Saturday, June 12, 2010

விழியே கதை எழுது

யேர்மனிக்கு வந்த ஆரம்ப காலங்களில் இங்கிருந்த மருந்துக் கடைகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அதற்கான படிப்பு, பயிற்சி பெற்று மிக நேர்த்தியாக கடமை ஆற்றுகிறார்கள். மருந்துகளை விற்பது மட்டுமல்லாது அதை உபயோகிக்கும் முறைகளையும் அழகாக சொல்லித் தருகிறார்கள். இந்த நிலை நாட்டில் எனது ஊரில் அன்று தலை கீழாக இருந்தது.

மற்றவர்க்கு புரியாத முறையில் தங்களது மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கோ அல்லது அதுதான் நடை முறையோ தெரியாது சொல்லி வைத்தது போல் எல்லா வைத்திய நிபுணர்களும் மருந்துகளை சீட்டில் கிறுக்கித் தருவார்கள். அதை மருந்துக் கடைகளில் கொடுக்கும் போது முதல் கடைசி எழுத்துக்களை வைத்து இதுதான் மருந்து என அவர்கள் ஆராய்ந்து, தீர்மானித்து இறுதியாக மருந்துகளைத் தரும் போது அச்சத்துடன் வேண்டிய நாட்களை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அந்த எண்ண ஓட்டத்தில் எனது நினைவுகளில் வந்து போனது இரண்டு கடைகள். ஒன்று கந்தசாமி (இவர் ரெலோ இயக்கத் தலைவரான சிறி சபாரத்தினத்தின் தமையன்) அவர்களின் சிறிமுருகன் மெடிக்கல் ஸ்ரோர்ஸ். இங்கு ஆரம்பகாலத்தில் தமிழ் மருந்துகளே விற்பனை செய்தார்கள். போராட்ட சூழலில் இந்தக் கடை, அங்கு கடமையாற்றிய தேவராஜாவிடம் கை மாறியதன் பின்னர் ஆங்கில மருந்துகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

மற்றைய கடை அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ். அதன் உரிமையாளர் மார்டின் சூசைதாசன். ஆனால் ரத்தினம் என்று சொன்னால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். எனது அண்ணனின் கூட்டாளிகளில் ஒருவர். எனது வியாபார நிலையத்திற்கு சமீபமாகவே அவரது மருந்துக் கடை இருந்தது. அரசியல்வாதியும், சட்டத்தரணியும் ஆகிய ஆர்.ஆர். தர்மரத்தினம் அவர்களுடன் கூட்டாக அந்த மருந்துக் கடையை அவர் நிர்வகித்து வந்தார்.

னது வியாபார நிலையத்தை திறந்து உடனடியாக வியாபாரத்தை ஆரம்பிக்க முடியாது. எனது வியாபார நிலையத்தில் கடமை ஆற்றும் தில்லையண்ணனும், அப்புத்துரை அண்ணனும் நிலையத்தை திறந்து சாமிகளுக்கு தண்ணி காட்டி, காதில் பூ வைத்து மூச்சு விடாத முடியாதபடி புகை போட்டு.... அதன் பின்னரே அன்றைய வியாபாரம் ஆரம்பிக்க உத்தரவு தருவார்கள். ஆனால் அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ் அதற்காக அதிகம் அலட்டுவதில்லை. திறந்த உடன் வியாபாரம் ஆரம்பிக்கும் நிலை அங்கிருந்தது. எனது நிலையத்தில் இவர்கள் செய்யும் காலைப் பூசையைப் பார்த்து ரத்தினம் அண்ணன் அடிக்கடி கேலி செய்வதுண்டு.

அன்றும் அப்படித்தான் நிலையத்தின் பூசை முடியும் வரை நிலையத்திற்கு வெளியில் நின்றிருந்தேன். அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸில் ரத்தினம் அண்ணனும் இன்னொருவரும் சடுகுடு விளையாடுவது போல் இருந்தது. காலையில் இப்படி ஒரு விளையாட்டா என எனக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்திலும் எனது வியாபார நிலையத்தில் இருந்து வந்த சாம்பிராணிப் புகையிலும் மூழ்கியிருந்த எனக்கு ரத்தினம் அண்ணன் என்னைப் பார்த்து உரக்கச் சொல்வது கேட்டது. "தம்பி தில்லையம்பலத்தை அனுப்பி கடையைப் பார்க்கச் சொல்லு" சொல்லியபடியே ரத்தினம் அண்ணன் ஓடிக்கொண்டிருந்தார். பின்னால் அந்த இன்னொருவரும் ஓடிக் கொண்டிருந்தார். ஏதோ விபரீதம் என்பதை புரிந்து கொண்டு தில்லையண்ணனை அவரது கடையைப் பார்த்துக் கொள்ளும் படி அனுப்பி வைத்தேன்.

போன தில்லையண்ணன் வர சற்று நேரம் எடுத்தது. வந்ததும் விடயத்தைக் கேட்டேன். "நேற்று ஒருத்தர் வந்து ரத்தினத்திட்டை மருந்து வாங்கி இருக்கிறார். டொக்டர் எழுதிக் குடுத்த மருந்துச் சீட்டு விளங்காத படியால் இது என்னத்துக்கு எண்டு ரத்தினம் கேட்டிருக்கிறான். மருந்து வாங்க வந்தவர் கண்ணுக்கு எண்டு சொல்ல ரத்தினத்துக்கு புண்ணுக்கு எண்டு கேட்டிருக்கு. புண்ணுக்கு பூசிற மருந்தைக் குடுத்திருக்கிறான். வீட்டை போய் போட்டுப் பாத்தாப் போலைதான் வில்லங்கம் தெரிஞ்சிருக்கு." அதுதான் காலமை வெள்ளன வந்து சாமி ஆடியிருக்கிறான். நல்ல வேளை ரத்தினம் பொலிசுக்கு போய் பிறகு தர்மரத்தினம் தலையிட்டு பிரச்சினை முடிஞ்சுது. எவ்வளவு ஆபத்தன முறையில் வியாபாரம் நடந்திருக்கிறது

நான் 2002இல் நாட்டுக்குப் போன பொழுது எனது ஊருக்குப் போக சந்தர்ப்பம் சரி வர அமையவில்லை. ஆயினும் நான் வந்திருப்பதை அறிந்து நான் இருக்கும் இடத்தில் வந்து சந்தித்தவர்களிடம் அந்த இரண்டு மருந்துக் கடைகளைப் பற்றிக் கேட்டேன். அந்த இரண்டு கடைகளும் இன்னமும் இருப்பதாகச் சொன்னார்கள்.

Sunday, June 06, 2010

ஏட்டில் எழுதி வைத்தேன்

ராஜேஸ்வரி, மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்தவள். எங்கள் ஊரில் இருந்த பெண்கள் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்தாள். முதலில் அவள் கல்லூரியில் இருந்த விடுதியில் தங்கி இருந்தே படித்துக் கொண்டிருந்தாள். பின்னர் எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த தனது நண்பியின் வீட்டில் தங்கி இருந்து படித்தாள். அவள் விடுதியில் இருந்த போது யாருடைய கண்களிலும் தட்டுப்பட வாய்ப்பில்லை. அங்கிருந்து வெளியே வந்து தனது நண்பியின் வீட்டில் இருந்த போதுதான் பல இளைய கண்கள் அவளைக் கண்டு அவள் மேல் விருப்பம் கொண்டன.

அவள் மேல் காதல் கொண்டவர்களில் எனது பள்ளித் தோழன் மகேந்திரனும் அடக்கம். அவனின் நிறத்துக்கு ஏற்ப அவனை வெள்ளை என்றே அழைத்துக் கொள்வோம். வெள்ளை பருமனானவன். திடகாத்திரமானவன். சப்இன்ஸ்பெக்ரர் பரீட்சைக்குப் போய் வந்தவன். அதனால்தானோ என்னவோ எப்பொழுதும் நிமிர்ந்த நடை. ஆனால் கனிவாகப் பேசவோ, ஒரு பெண்ணை அணுகித் தனது காதலை வெளிப்படுத்தும் ஆற்றலோ இல்லாதவன். ஆனாலும் ராஜேஸ்வரியின் மேல் இருக்கும் காதலைப் பற்றி நாள் முழுதும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான். அவள் தங்கி இருந்த வீடும் அவனது வீடும் பக்கம் பக்கமாகவே இருந்தன. இதனால் அவளது தரிசனம் அவனுக்குப் பஞ்சம் இன்றிக் கிடைத்துக் கொண்டிருந்தது.

என்னதான் பலசாலியாக இருந்தாலும் ராஜேஸ்வரியிடம் தனது காதலை வெளிப் படுத்த முடியாத கோழையாக அவன் இருந்தான். ஒருநாள் என்னைத் துணைக்கு அழைத்தான். போனேன். அவன் கேட்டுக் கொண்டதன்படி அவனுடன் அவள் கல்லூரிக்குச் செல்லும் வீதியில் நின்றேன். அவளும் புத்தகங்களைச் சுமந்தபடி தனது நண்பியுடன் கதைத்தபடி வந்தாள். இவன் பதட்டமானான். „வாறாள்.. வாறாள்...' என்று அறிவித்துக் கொண்டிருந்தான். அவளும் வந்து எங்களைக் கடந்து சென்றாள். கடந்து செல்லும் போது ஒரு தடவை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்த ஒரு பார்வையே வெள்ளைக்கு அப்போழுது போதுமானதாக இருந்தது.

