Sunday, May 02, 2010

மெல்லப் போ மெல்லப் போ


எனக்கு அப்பொழுது ஒன்பது வயது. எனது அக்காவுக்கு என்னை விட இரண்டு வயது அதிகம். நெல்லியடி லக்சுமி தியேட்டரில் கர்ணன் படம் ஓடிக் கொண்டிருந்தது. அக்காவுக்கு அந்தப் படம் பார்க்க ஆசை. ஆனால் யார் கூட்டிப் போவது? அம்மாவிடம் கேட்டால் என்னாகும் என்று அக்காவுக்குத் தெரியும். மெதுவாக எனது காதுக்குள் போட்டு வைத்தார். „சிவாஜி நடிச்ச கர்ணன் படம் ஓடுதாம். நல்ல படமாம். பள்ளிக் கூடத்திலை பிள்ளைகள் கதைச்சினம். உனக்கு பார்க்க ஆசையில்லையே?' எனக்குள் படம் பார்க்கும் ஆசையைத் தூண்டி விட்டு, அக்கா அதில் குளிர் காயலாம் எனக் கணக்குப் போட்டுக் கொண்டாள்.

எப்படி கர்ணன் படத்தைப் பார்க்கலாம் என்று எனக்குள் நான் கணக்குப் போட்டுப் பார்த்தேன். எந்த வழியில் கணக்குப் போட்டாலும் படம் பார்க்க காசு பிரச்சினையாக இருந்தது. படம் பார்ப்பதற்கான காசை என் அம்மாவிடம் கேட்க விரும்பவில்லை. சிரமங்களுக்கு மத்தியில் குடும்பம் ஓடிக் கொண்டிருந்தது. இதற்குள் சினிமா என்று கேட்டால், „அதொன்றும் இப்ப வேண்டாம் பேசாமல் படி' என்ற பதில்தான் வரும். இந்தப் பதிலை நான் பல தடவைகள் கேட்டு, சலித்துப் போயிருக்கிறேன். அக்காவும் என்னைக் காணும் நேரம் எல்லாம் „கர்ணன் நல்ல படமடா' என்று சொல்லி, படம் பார்க்கும் எனது எண்ணத்துக்கு எண்ணை ஊற்றிக் கொண்டிருந்தாள்.

எனது விளையாட்டுத் தோழன் தேவனின் அண்ணன் பிலிப், லக்சுமி தியேட்டரில் பிலிம் ஒப்பரேட்டராக வேலை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சும்மாதான் கேட்டேன். „கர்ணன் நல்ல படமோ' என்று.

„ஏன் பாக்கப் போறியே? வேணுமென்றால் சனிக்கிழமை மெட்னி சோவுக்கு வா. ரிக்கெற் இல்லாமல் உள்ளை விடுறன்' என்றார்.

அதுதானே எனக்கு வேண்டியதாக இருந்தது. „நானும் அக்காவும் வருகிறோம்' என்றேன்.

„சரி வாங்கோ' என்றார்

இந்த விடயத்தை அக்காவிடம் சொன்னேன். அம்மாவிடம் கேட்டுப் பார்ப்போம் என்று சொன்னாள். ஒருவாறு இருவருமாக அம்மாவிடம் படம் பார்க்கும் ஆசையைச் சொன்னோம். எடுத்த எடுப்பிலேயே அம்மாவிடம் இருந்து மறுப்பு வந்தது. பின்னர் கெஞ்சிக் கேட்டதால் „கவனமாகப் போய் வரவேணும்' என்று பல எச்சரிக்கைகள் தந்து அனுமதி தந்தார்.

சனிக்கிழ
மையும் வந்தது. காலை பத்து முப்பதுக்கு மெட்னி சோ ஆரம்பித்து விடும். எனது கையில் பத்து சதம்தான் இருந்தது. அக்காவையும் அழைத்துக் கொண்டு கிராமக் கோட்டடியில் பஸ் எடுத்து, இருவருக்கும் பஸ் கட்டணமாக இருந்த பத்து சதத்தையும் கொடுத்து விட்டு கையில், பையில் சுத்தமாக ஒன்றும் இல்லாமல் நெல்லியடிக்கு வந்து சேர்ந்தோம். நாங்கள் போன நேரம் படம் ஆரம்பித்து ஐந்து நிமிடம் ஆகியிருந்தது. ஆனாலும் சொன்ன சொல் தவறாமல் மேல் மாடியில் இருந்து நாங்கள் வருகிறோமா என பிலிப்பண்ணன் பார்த்துக் கொண்டிருந்தார். எங்களைக் கண்டவுடன் கீழே இறங்கி வந்து „என்ன லேற்றா வாறிங்கள்?' எனக் கேட்டபடியே எங்களை முதலாம் வகுப்பில் கொண்டு போய் இருத்தினார். படம் தொடங்கியதில் சிறிய அதிருப்தி இருந்தாலும் சிறிது நேரத்தில் படத்துடன் ஒன்றிப் போனோம். இடைவேளை வந்தது. கடலை, வடை என தியேட்டருக்குள் கொண்டு வந்து விற்பனை செய்து கொண்டிருந்தார்கள். சோடா விற்பவர் சோடாப் போத்தல்களில், சோடா ஓப்னரால் தட்டி சத்தம் எழுப்பி தனது வியாபாரத்தை விமரிசையாக நடத்திக் கொண்டிருந்தார். கூடவே எங்களது எரிச்சலையும் சம்பாதித்துக் கொண்டிருந்தார். ஒருவாறு இடைவேளை முடிந்து படம் ஆரம்பமானது.

