அப்போ எனக்கு பதினைந்து வயது.
வல்லிபுரக்கோவில் கடல் தீர்த்தத்திற்குப் போயிருந்தேன்.
வழமைபோல் என்னுடன் தொற்றிக் கொள்ளும் கலையரசனும் மகேந்திரனும் வந்திருந்தார்கள்.
நாங்கள் மூவரும் சேர்ந்து கொண்டால் சேட்டைகளுக்கு அளவேயில்லை.
அன்று தீர்த்தத் திருவிழாவிற்கு வந்தது கடவுள் மேல் கொண்ட பக்தியாலல்ல. விளக்கமாகச் சொல்லத் தேவையில்லையென்று நினைக்கிறேன்.
சாமி ஊர்வலமாய்ப் போய் கடலில் தீர்த்தம் ஆடி கோயிலுக்குத் திரும்பி வந்துவிட்டார். கோயில் கிழக்கு வாசலில் சாமிக்குப் பெரிய பூசை நடந்து கொண்டிருந்தது. எங்கள் கண்கள் கலர்கள் தேடி சுழன்று கொண்டிருந்தன.
முட்டி மோதும் சனங்களுக்குள் பட்டுப் பாவாடைகள் சரசரக்க பெற்றோர்களுடன் ஒட்டி நின்ற பாவையர்களில் பச்சையில் ஒருத்தி பளபளத்தாள். எங்களுக்குள் சுரண்டிக் கொண்டோம். மூவரது பார்வையும் ஒருங்கிணைந்து தாக்கியதாலோ என்னவோ பச்சையும் எங்களைக் கண்டுவிட்டது. கண்டதும் வெருண்டு தாயின் பின் ஒளிந்து கொண்டது. எங்களது பார்வைகள் தாயின் பின் ஒளிந்திருந்த தாரகையைத் தேடின.
எப்படியும் மேகத்தை நீங்கி நிலவு தெரியும் எனக் காத்திருந்தோம். நினைப்பு வீணாகவில்லை. நிலவு வெளி வந்தது. நாங்கள் தன்னைப் பார்க்கிறோமா என்று பார்ப்பதுக்கு முதலில் அவள் தலை தெரியும் பிறகு விழி நோக்கும். அண்ணல்கள் நாங்களும் நோக்க தாயின் பெரிய உருப்படிக்குள் அந்த நிலவு மீண்டும் மறையும். இப்படியே கொஞ்ச நேரம் விளையாட்டுக்கள் நடந்து கொண்டிருந்தன.
எங்களுக்குள் குதூகலம் குடிகொண்டது. இப்படி ஒரு தடவை அவள் எட்டிப் பாக்கும் போது “பாக்கிறாளடா..பாக்க்கிறாளடா„ என்று என்னை அறியாமல் சத்தமாகச் சொல்லி விட்டேன்.
“எங்கை பாக்கிறாள்? எங்கை பாக்கிறாள்? „
என்று ஒரு குரல் கேட்டது.
அந்தக் குரல் நிச்சயமாக கலையரசனுடையதோ மகேந்திரனுடையதோ இல்லை. ஆனால் எனக்கு நன்றாகப் பரீட்சயமான குரல்தான். குரல் எனக்குப் பின்னால் மேலிருந்து வந்தது போல் இருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எனது தமிழ் வாத்தியார் ஏகாம்பர மாஸ்ரர்.
இப்போ நிலவு போய் மேகம் இருட்டிக் கொண்டு வந்தது போல் இருந்தது.
பக்கத்தில் பார்த்தேன் கலையரசனுமில்லை மகேந்திரனுமில்லை. நிலமை அறிஞ்சு இருவரும் ஓடிவிட்டார்கள். எங்கள் மொழியில் சொல்வதானால் மாறிட்டாங்கள்.
ஏகாம்பர மாஸ்ரர் எனது கையைப் பிடித்துக் கொண்டார்.
“தேவன் அந்தப் பச்சைப் பாவாடை போட்டிருக்கிறாள் அதையே சொல்லுறாய்? „ கேட்டது ஏகாம்பர மாஸ்ரர்.
தலையைக் குனிந்து கொண்டு விழியை உயர்த்தினேன் பச்சை என்னை பாவமாகப் பார்ப்பது போலிருந்தது.
“தேவன் என்ன பயப்பிடுறாய்.? உனக்கு வயசு வந்திட்டுது நீ பெட்டைகளைப் பாக்கலாம். பிழையில்லை. அந்த பச்சைக்குப் பக்கத்திலையிருக்கிற மஞ்சளும் அவ்வளவு மோசமில்லை. நீயென்ன சொல்லுறாய்.? „
வார்த்தைகளால் வாத்தியார் கொன்று கொண்டிருந்தார்.
மெதுவாகக் கையை விடுவித்துக் கொண்டு கூட்டத்தை விட்டு வெளியேறிக் கொண்டேன்.
வெளியேறும் போது, “நாளையான் கட்டுரைக்கு கடற்கரைத் தீர்த்தத்தைப் பற்றி எழுது என்ன? „
ஏகாம்பர மாஸ்ரரின் வார்த்தைகள் காதில் விழ எனக்கு கலருகள் எதும் கண்ணில் தெரியாமல் இருட்டுக்குள் நடப்பது போலிருந்தது.
Thursday, June 10, 2004
Subscribe to:
Posts (Atom)