„பாத்தியே மச்சான் பாக்கிறாள். கதைக்கப் பயமா இருக்கு தனிய வந்தால் கதைக்கலாம். எப்பவும் ஒரு சிண்ணோடை வாறாள்..' வெள்ளை தனது ஆதங்கத்தைச் சொன்னான்.

அவள் தனியாக வந்தாலும் அவளோடு கதைக்கும் தைரியம் வெள்ளைக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். நாளடைவில் வெள்ளையுடன் வீதியில் அவளுக்காகக் காத்திருப்பது எனக்கு ஒரு வேலையாகப் போயிற்று. ஆனாலும் பள்ளித் தோழனுக்காக அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. வெள்ளைக்கு தனது காதலை ராஜேஸ்வரியிடம் சொல்லும் தைரியம் இன்னும் வந்த பாடில்லை. நானும் பல தடவைகள் அவனிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஏனோ அவளிடம் கதைக்க அவன் தயக்கம் காட்டினான். என்னாலும் அவனுக்காக அவளிடம் கதைக்க முடியாத நிலை. ராஜேஸ்வரி பாடசாலை செல்லும் பொழுதும் வரும்பொழுதும், சிவனே என அவனுடன் கூட வீதியில் நின்று கொண்டிருப்பேன். அவளும் பார்த்து மெதுவாக ஒரு புன்னகை சிந்தி விட்டுப் போவாள்.

க.பொ.த. பரீட்சையும் முடிந்து விட்டது. வருட இறுதி விடுமுறை வந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பாடசாலை மாணவிகளின் கையில் பாடப் புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓட்டோகிராப் புத்தகம் இருக்கும். தங்கள் நண்பிகள், ஆசிரியர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் கெயெழுத்து வாங்கிக் கொள்வார்கள். இதை பின்னாட்களில் எடுத்துப் பார்த்து தங்கள் இளமையான காலங்களையோ அன்றி அன்று அவர்களுக்கிருந்த நட்புகளைப் பற்றியோ நினைத்துப் பார்க்க அவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கிறதோ தெரியாது. ஆனாலும் க.பொ.த.சாதாரண பரீட்சை முடிந்தவுடன் ஒட்டு மொத்தமாக எல்லா மாணவிகளும் இந்தக் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருப்பார்கள்.

அன்றும் வழமை போல் வெள்ளை, ராஜேஸ்வரிக்காகக் காத்திருந்தான். நான் அவனுக்குத் துணையாக அவன் பக்கத்தில் நின்றிருந்தேன். ராஜேஸ்வரியும் வந்தாள். இன்று அவள் தனியாகத்தான் வந்தாள். அவள் தனியாக வருவதைக் கண்டு நான் வெள்ளையை உசார்ப் படுத்தினேன். „இப்பொழுது கதைக்காவிட்டால், இன்று உன் காதலைச் சொல்லாவிட்டால் இனி சந்தர்ப்பமே இல்லை. விடுமுறைக்கு ஊருக்குப் போகும் அவள் திரும்ப வர வாய்ப்பே இல்லை' என வெள்ளைக்கு நிலமையை விளங்கப் படுத்திச் சொன்னேன். வெள்ளையின் முகத்தில் தைரிய ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. வழமையாக நாங்கள் நிற்கும் வீதியின் மறு ஓரத்தில்தான் அவள் வருவதும் போவதும் நடைமுறையாக இருந்தது. ஆனால் அது அன்று மாறி இருந்தது. நாங்கள் நிற்கும் பக்கமாகவே அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நெருங்கி வந்தவளிடம் வழமைபோல் கதைக்கும் தைரியம் இன்றி மார்கழியிலும் வேர்த்துப் போய் வெள்ளை நின்றான். எங்களைக் கடந்து செல்லும் அவள் வழமை மீறி எங்கள் அருகில் நின்றாள். நின்றவளை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியம் கூட வெள்ளைக்கு அப்பொழுது இருக்கவில்லை.

நின்றவள் நிமிர்ந்து பார்த்தாள். அண்ணலோ மண் நோக்கி நின்றான். தனது புத்தகங்களின் மத்தியில் இருந்த ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். „இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னால் நம்ப முடியவில்லை. வெள்ளையின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவள் கை ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டிய வண்ணம் இருந்தது. வெள்ளையின் கை ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள நீண்டது. உடனடியாக அவள் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். வெள்ளையும் தனது கையை திரும்ப எடுத்தக் கொண்டான். இப்பொழுது அவள் மீண்டும் ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டினாள். வெள்ளை அதை வாங்கிக் கொள்ள எத்தனிக்க அவள் மீண்டும் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அவள் கையை நீட்டுவதும் வெள்ளை ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்துக் கொள்ள முயல்வதுமாக சில நிமிடங்கள் ஒரு விளையாட்டு ஒன்று அங்கே நடந்து கொண்டிருந்தது. நான் அதை இரசித்துப் பார்த்தக் கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டால் ராஜேஸ்வரியின் முகம் முற்றாக மாறி இருந்தது. அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இப்பொழுது அவள் என்னை நோக்கி நீட்டிய கையில் ஓட்டோகிராப் புத்தகம். 'இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னைப் பார்த்து நேரடியாகவே சொன்னாள். என்னை அறியாமல் ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

'நீங்கள் மட்டும்தான் எழுதிக் கையெழுத்து வைக்கோணும். வேறை ஆரும் எழுதக் கூடாது' ராஜேஸ்வரி தனது குரலால் உத்தரவு போட்டாள்.

நான் வெள்ளையைப் பார்த்தேன். அவன் வேறு திசை பார்த்துக் கொண்டிருந்தான். நான் எழுதித் தருவதை வாங்கிச் செல்வதற்காக ராஜேஸ்வரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை இருந்த போதும் ராஜேஸ்வரி கேட்டதற்கு இணங்க மனதில் வந்ததை எழுதிக் கையெழுத்து இட்டு அவளிடம் நீட்டினேன். „நன்றி' சொன்னாள். அடுத்த வாரம் தனது ஊருக்குப் போவதாகச் சொன்னாள். வழமை போல் பார்த்தாள். மெதுவாகப் புன்னகைத்தாள். போய்விட்டாள். ஆக அவள் இவ்வளவு காலம் பார்த்ததும் சிரித்ததும் என்னைப் பார்த்துத்தானா? எனக்கு வெள்ளையை நேராகப் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. அவன் எவ்வளவு தூரம் அவளைக் காதலித்தான் என்பது எனக்குத் தெரியும். நான் சிந்தித்தக் கொண்டிருந்தேன். „வாறன் மச்சான" வெள்ளையின் குரல் என்னை மீட்டு வந்தது. நிமிர்ந்து பார்த்த போது வெள்ளையும், ராஜேஸ்வரியும் எதிர் எதிரான பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள்.

Sunday, May 23, 2010

ஓடி ஓடி உழைக்கணும்


பத்து பத்தரையெண்டால் போதும் பருத்தித்துறை நகரம் களைகட்டிவிடும். மக்கள் பொருட்களை வாங்க பக்கத்து கிராமங்கள் நகரங்களில் இருந்து வரத்தொடங்கி விடுவார்கள்.
தட்டிவான் வைத்திருப்பவர்கள், வியாபாரிகளின் பொருட்களை இறக்குவதும், ஏற்றுவதுமாக அவசரம் காட்டுவார்கள். ஓரு குறிப்பிட்ட நேரத்துக்குள் அவர்கள் தொழில் பார்க்க வேண்டும். ஒரு மணிக்குப் பிறகென்றால், வெளியூர் வியாபாரிகள் நகரத்தை விட்டு வெளியேறி இருப்பார்கள். பிறகு தேடுவாரற்று தட்டிவானுகள் நிற்கும்.

750 இலக்க இ.போ.ச. பஸ் புறப்படுவதுக்கு முன்னால் தாங்கள் வெளிக்கிட வேண்டுமென்று மொறிஸ்வானுகள் கத்திக்கொண்டிருக்கும்.

"யாழ்ப்பாணம்... யாழ்ப்பாணம் ..... யாழ்ப்பாணம் ஏறு .. வெளிக்கிடப் போகுது...... நெல்லியடி.. யாழ்ப்பாணம் ஏறு... "

இந்த அல்லோலகல்லோலப் படும் நேரம்தான் எனது கடைக்கு எதிராக இருந்த இலங்கை வங்கியைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
கடைக்கு பொருட்களை கொள்வனவு செய்யும் போது சுகமாக காசோலை கொடுத்து வாங்கிப் போடுவோம்.
அனேகமாக ஒருமாதம் தவணை கொடுத்துத்தான் பொருட்கள் வாங்குவோம். பிறகு அவர்கள் தங்கள் வங்கியில் காசோலையைப் போடும்போது இங்கே எங்களது வங்கியில் பணத்தைப் போட்டுவிடுவோம். ஓரு மணிவரை வங்கி வெளியாருக்காகத் திறந்திருக்கும். வங்கியில் எனக்குத் தெரிந்தவர்கள் இருந்ததால், எவ்வளவு தொகைக்கு அன்றைய திகதிக்கு நான் கொடுத்திருந்த காசோலை வந்திருக்கிறது, வங்கியில் இருப்பு எவ்வளவு? இன்னும் எவ்வளவு பணம் போட வேண்டுமென்ற விபரங்கள் எனக்குக் கிடைத்துவிடும். ஆனாலும் என்ன ஒரு மணிக்குள் பணத்தை வங்கியில் இடவேண்டும். இல்லையென்றால் லண்டனில் உள்ள எம்மவர் சொல்வது மாதிரி cheque துள்ளி விடும்.
நேற்றும் 25.000/= ரூபாவிற்கு காசோலை வந்திருந்தது. பணம் இல்லாததால் போடவில்லை Bank manager உடன் கதைத்து இன்று போடுவதாகச் சொல்லியிருந்தேன். அவரும் ஒத்துக்கொண்டார்.