படம் முடிந்து தியேட்டரை விட்டு வெளியே வந்தால் வெப்பக் காற்று முகத்தில் வீசியது. பிலிப் அண்ணனைத் தேடி, நன்றி சொல்லிப் புறப்பட்டோம். பஸ் நிலையம் வந்தோம். பருத்தித்துறைக்குப் போவதற்கு பஸ் நின்றது. ஆனால் கையில் காசுதான் இல்லை. வீடு ஐந்து கிலோ மீற்றர் தூரத்தில் இருந்தது. மதிய நேரம். கொளுத்தும் வெயில். பசி வேறு சாப்பிடு என்றது. ஆனாலும் வீடு போய்ச் சேர்வதற்கு ஒரே வழிதான் இருந்தது. அது நடப்பது என்பதே. அக்காவிடம் என்ன செய்யலாம் என்று கேட்டேன். „நடப்போம்' என்றாள்.

நடக்க ஆரம்பித்தோம். மாலுசந்தி, மூத்தனார் கோயில், தெருமூடி மடம் எனக் கடந்து மந்திகையை அண்மித்திருந்தோம். அப்பொழுது அக்கா சொன்னாள் „இண்டைக்குத் துலைஞ்சம். அங்கை பார் ரத்தினண்ணை சைக்கிளிலை வாறார். நாங்கள் நடந்து வாறதைக் கண்டிட்டு கீர்த்தியண்ணனிட்டை போய்ச் சொல்லப் போறார்'

ரத்தினண்ணை எங்களைக் கண்டதும் ஆச்சரியமாகப் பார்த்தார். „எங்கை போட்டு வாறீங்கள்?' படம் பார்த்து விட்டு வருவதாகச் சொன்னோம். „ஏன் பஸ் இல்லையே?' „காசை துலைச்சுப் போட்டேன்;' வாயில் இருந்து பொய் பாய்ந்து வந்தது. அக்கா என்னை நிமிர்ந்து பார்த்தாள். 'நல்ல வடிவா பொய் சொல்லுறாய்' என்று அந்தப் பார்வை சொன்னது. 'நல்ல வெயில், நெல்லியடியிலை இருந்து நடந்தே வந்து கொண்டிருக்கிறீங்கள்?' சொல்லிவிட்டு எனது சேட் பொக்கெற்றில் ஐம்பது சதத்தை போட்டு விட்டு, 'மந்திகைச் சந்தியிலை பஸ் வரும் ஏறிப் போங்கோ' என்று சொல்லி விட்டுப் போனார்.

„நெல்லியடிக்குப் போனது, படம் பாத்தது, வெய்யிலுக்குள்ளாலை நடந்து வந்தது, ரத்தினண்ணையிட்டை காசு வாங்கினது எண்டு இண்டைக்கு கீர்த்தியண்ணனிட்டை வேண்டப் போறம்' அக்கா சொல்லிக் கொண்டாள். இதுக்குள் நான் பொய் சொன்னதை நீ போட்டுக் கொடுத்தால் அதுக்கும் இருக்கு என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்.

நான் ஐம்பது சதத்தை சேட் பொக்கெற்றில் இருந்து கையில் எடுத்துக் கொண்டேன். பட இடைவேளையில் கடலை, வடை விற்று எனக்கு எரிச்சலை உண்டாக்கியவர்கள் நினைவுக்கு வந்தார்கள். அக்காவையும் அழைத்துக் கொண்டு மந்திகை ஆஸ்பத்திரிக்கு முன்னால் இருந்த கடைக்குப் போய் கடலைப் பருப்பு வடை, உழுந்து வடைகளை வாங்கி அக்காவுக்கும் சாப்பிடக் கொடுத்து, நானும் சாப்பிட்டுக் கொண்டு வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தோம். நடக்கும் போது ரத்தினண்ணை வருகிறாரா என அடிக்கடி பார்த்துக் கொண்டோம்.

வீட்டில் அர்ச்சனை நடக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருவேளை ரத்தினண்ணை கீர்த்தியண்ணனுக்கு சொல்லவில்லையோ? அல்லது பாவம் சின்னதுகள் என்று கீர்த்தியண்ணன் பேசாமல் விட்டு விட்டாரோ? தெரியவில்லை.
எது எப்படியோ அக்காவுக்கு கர்ணன் படம் காட்டியாச்சு. நானும் பார்த்தாச்சு.