Saturday, June 12, 2010

விழியே கதை எழுது

யேர்மனிக்கு வந்த ஆரம்ப காலங்களில் இங்கிருந்த மருந்துக் கடைகளைப் பார்த்து பிரமித்திருக்கிறேன். அதற்கான படிப்பு, பயிற்சி பெற்று மிக நேர்த்தியாக கடமை ஆற்றுகிறார்கள். மருந்துகளை விற்பது மட்டுமல்லாது அதை உபயோகிக்கும் முறைகளையும் அழகாக சொல்லித் தருகிறார்கள். இந்த நிலை நாட்டில் எனது ஊரில் அன்று தலை கீழாக இருந்தது.

மற்றவர்க்கு புரியாத முறையில் தங்களது மேதாவித் தனத்தைக் காட்டுவதற்கோ அல்லது அதுதான் நடை முறையோ தெரியாது சொல்லி வைத்தது போல் எல்லா வைத்திய நிபுணர்களும் மருந்துகளை சீட்டில் கிறுக்கித் தருவார்கள். அதை மருந்துக் கடைகளில் கொடுக்கும் போது முதல் கடைசி எழுத்துக்களை வைத்து இதுதான் மருந்து என அவர்கள் ஆராய்ந்து, தீர்மானித்து இறுதியாக மருந்துகளைத் தரும் போது அச்சத்துடன் வேண்டிய நாட்களை நினைத்துப் பார்த்திருக்கிறேன். அந்த எண்ண ஓட்டத்தில் எனது நினைவுகளில் வந்து போனது இரண்டு கடைகள். ஒன்று கந்தசாமி (இவர் ரெலோ இயக்கத் தலைவரான சிறி சபாரத்தினத்தின் தமையன்) அவர்களின் சிறிமுருகன் மெடிக்கல் ஸ்ரோர்ஸ். இங்கு ஆரம்பகாலத்தில் தமிழ் மருந்துகளே விற்பனை செய்தார்கள். போராட்ட சூழலில் இந்தக் கடை, அங்கு கடமையாற்றிய தேவராஜாவிடம் கை மாறியதன் பின்னர் ஆங்கில மருந்துகளையும் சேர்த்துக் கொண்டார்கள்.

மற்றைய கடை அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ். அதன் உரிமையாளர் மார்டின் சூசைதாசன். ஆனால் ரத்தினம் என்று சொன்னால்தான் அவரை எல்லோருக்கும் தெரியும். எனது அண்ணனின் கூட்டாளிகளில் ஒருவர். எனது வியாபார நிலையத்திற்கு சமீபமாகவே அவரது மருந்துக் கடை இருந்தது. அரசியல்வாதியும், சட்டத்தரணியும் ஆகிய ஆர்.ஆர். தர்மரத்தினம் அவர்களுடன் கூட்டாக அந்த மருந்துக் கடையை அவர் நிர்வகித்து வந்தார்.

னது வியாபார நிலையத்தை திறந்து உடனடியாக வியாபாரத்தை ஆரம்பிக்க முடியாது. எனது வியாபார நிலையத்தில் கடமை ஆற்றும் தில்லையண்ணனும், அப்புத்துரை அண்ணனும் நிலையத்தை திறந்து சாமிகளுக்கு தண்ணி காட்டி, காதில் பூ வைத்து மூச்சு விடாத முடியாதபடி புகை போட்டு.... அதன் பின்னரே அன்றைய வியாபாரம் ஆரம்பிக்க உத்தரவு தருவார்கள். ஆனால் அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸ் அதற்காக அதிகம் அலட்டுவதில்லை. திறந்த உடன் வியாபாரம் ஆரம்பிக்கும் நிலை அங்கிருந்தது. எனது நிலையத்தில் இவர்கள் செய்யும் காலைப் பூசையைப் பார்த்து ரத்தினம் அண்ணன் அடிக்கடி கேலி செய்வதுண்டு.

அன்றும் அப்படித்தான் நிலையத்தின் பூசை முடியும் வரை நிலையத்திற்கு வெளியில் நின்றிருந்தேன். அன்னை மெடிக்கல் ஸ்ரோர்ஸில் ரத்தினம் அண்ணனும் இன்னொருவரும் சடுகுடு விளையாடுவது போல் இருந்தது. காலையில் இப்படி ஒரு விளையாட்டா என எனக்கு வியப்பாக இருந்தது. ஆச்சரியத்திலும் எனது வியாபார நிலையத்தில் இருந்து வந்த சாம்பிராணிப் புகையிலும் மூழ்கியிருந்த எனக்கு ரத்தினம் அண்ணன் என்னைப் பார்த்து உரக்கச் சொல்வது கேட்டது. "தம்பி தில்லையம்பலத்தை அனுப்பி கடையைப் பார்க்கச் சொல்லு" சொல்லியபடியே ரத்தினம் அண்ணன் ஓடிக்கொண்டிருந்தார். பின்னால் அந்த இன்னொருவரும் ஓடிக் கொண்டிருந்தார். ஏதோ விபரீதம் என்பதை புரிந்து கொண்டு தில்லையண்ணனை அவரது கடையைப் பார்த்துக் கொள்ளும் படி அனுப்பி வைத்தேன்.