இன்று உள்ள பிரச்சினை என்னவென்றால் இன்றும் ஏதாவது காசோலை வரப் போகிறது. அதுக்கும் சேர்த்து காசு வேண்டும். கடைக்குள் பார்த்தேன். வியாபாரம் களைகட்டியிருந்தது. பார்த்திபன் ரொம்ப busy ஆக வியாபாரம் பார்த்துக் கொண்டிருந்தான். அப்பிடி இப்படி பார்த்தாலும் மதியத்துக்கு முன்னால் வியாபாரம் இரண்டைத் தாண்டாது. மிகுதிக்கு என்ன செய்வது...?

மதியம் நெருங்கிக் கொண்டிருந்தது கடைக்குள் ஆட்கள் குறைவாக இருந்தனர். எவ்வளவு பணம் சேர்ந்திருக்கிறது என்று பார்ப்பதற்கு உள்ளே போனேன். நான் எதற்காக உள்ளே வருகிறேனென்று பார்த்திபனுக்குத் தெரியும்.

"ரண்டு சேந்திருக்கு.... சில்லறை காசுக்குக் கீழை மடிச்சு வைச்சிருக்கிறன்... "

இரண்டை வைச்சு என்ன செய்யிறது..? யோசனையுடன் நிமிர்ந்து வெளியில் பார்த்தேன். நகரம் வழக்கத்துக்கு மாறாக வேறுவிதமான முறையில் அல்லோலகல்லப் பட்டுக் கொண்டிருந்தது.

தட்டிவான்களை காணவில்லை.

மொறிஸ்வான்கள் அதிவேகமாக ஓடத்தொடங்கியிருந்தன. இல்லை பறந்தன என்பதுதான் பொருத்தமாக இருக்கும்.

என்னாச்சு..ஏன் இந்த ரகளை.?
ஓடு..ஓடு என்ற சத்தங்கள் மட்டும்தான்.
நானும் பார்த்திபனும் கடைக்கு வெனியில் வந்து நின்று பார்த்தோம். என்ன ஏது என்று புரியவில்லை.

நகரத்துக்கு என்னாச்சு...?

'அண்ணை கடையைப் பூட்டுங்கோ.. பெடியள் bank அடிக்கிறாங்கள்... „

பார்த்திபன் பொருளின் நல்ல கவனம். கடைக்கு வெளியில் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த பொருட்களை ஒவ்வொன்றாக எடுத்து உள்ளே வைத்துக்கொண்டிருந்தான்.
இன்னும் கொஞ்ச நேரத்தில் விபரம் அறிந்து ஆமியோ, பொலிசோ வரப்போகுது.
எங்களுக்குத் தெரிந்தவர்களும் பொருட்களை உள்ளே வைக்க எங்களுக்கு உதவி செய்து கொண்டிருந்தார்கள்.

பார்த்திபனோ அதை அங்கை வைக்காதை இதை இஞ்சை வைக்காதை.. அது உடைஞ்சு போகும் என்று சொல்லிக் கொண்டிருந்தான். அவன் சொன்னதை யாரும் காதில் வாங்கிக் கொள்ள இல்லை.

ஆச்சு.. கடை பூட்டியாச்சு.
இப்பொழுது நாங்களும் ஓடத் தொடங்கினோம். பார்த்திபன் என்னைவிடப் பருமனானவன். ஆனால் எனக்கு முன்னால் ஓடிக்கொண்டிருந்தான். வியாபாரம் செய்து வந்த பணத்தையெல்லாம் ஒரு பையில் போட்டு இறுக்கமாக பிடித்துக் கொண்டு மிக மிக வேகமாக ஓடிக்கொண்டிருந்தான்.
அப்பாடா இண்டைக்கு bank க்கு காசு போடத் தேவையில்லை. bank அடிச்சபடியால் கொஞ்ச நாளைக்கு bank திறக்காது. bank க்கு காசுபோட வேண்டிய தேவை இப்போதைக்கு இல்லை. எனக்குள் சந்தோசப் பட்டுக் கொண்டு ஓடிக் கொண்டிருந்தேன். ஆனால் பார்த்திபனை மட்டும் முந்த முடியாமலிருந்தது.
திடீரென வேட்டுக்கள் சத்தம்.
பார்த்திபன் திரும்பிப் பார்க்கவேயில்லை. அவனது ஓட்டம் இன்னும் அதிகரித்தது போல இருந்தது. திடீரென அவனது காலில் இருந்து இரத்தம் வரத்தொடங்கியது. அவனுக்குப் பின்னால் ஓடிக்கொண்டிருந்த என்னால் அதைக் காணமுடிந்தது. அவனது ஓட்டமும் குறைந்து.. நின்றுவிட்டான்.

ரவையொன்று அவனது காலை பதம் பார்த்து விட்டிருந்தது.
இதுக்குத்தானே இவ்வளவு வேகமாக ஓடினனீயென்று கேக்க வாய் வந்தது. ஆனால் கேக்கவில்லை.
பிறகு பார்த்திபனை ஊரில் உள்ள வைத்தியசாலையில் கொண்டு போய் சேர்த்தது.. அன்று மாலையில் ஆமிவந்து காயப் பட்டவர்களை வைத்தியசாலையில் தேடியபோது, பயத்தில் முழுசிக் கொண்டிருந்த பார்த்திபனை சந்தேகத்தின் நிமித்தம் பிடித்துக் கொண்டு பலாலி முகாமிற்குக் கொண்டு சென்றதெல்லாம் வேறு கதை.

Sunday, May 09, 2010

நான் உன்னைச் சேர்ந்த செல்வம்


'உங்களுக்கு திருமணமாச்சா?'

' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றே பதில் சொல்வேன்'

மன்மதலீலை படத்தில் வரும் இந்த உரையாடல் அப்போ நல்ல பிரபல்யம்.

எனது வியாபார நிலையத்தில் எப்பொழுதும் வியாபாரம் ஓகோ என்று இருக்கும்.
எனது கடைக்கு பொருட்கள் வாங்க வரும் கலா ஒருநாள் இந்தக் கேள்வியை என்னிடம் கேட்டுத் துலைத்துவிட்டாள்.

'உங்களுக்கு திருமணமாச்சா?'

நானும் மன்மதலீலை கமல் பாணியில்,
' இந்தக் கேள்விக்கு எப்பவுமே நான் இல்லையென்றெ பதில் சொல்வேன்'
என்று அவளிடம் சொல்லி வைத்தேன்.

இப்பொழுதெல்லாம் கலா கடைக்கு அடிக்கடி பொருட்கள் வாங்க வருவாள். வரும்போது தனக்கு மட்டுமல்லாமல் அயலவர்களுக்கு நண்பர்களுக்கென்று எல்லோருக்கும் சேர்த்து பொருட்கள் வாங்கிப் போவாள்.
வியாபார நிலையத்தில் கூட்டம் அதிகமானால், தான்தான் நிலையத்தின் உரிமையாளர் போல் வந்திருப்பவர்களுக்கு வியாபாரம் செய்ய ஆரம்பித்துவிடுவாள். இதனால் அங்கு வேலை செய்யும் எல்லோருக்கும் அவளைப் பிடித்துப் போயிற்று.

ஒரு திருமணவிழாவிற்குப் போக வேண்டும். எனது மனைவியை மகனை அழைத்துக் கொண்டு கடைக்கு வரச் சொல்லியிருந்தேன். அங்கிருந்து குடும்பமாக திருமண விழாவிற்குப் போவதாக தீர்மானித்திருந்தோம். சொன்ன நேரத்துக்கு மனைவி மகனை அழைத்துக் கொண்டு வந்துவிட்டார். எனது வேலைகள் முடிந்தபாடில்லை. வங்கியில் அன்று பணம் போடுவதுதான் இறுதி வேலையாக இருந்தது. கடையில் அன்று பார்த்து கூட்டம் அதிகம். ஆகவே நானே பணத்தை வங்கியில் போடுவது எனத் தீர்மானித்து பணத்தை எடுத்துக் கொண்டு வங்கிக்கு ஓடினேன்.

வங்கியிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது போல் இருந்தது. வரிசையில் நின்று ஒருவாறாக பணத்தை கணக்கில் வரவு செய்து கொண்டேன்.
அப்பாடா ஒருவழியாக வேலை முடிந்தது. இனி திருமண விழாவிற்குப் போகலாமென்று நினைத்துக் கொண்டு கடைக்;கு வந்தால், எனது மனைவியின் முகம் மாறியிருந்தது. நேரம் போனதால் வந்த எரிச்சலாக்கும் என நினைத்துக் கொண்டேன்.

'இந்தப் பொம்பிளைகளே இப்பிடித்தான் புருசன் படுற பாடு இவையளுக்கு எங்கே தெரியப் போகிறது?'
மனதுக்குள் சபித்துக் கொண்டேன்.

