Sunday, May 28, 2006

ஐம்பது சதம்

பாடசாலை செல்வதென்றால் பத்மநாதனும் நானும் சேர்ந்துதான் செல்வோம். எனது பால்ய நண்பன் அவன். எனது வீட்டுக்கு அருகில் அவனது வீடு இல்லாததால் பாடசாலை முடிய மாலையில் அவனுடன் இணைந்து விளையாட முடியவில்லை என்ற ஆதங்கம் எனக்குள் இருந்ததுண்டு.

ஆரம்பப் பள்ளியில் பத்மநாதனும் நானும் ஐந்தாம் வகுப்புவரைதான் இணைந்து படித்தோம். அவனது தாயார் மனநிலை பாதிப்புக்குள்ளாகி இருந்ததால் அவன் தனது தந்தையாருடன்தான் தங்கியிருந்தான். அவனது தந்தையார் இராமலிங்கம்தான் சமையல் துவையல் எல்லாம். இத்தனைக்கும் அவர் பெரிய உத்தியோகமென்றில்லை. எங்களது பாடசாலைக்கு அருகில் இருந்த தம்பையா சுருட்டுக்கொட்டிலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

சுருட்டுச் சுத்தும் இடம் அப்பொழுது தென்னை ஓலையில் வேயப்பட்டிருக்கும் கொட்டிலில்தான் இருந்தது. அதனால் அந்த வேலைத் தளம் சுருட்டுக் கொட்டில் என்று அழைக்கப்பட்டதில் பெரிய விசேசமில்லை. எல்லோரும் தரையில் அமர்ந்துதான் சுருட்டுச் சுத்துவார்கள். அவர்கள் எவ்வளவு சுருட்டு சுத்துவார்களோ அவ்வளவு கூலி கிடைக்கும். சுருட்டுக்கள் தம்பையா சுருட்டு என்ற பெயருடன் தென் இலங்கைக்குப் போகும். மாலை ஆறுமணிவரை இத்தொழில் நடைபெறும். ஊர்க்கதைகள், அரசியல், சினிமா என்று கதைத்த படியே அவர்களது வேலை நடக்கும். காலையில் ஒருவர் அன்றைய தமிழ் நாளிதழ்களை உரக்கப் படிப்பார். அதை கேட்ட வண்ணம் அமைதியாக வேலை செய்வார்கள். பத்திரிகையைப் படிப்பவர் அதில் உள்ள விளம்பரங்களையும் சேர்த்துப் படிக்க வேண்டும். இல்லாவிட்டால் என்ன விளம்பரத்தைக் காணவில்லை என்ற கேள்வி வரும். பத்திரிகைகள் வாசித்து முடித்தபின் அதில் வந்த விடயங்களை ஒரு அலசு அலசுவார்கள். பார்க்க மகிழ்ச்சியாக இருக்கும்.

எங்கள் பாடசாலையில் சரஸ்வதி பூசை வெகு விமர்சையாக நடக்கும். ஒவ்வொரு மாணவரும் இந்தப் பூசைக்கு பணம் தர வேண்டும். ஆண்டு ஒன்று முதல் ஐந்துவரை ஐம்பது சதங்கள் கொடுக்க வேண்டும். அதற்கு மேலுள்ள வகுப்புகளுக்கு ஒரு ரூபா கொடுக்க வேண்டும். ஐம்பது சதம் என்பது அன்றைய காலத்தில் அதிகம்தான். கொடுக்காவிட்டால் ஆசிரியரிடம் பூசை வாங்க வேண்டும். நல்ல பிள்ளையாக அம்மாவிடம் வாங்கிக் கொடுத்து விட்டேன். பத்மநாதன் மட்டும் கொடுக்கவில்லை. முத்துக்குமார் வாத்தியார் பல தடவைகள் அவனுக்கு நினைவு படுத்த்தியும் அவன் ஐம்பது சதத்தைக் கொடுக்கவில்லை. இனி அடிதான் விழும் என்று முத்துக்குமார் வாத்தியார் எச்சரித்த பின்னர் பத்மநாதனிடம் "வீணாக அடிவாங்கப் போகிறாய், காசைக் கொடுத்துவிடு" என்று சொன்னேன். அவன் பதில் பேசாமல் இருந்தான். அவனது தந்தை காசு தர மறுத்துவிட்டாரா என்று கேட்டேன். அவன் தனது சட்டைப் பையில் இருந்து ஐம்பது சதத்தை எத்துக் காட்டினான். இந்தக் காசைக் குடுக்காமல் விட்டாலும் சரஸ்வதிப் பூசைக்கு அவல், கடலை, கற்கண்டு எல்லாம் தரத்தானே வேண்டும் என்பது அவனது வாதமாக இருந்தது. பாடசாலைக்கு முன்னால் இருந்த ஆறுமுகமண்ணையின் கடையில் பபிள்கம் வாங்கிச் சாப்பிடுவோம் என ஆசை காட்டினான். அன்று முதல் ஏறக்குறைய ஒரு கிழமைக்கு பாடசாலை முடிய பபிள்கத்தை அசை போட்ட வண்ணம் வீடு திரும்பிக் கொண்டிருந்தோம்.

ஒருநாள் பாடசாலை முடிய ஆறுமுகமண்ணையின் கடையில் பபிள்கத்தை வாங்கி அதைச் சுற்றியிருக்கும் ஈயத்தை உரித்துக் கொண்டிருக்கும் போது குப்பென்று சுருட்டு வாசனை. நிமிர்ந்து பார்த்தால் கடை வாசலில் முதுகுக்குப் பின்னால் கைகளைக் கட்டிய வண்ணம் இராமலிங்கத்தார். மனதுக்குள் ஒரு பயம் தானாக வந்து அமர்ந்து கொண்டது.

"காசு தரயில்லையெண்டு முத்துக்குமார் வாத்தியார் சொன்னார். நான் தந்த ஐம்பது சதத்தை என்ன செய்தாய்?"

பத்மநாதனைப் பார்த்து இராமலிங்கத்தார் கேட்டார். தயங்காமல் அவனிடமிருந்து பதில் வந்தது
"துலைஞ்சு போட்டுது"

அப்ப இதுக்கெங்காலை காசு.? பொய் சொல்லுறியா? பதில்தர பத்மநாதனுக்கு அவகாசமிருக்கவில்லை. பின்புறம் கட்டியபடி இருந்த அவரது கைகள் முன்னுக்கு வந்தன. அதில் ஒரு கையில் வாடாத பூவரசம் தடி. எப்படி கடையில் இருந்து வெளியே பாய்ந்தேனோ தெரியாது.

இராமலிங்கத்தார் ஒரு கையில் பத்மநாதனைப் பிடித்திருந்தார். அவன் தகப்பனைச் சுத்திக் கொண்டிருந்தான். இராமலிங்கத்தார் கையில் இருந்த பூவரசம் தடி சுழன்று கொண்டிருந்தது. பாசாலை முடிந்து வெளியில் வந்தவர்களுக்கு இலவசமாக அவலக் காட்சி ஒன்று காணக் கிடைத்தது. ஒருவாறாக தகப்பனது பிடியில் இருந்து விடுபட்டு பபிள்கம் வாங்கிச் சாப்பிட்டதை பத்மநாதன் ஒத்துக் கொண்டான்.

"இவனும் சாப்பிட்டவன்" என்று பத்மநாதன் என்னைக் காட்டி துணைக்கு அழைத்தான். இராமலிங்கத்தார் நிமிர்ந்து பார்த்தார். பயம் பிடித்துக் கொண்டது. அவரது கையில் இருந்த பூவரசம் தடி சிதிலமாகக் காட்சி தந்தது. எனது கையில் இருந்த பபிள்கத்தை பத்மநாதன் நின்ற திசையை நோக்கி எறிந்து விட்டு ஓடத் தொடங்கினேன். பயம் விரட்ட பபிள்கம் சப்பி பலூன் போல் ஊதி விளையாடியதெல்லாம் என்னைச் சேர்ந்து துரத்த.... வீட்டு வாசலுக்கு வந்துதான் திரும்பிப் பார்த்தேன்.

அடுத்தநாள் பாடசாலைக்குப் போனபோது இது பற்றி பத்மநாதன் என்னிடம் பேசவில்லை. முத்துக்குமார் வாத்தியார் நடந்து போன விடயத்திற்கு வருந்தியது தெரிந்தது. அதன் பின்னர் பத்மநாதனிடம் அவர் காசு கேட்கவேயில்லை. பத்மநாதனின் எண்ணப்படியே அந்த வருடம் சரஸ்வதி பூசைக்கு காசு கொடுக்காமலேயே கடலை, அவல், கற்கண்டு எல்லாம் அவனுக்குக் கிடைத்தன