிய பட்டமாக விட்டாலும் துரை சின்ன வெளவால் பட்டத்தைத்தான் பறக்க விடுவான். பட்டத்தை தொட துரை மறுப்பதால், அவனை விட நீண்ட தூரத்திற்கு ஒரு வெளவால் பட்டமொன்றை நானும் பறக்க விட வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இதற்காகவே பிரத்தியேகமாக தேவன் எனக்கு ஒரு வெளவால் பட்டமொன்றை செய்து தந்தான். பட்டம் இருந்தும் பட்டத்தை பறக்க விட நூல் தேவைப் பட்டது. தையலுக்கு அம்மா வைத்திருந்தை நூலை ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் பட்டத்தைப் பறக்க விட்டேன். தேவன் கட்டித் தந்த அந்த அழகான பட்டம் ஆடி அசைந்து மேலே பறக்கத் தொடங்கியது. அம்மாவிடம் வாங்கி வந்த அந்த ஐநூறு மீற்றர் நீள நூலை விட்டுக் கொண்டிருந்தேன். துரை ஒருவித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த தேவதாசுக்கும், தேவனுக்கும் கொள்ளை சந்தோசம். ஒரு கட்டத்திற்கு மேல் பட்டம் மேலே போகவில்லை ஆனாலும் நேராகத் தொலை தூரம் போய்க் கொண்டிருந்தது. இபபோழுது மிகச் சிறிதாகப் பட்டம் தெரிந்தது. கீழே நூல் கட்டை சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. நான் நூலை இன்னும் விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு நூலை விட்டு இதுவரை யாரும் அந்தக் காணியில் பட்டம் விடாததால் அன்று எனக்கு பெருமையாக இருந்தது. துரையின் முகம் இன்னும் கறுத்திருந்தது. அவனைப் பார்க்க எனக்கு சந்தோசம் பொத்துக் கொண்டு வந்தது. நான் இன்னும் நூலை விட்டுக் கொண்டிருந்தேன். பட்டம் இன்னும் சிறிதாக கண்ணுக்கு ஒரு புள்ளியாகத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் கையில் நூல் இருப்பது தெரியவில்லை. கீழே பார்த்தால் சுற்றிச் சுழன்ற நூல் கட்டை அமைதியாக நிலத்தில் இருந்தது. பட்டத்தைப் பார்த்தேன் அது தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. கட்டையின் முடிவில் நூல் கட்டியிருக்காது என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது. நான் விட்ட நூல் காற்றில் மேல் எழும்பி கைக்கு எட்டாத தூரத்தில் பட்டத்துடன் பறந்து போனது. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த துரை தனது வெளவால் பட்டத்தைப் பறக்க விடத் தொடங்கினான். அவனது முகம் பிரகாசமாக இருந்தது.

Tuesday, August 17, 2004

அண்ணன் காட்டிய வழியம்மா

வருடா வருடம் சரஸ்வதி பூசை முடிய அம்மன் கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு வீதி வலம் வருவார். எங்கள் ஊரில் அது பெரிய விழாவாகவே நடைபெறும். அந்த விழாவை மானம்பூ என்றே அழைப்பார்கள். எனக்குப் படிப்பு, செல்வம், வீரம் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் வருடம் தவறாமல் என்னை அங்கு கூட்டிச் செல்வார்கள். அங்கு போனதால் இப்பொழுது கல்வி, செல்வம், வீரம் எல்லாம் நிறைந்து வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

ஓரு மானம்பூ அன்று எனது அண்ணன் என்னை மானம்பூவிற்கு அழைத்துச் செல்வதாக எனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டார். எனது அம்மாவும் அந்தமுறை என்னை அவருடன் அனுப்பி வைத்தார்.

இயற்கையிலேயே இருட்டைக் கண்டால் எனது அண்ணனுக்குப் பயம். அதுவும் இருட்டில் ஒரு பொருள் அசைவதாக உணர்ந்தால் போதும் ஆளும் பயந்து கூட நிற்பவரையும் பயப்பட வைத்துவிடுவார்.

கூட்ட நெரிசலில் நான் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அண்ணனின் கையை விடாமல் பிடித்திருக்கும்படி அம்மா சொல்லியிருந்தா. அதுபோல் நான் அவரின் கையை இறுகப் பற்றியபடி வீட்டிலிருந்து புறப்பட்டேன். பிரதான வீதிக்கு நாங்கள் வந்ததும் என்னை அழைத்துக் கொண்டு என் அண்ணன் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றார். எனக்கு அது புதிராக இருந்தது. கோவில் கூப்பிடும் தூரத்தில் இருக்கையில் எதுக்கு பஸ்? கேட்கவேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை.