'வாங்கோ'

அட யாரது எனது நிலையத்துக்குள்ளே என்னையே வரவேற்பது? ஆச்சரியத்துடன் உள்ளே நோட்டம் விட்டால்.. அங்கே கலா.

'அப்ப உங்களுக்கு இன்னும் கலியாணமே ஆகேல்லை...? '

'இந்தக் கேள்விக்கு எப்பவுமே ... ' வந்த வார்த்தை விபரீதத்தை அறிந்து அப்பிடியே நின்று விட்டது.

சிலவினாடி மௌனமாக நிற்க வேண்டிய கட்டம். அப்படியே நின்றேன். என்னைக் கடந்து கலா செல்வது தெரிந்தது.

அன்று பார்த்த கலாவை நான் இதுவரை மீண்டும் சந்திக்கவேயில்லை.


அதுக்குப் பிறகு எப்பிடி எனது மனைவியை சமாதானப் படுத்தினேன் என்று நான் இங்கே எழுத விரும்பவில்லை.

அதன்பிறகு யாரும் கேட்காமலேயே சொல்ல ஆரம்பித்து விட்டேன்.
„எனக்கு கலியாணம் எப்போவா ஆச்சு. மூன்று பிள்ளைகள் இருக்கினம்' என்று

Sunday, May 02, 2010

மெல்லப் போ மெல்லப் போ


எனக்கு அப்பொழுது ஒன்பது வயது. எனது அக்காவுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நெல்லியடி லக்சுமி தியேட்டரில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு அந்தப் படம் பார்க்க ஆசை. ஆனால் யார் கூட்டிப் போவது? அம்மாவிடம் கேட்டால் என்னாகும் என்று அக்காவுக்குத் தெரியும். மெதுவாக எனது காதுக்குள் போட்டு வைத்தார். „சிவாஜி நடிச்ச கர்ணன் படம் ஓடுதாம். நல்ல படமாம். பள்ளிக் கூடத்திலை பிள்ளைகள் கதைச்சினம். உனக்கு பார்க்க ஆசையில்லையே?' எனக்குள் படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு, அக்கா அதில் குளிர் காயலாம் எனக் கணக்குப் போட்டுக் கொண்டாள்.

எப்படி கர்ணன் படத்தைப் பார்க்கலாம் என்று எனக்குள் நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். எந்த வழியில் கணக்குப் போட்டாலும் படம் பார்க்க காசு பிரச்சினையாக இருந்தது. படம் பார்ப்பதற்கான காசை என் அம்மாவிடம் கேட்க விரும்பவில்லை. சிரமங்களுக்கு மத்தியில் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. இதற்குள் சினிமா என்று கேட்டால், „அதொன்றும் இப்ப வேண்டாம் பேசாமல் படி' என்ற பதில்தான் வரும். இந்தப் பதிலை நான் பல தடவைகள் கேட்டு, சலித்துப் போயிருக்கிறேன். அக்காவும் என்னைக் காணும் நேரம் எல்லாம் „கர்ணன் நல்ல படமடா' என்று சொல்லி, படம் பார்க்கும் எனது எண்ணத்துக்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

எனது விளையாட்டுத் தோழன் தேவனின் அண்ணன் பிலிப், லக்சுமி தியேட்டரில் பிலிம் ஒப்பரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சும்மாதான் கேட்டேன். „கர்ணன் நல்ல படமோ' என்று.

„ஏன் பாக்கப் போறியே? வேணுமென்றால் சனிக்கிழமை மெட்னி சோவுக்கு வா. ரிக்கெற் இல்லாமல் உள்ளை விடுறன்' என்றார்.

அதுதானே எனக்கு வேண்டியதாக இருந்தது. „நானும் அக்காவும் வருகிறோம்' என்றேன்.

„சரி வாங்கோ' என்றார்

இந்த விடயத்தை அக்காவிடம் சொன்னேன். அம்மாவிடம் கேட்டுப் பார்ப்போம் என்று சொன்னாள். ஒருவாறு இருவருமாக அம்மாவிடம் படம் பார்க்கும் ஆசையைச் சொன்னோம். எடுத்த எடுப்பிலேயே அம்மாவிடம் இருந்து மறுப்பு வந்தது. பின்னர் கெஞ்சிக் கேட்டதால் „கவனமாகப் போய் வரவேணும்' என்று பல எச்சரிக்கைகள் தந்து அனுமதி தந்தார்.

சனிக்கிழ
மையும் வந்தது. காலை பத்து முப்பதுக்கு மெட்னி சோ ஆரம்பித்து விடும். எனது கையில் பத்து சதம்தான் இருந்தது. அக்காவையும் அழைத்துக் கொண்டு கிராமக் கோட்டடியில் பஸ் எடுத்து, இருவருக்கும் பஸ் கட்டணமாக இருந்த பத்து சதத்தையும் கொடுத்து விட்டு கையில், பையில் சுத்தமாக ஒன்றும் இல்லாமல் நெல்லியடிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போன நேரம் படம் ஆரம்பித்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. ஆனாலும் சொன்ன சொல் தவறாமல் மேல் மாடியில் இருந்து நாங்கள் வருகிறோமா என பிலிப்பண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் கீழே இறங்கி வந்து „என்ன லேற்றா வாறிங்கள்?' எனக் கேட்டபடியே எங்களை முதலாம் வகுப்பில் கொண்டு போய் இருத்தினார். படம் தொடங்கியதில் சிறிய அதிருப்தி இருந்தாலும் சிறிது நேரத்தில் படத்துடன் ஒன்றிப் போனோம். இடைவேளை வந்தது. கடலை, வடை என தியேட்டருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சோடா விற்பவர் சோடாப் போத்தல்களில், சோடா ஓப்னரால் தட்டி சத்தம் எழுப்பி தனது வியாபாரத்தை விமரிசையாக நடத்திக் கொண்டிருந்தார். கூடவே எங்களது எரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒருவாறு இடைவேளை முடிந்து படம் ஆரம்பமானது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்தால் வெப்பக் காற்று முகத்தில் வீசியது. பிலிப் அண்ணனைத் தேடி, நன்றி சொல்லிப் புறப்பட்டோம். பஸ் நிலையம் வந்தோம். பருத்தித்துறைக்குப் போவதற்கு பஸ் நின்றது. ஆனால் கையில் காசுதான் இல்லை. வீடு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. மதிய நேரம். கொளுத்தும் வெயில். பசி வேறு சாப்பிடு என்றது. ஆனாலும் வீடு போய்ச் சேர்வதற்கு ஒரே வழிதான் இருந்தது. அது நடப்பது என்பதே. அக்காவிடம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். „நடப்போம்' என்றாள்.

நடக்க ஆரம்பித்தோம். மாலுசந்தி, மூத்தனார் கோயில், தெருமூடி மடம் எனக் கடந்து மந்திகையை அண்மித்திருந்தோம். அப்பொழுது அக்கா சொன்னாள் „இண்டைக்குத் துலைஞ்சம். அங்கை பார் ரத்தினண்ணை சைக்கிளிலை வாறார். நாங்கள் நடந்து வாறதைக் கண்டிட்டு கீர்த்தியண்ணனிட்டை போய்ச் சொல்லப் போறார்'

ரத்தினண்ணை எங்களைக் கண்டதும் ஆச்சரியமாகப் பார்த்தார். „எங்கை போட்டு வாறீங்கள்?' படம் பார்த்து விட்டு வருவதாகச் சொன்னோம். „ஏன் பஸ் இல்லையே?' „காசை துலைச்சுப் போட்டேன்;' வாயில் இருந்து பொய் பாய்ந்து வந்தது. அக்கா என்னை நிமிர்ந்து பார்த்தாள். 'நல்ல வடிவா பொய் சொல்லுறாய்' என்று அந்தப் பார்வை சொன்னது. 'நல்ல வெயில், நெல்லியடியிலை இருந்து நடந்தே வந்து கொண்டிருக்கிறீங்கள்?' சொல்லிவிட்டு எனது சேட் பொக்கெற்றில் ஐம்பது சதத்தை போட்டு விட்டு, 'மந்திகைச் சந்தியிலை பஸ் வரும் ஏறிப் போங்கோ' என்று சொல்லி விட்டுப் போனார்.

„நெல்லியடிக்குப் போனது, படம் பாத்தது, வெய்யிலுக்குள்ளாலை நடந்து வந்தது, ரத்தினண்ணையிட்டை காசு வாங்கினது எண்டு இண்டைக்கு கீர்த்தியண்ணனிட்டை வேண்டப் போறம்' அக்கா சொல்லிக் கொண்டாள். இதுக்குள் நான் பொய் சொன்னதை நீ போட்டுக் கொடுத்தால் அதுக்கும் இருக்கு என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் ஐம்பது சதத்தை சேட் பொக்கெற்றில் இருந்து கையில் எடுத்துக் கொண்டேன். பட இடைவேளையில் கடலை, வடை விற்று எனக்கு எரிச்சலை உண்டாக்கியவர்கள் நினைவுக்கு வந்தார்கள். அக்காவையும் அழைத்துக் கொண்டு மந்திகை ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்த கடைக்குப் போய் கடலைப் பருப்பு வடை, உழுந்து வடைகளை வாங்கி அக்காவுக்கும் சாப்பிடக் கொடுத்து, நானும் சாப்பிட்டுக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடக்கும் போது ரத்தினண்ணை வருகிறாரா என அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

வீட்டில் அர்ச்சனை நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை ரத்தினண்ணை கீர்த்தியண்ணனுக்கு சொல்லவில்லையோ? அல்லது பாவம் சின்னதுகள் என்று கீர்த்தியண்ணன் பேசாமல் விட்டு விட்டாரோ? தெரியவில்லை.
எது எப்படியோ அக்காவுக்கு கர்ணன் படம் காட்டியாச்சு. நானும் பார்த்தாச்சு.

Sunday, April 25, 2010

செலவு பத்தணா



பெரியம்மாவின் மகளான லலியக்காவின் திருமணத்துக்கு ராஜாண்ணை தன்னிடம் சேமிப்பில் இருந்த பணத்தை எல்லாம் செலவழித்து விட்டார். இப்பொழுது கையிருப்பு அவரிடம் இல்லை. ஆனாலும் அவரது வியாபாரம் ஏதோ ஓடிக் கொண்டிருந்தது.

ராஜாண்ணை, ஒருநாள் ஏதோ நினைத்து விட்டு, வீட்டின் பின் பகுதியில் ஒரு கோழிப் பண்ணை போட்டால் என்ன என்று கேட்டார். அவர் கேட்டார் என்றால், அது உடனே அமுலாக்கப் பட்டு விடும். கோழிப் பண்ணையும் அவர் விருப்பப் படியே ஏற்பாடானது. எனது அறிவுக்கு ஏற்றபடி கோழிக் கூடுகளை இரண்டு அடுக்குகளில் தயார் படுத்தி, கீழ், மேல் தட்டுகளில் உமி பரப்பி கோழிகளை, அம்மாவும், அக்காவும், நானுமாக சேர்ந்து குடியேற்றினோம்.

கோழிகள் வளர்ந்து முட்டைகள் போட்டு, கோழிப் பண்ணை ஓகோ என்று போய்க் கொண்டிருந்தது. எனக்குத்தான் அதிகளவு அவற்றைப் பராமரிக்க முடியாமல் போயிற்று. காரணம் எனது வயது அப்படி. படிப்பு முடிந்தால் நண்பர்களுடன் ஊர் சுற்ற வேண்டும் என்ற நினைப்பு. பிறகு எப்படி பண்ணையைப் பராமரிக்க, அம்மா, அக்காவிற்கு உதவி செய்ய நேரம் இருக்கிறது? இதனால் அவர்கள் இருவருக்கும் வீட்டு வேலைகளோடு இந்த வேலையும் சேர்ந்து கொண்டது. ஆனாலும் இருவரும் ஏதும் சொல்லவில்லை.

க.பொ
.த. பரீட்சையில் நான் சித்தி அடைந்த போது வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ராஜாண்ணை ஒரு படி மேலே போய் கோழிகளுக்கு குளுக்கோஸ் கலந்து தண்ணீர் கொடுத்தார். எனது மேற்படிப்பு ஆரம்பமாகத் தொடங்கிய போது, கோழிப் பண்ணையை அம்மாவும், அக்காவும் பார்த்துக் கொள்வது சிரமமானது என ராஜாண்ணை கணக்குப் போட்டுக் கொண்டார். அப்பொழுது வியாபாரத்தில் அவர் ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு வந்து விட்டதால், கோழிப் பண்ணையை கைவிட்டு விடலாம் என்ற நிலைக்கு வந்தார்.

பண்ணையில் இருந்த கோழிகளை அப்படியே வாங்கிக் கொள்வதாக காளை என்கிற கதிர்காமலிங்கம் முன்வந்தார். கொள்வனவுக்கான பணத்தை தவணை முறையில் தருவதாக அவர் சொல்லி, கோழிகளை அட்டைப் பெட்டிகளில் வைத்து அள்ளிக் கொண்டு போனார். அம்மா கேட்டார், 'கோழிகளைக் கொண்டு போறான். காசு தருவானா?' என்று. அம்மாவின் சந்தேகம் எனக்கும் இருந்தது. ஆனாலும் பண்ணையைக் கைவிடுவது நல்லது என்ற எண்ணமே அப்பொழுது எங்களுக்குள் மேலோங்கி இருந்ததால் பணத்தைப் பின்னாடி வாங்கிக் கொள்ளலாம் என்ற சிறிய நம்பிக்கை இருந்தது. அந்த நம்பிக்கையும் பின்னாளில் பொய்த்துப் போனது. தவணை முறையில் பணம் தருவதாகச் சொன்ன கதிர்காமலிங்கம் பணத்துக்கு தவணை சொல்லிக் கொண்டிருந்தாரே தவிர பணம் வந்த பாடில்லை. ஊரில் சொன்னார்கள் „காளை வீட்டிலை இப்ப ஒவ்வொரு நாளும் கோழிக் கறி' என்று. அம்மாவிடம் இந்த விசயத்தைச் சொன்னேன். அம்மா சிரித்துக் கொண்டே சொன்னார், 'கோழிப் பண்ணையால் நட்டம் என்று எழுதி வை'

Sunday, April 18, 2010

இது காதலினால்தான்

அவள் என் வாழ்வின் பதின்மத்தில் சந்தித்துக் கொண்டவள். என் உள்ளத்தில் புகுந்து காதல் என்னும் கதவை முதல் முதலாகத் திறந்து மலர் தூவிச் சென்றவள். அவள் பெயர் மேரி (அவள் வாழ்வின் நலம் கருதி, அவளது பெயரை இங்கே சிறியதாக்கி இருக்கிறேன்)

அவள் கிறிஸ்தவம். நான் இந்து. நாங்கள் இருவரும் மதங்களைப் பார்க்கவில்லை. ஆனால் அவள் பகுதியில் இருந்து அதைப் பார்த்தார்கள். அதுவும் அவள் சமயம் சார்ந்த பகுதியில் தாங்கள்தான் எல்லாம் என்றவர்களால் அது பார்க்கப் பட்டது. எனது நண்பர்களாக தேவதாஸ், தேவன், ரஞ்சன், றோய், யூலியன், பொன்ராசா எனப் பலர் கிறிஸ்தவர்களாக இருந்தும், இந்த விடயத்தில் அவர்கள் யாவரும் என்னை விட்டுத் தூரவே நின்று கொண்டார்கள். போர்க்களத்தில் தனித்து விடப்பட்ட அபிமன்யுவாக, காதல் களத்தில் நான் போராட வேண்டியதாக இருந்தது. போரில் அபிமன்யுவுக்கு ஏற்பட்ட முடிவே என் காதலுக்கும் ஏற்பட்டது.

அப்பொழுது பாடசாலை செல்வதற்கு முன்னால், காலையில் வீதியில் நண்பர்களாக ஒன்று கூடிக் கதைத்து விட்டே செல்வோம். அவ்வாறான பொழுதிலேயே, என்னைக் கடந்து போன காரில் இருந்து என்னை யாரோ பார்ப்பது போன்ற பிரமை. யார் என்று அறியுமுன் கார் போய் விட்டது. அடுத்தடுத்த நாட்களும் இது போன்ற நிகழ்வு. நண்பர்களிடம் விசயத்தைச் சொன்னேன். காத்திருந்து பார்த்தோம். அவர்கள்தான் அடையாளம் சொன்னார்கள். குடும்பமாக தலவாக்கொல்லை என்ற இடத்தில் வசித்தவர்கள் இப்பொழுது ஊருக்கு வந்திருக்கிறார்கள், அவள் பெயர் மேரி என்று.

தொடர்ந்து அவளது பார்வை எனக்கு காலையில் கிடைத்துக் கொண்டிருந்தது. அவள் வீடு ஒரு குச்சு ஒழுங்கைக்குள் இருந்தது. ஆதலால் அவள் தனது வீட்டில் இருந்து நடந்து வந்து இராசக்கோன் வீட்டின் உள்ளே நிற்பாள். வாடகைக்கார் வந்ததும் ஏறிப் போவாள். அவள் என்னைப் பார்க்கிறாள், சிரிக்கிறாள் என்ற விடயம் மெதுவாக ஊருக்குள் வெளியே வர, அவளுக்கான பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாகிப் போனது. இதில் அதிகம் தீவிரமாக நின்றவர், தேவதாஸின் அண்ணனான கிறிஸ்தோபர். என்னைக் கண்டால் அவருக்கு ஆகாது. அவருடன் மல்லுக் கட்ட எனக்கு வயது போதாது. ஆகவே அடக்கி வாசிக்க வேண்டிய நிலையில் நான் இருந்தேன். தாயுடன் தேவலாயத்துக்கு ஞாயிற்றுக் கிழமைகளில் போகும் போதும், காலயில் பாடசாலைக்குப் போகும் போதும் விழிகளாலும், புன்முறுவல்களாலும் மட்டும் பேசிக் கொண்டோம்.

க.பொ.த. பரீட்சை முடிவு வந்த அன்று மதியம் பாடசாலையில் பரீட்சை முடிவைப் பார்த்து விட்டு அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நான் மதிய இடைவேளைக்கு கல்லூரியில் இருந்து வந்து கொண்டிருந்தேன். அன்றுதான் அவளுடன் கதைக்கும் சந்தர்ப்பம் எனக்குக் கிட்டியது. பரீட்சை முடிவைச் சொன்னாள். தொடர்ந்து படிக்க வாய்ப்பு இருக்குமா எனத் தெரியவில்லை என்றாள். ஏதேதோ கதைத்தோம். தூரத்தில் அவளது சிறிய தகப்பன் வேதநாயகம் வந்து கொண்டிருந்தார். மேரி படபடக்கத் தொடங்கினாள். „போ' என்று வழியனுப்பி விட்டு சைக்கிளில் ஏறி, திரும்பி வந்த வழியே போனேன்.