போன தில்லையண்ணன் வர சற்று நேரம் எடுத்தது. வந்ததும் விடயத்தைக் கேட்டேன். "நேற்று ஒருத்தர் வந்து ரத்தினத்திட்டை மருந்து வாங்கி இருக்கிறார். டொக்டர் எழுதிக் குடுத்த மருந்துச் சீட்டு விளங்காத படியால் இது என்னத்துக்கு எண்டு ரத்தினம் கேட்டிருக்கிறான். மருந்து வாங்க வந்தவர் கண்ணுக்கு எண்டு சொல்ல ரத்தினத்துக்கு புண்ணுக்கு எண்டு கேட்டிருக்கு. புண்ணுக்கு பூசிற மருந்தைக் குடுத்திருக்கிறான். வீட்டை போய் போட்டுப் பாத்தாப் போலைதான் வில்லங்கம் தெரிஞ்சிருக்கு." அதுதான் காலமை வெள்ளன வந்து சாமி ஆடியிருக்கிறான். நல்ல வேளை ரத்தினம் பொலிசுக்கு போய் பிறகு தர்மரத்தினம் தலையிட்டு பிரச்சினை முடிஞ்சுது. எவ்வளவு ஆபத்தன முறையில் வியாபாரம் நடந்திருக்கிறது

நான் 2002இல் நாட்டுக்குப் போன பொழுது எனது ஊருக்குப் போக சந்தர்ப்பம் சரி வர அமையவில்லை. ஆயினும் நான் வந்திருப்பதை அறிந்து நான் இருக்கும் இடத்தில் வந்து சந்தித்தவர்களிடம் அந்த இரண்டு மருந்துக் கடைகளைப் பற்றிக் கேட்டேன். அந்த இரண்டு கடைகளும் இன்னமும் இருப்பதாகச் சொன்னார்கள்.

Sunday, June 06, 2010

ஏட்டில் எழுதி வைத்தேன்

ராஜேஸ்வரி, மன்னார் விடத்தல் தீவைச் சேர்ந்தவள். எங்கள் ஊரில் இருந்த பெண்கள் கல்லூரியில் க.பொ.த. சாதாரணதரம் படித்துக் கொண்டிருந்தாள். முதலில் அவள் கல்லூரியில் இருந்த விடுதியில் தங்கி இருந்தே படித்துக் கொண்டிருந்தாள். பின்னர் எங்கள் ஊருக்கு அடுத்த ஊரில் இருந்த தனது நண்பியின் வீட்டில் தங்கி இருந்து படித்தாள். அவள் விடுதியில் இருந்த போது யாருடைய கண்களிலும் தட்டுப்பட வாய்ப்பில்லை. அங்கிருந்து வெளியே வந்து தனது நண்பியின் வீட்டில் இருந்த போதுதான் பல இளைய கண்கள் அவளைக் கண்டு அவள் மேல் விருப்பம் கொண்டன.

அவள் மேல் காதல் கொண்டவர்களில் எனது பள்ளித் தோழன் மகேந்திரனும் அடக்கம். அவனின் நிறத்துக்கு ஏற்ப அவனை வெள்ளை என்றே அழைத்துக் கொள்வோம். வெள்ளை பருமனானவன். திடகாத்திரமானவன். சப்இன்ஸ்பெக்ரர் பரீட்சைக்குப் போய் வந்தவன். அதனால்தானோ என்னவோ எப்பொழுதும் நிமிர்ந்த நடை. ஆனால் கனிவாகப் பேசவோ, ஒரு பெண்ணை அணுகித் தனது காதலை வெளிப்படுத்தும் ஆற்றலோ இல்லாதவன். ஆனாலும் ராஜேஸ்வரியின் மேல் இருக்கும் காதலைப் பற்றி நாள் முழுதும் என்னிடம் சொல்லிக் கொண்டே இருப்பான். அவள் தங்கி இருந்த வீடும் அவனது வீடும் பக்கம் பக்கமாகவே இருந்தன. இதனால் அவளது தரிசனம் அவனுக்குப் பஞ்சம் இன்றிக் கிடைத்துக் கொண்டிருந்தது.

