"நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு நாகப்பாம்பு வருமாம். அது வந்ததுக்குப் பிறகுதான் ஐயர் பூசையே ஆரம்பிப்பாராம்"
என்று இரத்தினக்கா கதையைக் கிளப்பிவிட, அம்மாவுக்கு நாகதம்பிரானை தரிசிக்கும் ஆசை வந்து விட்டது.
"போறதெண்டால் சொல்லுங்கோ நானும் வாறன்" என்று இரத்தினக்கா மேலும் சொல்லி வைக்க அம்மாவின் நாகதம்பிரான் தரிசனத்துக்கான தேதி குறிக்கப் பட்டு விட்டது. இரத்தினக்காவுக்கும் தனியே போய் நாகதம்பிரானைத் தரிசிக்க வேண்டிய அலைச்சல் இல்லாமல் பேச்சுத் துணைக்கு அம்மாவையையும் சேர்த்துக் கொள்ள மதியப் பூசை பாம்பு பெரிதும் உதவியது.
என்னையும் அக்காவையும் அழைத்துக் கொண்டு இரத்தினக்காவுடன் நாகர் கோவிலுக்கான அம்மாவின் பயணம் ஆரம்பமானது. இந்தப் பயணத்தில் எனக்கு துளி கூட விருப்பம் இல்லை. எனது நண்பர்களுடனான அன்றாட விளையாட்டுக்கள் இல்லாமல் இவர்களுடன் கோவிலில் போய் சும்மா நேரத்தை வீணடிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் சாமி கும்பிட்டாப் போலை அங்கை நாகப்பழம் பிடுங்கிச் சாப்பிடலாம் என்ற அம்மாவின் ஆசை வார்த்தைகளில் விழுந்து எனது அந்தப் பயணம் தொடங்கியது.
நாகர் கோவிலில் மத்தியானப் பூசைக்கு கோவிலில் கூட்டம் இல்லை எங்களோடு சேர்ந்து இன்னும் ஓரிரு ஆட்கள்தான் அங்கே நின்றிருந்தார்கள். பூசைக்கு முன்னர் நாகப்பாம்பு வருகிறதா என எல்லா இடமும் பார்த்தாயிற்று. எந்த அரவமும் வரும் அரவமும் தெரியவில்லை. நான் இரத்தினக்காவிடம் கேட்டும் பார்த்தேன். "இவன் என்ன சும்மா சும்மா கரைச்சல் தாரான்" என சலித்துக் கொண்டார். இதனால் அம்மாவும் என்னைக் கடிந்து கொண்டார்.
ஒருவாறு நாகப் பாம்பு இல்லாமல் பூசையை ஐயர் முடித்து திருநீறு தந்து எல்லாம் முடிந்து இருந்த ஓரிருவரும் கோயிலை விட்டுப் போய் விட்டார்கள். ஐயரும் கோவிலில் தரையில் துண்டைப் போட்டு படுத்துக் கொண்டார். நான் அம்மாவை "இனி நாகக் காட்டிற்குப் போய் நாகப்பழம் பறிக்கலாமா?" என்று கேட்கத் தொடங்கினேன். "சரி வா" என்று அம்மா அழைத்துக் கொண்டு சென்றார்.
இரத்தினக்காவின் முகத்தில் வழமைபோல் மகிழ்ச்சியைக் காணவில்லை. நாகக் காட்டிற்குப் போகும் வழியில் "இவனாலைதான் எல்லாம் பிழைச்சுப் போச்சு இவன் விடாமல் அரியண்டம் பிடிச்சதாலைதான் பாம்பே வராமல் போட்டுது" என்று என் மீது குற்றம் சுமத்திக் கொண்டே வந்தார். கடவுள் பக்தியால் அம்மாவும் அதை நம்பியிருப்பார் என்றே நினைத்துக் கொண்டேன். எதுவும் பேசாமல் சேர்ந்து நடந்தேன். "அடுத்தமுறை கோவில் குளம் எண்டு போகக்கை இவனை விட்டிட்டு வாங்கோ" என்று இரத்தினக்கா அம்மாவுக்கு அறிவுரை சொன்னார். அவர் அப்படிச் சொன்னது எனக்கு அப்பாடா என்றிருந்தது.
நாகப்பழ மரங்களைக் கண்டவுடன் ஓடிப்போய் பழங்களைப் பறிக்க எத்தனித்த பொழுது அம்மா எனது கையைப் பிடித்துத் தடுத்தார். "இந்த மரங்களுக்;குக் கீழ் இருக்கும் சருகுகளுக்குள்ளைதான் நாகப் பாம்புகள் இருக்க சாத்தியம் இருக்கு. பொறு. அவசரப்படாதை". தாழ்வானதாக இருந்த ஒரு நாவல் மரத்துக் கிளையில் அம்மா ஏறி அமர்ந்து கொண்டு, வெள்ளை மணலில் கால்களை அழுத்தி ஊஞ்சல் போல் அந்த மரக்கிளையில் ஆடத் தொடங்கி விட்டார். அந்த மரக் கிளையின் ஆட்டத்தில் அதில் இருந்த நன்கு பழுத்த நாகப்பழங்கள் விழத் தொடங்கின. நானும் அக்காவும் அவற்றைப் பொறுக்கி எடுத்து, கொண்டு கையில் வைத்திருந்த பைகளில் சேகரிக்கத் தொடங்கினோம். பழங்களை வெள்ளை மணலில் இருந்து எடுத்து பைகளில் போடும் வேளைகளில் ஒன்றிரண்டை வாயிலும் போட்டுக் கொண்டேன். இதில் அதிகம் பழுத்திருந்த நாகப்பழங்களில் ஒட்டி இருந்த வெள்ளை மணலை காற்சட்டையில் துடைத்தும் போகாததால் அதை வாயால் ஊதி மணலைப் போக்கினேன். இதைப் பார்த்த அம்மா சிரித்தபடி "என்ன பழம் சுடுகுதோ?" என்றார். பழத்தைப் பொறுக்குவதை விட்டு விட்டு நிமிர்ந்து பார்த்தேன் தரையில் குமரன் நாவல் மரத்தில் அவ்வை. நான் இரண்டாம் வகுப்பில் படித்த கதை அப்படியே மாறியிருந்தது.
அம்மா என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டே நாவல் மரத்துக் கிளையில் அமர்ந்து மேலும் கீழுமாக ஊஞ்சல் ஆடிக் கொண்டிருந்தார்.