அவள் எதிர்பார்த்ததே நடந்தது. அவள் தொடர்ந்து படிக்க வாய்ப்பில்லாமல் போய் விட்டது. இப்பொழுது தேவலாயத்துக்கு அவள் வந்தால்தான் பர்க்க முடியும் என்ற நிலை ஆகிப் போனது. சுற்றிவர தாய், சகோதர சகோதரிகள் உறவுகள் எனப் பலருக்கு நடுவில் ஞாயிறுகளில் சந்திரனாக அவள் வருவாள். அவள் என்னைப் பாக்கிறாளா? சிரிக்கிறாளா? என்று நோட்டம் விட்டுக் கொண்டே அவள் கூட வருபவர்கள் வருவார்கள். ஆனாலும் என்னைக் கண்டவுடன் அவள் முகம் மலர்ந்திருக்கும். ஒரே ஒரு பார்வை மட்டும் வீசி விட்டு போய் விடுவாள்.

ஒருநாள் கிறிஸ்தோபருடன் எனக்கு நேருக்கு நேர் மோத வேண்டியதாகப் போயிற்று. அவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். எனது புதிய நண்பர்கள் இருவர் என்னுடன் நின்று கொண்டிருந்தார்கள். இன்று கிறிஸ்தோபரைக் கேட்டு விடுவது என அவரை வழி மறித்து வாக்கு வாதத்தில் ஈடுபட்டேன். என்னுடைய புதிய நண்பர்களைப் பார்த்து கிறிஸ்தோபர் கொஞ்சம் பயம் கொண்டிருந்தது எனக்கு விளங்கியது. அவரும் சாதுரியமாக எனது பேச்சுக்குப் பதில் சொல்லிக் கொண்டே மோட்டார் சைக்கிளை எனது வீட்டுப் பக்கம் திருப்பிக் கொண்டு போய் விட்டார். போனவர் எனது மூத்தவர் ராஜாண்ணைக்கு என்னைப் பற்றி போட்டுக் கொடுத்து விட்டார். விளைவு பெரிய தண்டனையாகப் போய் விட்டது.

„நீ இஞ்சை இருந்து படிச்சது போதும். கொழும்புக்குப் போ. அங்கையிருந்து படி.' என்று சொல்லி, பெட்டி படுக்கைகளைக் கட்டி என்னைக் கொழும்புக்கு போகச் சொல்லி விட்டார். என்னால் மறு பேச்சுப் பேசவோ, எனது பக்க நியாயங்களைச் சொல்லவோ முடியாத நிலை. கொழும்புக்குப் பயணமானேன்.

அங்கே படித்துக் கொண்டிருக்கும் போது, ஊரில் இருந்து தேவனின் கடிதம் வந்தது. மேரிக்கும் அவளது முறைப் பையனுக்கும் கலியாணம் முடிந்து விட்டது. அவள் அவளது கணவனுடன் அவனது ஊருக்குப் போய் விட்டாள் என்று. கடித்ததைப் படித்து விட்டு மடித்து வைத்தேன் கூடவே மேரியின் காதலின் பக்கத்தையும் மூடி வைத்தேன்.

சுமார் ஏழு ஆண்டுகள் கழித்து எனது வியாபார நிலையத்தில் இருந்தேன். ஏதோ ஒரு காந்த அலை என்னை ஊடுருவுவதை அறிந்து நிமிர்ந்து பார்த்தேன் அதே பார்வை வீச்சுடன் மேரி நின்றிருந்தாள். ஒரு கணம் நான் என்னை மறந்திருந்தேன். சுதாகரித்துக் கொண்டு மீண்டும் பார்த்தேன் அவள் பக்கத்தில் அவள் கணவன். அவனை முதன் முதலாக அன்றுதான் சந்திக்கிறேன். வியாபார நிலையத்தில் தில்லையண்ணனும், அப்புத்துரையண்ணனும் ´பிசி ` ஆக இருந்தார்கள். எனவே மேரியையும் அவள் கணவனையும் கவனிக்க வேண்டியது எனது வேலையாகப் போயிற்று. இருக்கையை விட்டு எழுந்து போய் அவர்களை எதிர் கொண்டேன். அவள் கணவன்தான் கதைத்தான். பிள்ளையின் „பீடிங் பொற்றிலுக்கு நிப்பிள் கிடைக்குமா?' எனக் கேட்டான். அது எங்களிடம் இருக்கவில்லை. „இல்லை' என்றேன். ஏமாற்றத்துடன் இருவரும் போனார்கள். வீதியில் நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளில் மேரியை பின்னுக்கு இருத்தி அவன் கணவன் அதை ஓட்டிச் சென்றான்.

அன்று அவள் நினைவு மீண்டும் வந்தது. உனது கணவனை எனக்குக் கொண்டு வந்து காட்டுவதற்கும், உனக்கு பிள்ளை இருக்கிறது என்றும் சொல்வதற்கு வந்தாயா? வளமாகத்தான் இருக்கிறேன் என்னை நினைத்து கவலைப் படாதே என்று சொல்ல வந்தாயா? இல்லை நான் எப்படி இருக்கிறேன் என்று அறிய வந்தாயா? கேள்விகளுடன் அன்றைய பொழுது போய் விட்டது, கூடவே அவளது நினைப்பும்.

மீண்டும் இப்பொழுது அவள் வந்தாள். அதே பார்வை அதே புன்னகையுடன், "நலமாக இருக்கிறாயா?" எனக் கேட்டு புன்முறுவல் பூத்தாள். திடுக்கிட்டுப் போனேன். விழித்துப் பார்த்தால் நேரம் அதிகாலை ஒரு மணி. என் கனவில்தான் அவள் வந்திருந்தாள். அதுவும் முப்பத்தியொரு வருடங்களுக்குப் பிறகு. ஏன்? என்னையே கேட்கிறேன். இவ்வளவு காலமும் என்னுள் நீ உறங்கி இருந்தாயா? அல்லது உனக்கு ஏதேனும் தொல்லைகளா? மனது அடித்துக் கொள்கிறது.

Saturday, April 03, 2010

என்னதான் நடக்கும் நடக்கட்டுமே

அம்மாவிடம் ஒரு சிங்கர் தையல் மெசின் இருந்தது. சிறுவர்களாக நாங்கள் இருந்த போது, அம்மா அதில் தைத்துத் தந்த உடைகளைத்தான் நாங்கள் அணிந்து கொண்டோம். ஏன் எனது மகனுக்கும், மகளுக்கும் கூட அம்மா அதில் உடைகள் தைத்துத் தந்திருக்கின்றார். நான் நினைக்கிறேன் அந்தத் தையல் மெசினை எனது தந்தை அம்மாவிற்கு பரிசளித்து இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அம்மா ஏன் அந்த தையல் மெசினை துடைத்து எண்ணை விட்டு ஒரு குழந்தை போல் பராமரித்து நீண்ட காலமாக தன்னுடன் வைத்திருக்க வேண்டும்.

அன்றைய காலங்களில் பொங்கல், தீபாவளி நேரங்களில் அந்த மெசினுக்கு ஓவர்டைம். எங்கள் எல்லோரையும் நித்திரைக்கு அனுப்பி விட்டு அம்மா உடைகளைத் தைக்க ஆரம்பித்துவிடுவார். தையல்மெசின் போடும் அந்த சத்தத்தைத் தாலாட்டாக ஏற்றுக் கொண்டு, புது உடைகளைப் பற்றிய கனவுகளுடன் நாங்களும் நல்ல பிள்ளைகளாக நித்திரை ஆகிவிடுவோம். காலையில் நித்திரையால் எழுந்து பார்த்தால் அழகான வடிவமைப்போடு உடைகள் தயாராக இருக்கும். அம்மா தனது காலை உணவை தயாரிக்கும் பணியில் இருப்பார். எங்களுக்கு வயிறும், மனதும் நிறைய அவர் செய்த பணிகள் இன்னும் ஏராளம்.

எனது தந்தை மறைந்த காலகட்டம். பொருளாதாரத்தில் குடும்பம் தள்ளாடிய நேரம். தீபாவளி வேறு நெருங்கிக் கொண்டிருந்தது. சுற்றம் சூழலில் தீபாவளி உடைகளைப் பற்றிய பேச்சு. நாங்களோ சிறுவர்கள். பிள்ளைகளுக்கு இந்தமுறை ஏதும் உடைகளை வாங்கிக் தைத்துக் கொள்ள வசதி இல்லையே என்று அம்மா மனதுக்குள் கவலைப் பட்டிருப்பார். நாங்கள் சிறுவர்களாக இருந்தாலும் இந்த விடயத்தில் அம்மாவுக்கு சிரமம் ஏதும் தரவே இல்லை.

