Tuesday, August 17, 2004

அண்ணன் காட்டிய வழியம்மா

வருடா வருடம் சரஸ்வதி பூசை முடிய அம்மன் கோவிலில் இருந்து அம்பாள் புறப்பட்டு வீதி வலம் வருவார். எங்கள் ஊரில் அது பெரிய விழாவாகவே நடைபெறும். அந்த விழாவை மானம்பூ என்றே அழைப்பார்கள். எனக்குப் படிப்பு, செல்வம், வீரம் எல்லாம் வரவேண்டும் என்பதற்காக எனது பெற்றோர் வருடம் தவறாமல் என்னை அங்கு கூட்டிச் செல்வார்கள். அங்கு போனதால் இப்பொழுது கல்வி, செல்வம், வீரம் எல்லாம் நிறைந்து வாழ்கிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது உங்கள் தவறு.

ஓரு மானம்பூ அன்று எனது அண்ணன் என்னை மானம்பூவிற்கு அழைத்துச் செல்வதாக எனது அம்மாவிடம் கேட்டுக் கொண்டார். எனது அம்மாவும் அந்தமுறை என்னை அவருடன் அனுப்பி வைத்தார்.

இயற்கையிலேயே இருட்டைக் கண்டால் எனது அண்ணனுக்குப் பயம். அதுவும் இருட்டில் ஒரு பொருள் அசைவதாக உணர்ந்தால் போதும் ஆளும் பயந்து கூட நிற்பவரையும் பயப்பட வைத்துவிடுவார்.

கூட்ட நெரிசலில் நான் தொலைந்து விடாமல் இருப்பதற்காக அண்ணனின் கையை விடாமல் பிடித்திருக்கும்படி அம்மா சொல்லியிருந்தா. அதுபோல் நான் அவரின் கையை இறுகப் பற்றியபடி வீட்டிலிருந்து புறப்பட்டேன். பிரதான வீதிக்கு நாங்கள் வந்ததும் என்னை அழைத்துக் கொண்டு என் அண்ணன் பஸ் தரிப்பிடத்துக்குச் சென்றார். எனக்கு அது புதிராக இருந்தது. கோவில் கூப்பிடும் தூரத்தில் இருக்கையில் எதுக்கு பஸ்? கேட்கவேண்டும் போலிருந்தது. கேட்கவில்லை.

பஸ் வந்தது ஏறிக்கொண்டோம். கோவிலையும் தாண்டி பஸ் போனது. நான் அண்ணனின் முகத்தைப் பார்த்தேன். பேசாமல் இருக்கும்படி சாடை காட்டினார். பஸ்ஸிலும் கூட்டம் அதிகமாக இருந்ததால் நான் ஏதும் பேசவில்லை. சிறிது நேரத்தின் பின் ஒரு தரிப்பிடத்தில் பஸ் நின்ற போது இறங்கச் சொன்னார். இறங்கிக் கொண்டோம். நேராக ஒரு சினிமா தியேட்டருக்கு அழைத்துப் போனார். அப்பொழுதுதான் சொன்னார். நாங்கள் கோவிலுக்குப் போகவில்லை சினிமா பார்க்க வந்திருக்கிறோமென்று. வீட்டுக்குப் போய் யாரிடமும் சொல்லாதே என்று சொல்லி இனிப்பும் வாங்கித் தந்தார்.

சினிமாவில் காட்டுக்குள்ளே திருவிழா கன்னிப் பொண்ணு மணவிழா என்று பாட்டு வந்தபோது மானம்பூ திருவிழாவும் வீதிகள் தோறும் வழங்கப்படும் அவல், கற்கண்டு எல்லாம் நினைவில் வந்தது. நடிகர்கள் யார் யாரென்று அப்போ தெரியாது. ஓடினார்கள், பாடினார்கள், ஓவர்கோட் போட்டபடி கடற்கரை வெய்யிலில் நின்றார்கள,; சண்டை போட்டார்கள், சிரித்தார்கள், அழுதார்கள் இதையெல்லாவற்றையும் அண்ணன் வாங்கித் தந்த இனிப்பை ருசித்தபடி பேசாமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

ஒருவாறு படம் முடிந்தது. வெளியில் வந்தோம். சினிமா பார்க்க வந்தவர்கள் சிதறிப் போய் விட்டார்கள். எனது அண்ணன் மட்டும் பரபரப்பாக இருந்தார். அருகில் இருந்த தேனீர் கடையில் ஏதோ விசாரித்தார் பிறகு எனக்குச் சொன்னார் பஸ் எல்லாம் போய்விட்டது நடந்துதான் வீட்டுக்குப் போக வேண்டுமென்று. முதலாவது எங்கள் வீடு மூன்று மைல்கள் தூரத்திலிருந்தது. இரண்டாவது இந்த நேரம் மானம்ப10 முடிந்து எல்லோரும் வீட்டுக்குப் போயிருப்பார்கள். மூன்றாவது எனது அண்ணருக்கு இருட்டைக் கண்டால் பயம். நாங்கள் போக வேண்டிய பாதையின் இரு புறமும் பயிர் செய்யும் நிலங்களே இருந்தன. எங்கும் இருட்டு.

வேறு வழியில்லாததால் நடக்க ஆரம்பித்தோம். நான் அண்ணனின் கையைப் பிடித்தபடி நடந்து கொண்டிருந்தேன். சிறிது நேரத்தில் பார்த்தால் எனது கையைப் பிடித்தபடி எனது அண்ணன் நடந்து கொண்டிருந்தார். பயம் இல்லாமலிருப்பதற்காக ஏதேதோ சொல்லிக் கொண்டு வந்தார்.

அது மழைக் காலமாக இருந்தபடியால் வீதியின் இருபுறமும் உள்ள நிலத்தில் தண்ணீர் நிறைந்திருந்தது. ஒரு கட்டத்தில் தவளைகள் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்தச் சத்தத்திற்குப் பயந்து போன அண்ணன் என்னையும் இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அவரது வேகத்துக்கு நான் ஓடமுடியாமலிருந்ததினால் என் கையை விட்டுவிட்டு என்னை ஓடி வரும்படிச் சொல்லிவிட்டு அவர் முன்னுக்கு ஓடத் தொடங்கிவிட்டார். அவருடன் ஓட என்னால் முடியவில்லை. என்னை விட்டுவிட்டு வீட்டுக்குப் போகவும் அவரால் முடியாது. திரும்பி வந்து எனக்கு அடிக்காத குறையாக என்னை இழுத்துக் கொண்டு ஓடத் தொடங்கினார். அந்த மழைக் காலத்திலும் வியர்வை ஒழுக ஒழுக ஒருவாறு வீடு வந்து சேர்ந்தோம்.

வாசலில் அம்மா பார்த்துக் கொண்டிருந்தா. மானம்பூ முடிய அப்படியே கோவிலுக்குப் போய் சாமி இறக்கி உள்ளே போகும் வரை இருந்து விட்டு வருவதாக அம்மாவிற்கு அண்ணன் சொன்னார்.

அண்ணனுடன் அன்று என்ன படம் பார்த்தேன் என்று நான் சொல்லத்தானே வேண்டும்.
தாய் சொல்லைத் தட்டாதே