Sunday, August 01, 2004

பாட்டுப் பாடவா?

தங்கராஜா மாஸ்ரர் என்றால் அப்போது எல்லோருக்கும் ஒரு பயம் கலந்த மதிப்பு இருந்தது.

பிரபல்யமான பாடசாலையின் அதிபராக இருந்தும்கூட நாலுமுழ வேட்டியுடனும் சால்வையுடனும்தான் வலம் வருவார். ஆனாலும் எனக்குப் பிடிக்காத ஒன்று அவரது கையில் எப்போதும் இருந்தது. அது... நீண்ட பிரம்பு. நெருப்பில் சுட்டு அதன் நுனி கறுத்திருக்கும். எப்பொழுதும் பளபளத்துக் கொண்டேயிருக்கும் அது என்னைப் பயமுறுத்திக் கொண்டேயிருக்கும். மாணவர்களுடன் அதிகமாக அவர் பேசி நான் பார்த்ததில்லை. தலை குனிந்து, மூக்கில் சரிந்திருக்கும் மூக்குக் கண்ணாடியின் மேலாக நெற்றியைச் சுருக்கி அவர் பார்க்கும் பார்வை ஒன்றே போதுமே அச்சம் என்ன என்பதை உணர்த்தும்.

நான் அப்போது ஏழாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். எனது வகுப்பாசிரியர் சாம்பசிவம் அவர்கள்தான் சங்கீத ஆசிரியராகவும் இருந்தார். இவர் சீர்காழி கோவிந்தராஜனுடன் சங்கீதம் பயின்றவர். சீர்காழியின் நண்பரும் கூட.

அதிபரது அறைக்குப் பக்கத்தில் உள்ள அறையில் மைக் பொருத்தியிருக்கும். பாடசாலை தொடங்கும் போதும் முடியும் போதும் ஐந்து நிமிடம் முன்பாக, சாம்பசிவம் ஆசிரியரால் தெரிவு செய்து அனுப்பப்படும் மாணவன் அந்த மைக் முன்னால் நின்று தேவாரம் பாடவேண்டும்.

வகுப்பறைகளில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலி பெருக்கியில் தேவாரத்தை பயபக்தி(?)யுடன் மாணவர்கள் எழுந்து நின்று கேட்டு இறுதியாக அரகரமகாதேவா சொல்லுவார்கள்.

அன்று தேவாரம் பாடவேண்டியவனாக நான் தெரிவு செய்யப்பட்டிருந்தேன். தங்கராஜா மாஸ்ரரின் அறையைத் தாண்டிச் செல்ல எனக்குப் பயமாக இருந்தது. அப்படித் தாண்டிப் போனாலும் தேவாரத்தை மறக்காமல் இசையுடன் பாடுவேனா என்ற அச்சமும் சேர்ந்திருந்தது. திருட்டு விழி என்பார்களே அதனிலும் மோசமாக நான் விழித்துக் கொண்டிருந்தேன்.

இன்னும் பத்து நிமிடங்களில் பாடசாலை முடியப் போகிறது. பாடசாலை முடிவதற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன்பாக மைக்குக்கு முன்னால் நிற்க வேண்டும்.

சாம்பசிவம் மாஸ்ரர் என்னைப் பார்த்தார்.
நீ இப்ப போகலாம் என்பது போல் அவரது பார்வை சொன்னது. நான் தலையைக் குனிந்து கொண்டென். வெளிறிய என் விழி, நான் தலைகுனிந்த விதம் நிலமையை அவருக்கு உணர்த்தியிருக்க வேண்டும்.

"என்ன தேவாரம் பாடமில்லையே..? உனக்கு ஒரு கிழமை முன்னமே சொல்லிட்டன்.. இப்ப முழுசிக் கொண்டு நிக்கிறாய்... உன்னை...
சங்கர்.. நீ போ.."

எனக்குப் பக்கத்தில் இருந்த சங்கருக்கு ஆணை போனது. அவன் சாம்பசிவம் மாஸ்ரரின் அன்பைப் பெற்ற மாணவன். நல்ல இசையுடன் பாடக்கூடியவன்.
குருவின் ஆணைபெற்ற சிஸ்யன் வில்லில் இருந்து புறப்பட்ட அம்பு போல் பாய்ந்து போனான்.