அடுத்த நாள் தீபாவளி. அமளிதுமளி ஏதும் எங்கள் வீட்டில் இல்லை. ஒவ்வொருவரும் அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்தோம் எனக்கு படிக்கும் நேரம். படித்துக் கொண்டிருந்த எனது கண்ணில் தட்டுப் பட்டது மேசையில் சீலாண்ணன் படித்து விட்டு வைத்திருந்த பேசும் படம். அக்கம் பக்கம் பார்த்து விட்டு பாடப் புத்தகத்தை மேசையில் வைத்து விட்டு பேசும் படத்தை எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன்.

'நல்லா படிக்கிறாய் போலை'
அம்மாவின் குரல் கேட்டு திடுக்கிட்டு பேசும் படத்தை மேசையில் போட்டேன். போட்ட வேகத்தில் விரிந்த பக்கத்தில் கையை உயர்த்திய போஸ்ஸில் எம்.ஜி.ஆர். படம். அம்மா பேசும் படத்தை எடுத்து அந்தப் பக்கத்தை உற்றுப் பார்த்து விட்டு, என்னைப் பார்த்து "பாடப் புத்தகத்தைப் படி" என்று சொல்லி விட்டு பேசும் படத்தையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்.

அன்று அம்மா தனது வேலைகளை முடித்து விட்டு தையல் மெசினை எடுத்து துடைத்துக் கொண்டிருந்தார். முன்னர் தைத்து விட்டு மிஞ்சி இருந்த துணிகளை எடுத்து ஒழுங்காக அடுக்கிக் கொண்டிருந்தார். நான் நித்திரைக்குப் போய் விட்டேன். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தால், தையல் மெசினுக்குப் பக்கத்தில் இரண்டு உடைகள் மடித்து வைக்கப் பட்டிருந்தன. ஒன்று பல வர்ணங்களில் அழகிய பெண்களுக்கான உடை. அக்கா, '"இது எனக்கு அம்மா தைத்தது'" என அதை எடுத்துக் கொண்டார். மற்றது வெள்ளை சேர்ட். அதில் கொலருக்குக் கீழே பச்சை நிறத்தில் ஒரு போர்டர். அந்த போர்டரில் அழகான இரண்டு தெறிகள். எங்கேயோ அந்த சேர்டை பார்த்த ஞாபகம். தையல் மெசினுக்கு அருகில் இருந்த பேசும் படத்தை எடுத்துப் புரட்டினேன். கையை மேலே தூக்கிய வண்ணம் எம்.ஜி.ஆர். அதே சேர்ட்டைத்தான் போட்டிருந்தார். கையில் இருந்த சேர்ட்டையும், படத்தில் இருந்த சேர்ட்டையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அச்சு அசலாகவே இருந்தது.

குளித்துவிட்டு வந்து சேர்ட்டைப் போட்டுப் பார்த்தேன். அழகாகப் பொருந்தி இருந்தது. அக்காவைப் பார்ததேன் வண்ண மயமாக சட்டையில் ஜொலித்தக் கொண்டிருந்தாள். பக்கத்து வீட்டு திருமாவும், குட்டியும் அக்காவைப் பார்த்து சொல்லிக் கொண்டார்கள், "நாங்களும் உன்ரை கொம்மாவைக் கொண்டு இப்பிடி ஒண்டு தைக்கோணும். இந்த உடுப்போடை உன்னைப் பார்க்க பஞ்சவர்ணக் கிளி மாதிரி இருக்கு" என்று.

"எம்.ஜி.ஆர். மாதிரி சேர்ட் போட்டிருக்கிறான்" என்று எனது நண்பர் வட்டத்தில் நான் அன்று ஒரு கதாநாயகன். எனது வாழ்நாளில் நான் அதிகம் பாவித்தது அந்த ஒரு சேர்ட்தான் என்று நினைக்கிறேன். பின்னாளில்; எங்கள் ஊர் சென்றல் தியேட்டரில் பணத்தோட்டம் காண்பித்த போது நண்பர்களுடன் போய்ப் பார்த்தேன்.

'"என்னதான் நடக்கும் நடக்கட்டுமே
இருட்டினில் நீதி மறையட்டுமே..................'" என்று எம்.ஜி.ஆர். கையைக் காற்றில் வீசிப் பாடிக் கொண்டிருந்தார். அதில் அவர் போட்டிருந்த சேர்ட் போலவே நானும் சேர்ட் போட்டுக் கொண்டு அந்தப் பாடலை ரசித்துக் கொண்டிருந்தேன்.

எஞ்சி இருந்த துண்டுத் துணிகளில் மற்றவர் மெச்சும்படி அன்றைய நிலையை வெற்றிகரமாகக் கையாண்ட எனது தாயை நினைத்துக் கொள்கிறேன். அம்மா என்ற அந்த அற்புதக் கலைஞியை எண்ணிப் பார்த்து வியக்கிறேன்.

Sunday, March 07, 2010

வெகு பொருத்தமாய் சாப்பாடு



இடியப்பத்துக்கும் தேங்காய்ப்பால் சொதிக்கும் நல்ல கொம்பினேஸன். ஆனாலும் எனக்குப் பிடித்தது என்னவோ இடியப்பத்துக்கு எனது அம்மா ஸ்பெசலாக வைக்கும் புளிக் குழம்பு. அந்தப் புளிக் குழம்பு அதிக உறைப்பும் இல்லாமல் சொதி போலவும் அல்லாமல் ஒரு இடைப்பட்ட நிலையில் ரொம்ப ருசியாக இருக்கும். அம்மா அவித்துத் தரும் அரிசிமா இடியப்பமும் அந்தப் புளிக் குழம்பும் இன்று நினைத்தாலும் ருசிக்கும்.

அன்று எனது அக்கா இந்திராணிக்கும் எனக்கும் ஏதோ ஒரு விடயத்தில் சிறு வாக்குவாதம். வாக்குவாதம் முடியும் போது „மூதேவி' என்று என்னைப் பார்த்து திட்டி விட்டு அக்கா, அம்மாவுடன் இணைந்து சமைப்பதற்கு சமையல் அறைக்குள் சென்று விட்டாள் எனக்கு கோபம் உச்சியில் இருந்தது. மூதேவி என்ற வார்த்தை காதுக்குள் வந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

இரவு சாப்பிடும் நேரம். ராஜாண்ணை வேலையால் வந்து குளித்துக் கொண்டிருந்தார். அவர் குளிக்கப் போகிறார் என்றால் அம்மாவும், அக்காவும் பரபரப்பாகி விடுவார்கள். ராஜாண்ணை குளித்து விட்டு வந்து சாமி கும்பிட்டு வரும் போது சாப்பாடு, மேசையில் சூடாக இருக்க வேண்டும். அதுதான் அவர்களது பரபரப்புக்குக் காரணம். நான் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். ஆதலால் என்னை அவர்களால் குழப்ப முடியவில்லை. இடியப்பமும்,
புளிக் குழம்பும் சுவையாக இருந்தது. ஆனாலும் அக்கா என்னைப் பார்த்துச் சொன்ன மூதேவி என்ற வார்த்தை காதில் உறைப்பாகவே இருந்தது.

நான் ஒருவாறு சாப்பிட்டு முடிந்து எழுந்து போனதின் பிற்பாடு அக்கா, ராஜாண்ணை சாப்பிடுவதற்காக மேசையை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார். ராஜாண்ணை இப்பொழுது பூசை அறைக்குள் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். எந்நேரமும் சாப்பாட்டு மேசைக்கு வரலாம் என்ற நிலையில் அக்கா அம்மாவை அழைக்கும் குரல் கேட்டது. நான் வேப்ப மரத்துக் காற்று வாங்கிக் கொண்டு சாப்பிட்டது சமிக்க நடை போட்டுக் கொண்டிருந்தேன்.

„கொஞ்சமாகவே இடியப்பம் அவிச்சனீ?' அம்மா அக்காவைக் கேட்பது எனக்குக் கேட்டது.
மெதுவாக சமையல் அறைப் பக்கமாக நடந்தேன்.

„இரண்;டு சுண்டு மாவிலை அவிச்சனான். இருபத்தியேழு இடியப்பம். நான் எண்ணினனான்'

„அப்ப எங்கை? பூனை வந்து திண்டிட்டுப் போட்டுதே? ராஜா சாமி கும்பிட்டுட்டு வரப்போறான்' அம்மாவின் பேச்சில் பரபரப்பு தெரிந்தது.

„பூனை வந்து சாப்பிடேல்லை. உங்கடை செல்லப் பிள்ளைதான் முழுங்கிட்டுப் போட்டுது'

„அவ்வளத்தையுமோ?' அம்மாவின் பேச்சில் ஆச்சரியம் தெரிந்தது.'சரி குழம்பிருக்கே?'

„சட்டிதான் இருக்கு' அக்காவின் குரல் உடைந்திருந்தது.

„என்ன சாப்பாடு இன்னும் செய்யேல்லையோ?' ராஜாண்ணை சாப்பாட்டு மேசை அருகில் இருந்து கேட்டார்.

„கொஞ்சம் பொறு இடியப்பம் அடுப்பிலை இருக்கு' அம்மா சாதுர்யமாகச் சமாளித்தார்.

அம்மாவும் சரி, அக்காவும் சரி சமையலில் புயல் வேகம் காட்டுவார்கள். அது அன்று மிகப் பெரிய சூறாவளியாக சமையல் அறையில் மாறி இருந்தது. அடுத்த ஐந்தவாது நிமிடம் ராஜாண்ணைக்கான சாப்பாடு தயார்.