பஸ் வந்தது ஏறிக்கொண்டோம். கோவிலையும் தாண்டி பஸ் போனது. நான் அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். பேசாமல் இருக்கும்படி சாடை காட்டினார். பஸ்ஸிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் ஏதும் பேசவில்லை. சிறிது நேரத்தின் பின் ஒரு தரிப்பிடத்தில் பஸ் நின்ற போது இறங்கச் சொன்னார். இறங்கிக் கொண்டோம். நேராக ஒரு சினிமா தியேட்டருக்கு அழைத்துப் போனார். அப்பொழுதுதான் சொன்னார். நாங்கள் கோவிலுக்குப் போகவில்லை சினிமா பார்க்க வந்திருக்கிறோமென்று. வீட்டுக்குப் போய் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி இனிப்பும் வாங்கித் தந்தார்.

சினிமாவில் காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா என்று பாட்டு வந்தபோது மானம்பூ திருவிழாவும் வீதிகள் தோறும் வழங்கப்படும் அவல், கற்கண்டு எல்லாம் நினைவில் வந்தது. நடிகர்கள் யார் யாரென்று அப்போ தெரியாது. ஓடினார்கள், பாடினார்கள், ஓவர்கோட் போட்டபடி கடற்கரை வெய்யிலில் நின்றார்கள,; சண்டை போட்டார்கள், சிரித்தார்கள், அழுதார்கள் இதையெல்லாவற்றையும் அண்ணன் வாங்கித் தந்த இனிப்பை ருசித்தபடி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு படம் முடிந்தது. வெளியில் வந்தோம். சினிமா பார்க்க வந்தவர்கள் சிதறிப் போய் விட்டார்கள். எனது அண்ணன் மட்டும் பரபரப்பாக இருந்தார். அருகில் இருந்த தேனீர் கடையில் ஏதோ விசாரித்தார் பிறகு எனக்குச் சொன்னார் பஸ் எல்லாம் போய்விட்டது நடந்துதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று. முதலாவது எங்கள் வீடு மூன்று மைல்கள் தூரத்திலிருந்தது. இரண்டாவது இந்த நேரம் மானம்ப10 முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். மூன்றாவது எனது அண்ணருக்கு இருட்டைக் கண்டால் பயம். நாங்கள் போக வேண்டிய பாதையின் இரு புறமும் பயிர் செய்யும் நிலங்களே இருந்தன. எங்கும் இருட்டு.

வேறு வழியில்லாததால் நடக்க ஆரம்பித்தோம். நான் அண்ணனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் எனது கையைப் பிடித்தபடி எனது அண்ணன் நடந்து கொண்டிருந்தார். பயம் இல்லாமலிருப்பதற்காக ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்தார்.

அது மழைக் காலமாக இருந்தபடியால் வீதியின் இருபுறமும் உள்ள நிலத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தவளைகள் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தத்திற்குப் பயந்து போன அண்ணன் என்னையும் இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அவரது வேகத்துக்கு நான் ஓடமுடியாமலிருந்ததினால் என் கையை விட்டுவிட்டு என்னை ஓடி வரும்படிச் சொல்லிவிட்டு அவர் முன்னுக்கு ஓடத் தொடங்கிவிட்டார். அவருடன் ஓட என்னால் முடியவில்லை. என்னை விட்டுவிட்டு வீட்டுக்குப் போகவும் அவரால் முடியாது. திரும்பி வந்து எனக்கு அடிக்காத குறையாக என்னை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அந்த மழைக் காலத்திலும் வியர்வை ஒழுக ஒழுக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் அம்மா பார்த்துக் கொண்டிருந்தா. மானம்பூ முடிய அப்படியே கோவிலுக்குப் போய் சாமி இறக்கி உள்ளே போகும் வரை இருந்து விட்டு வருவதாக அம்மாவிற்கு அண்ணன் சொன்னார்.

அண்ணனுடன் அன்று என்ன படம் பார்த்தேன் என்று நான் சொல்லத்தானே வேண்டும்.
தாய் சொல்லைத் தட்டாதே

Sunday, August 08, 2004

பள்ளிக்கூடம் போகலாம்

ஒன்பதாவது வகுப்பு.
இரசாயனவியல் ஆசிரியரான பொன்னம்பலம் மாஸ்ரர்தான் எங்களது வகுப்பாசிரியராகவும் இருந்தார். அதுவும் ஒரு சில மாதங்களே. திடீரென அவருக்கு இடமாற்றம் வந்ததால் நல்லதொரு ஆசிரியரை இழக்கும் நிலை எங்களுக்கு.

அவருக்கு பிரியாவிடை வைப்பதற்கு மேல் வகுப்பு மாணவர்கள் முடிவு செய்து 9, 10, 11, 12 விஞ்ஞான வகுப்பு மாணவர்களிடம் தலைக்கு இரண்டு ரூபா (அப்போதெல்லாம் இரண்டு ரூபா என்பது பெரிய காசு) வாங்கிக் கொண்டார்கள்.
இந்த பிரியாவிடை விடயத்திற்கு பொறுப்பாக இருந்தது 12வது படித்துக் கொண்டிருந்த மாணவர் தலைவன் ரவி. இன்று அவன் நாட்டில் ஒரு சட்டத்தரணியாக இருக்கிறான். விஞ்ஞானம் படித்த சட்டத்தரணி.

ரவியின் தம்பி சபா எனது வகுப்பில்தான் படித்துக் கொண்டிருந்தான். ஆதலால் இந்த பிரியாவிடை விடயம் எங்களது வகுப்பிலும் தடல் புடலாகப் பேசப்பட்டது.

பிரியாவிடை நிகழ்ச்சிக்கு சில வாரங்களுக்கு முன்னால் அதிபர் தங்கராஜா மாஸ்ரரிடமிருந்து நிகழ்ச்சிக்கான அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மாணவர்களிடம் ஒரு குழப்பமான சூழ்நிலை. இதில் முன்ணணியில் செயற்பட்டு வந்த ரவி, சபா இருவருக்கும் தன்மானப் பிரச்சினை.

பாடசாலை பிரியாவிடை செய்வதால் மாணவர்கள் தனியாக பிரியாவிடை நிகழ்ச்சி நடத்தத் தேவையில்லை என்பது அதிபரின் வாதம். மாணவர்களிடம் நிதி வசூலித்த பின்னால் நிறுத்த முடியாது என்பது மாணவர் தலைவரது கருத்து. இவர்களுக்கு நடுவில் பாவம் மாணவர்களாகிய நாங்கள்.

பிரியாவிடை நிகழ்ச்சியை மாணவர்கள்தான் நடத்த வேண்டும் என்பதில் ரவி பிடிவாதமாக இருந்தான். அவனுக்குப் பின்னால் சில ஆசிரியர்களும் இருந்தார்கள் என சாடைமாடையாக சிலர் பேசிக் கொண்டார்கள்.
அதிபர் தங்கராஜா மாஸ்ரரோ அமைதியாக இருந்தார்.

மாணவர்களிடம் வசூலித்த பணத்தை உடனடியாக திருப்பிக் கொடுத்து விடவேண்டுமென அதிபரிடமிருந்து இறுதி அறிவிப்பு வந்தது. எனக்கு மனதுக்குள் சந்தோசம். பிரியாவிடைக்கு அம்மாவிடமிருந்து பணம் வாங்கியாயிற்று. பணம் திருப்பித் தரப்பட்டால் அதை எனது வேறு தேவைக்குப் பயன் படுத்தலாமென கணக்குப் போட்டுக் கொண்டேன். நிகழ்ச்சி நிறுத்தப் பட்ட விசயம் அம்மாவுக்கு எங்கே தெரியப் போகிறது?

கணக்குகள் எப்பொழுதும் சரிவராது. நான் போட்ட கணக்கும் தப்பாகப் போயிற்று.

ஒருநாள் மாணவர் தலைவரிடமிருந்து ஒரு சுற்றறிக்கை வந்தது. அதிபர் தங்கராஜா மாஸ்ரர் எங்களது நிகழ்ச்சியை மறுப்பதால் கச்சேரியிலுள்ள கல்வித் திணைக்களத்தில் இது விடயமாக முறைப்பாடு செய்ய உள்ளோம் ஆகவே நாளை காலை எட்டு மணிக்கு விஞ்ஞான வகுப்பு மாணவர்கள் பாடசாலை முன்னால் கூடவும். போக்குவரத்து ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு மாணவரும் போக்குவரத்துக்கான செலவாக ஒரு ரூபா கொண்டு வரவும்.

அநேகமான மாணவர்கள் ரவியின் பின்னால் நின்றார்கள். போதாதற்கு சபா எனது வகுப்பிலிருந்து எல்லோருக்கும் உரு ஏத்திக் கொண்டிருந்தான். ஆகவே இவர்களது பேச்சுக்கு எடுபடுவது தவிர வேறு மார்க்கம் எனக்கிருக்கவில்லை.
முதலில் அம்மா இந்த விடயத்துக்கு ஒத்துவரவில்லை. ஆனாலும் எனது வகுப்பு மாணவர்கள் எல்லோரும் பங்கு கொள்வதை அறிந்த பின்னரே ஒரு ரூபா தந்தா, அதுவும் மனமேயில்லாமல்.

கச்சேரிக்கான பயணம் பாட்டுக்கள் துள்ளளுடன் மகிழ்வாக இருந்தது. கச்சேரி வாசலில் எங்கள் வண்டிகள் மறிக்கப்பட்டன. வாசலிலேயே நாங்கள் கொண்டு போன புகார் வாங்கப் பட்டது. உடனடியாக எல்லோரும் பாடசாலை திரும்ப வேண்டும் என கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டோம். தங்கராஜா மாஸ்ரருக்கு கச்சேரியிலும் அதிக செல்வாக்கு இருந்தது பின்னர்தான் தெரியவந்தது. எது எப்படியோ எனது முதல் போராட்டம் மூன்று ரூபாக்கள் நட்டத்துடன் தோற்றுப் போனது.

அடுத்தநாள் வகுப்பறை கரும்பலகையில் எழுதப்பட்டிருந்தது.
நேற்று பாடசாலைக்கு வரரத மாணவர்கள் அதற்கான காரணத்தை பெற்றோர் அல்லது பாதுகாவலரிடம் இருந்து எழுத்து மூலமாகப் பெற்று அதிபரிடம் சமர்ப்பித்து அதன் பின்னரே வகுப்பறைக்கு வரவும்.

பாண்டிய மன்னனின் பிரம்படியை விட தங்கராஜா மாஸ்ரரின் பிரம்படி எப்படியிருக்குமென்று அந்த சிவனுக்கே தெரியும். நெருப்பில் சுட்டு நுனி கறுத்திருந்த பிரம்பு நினைவில் வந்து கலக்கியது. எல்லோரையும்விட அதிகமாகக் கலங்கிப் போயிருந்தது ரவியும், சபாவும்தான்.

எல்லோரும் ரவியின் வீட்டில் கூடினோம். தனது மகனால்தான் இவ்வளவும் என்பதை அறிந்து ரவியின் தந்தை எங்களுக்கு உதவ வந்தார். அவர் தங்கராஜா மாஸ்ரரை அவரது இல்லத்தில் சந்தித்து எங்களுக்காக கதைத்துப் பார்த்தார். பாடசாலைக்கு வரமுடியாமற் போனதற்கான காரணத்தை எழுத்து மூலமாக ஒவ்வொரு மாணவரும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதில் தங்கராஜா மாஸ்ரர் உறுதியாக இருந்தார். சரி ஏதாவது ஒரு காரணத்தை எழுதி கொண்டுபொய்க் கொடுங்கள். பிரச்சினை வராது என்று ரவியின் தந்தை உறுதி தந்தார்.

இது விசயமாக வீட்டில் கேட்டால் அங்கேயும் பூசை நடக்குமென்பதால் நாங்களே கடிதங்களைத் தயாரித்துக் கொண்டோம். எனது அம்மம்மா காலமாகிவிட்டா என்று எனக்கான காரணத்தைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிக் கொண்டேன்.

அடுத்தநாள் கடிதங்களுடன் மண்டபத்தில் கூடினோம். மண்டபதின் ஒரு வாசலினூடகத்தான் அதிபரின் அறைக்குச் செல்ல வேண்டும். நான்கு நான்கு பேராக உள்ளே அழைத்தார்கள். துணிவுள்ளவர்கள் (இல்லையென்றாலும் இருப்பதாகக் காட்டிக் கொண்டு) முன்னுக்குப் போனார்கள். உள்ளே போனவர்கள் பிறிதொரு வாசலினூடக அனுப்பப் பட்டுக் கொண்டிருந்தார்கள். எனது முறை வந்தது உள்ளே போனேன். என்னுடன் சங்கர், முகுந்தன், நடராஜா ஆகியோரும் உள்ளே வந்தார்கள்.

முறிந்து சிதறிய பிரம்புத் துகள்கள் நிலத்தில் இருந்து பயமுறுத்தின. தங்கராஜா மாஸ்ரரைப் பார்க்கும் துணிவில்லை. முகத்தை எவ்வளவு பாவமாக வைத்திருக்க முடியுமோ அப்படி வைத்திருந்தேன். கிளாக்கர் வந்து எங்களிடமிருந்து கடிதங்களைப் பெற்றுக் கொண்டார்.

என்ன எழுதியிருக்கு? சிங்கம் கர்ஜித்தது. நாலு பேருக்கும் அம்மம்மா செத்துப் போச்சாம் கிளாக்கர் ஏளனமாகச் சொல்லி விட்டு கடிதங்களை மேசையில் வைத்தார்.

பாPட்சையில்தான் பார்த்து எழுதுவார்கள் என்று சொல்வார்கள். கடிதத்தில் உள்ள காரணத்தையும் பார்த்து எழுதியதை அன்றுதான் பார்த்தேன்.

தங்கராஜா மாஸ்ரர் கிளாக்கரை நோக்கி கண் அசைத்தார். சுவரைப் பார்த்தபடி நால்வரும் நிறுத்தப் பட்டோம். குனிந்து கால் பெருவிரலை கைகளினால் பிடிக்கும் வண்ணம் பணிக்கப் பட்டோம்.

நாலுபேருக்கும் ஒரே அம்மம்மாவா? வௌ;வேறையா?
தங்கராஜா மாஸ்ரர் கேட்பது கேட்டது அதுக்குப் பிறகு எதுவுமே நினைவில்லை. சுளீர், சுளீர் என்று பிற்பக்கத்தில் பிரம்பின் இரண்டு இழுவைகள். தண்ணீரில் இருந்து வெளியில் போட்ட மீன் கூட என்னளவுக்குத் துள்ளியிருக்காது.

வகுப்பறைக்கு வந்தால் எனக்கு நாலு, எனக்கு மூன்று , எனக்கு இரண்டு என்று ஆளாளுக்குப் பேசிக் கொண்டார்கள். பேசும் நிலையில் நானில்லை. மூன்று ரூபா கொடுத்து இரண்டு சுளீர் வாங்கிய கெட்டித்தனத்தைப் பற்றி பேச என்னயிருக்கிறது?

Sunday, August 01, 2004

பாட்டுப் பாடவா?

தங்கராஜா மாஸ்ரர் என்றால் அப்போது எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மதிப்பு இருந்தது.

பிரபல்யமான பாடசாலையின் அதிபராக இருந்தும்கூட நாலுமுழ வேட்டியுடனும் சால்வையுடனும்தான் வலம் வருவார். ஆனாலும் எனக்குப் பிடிக்காத ஒன்று அவரது கையில் எப்போதும் இருந்தது. அது... நீண்ட பிரம்பு. நெருப்பில் சுட்டு அதன் நுனி கறுத்திருக்கும். எப்பொழுதும் பளபளத்துக் கொண்டேயிருக்கும் அது என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும். மாணவர்களுடன் அதிகமாக அவர் பேசி நான் பார்த்ததில்லை. தலை குனிந்து, மூக்கில் சரிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியின் மேலாக நெற்றியைச் சுருக்கி அவர் பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே அச்சம் என்ன என்பதை உணர்த்தும்.

நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியர் சாம்பசிவம் அவர்கள்தான் சங்கீத ஆசிரியராகவும் இருந்தார். இவர் சீர்காழி கோவிந்தராஜனுடன் சங்கீதம் பயின்றவர். சீர்காழியின் நண்பரும் கூட.

அதிபரது அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில் மைக் பொருத்தியிருக்கும். பாடசாலை தொடங்கும் போதும் முடியும் போதும் ஐந்து நிமிடம் முன்பாக, சாம்பசிவம் ஆசிரியரால் தெரிவு செய்து அனுப்பப்படும் மாணவன் அந்த மைக் முன்னால் நின்று தேவாரம் பாடவேண்டும்.

வகுப்பறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் தேவாரத்தை பயபக்தி(?)யுடன் மாணவர்கள் எழுந்து நின்று கேட்டு இறுதியாக அரகரமகாதேவா சொல்லுவார்கள்.

அன்று தேவாரம் பாடவேண்டியவனாக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தங்கராஜா மாஸ்ரரின் அறையைத் தாண்டிச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. அப்படித் தாண்டிப் போனாலும் தேவாரத்தை மறக்காமல் இசையுடன் பாடுவேனா என்ற அச்சமும் சேர்ந்திருந்தது. திருட்டு விழி என்பார்களே அதனிலும் மோசமாக நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நிமிடங்களில் பாடசாலை முடியப் போகிறது. பாடசாலை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மைக்குக்கு முன்னால் நிற்க வேண்டும்.