என்னதான் பலசாலியாக இருந்தாலும் ராஜேஸ்வரியிடம் தனது காதலை வெளிப் படுத்த முடியாத கோழையாக அவன் இருந்தான். ஒருநாள் என்னைத் துணைக்கு அழைத்தான். போனேன். அவன் கேட்டுக் கொண்டதன்படி அவனுடன் அவள் கல்லூரிக்குச் செல்லும் வீதியில் நின்றேன். அவளும் புத்தகங்களைச் சுமந்தபடி தனது நண்பியுடன் கதைத்தபடி வந்தாள். இவன் பதட்டமானான். „வாறாள்.. வாறாள்...' என்று அறிவித்துக் கொண்டிருந்தான். அவளும் வந்து எங்களைக் கடந்து சென்றாள். கடந்து செல்லும் போது ஒரு தடவை ஏறெடுத்துப் பார்த்தாள். அந்த ஒரு பார்வையே வெள்ளைக்கு அப்போழுது போதுமானதாக இருந்தது.

„பாத்தியே மச்சான் பாக்கிறாள். கதைக்கப் பயமா இருக்கு தனிய வந்தால் கதைக்கலாம். எப்பவும் ஒரு சிண்ணோடை வாறாள்..' வெள்ளை தனது ஆதங்கத்தைச் சொன்னான்.

அவள் தனியாக வந்தாலும் அவளோடு கதைக்கும் தைரியம் வெள்ளைக்கு இல்லை என்பது எனக்குத் தெரியும். நாளடைவில் வெள்ளையுடன் வீதியில் அவளுக்காகக் காத்திருப்பது எனக்கு ஒரு வேலையாகப் போயிற்று. ஆனாலும் பள்ளித் தோழனுக்காக அந்த வேலையை ஏற்றுக் கொண்டேன்.

நாட்கள் ஓடிக்கொண்டே இருந்தன. வெள்ளைக்கு தனது காதலை ராஜேஸ்வரியிடம் சொல்லும் தைரியம் இன்னும் வந்த பாடில்லை. நானும் பல தடவைகள் அவனிடம் சொல்லிப் பார்த்து விட்டேன். ஏனோ அவளிடம் கதைக்க அவன் தயக்கம் காட்டினான். என்னாலும் அவனுக்காக அவளிடம் கதைக்க முடியாத நிலை. ராஜேஸ்வரி பாடசாலை செல்லும் பொழுதும் வரும்பொழுதும், சிவனே என அவனுடன் கூட வீதியில் நின்று கொண்டிருப்பேன். அவளும் பார்த்து மெதுவாக ஒரு புன்னகை சிந்தி விட்டுப் போவாள்.

க.பொ.த. பரீட்சையும் முடிந்து விட்டது. வருட இறுதி விடுமுறை வந்து கொண்டிருந்தது. இந்த நேரத்தில் பாடசாலை மாணவிகளின் கையில் பாடப் புத்தகங்கள் இருக்கிறதோ இல்லையோ கண்டிப்பாக ஓட்டோகிராப் புத்தகம் இருக்கும். தங்கள் நண்பிகள், ஆசிரியர்கள், தெரிந்தவர்கள் என எல்லோரிடமும் கெயெழுத்து வாங்கிக் கொள்வார்கள். இதை பின்னாட்களில் எடுத்துப் பார்த்து தங்கள் இளமையான காலங்களையோ அன்றி அன்று அவர்களுக்கிருந்த நட்புகளைப் பற்றியோ நினைத்துப் பார்க்க அவர்களில் எத்தனை பேருக்கு வாய்ப்பு இருக்கிறதோ தெரியாது. ஆனாலும் க.பொ.த.சாதாரண பரீட்சை முடிந்தவுடன் ஒட்டு மொத்தமாக எல்லா மாணவிகளும் இந்தக் கையெழுத்து வேட்டையில் இறங்கி இருப்பார்கள்.

