Saturday, July 09, 2005

கறுப்புக் கொடி



22.05.1972 அன்று சிங்கள அரசு, சிறிலங்கா என்ற நாமம் சூட்டி தன்னை குடியரசு நாடாக அறிவித்த நாள். நகரமே அன்று அமைதியாக இருந்தது. தமிழ் மக்களின் பகுதிகளில் கடைகள் எல்லாமே பூட்டப் பட்டு அமைதியாக இருந்தன. தமிழ்மக்கள் தங்கள் எதிர்ப்பை இந்த வகையில் தெரிவித்துக் கொண்டிருந்தார்கள்.

கறுத்தக் கொடி ஒன்று நகரத்தின் கடையொன்றின் ஓட்டின் முகப்பில் இருந்து கடற்கரைக் காற்றின் துணையுடன் அட்டகாசமாகக் ஆடிக் கொண்டிருந்தது. இந்தக் கொடியின் ஆட்டம் பவனி வந்து கொண்டிருந்த பொலீஸின் கண்களில் பட்டுவிட்டது. பவனி வந்த அத்தனை பொலீஸாரும் சிங்களவர்கள். அப்பொழுதெல்லாம் அப்படித்தான், தமிழ்ப் பகுதிகளில் சிங்களவரே பொலீஸ் துறையில் ஈடுபடுத்தப் பட்டிருந்தனர். ஒரு சில இடங்களில் விதிவிலக்கு இருந்திருக்கலாம்.

கொடியை இலக்கு வைத்து பொலீஸ் ஜீப் நகரத்தின் அந்தக் கடையை நோக்கி வந்து கொண்டிருந்தது. சுங்கான் தனது வானொலி திருத்தும் நிலையத்தைப் பூட்டிவிட்டு, அதற்கு முன்னால் கதிரையைப் போட்டு அதில் இருந்தபடி சிலருடன் உரையாடிக் கொண்டிருந்தார். போலீஸைக் கண்டதும் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாக நகர்ந்து அருகில் இருந்த வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்குள் மறைந்து கொண்டது. சுங்கான் மட்டும் கையில் இருந்த புத்தகத்தை விரித்து வைத்தபடி தன்னை நோக்கி வரும் பொலீஸ் ஜீப்பைப் பார்த்துக் கொண்டிருந்தார். வேகமாக வந்து கிறீச்சிட்டு நின்ற ஜீபபில் இருந்த பொலீஸ் படு வேகமாக இறங்கியது. ஆனால் சுங்கானிடம் எந்த விதப் பதட்டமும் இல்லை. ஒருகாலை வெளியிலும் மறு காலை ஜீப்பின் உள்ளேயுமாக வைத்துக் கொண்டு இன்ஸ்பெக்டர் கோபமாக சுங்கானைப் பார்த்தார். சுங்கான் ஏற்றி வைத்த கறுப்புக் கொடி மட்டும் படபடத்துக் கொண்டிருந்ததே தவிர சுங்கானிடம் எவ்விதமான அசைவும் இருக்கவில்லை. பொலிஸார் சுற்றி நிற்க நடுவில் கதிரையில் சுங்கான் அமைதியாக இருந்தார். ஜீப்பில் இருந்த வண்ணம் இன்ஸ்பெக்டர் அதட்டலாகக் கேட்டார்,

"ஆரு கொடி ஏத்தினது?"

"நான்தான்"
சுங்கானின் பதிலில் அமைதியிருந்தது. அமைதியான அவரின் பதில் இன்ஸ்பெக்டருக்கு கண்டிப்பாக ஒரு தயக்கத்தைத் தந்திருக்கும். ஆனாலும் அவரிடமிருந்து உடனடியாகக் கட்டளை வந்தது.

"ஓட்டிலை ஏறி கொடியை உடனை இறக்கு"

"இறக்கிறதுக்காக நான் கறுப்புக் கொடியை ஏத்தேல்லை எதிர்ப்புக் காட்டத்தான் ஏற்றியிருக்கிறன்" சுங்கான் எதுவித பயமுமில்லாமல் பதில் தந்தார்.
சுங்கானின் பதிலின் வேகத்துக்கேற்ப ஜீப்பில் இருந்து இன்ஸ்பெக்டர் இறங்கி நின்றார். ஒரு விபரீதம் நிகழப் போகும் வாய்ப்பு அங்கே உருவாகியிருந்தது தெரிந்தது. வீரவாகு கிட்டங்கியின் தகரத் தடுப்புக்களின் துவாரங்களுக்குள் பயந்த பல கண்கள் என்ன நடக்கப் போகிறதோ என்ற அச்சத்தில் பார்த்துக் கொண்டிருந்தன. இன்ஸ்பெக்டர் என்ன நினைத்தாரோ தெரியாது ஒரு பொலீஸைக் கூப்பிட்டு ஓட்டில் ஏறி அந்தக் கொடியை இறக்கும் படி பணித்தார். அருகில் இருந்த குளாயைப் பிடித்து அந்த பொலிஸ் ஏற முற்பட்ட போது சுங்கானிடமிருந்து அமைதியாகப் பதில் வந்தது, "ஏறி கொடியைப் பிடிச்சு உனக்கேதாவது ஆச்சுதெண்டால் இன்ஸ்பெக்டர்தான் பொறுப்பு.. நானில்லை." ஏற முற்பட்டவன் இன்ஸ்பெக்டரைத் திரும்பிப் பார்த்தான். இன்ஸ்பெக்டர் கண்களும் சுங்கானின் கண்களும் நேரடியாக சந்தித்துக் கொண்டன. சுங்கான் வில்லங்கம் பிடித்த ஆள் என்று அவர்களுக்கும் தெரியும். ஒரு வேளை மின்சாரத்தைக் கொடியில் இணைத்திருக்கலாம் என்ற அச்சம் அவர்களுக்கு இருந்திருக்கும். சிறிது நேரம் அங்கு அமைதியாக இருந்தது. என்ன நினைத்தாரோ இன்ஸ்பெக்டர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு எதுவுமே சொல்லாமல் ஜீப்பில் ஏறிப் போய்விட்டார். ஜீப் மறைந்ததும் கதிரையைத் தூக்கிக் கொண்டு சுங்கானும் வீரவாகு கிட்டங்கியின் தகர மறைப்புக்குள் வந்துவிட்டார். கூடியிருந்தவர்கள் கேட்டார்கள்,
"உண்மையிலை கொடிக்கு கரண்ட் குடுத்திருக்கிறீயோ? "

"ஏறித் தொட்டிருந்தால் தெரிஞ்சிருக்கும்... கரண்டுமில்லை மண்ணுமில்லை எண்டு... பயந்திட்டாங்கள்.. "

ஒன்றுமே இல்லா இடத்திலையும் தனது பயத்தை வெளிக்காட்டாமல் மற்றவர்களைப் பயப்படுத்துவதற்குத் திறமை வேண்டும். அதை அன்று நான் சுங்கானிடம் கண்டேன்.

No comments: