Monday, August 23, 2004

உயரே பறக்கும் காற்றாடி

மார்கழியில் மழை மேகம் வருகிறதோ இல்லையோ வானத்தில் ஆங்காங்கே பட்டங்கள் முளைத்திருக்கும். தைப்பொங்கல் வரை இது நீடிக்கும். பொங்கல் முடிந்தால் பாடசாலையும் ஆரம்பமாகிவிடும். பட்டம் விடுவதும் முடிந்துவிடும்.

மார்கழி விடுமுறையென்றால் நிறையவே மகிழ்ச்சியாக இருக்கும். ஆளாளுக்குத் தங்கள் பட்டங்களையும் நூல்களையும் தூக்கிக்கொண்டு மரங்கள் இல்லாத காணிகள், திடல்கள் தேடிப் பறப்போம்.

எங்கள் ஊரில் பட்டம் ஏற்றும் போட்டி பொங்கலன்று மாலை வெகு சிறப்பாக நடக்கும். கொக்கு, வெளவால், பிராந்து, மணிக்கூடு, வெளிச்சவீடு, வட்டம், படலம் என்று பலவிதமான பட்டங்களைப் போட்டிக்குப் பறக்கவிடுவார்கள். தனியாகவும் குழுவாகவும் போட்டியில் பங்கு பெறுவார்கள். இந்தப் போட்டியைப் பார்க்க அடிக்கடி பெற்றோருடன் போயிருக்கிறேன். ஆனாலும் இந்தப் போட்டியில் விடும் பட்டங்களிலும் பார்க்க எனது வீட்டுக்கு முன்னாலிருக்கும் காணியில் பீற்றர் ஆறடி உயரத்தில் பறக்க விடும் படலத்தையே எனக்கு நிறையப் பிடிக்கும்.

பீற்றர் அந்த வருடத்துக்கான தனது பட்டத்தை நத்தார் அன்று பறக்க விடுவான். கமுக மரத்தின் சிலாகையை எடுத்து அதை பெருவிரல் தடிப்பில் அழுத்தமாக சீவி வில்லுப் போல் வளைத்து அதில் பனை மரத்து மட்டையில் எடுத்த நாரைக் கட்டி விடுவான். பட்டத்தை ஏற்றிவிட்டால் போதும் மேலேயிருந்து அந்தப் பட்டம் ஆட, பட்டத்தின் மேற்பகுதியில் கட்டியிருக்கும் நார் காற்றுடன் மோதித் தரும் இசையிருக்கிறதே அது நீண்ட தூரத்திற்குக் கேட்கும். கேட்பதற்கு இனிமையாகவும் இருக்கும். நத்தாரன்றும் புதுவருடத்தன்றும் அவனது பட்டத்திற்கு லைற் வேறு பூட்டிக் கலக்குவான். இதுக்காக பற்றறிகள், விட்டுவிட்டு எரியும் பல்ப்புகள் எல்லாம் நிறையவே வைத்திருப்பான். நட்சத்திரங்கள் நிறைந்த இரவில்; நாதம் தந்து விட்டு விட்டு எரிந்து கொண்டு மேலே ஆடிக் கொண்டிருக்கும் அந்தப் பட்டத்தைப் பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

ஆனாலும் அந்தப் பட்டத்தை நாங்கள் யாரும் தொட அனுமதி கிடையாது. பட்டம் மேலே போனாலும் அதன் நூலைக் கூடத் தொட விடமாட்டர்கள். பீற்றரை விட அவனது தம்பி துரைதான் மோசம். பட்டத்திற்குக் கிட்டவே விடமாட்டான்.

பீற்றர் பெரிய பட்டமாக விட்டாலும் துரை சின்ன வெளவால் பட்டத்தைத்தான் பறக்க விடுவான். பட்டத்தை தொட துரை மறுப்பதால், அவனை விட நீண்ட தூரத்திற்கு ஒரு வெளவால் பட்டமொன்றை நானும் பறக்க விட வேண்டுமென நினைத்துக் கொண்டேன். இதற்காகவே பிரத்தியேகமாக தேவன் எனக்கு ஒரு வெளவால் பட்டமொன்றை செய்து தந்தான். பட்டம் இருந்தும் பட்டத்தை பறக்க விட நூல் தேவைப் பட்டது. தையலுக்கு அம்மா வைத்திருந்தை நூலை ஒருவாறு கெஞ்சிக் கூத்தாடி வாங்கிக் கொண்டேன்.

எங்கள் வீட்டுக்கு முன்னால் உள்ள காணியில் பட்டத்தைப் பறக்க விட்டேன். தேவன் கட்டித் தந்த அந்த அழகான பட்டம் ஆடி அசைந்து மேலே பறக்கத் தொடங்கியது. அம்மாவிடம் வாங்கி வந்த அந்த ஐநூறு மீற்றர் நீள நூலை விட்டுக் கொண்டிருந்தேன். துரை ஒருவித எரிச்சலுடன் பார்த்துக் கொண்டிருந்தான். என்னுடன் சேர்ந்து நின்று கொண்டிருந்த தேவதாசுக்கும், தேவனுக்கும் கொள்ளை சந்தோசம். ஒரு கட்டத்திற்கு மேல் பட்டம் மேலே போகவில்லை ஆனாலும் நேராகத் தொலை தூரம் போய்க் கொண்டிருந்தது. இபபோழுது மிகச் சிறிதாகப் பட்டம் தெரிந்தது. கீழே நூல் கட்டை சுற்றிச் சுழன்று கொண்டிருந்தது. நான் நூலை இன்னும் விட்டுக் கொண்டிருந்தேன். இவ்வளவு நூலை விட்டு இதுவரை யாரும் அந்தக் காணியில் பட்டம் விடாததால் அன்று எனக்கு பெருமையாக இருந்தது. துரையின் முகம் இன்னும் கறுத்திருந்தது. அவனைப் பார்க்க எனக்கு சந்தோசம் பொத்துக் கொண்டு வந்தது. நான் இன்னும் நூலை விட்டுக் கொண்டிருந்தேன். பட்டம் இன்னும் சிறிதாக கண்ணுக்கு ஒரு புள்ளியாகத் தெரிந்தது. ஒரு கட்டத்தில் கையில் நூல் இருப்பது தெரியவில்லை. கீழே பார்த்தால் சுற்றிச் சுழன்ற நூல் கட்டை அமைதியாக நிலத்தில் இருந்தது. பட்டத்தைப் பார்த்தேன் அது தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தது. கட்டையின் முடிவில் நூல் கட்டியிருக்காது என்பது அப்போது எனக்குத் தெரியாமல் போனது. நான் விட்ட நூல் காற்றில் மேல் எழும்பி கைக்கு எட்டாத தூரத்தில் பட்டத்துடன் பறந்து போனது. அதுவரை பேசாமல் பார்த்துக் கொண்டிருந்த துரை தனது வெளவால் பட்டத்தைப் பறக்க விடத் தொடங்கினான். அவனது முகம் பிரகாசமாக இருந்தது.

1 comment:

Anonymous said...

:-) Need I say anything? Man... your posts are typical of Anandavikatan... okay let me say anandavikatan of yesteryears. Are your posts short stories or just your memoirs. Either way, they make a good read.