சாம்பசிவம் மாஸ்ரர் என்னைப் பார்த்தார்.
நீ இப்ப போகலாம் என்பது போல் அவரது பார்வை சொன்னது. நான் தலையைக் குனிந்து கொண்டென். வெளிறிய என் விழி, நான் தலைகுனிந்த விதம் நிலமையை அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"என்ன தேவாரம் பாடமில்லையே..? உனக்கு ஒரு கிழமை முன்னமே சொல்லிட்டன்.. இப்ப முழுசிக் கொண்டு நிக்கிறாய்... உன்னை...
சங்கர்.. நீ போ.."

எனக்குப் பக்கத்தில் இருந்த சங்கருக்கு ஆணை போனது. அவன் சாம்பசிவம் மாஸ்ரரின் அன்பைப் பெற்ற மாணவன். நல்ல இசையுடன் பாடக்கூடியவன்.
குருவின் ஆணைபெற்ற சிஸ்யன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து போனான்.

இப்போது ஒலி பெருக்கியில் சங்கரின் குரல்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் பாடல் ஒலித்தது. என்ன வேகமாக ஓடிப்போய்ப் பாடியதால் பாடலை விட மூச்சுச் சத்தம்தான் பெரிதாகக் கேட்டது.

அடுத்து திருப்புகழ்.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்.. அதுவும் முடிந்தது. இப்போது வரவேண்டியது நமப்பார்வதிபதேயே. அதுக்கு நாங்கள் கோரஸாக அரகரமகாதேவா சொல்ல வேண்டும்.

ஆனால் ஒலிபெருக்கியில் ஒலித்ததோ "அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. "என்ற அவலக் குரல். இதுக்குப் போய் யாராவது அரகரமகாதேவா சொல்லுவார்களா.?

சாம்பசிவம் மாஸ்ரரின் முகத்தில் வியர்வை முத்துக்கள். சால்வையெடுத்து துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். தங்கராஜா மாஸ்ரரின் பார்வையை விட மோசமான பார்வை அது.

அவலக் குரல் ஓய்ந்து இப்போது அதட்டலான குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. "சாம்பசிவம் ஆசிரியர் உடனடியாக எனது அறைக்கு வரவும் "

மௌனமாக மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு சாம்பசிவம் மாஸ்ரர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

ஓலிபெருக்கியில் சங்கீதக் குரலில் அன்று தேவாரம், திருப்புகழ் பாடி நமப்பார்பதிபதே சொல்லி முடித்தார் சங்கீத பூசணம் சாம்பசிவம் மாஸ்ரர்.

அடுத்தநாள் காலை வகுப்பறையில் ஆசிரியரின் முன்னால் நான்.

"சங்கர் சேட்டைக் கழட்டிக் காட்டு"

சங்கர் வெறும் முதுகைக் காட்டினான். முதுகின் நடுவில் இல்லாமல் வலது பக்கமாக மேலிருந்து இடது பக்கம் கீழ் நோக்கியவாறு இரண்டு பெரிய தளும்புகள். தங்கராஜா மாஸ்ரரின் பிரம்பின் கோலங்கள்.

"பார்.. உன்னாலை எனக்கு அர்ச்சனை.. அவனுக்கு பிரசாதம்.,.."
வார்த்தைகளால் சாம்பசிவம் மாஸ்ரர் எனக்கு அபிசேகம் செய்து கொண்டிருந்தார்.

"உனக்கென்ன தேவாரம் பாடமில்லையே? "

"இல்லை.... சேர் எனக்குத் தெரியும் "

"அப்ப பாடு பாப்பம் "
சாம்பசிவம் மாஸ்ரர் கையில் இப்போ பிரம்பு.

கண்ணை மூடிக்கொண்டு நவரோசு ராகத்தில் பாடத் தொடங்கினேன்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூழை தவித்தருளாய்
அலைந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானாத்துறை அம்மானே


"அப்ப ஏன் நேற்றுப் பாடயில்லை?"

நேற்று இரவிரவாகத்தான் பாடமாக்கினேன் என்பதை அவருக்கு எப்படிச் சொல்வேன்?
ஆதலால் வழமைபோல் தலையைக் குனிந்து கொண்டேன்