நான் வேப்பமரத்தடியில் உலாவிக் கொண்டிருந்தேன். அக்கா அந்த இடத்திற்கு வந்தாள். „எல்லாத்தையும் திண்டிட்டு உலாத்திறியோ? சனியன்.. சனியன்' சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ராஜாண்ணைக்கு கேட்கக் கூடாது என்று மெல்லிய குரலில் அவசரமாக என்னைத் திட்டிவிட்டு வீட்டுக்குள் போய் விட்டாள். எ
னக்கு இப்பொழுது மூதேவியுடன் சனியனும் சேர்ந்திருந்தது.

அடுத்ததாக அம்மா வந்தார். „அவளைப் பழி வாங்கிறதெண்டு கொண்
ணனுக்கு சாப்பாடு வைக்காமல் சாப்பிட்டது நல்லா இல்லை' என்று சொல்லி எனது தவறை சிரித்தபடி உணர்த்தினார்.

அந்த நிகழ்வுக்குப் பிறகு சாப்பிடும் பொழுது „யார் இன்னும் சாப்பிட வேணும்' என்று கேட்டு விட்டுத்தான் நான் சாப்பிடுவதைப் பழக்கமாக்கிக் கொண்டேன்.

Thursday, January 07, 2010

அன்பால் விளைந்த பழியம்மா

கபொத உயர்தரம் படித்துக் கொண்டிருந்த நேரமது.

மாலைவேளைகளில் சந்தியில் நிற்கும் பெரியகுட்டி, சின்னக்குட்டி, பாலு ஆகியோரின் பழக்கம் எனக்கு மெதுவாக ஏற்பட்டுக் கொண்டிருந்தது. அவர்களுடைய வீடுகளும் சந்திக்கு அருகிலேயே அமைந்திருந்தது. ஏறக்குறைய எனது வயதுதான் அவர்களுக்கும். அவர்கள் என்னோடு சேர்ந்து படிக்காவிட்டாலும் ஏதோ ஒரு ஈர்ப்பு என்னை அவர்களுடன் பழக வைத்தது. சந்தியில் நிற்பவர்கள் காவாலிகள் என்ற கருத்து இருந்த நேரம். ஆகவே அவர்களுடனான எனது பழக்கம் பட்டும் படாமலுமே இருந்தது. பாடசாலை மாணவிகளைக் கிண்டலடிப்பதும், ரசிப்பதுவுமே அந்த நேரத்தில் அவர்களது மாலை வேளையின் முக்கிய கடமையாக இருந்தது.
ஒருநாள் எனது மூத்த அண்ணன் ராஜாண்ணை யாழ்ப்பாணம் போவதற்கு பஸ்ஸிற்காக சந்தியில் காத்து நின்றார். யாழ்ப்பாணத்தில் கணக்காளராக வேலை செய்து கொண்டிருந்த சிவஞானசுந்தரம் என்பவரும் பஸ்ஸிற்காக அங்கே காத்துக் கொண்டு நின்றார். அவர் எனது அண்ணனை அணுகி,
"நீ மூர்த்தியற்றை மகன்தானே?" என்று கேட்டிருக்கின்றார்.
அண்ணனும் "ஓம்" என்று பதிலளித்திருக்கிறார். அடுத்து சிவஞானசுந்தரத்தாரின் வாயில் இருந்து வந்த வார்த்தைகள் எனது அண்ணனை நிச்சயம் புரட்டிப் போட்டிருக்கும்.

"மூர்த்தியர் எவ்வளவு கௌரவமான மனுசன். அவரின்ரை பேரை ஏன் கெடுக்கிறாய்? சந்தியி லை நின்று போறவாற பெட்டைகளோடை சேட்டை விட்டுக் கொண்டு... சீ.. என்ன மானம் கெட்ட செயல்.."

அண்ணனுக்குப் புரிந்திருக்கும். அர்ச்சனை எந்த சாமிக்கு விழ வேண்டும் என்று. யாழ்ப்பாணப் பயணத்தை விட்டு விட்டு வேகமாக வீட்டிற்குத் திரும்பி என்னைத் தேடியிருக்கின்றார். நல்லவேளை அப்பொழுது நான் வீட்டில் இல்லை. பின்னர் அக்கா சொல்லித்தான் எனக்கு அந்த விசயம் தெரியும். போக வேண்டிய பஸ்ஸைத் தவற விட்டு அடுத்த பஸ்ஸில் யாழ்ப்பாணம் சென்று மாலை திரும்பிய ராஜாண்ணையின் கண்ணில் அன்று படாமல் நான் ஒளித்துக் கொண்டேன்.

உச்சி வெய்யில் சூரியனை மேகம் மூடுது - நம்
உள்ளம் எனும் கோயிலை கோபம் மூடுது
காற்றடித்தால் மேகம் கலைந்து ஓடுது
நேரம் போனால் கோபம் மாறி மனது மாறுது

என்று ஒரு பாடல் இருக்கின்றது. ராஜாண்ணையின் மனதும் அதுபோலத்தான் என எனக்குத் தெரியும். அடுத்தநாள் காலையில் என்னைக் கூப்பிட்டு சந்தியில் நிற்காதே படிக்கிற வேலையைப் பார் என அறிவுரை தந்தார்.

ஆனாலும் எனக்கு ஒரு உறுத்தல். சிவஞானசுந்தரத்தாரின் மகள்களை நான் ஏறெடுத்தே பார்த்ததில்லை. இத்தனைக்கும் அவர்களை அழகிகள் என்று பெரிதாகச் சொல்லிக் கொள்ள அவர்களிடம் எதுவுமே இல்லை. எதுக்காக என்னைப் போட்டுக் கொடுத்தார்கள்? நீண்ட காலமாகியும் இந்த ஒரு கேள்விக்கு எனக்கு விடை கிடைக்கவில்லை.

Friday, January 01, 2010

அவனுக்கென்ன தூங்கிவிட்டான்

எனது தந்தை இறந்த நேரம். அப்பொழுது எனக்கு ஏழு வயது. வீடு எனது தந்தையின் உறவுகளால், மற்றும் துக்கம் விசாரிக்க வந்தவர்களால் நிறைந்திருந்தது. இரவு படுக்கைக்குக் கூட இடம் போதாமல் சிரமமாக இருந்தது. பெண்கள், சிறுவர்கள் என எல்லோரும் எல்லா அறைகளையும் எடுத்துக் கொண் டார்கள். பெரியவர்கள் இளைஞர்கள் எல்லோரும் அறைக்கு வெளியேயே படுக்கையைப் பகிர்ந்து கொண்டார்கள்.

எங்களில் மூத்தவனான ராஜாண்ணை இளைஞனாக இருந் ததால் அவரது படுக்கையும் அறைக்கு வெளியேதான் இருந்தது. அன்று இரவு எல்லோரும் நீண்ட நேரமாக எனது தந்தையின் அருமைகளையும் பெருமைகளையும் பேசிக் கொண்டிருந்து விட்டு படுக்கைக்குப் போனார்கள்.

அறைக்குள் அம்மாவின் அருகே படுத்திருந்தேன். திடீரென ராஜாண்ணை அலறும் சத்தம் கேட்டது. எல்லோரும் எழுந்து அறைக்கு வெளியே வந்தார் கள். அதில் அம்மாதான் முதலில் ஓடி வந்திருந்தார். அவருடன் சேர்ந்து நானும் வந்திருந்தேன். வெளியே படுத்திருந்தவர்கள் படுக்கையில் இருந்த படியே எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். ராஜாண்ணையின் உடல் வியர்த் திருந்தது. பேந்தப் பேந்த முழித்துக் கொண்டிருந்தார்.

"பிள்ளை பயந்து போட்டான் போல இருக்கு'"

"இருட்டிலை எதையோ கண்டு பயந்திட்டான்.. உடம்பெல்லாம் வேர்த்திருக்கு...'"

ஒவ்வொருத்தரும் தங்கள் வாயில் வந்ததைச் சொல்லிக் கொண்டார்கள்.

"என்னடா? என்ன? ஏன் கத்தினனீ?" என்று அம்மா, ராஜாண்ணையை மெதுவாகக் கேட்டுக் கொண்டிருந்தார்

"யாரோ என்ரை காலைப் பிடிச்சு இழுத்திச்சினம்" பயத்துடன் ராஜாண்ணையிடம் இருந்து பதில் வந்தது.

"தகப்பன்தான் வந்து இழுத்தாரோ?"

"மூத்த பிள்ளைதானே ஆசையிலை வந்திருப்பார்" நித்திரைக் கலக்கத்திலும் பயத்திலும் இருந்தவர்கள் ஏதாவது ஒன்றைச் சொல்லி அந்தச் சூழலை இன்னும் பயமாக்கிக் கொண்டிருந்தார்கள்.

"சரி.. சரி.. நீ உள்ளை வந்து படு" என்று அம்மா ராஜாண்ணையைக் கூட்டிக் கொண்டு அறைக்குள் போனார்.


எனக்கு இன்று கூட அந்தக் காட்சி நினைவில் நிற்கிறது.

"உண்மையிலேயே அப்பர் வந்து காலை இழுத்தவரா? இல்லாட்டில் வெளியே படுக்கப் பயந்து அண்டைக்கு அப்படி ஒரு நாடகம் ஆடி உள்ளே வந்து படுத்தனீயா?" என்று அடுத்தமுறை ராஜாண்ணையைச் சந்திக்கும் போது கேட்க வேண்டும்.