அன்றும் வழமை போல் வெள்ளை, ராஜேஸ்வரிக்காகக் காத்திருந்தான். நான் அவனுக்குத் துணையாக அவன் பக்கத்தில் நின்றிருந்தேன். ராஜேஸ்வரியும் வந்தாள். இன்று அவள் தனியாகத்தான் வந்தாள். அவள் தனியாக வருவதைக் கண்டு நான் வெள்ளையை உசார்ப் படுத்தினேன். „இப்பொழுது கதைக்காவிட்டால், இன்று உன் காதலைச் சொல்லாவிட்டால் இனி சந்தர்ப்பமே இல்லை. விடுமுறைக்கு ஊருக்குப் போகும் அவள் திரும்ப வர வாய்ப்பே இல்லை' என வெள்ளைக்கு நிலமையை விளங்கப் படுத்திச் சொன்னேன். வெள்ளையின் முகத்தில் தைரிய ரேகை ஓடுவது தெளிவாகத் தெரிந்தது. வழமையாக நாங்கள் நிற்கும் வீதியின் மறு ஓரத்தில்தான் அவள் வருவதும் போவதும் நடைமுறையாக இருந்தது. ஆனால் அது அன்று மாறி இருந்தது. நாங்கள் நிற்கும் பக்கமாகவே அவள் நடந்து வந்து கொண்டிருந்தாள். நெருங்கி வந்தவளிடம் வழமைபோல் கதைக்கும் தைரியம் இன்றி மார்கழியிலும் வேர்த்துப் போய் வெள்ளை நின்றான். எங்களைக் கடந்து செல்லும் அவள் வழமை மீறி எங்கள் அருகில் நின்றாள். நின்றவளை ஏறெடுத்துப் பார்க்கும் தைரியம் கூட வெள்ளைக்கு அப்பொழுது இருக்கவில்லை.

நின்றவள் நிமிர்ந்து பார்த்தாள். அண்ணலோ மண் நோக்கி நின்றான். தனது புத்தகங்களின் மத்தியில் இருந்த ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்து நீட்டினாள். „இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னால் நம்ப முடியவில்லை. வெள்ளையின் முகத்தில் மகிழ்ச்சி தெரிந்தது. அவள் கை ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டிய வண்ணம் இருந்தது. வெள்ளையின் கை ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொள்ள நீண்டது. உடனடியாக அவள் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். வெள்ளையும் தனது கையை திரும்ப எடுத்தக் கொண்டான். இப்பொழுது அவள் மீண்டும் ஓட்டோகிராப் புத்தகத்தை நீட்டினாள். வெள்ளை அதை வாங்கிக் கொள்ள எத்தனிக்க அவள் மீண்டும் தனது கையை பின்னுக்கு இழுத்துக் கொண்டாள். அவள் கையை நீட்டுவதும் வெள்ளை ஓட்டோகிராப் புத்தகத்தை எடுத்துக் கொள்ள முயல்வதுமாக சில நிமிடங்கள் ஒரு விளையாட்டு ஒன்று அங்கே நடந்து கொண்டிருந்தது. நான் அதை இரசித்துப் பார்த்தக் கொண்டிருந்தேன்.

இந்த விளையாட்டால் ராஜேஸ்வரியின் முகம் முற்றாக மாறி இருந்தது. அவள் நிமிர்ந்து என்னைப் பார்த்தாள். இப்பொழுது அவள் என்னை நோக்கி நீட்டிய கையில் ஓட்டோகிராப் புத்தகம். 'இதிலை எழுதி கையெழுத்து வையுங்கோ' என்னைப் பார்த்து நேரடியாகவே சொன்னாள். என்னை அறியாமல் ஓட்டோகிராப் புத்தகத்தை வாங்கிக் கொண்டேன்.

'நீங்கள் மட்டும்தான் எழுதிக் கையெழுத்து வைக்கோணும். வேறை ஆரும் எழுதக் கூடாது' ராஜேஸ்வரி தனது குரலால் உத்தரவு போட்டாள்.

நான் வெள்ளையைப் பார்த்தேன். அவன் வேறு திசை பார்த்துக் கொண்டிருந்தான். நான் எழுதித் தருவதை வாங்கிச் செல்வதற்காக ராஜேஸ்வரி என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். என்ன செய்வது என்று தெரியாத ஒரு நிலை இருந்த போதும் ராஜேஸ்வரி கேட்டதற்கு இணங்க மனதில் வந்ததை எழுதிக் கையெழுத்து இட்டு அவளிடம் நீட்டினேன். „நன்றி' சொன்னாள். அடுத்த வாரம் தனது ஊருக்குப் போவதாகச் சொன்னாள். வழமை போல் பார்த்தாள். மெதுவாகப் புன்னகைத்தாள். போய்விட்டாள். ஆக அவள் இவ்வளவு காலம் பார்த்ததும் சிரித்ததும் என்னைப் பார்த்துத்தானா? எனக்கு வெள்ளையை நேராகப் பார்த்துக் கொள்ள முடியாத நிலை. அவன் எவ்வளவு தூரம் அவளைக் காதலித்தான் என்பது எனக்குத் தெரியும். நான் சிந்தித்தக் கொண்டிருந்தேன். „வாறன் மச்சான" வெள்ளையின் குரல் என்னை மீட்டு வந்தது. நிமிர்ந்து பார்த்த போது வெள்ளையும், ராஜேஸ்வரியும் எதிர் எதிரான பாதையில் போய்க் கொண்டிருந்தார்கள்.