திருக்கேதீஸ்வரத்தில் பாலாவியில் நீச்சல் அடித்துக் கொண்டிருந்தேன். கூடவே எனது பால்ய நண்பன் தணிகாசலமும் சேர்ந்திருந்தான். வல்லிபுரக் கோவில் குளத்தில் - அதைக் குளம் என்று தான் சொல்வது வழக்கம். உண்மையில் அது ஒரு குட்டை. மழைக்காலத்தில் அதில் தேங்கி நிற்கும் தண்ணீர்தான் எங்களது நீச்சல் தடாகம். இங்குதான் தென்னை ஒல்லி இரண்டினை இளக்கயிற்றால் கட்டி அதன் மேல் படுத்திருந்து நீச்சல் பழகியிருந்தேன். நீச்சல் என்பதை முறையாக யாருமே எனக்குக் கற்றுத் தரவில்லை. நானும் தணிகாசலமும் ஒல்லிகளைக் கட்டிக் கொண்டு நீரில் தாளாமல் இருப்பதற்காக கைகளையும் கால்களையும் வேகமாக அடித்து ஓரளவு நேரம் தண்ணீரில் மூழ்காமல் இருக்கக் கற்றுக் கொண்டோம் என்பதே சரியாக இருக்கும்.
இந்த நீச்சலையே அன்று நானும் தணிகாசலமும் பாலாவியில் அடித்துக் கொண்டிருந்தோம். எங்களுக்குச் சற்றுத் தள்ளி எனது அம்மாவும் பாலாவியில் குளித்துக் கொண்டிருந்தார் எனது நீச்சலை அவர் அடிக்கடி பார்ப்பது தெரிந்தது. இத்தனைக்கும் நாங்கள் அதிக ஆழமான இடத்தில் நீச்சல் அடிக்கவில்லை. நெஞ்சளவு தண்ணீரிலேயே நின்று வித்தை காட்டிக் கொண்டிருந்தோம்.
பாலாவியில் சீமெந்தினால் செய்யப் பட்ட பெரிய பெரிய குழாய்கள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப் பட்டிருந்தன. அவை தண்ணீர் மட்டத்தோடு காட்சி தந்தன. எங்களது நீச்சல் மகிமையைக் கண்ட ஒரு பெரிசு குளித்து விட்டுப் போகும் போது, "தம்பிமாரே அந்தக் குழாய்கள் இருக்கிற பக்கம் போயிடாதையுங்கோ அது ஆழமான பகுதி. அதுவும் அந்தக் குழாய்க்குள்ளை போனீங்களோ அவ்வளவுதான்" என்று எச்சரித்து விட்டுப் போனது. அந்தப் பக்கமே போவதில்லை என்ற தீர்மானத்தை உடனே நிறைவேற்றினோம்.
நாங்கள் கவனமாகத்தான் இருந்தோம் ஆனால் எனது அம்மா அந்தக் குழாய்களை நோக்கி நகர்வது தெரிந்தது. எனக்குப் பயம் பிடித்துக் கொண்டது. பாதி நீந்தியும் தண்ணீருக்குள் நடந்தும் அம்மாவை நெருங்கினேன். அம்மா மகிழ்ச்சியாக தண்ணீருக்குள் நின்றார். ஊரில் மழை பெய்தால் மழையில் நனைவதும் அதில் குளிப்பதும் அம்மாவிற்கு மகிழ்ச்சியான விடயம். ஆகவே பாலாவியில் அவர் மகிழ்ச்சியாக நின்றதில் அதிசயம் இல்லை. நான் அம்மாவிடம் சொன்னேன் "அந்தக் குழாய் இருக்கிற பக்கம் போகாதையுங்கோ ஆழமாம்." அம்மா எனது பேச்சை அசட்டை செய்வது தெரிந்தது. மழையில் குளிப்பது போல் இல்லை பாலாவி ஆற்றில் குளிப்பது என்று மீண்டும் எச்சரித்தேன். அம்மாவுக்கு நீச்சல் தெரியாது ஏதாவது விபரீதம் நடந்தால் கரைக்கு இழுத்து வர எங்களுக்கும் சரிவர நீச்சல் தெரியாது. ஆனாலும் அம்மா மெதுவாக தண்ணீரில் நகர்ந்து கொண்டிருந்தார். "அம்மா" என்று கூப்பிட்டேன். "உனக்குப் பயம் என்றால் நில். எனக்குப் பயம் இல்லை" என்று அம்மாவிடம் இருந்து பதில் வந்தது. இப்பொழுது அம்மா என்னை விட்டு சற்று தண்ணீருக்குள் முன்னுக்குப் போய்விட்டார். அவர் இருக்கும் இடத்திற்குப் போக தண்ணீரில் தாண்டு விடுவேனோ என்ற பயம் எனக்கு இருந்தது. ஆனாலும் மெதுவாக அம்மாவை நோக்கி நகர்ந்தேன். நான் அம்மாவை நெருங்கிய போது அம்மா தண்ணீரில் இருந்து மேலே வந்தார். அழகாக வட்டம் அடித்து நீந்தத் தொடங்கி விட்டார். "வா ஏலுமெண்டால் வந்து பிடி" என்று சொல்லியவாறு அழகாக நீந்திக் கொண்டிருந்தார்.
எனது அம்மாவுக்கு இவ்வளவு அழகாக நீந்தத் தெரியும் என்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. தண்ணீரில் நீச்சல் என்ற பெயரில் தத்தளிக்கும் எனது நீச்சலை நினைக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. அம்மாவின் நீச்சலை இரசித்த படி தணிகாசலம் இருக்கும் இடத்தை நீந்தாமல் நடந்து வந்து சேர்ந்தேன்.
"உன்ரை அம்மா வடிவா நீந்துறா. அவவுக்கு நீச்சல் தெரியும் எண்டு நீ எனக்கு சொல்லவேயில்லை" என்று தணிகாசலம் கேட்டான்.
அம்மா எனக்கும் சொல்லவேயில்லை என்ற விடயத்தை நான் அவனுக்குச் சொல்லவேயில்லை.
அம்மா எனக்கும் சொல்லவேயில்லை என்ற விடயத்தை நான் அவனுக்குச் சொல்லவேயில்லை.