இப்போது ஒலி பெருக்கியில் சங்கரின் குரல்.
சலம்பூவொடு தூபம் மறந்தறியேன் பாடல் ஒலித்தது. என்ன வேகமாக ஓடிப்போய்ப் பாடியதால் பாடலை விட மூச்சுச் சத்தம்தான் பெரிதாகக் கேட்டது.

அடுத்து திருப்புகழ்.
உலகெலாம் உணர்ந்தோதற்கரியவன்.. அதுவும் முடிந்தது. இப்போது வரவேண்டியது நமப்பார்வதிபதேயே. அதுக்கு நாங்கள் கோரஸாக அரகரமகாதேவா சொல்ல வேண்டும்.

ஆனால் ஒலிபெருக்கியில் ஒலித்ததோ "அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. அடிக்காதீங்க மாஸ்ரர்.. "என்ற அவலக் குரல். இதுக்குப் போய் யாராவது அரகரமகாதேவா சொல்லுவார்களா.?

சாம்பசிவம் மாஸ்ரரின் முகத்தில் வியர்வை முத்துக்கள். சால்வையெடுத்து துடைத்துக் கொண்டு என்னைப் பார்த்தார். தங்கராஜா மாஸ்ரரின் பார்வையை விட மோசமான பார்வை அது.

அவலக் குரல் ஓய்ந்து இப்போது அதட்டலான குரல் ஒலிபெருக்கியில் ஒலித்தது. "சாம்பசிவம் ஆசிரியர் உடனடியாக எனது அறைக்கு வரவும் "

மௌனமாக மேசையில் இருந்த புத்தகங்களை எடுத்துக் கொண்டு சாம்பசிவம் மாஸ்ரர் வகுப்பறையை விட்டு வெளியேறினார்.

ஓலிபெருக்கியில் சங்கீதக் குரலில் அன்று தேவாரம், திருப்புகழ் பாடி நமப்பார்பதிபதே சொல்லி முடித்தார் சங்கீத பூசணம் சாம்பசிவம் மாஸ்ரர்.

அடுத்தநாள் காலை வகுப்பறையில் ஆசிரியரின் முன்னால் நான்.

"சங்கர் சேட்டைக் கழட்டிக் காட்டு"

சங்கர் வெறும் முதுகைக் காட்டினான். முதுகின் நடுவில் இல்லாமல் வலது பக்கமாக மேலிருந்து இடது பக்கம் கீழ் நோக்கியவாறு இரண்டு பெரிய தளும்புகள். தங்கராஜா மாஸ்ரரின் பிரம்பின் கோலங்கள்.

"பார்.. உன்னாலை எனக்கு அர்ச்சனை.. அவனுக்கு பிரசாதம்.,.."
வார்த்தைகளால் சாம்பசிவம் மாஸ்ரர் எனக்கு அபிசேகம் செய்து கொண்டிருந்தார்.

"உனக்கென்ன தேவாரம் பாடமில்லையே? "

"இல்லை.... சேர் எனக்குத் தெரியும் "

"அப்ப பாடு பாப்பம் "
சாம்பசிவம் மாஸ்ரர் கையில் இப்போ பிரம்பு.

கண்ணை மூடிக்கொண்டு நவரோசு ராகத்தில் பாடத் தொடங்கினேன்

சலம்பூவொடு தூபம் மறந்தறியேன்
தமிழோடிசை பாடல் மறந்தறியேன்
நலந்தீங்கிலும் உன்னை மறந்தறியேன்
உன் நாமம் என் நாவில் மறந்தறியேன்
உலந்தார் தலையில் பலி கொண்டுழல்வாய்
உடலுள்ளுறு சூழை தவித்தருளாய்
அலைந்தேன் அடியேன் அதிகைக் கெடில
வீரட்டானாத்துறை அம்மானே


"அப்ப ஏன் நேற்றுப் பாடயில்லை?"

நேற்று இரவிரவாகத்தான் பாடமாக்கினேன் என்பதை அவருக்கு எப்படிச் சொல்வேன்?
ஆதலால் வழமைபோல் தலையைக் குனிந்து கொண்டேன்