Friday, August 22, 2008

இரத்ததானம்

எனது அண்ணன் குணசீலன் பாடசாலையில் படிக்கும் போது, அங்கிருந்த சாரணர் சேவையிலும் இருந்தார். ஒருநாள் பாடசாலை முடிந்து மாலையில் வீடு வந்த போது தான் இன்று இரத்ததானம் செய்ததாக அம்மாவிடம் கூறினார். தனது பிள்ளை இரத்தம் கொடுத்து விட்டு வந்திருக்கிறானே உடல் தளர்ந்து போவானோ என்ற கவலை எனது அம்மாவிற்கு வந்து விட்டது. கொடுத்த இரத்தம் தானாக உடலில் வந்து விடும் எதுவுமே ஆகாது என்று அண்ணன் எவ்வளவு சொல்லியும் அம்மா சமாதானம் அடையவில்லை. தனது பிள்ளையின் இரத்தம் ஒன்றுதான் அவரின் நினைவாக இருந்தது.
அம்மாவுக்கு மனது பொறுக்கவில்லை. "சாரணர் இயக்கத்தில் வேறுதுவும் செய்யலாம்தானே. எதுக்காக இரத்தத்தைக் குடுத்திட்டு வந்திருக்கிறான்" என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்தார். அப்பொழுது இரத்ததானம் என்பது பெரிய விடயம். உடல் பருத்தவர்கள்தான் அதைச் செய்யலாம் என்ற நம்பிக்கை இருந்த நேரம். ஆகவே அம்மாவின் மன வேதனைக்கு அர்த்தம் இருந்தது.
அண்ணனுக்கு கவனிப்பு அதிகமானது. பால் முட்டை என்று அம்மா கொடுக்கக் கொடுக்க மகிழ்ச்சியோடு உள்ளே தள்ளிக் கொண்டிருந்தார். அந்த வயதில் இரத்ததானம் என்ற விடயம் எனக்குப் புதிது. நரம்பை வெட்டி இரத்தம் எடுப்பார்கள் என்றே நம்பிக் கொண்டிருந்தேன். அண்ணனிடம் இதைப் பற்றிக் கேட்ட பொழுது சரியான பதில் தர அவர் விரும்பவில்லை. ஆனால் இரத்ததானம் கொடுத்ததற்கு பத்திரமும் பத்து ரூபா பணமும் தந்ததாகச் சொல்லி அவற்றை பெருமையாகக் காட்டினார்.
அம்மாவின் ஸ்பெசல் கவனிப்பில் அண்ணன் ஒரு சுற்று பெருத்து விட்டார். இதை எல்லாம் கவனித்த எனக்கு பத்து ரூபாவும், அம்மாவின் கவனிப்பும் கண்களின் முன்னே சுழன்றாடத் தொடங்கி விட்டது. எனக்கும் இரத்ததானம் கொடுக்கும் ஆசை மனதில் ஊறி விட்டது.
எனது வகுப்பாசிரியர் சுப்பிரமணிய மாஸ்ரரிடம் ஒருநாள் இரத்தம் கொடுக்கும் எனது எண்ணத்தை வெளிப் படுத்தினேன். அவர் என்னை மேலும் கீழும் பார்த்து விட்டு "எங்களது பாடசாலையில் அப்படி இரத்ததானம் செய்யும் வழமை இல்லை" என்றார். "பாடசாலையில் இல்லாவிட்டால் வேறு எங்கே நான் இரத்ததானம் செய்யலாம்" என்று அவரிடம் தொடர்ந்து கேட்டபோது, கண்ணாடியைக் கழற்றி மேசை மீது வைத்து விட்டு என்னை கண்களால் ஊடுருவிப் பார்த்தார். எனக்கு விளங்கி விட்டது. எனது உடல்வாகு இரத்ததானம் கொடுக்கும் வகையில் இல்லை என்று. நான் மெலிதாக இருநத்தால் எனக்கு அப்பொழுது நூடில்ஸ் என்ற பட்டப் பெயரும் இருந்தது. ஆகவே சுப்பிரமணியம் மாஸ்ரரின் பார்வையின் அர்த்தம் எனக்கு விளங்கியது.
"இரத்ததானம் குடுக்கிறதுக்கு வயசும் முக்கியம். உன்னட்டை எல்லாம் எடுக்க மாட்டாங்கள். உனக்கு எதுக்கு இந்த விபரீத ஆசை. சோளகக் காத்து அடிச்சால் பறந்து போயிடுவாய். போ.. போய் படிக்கிற அலுவலைப் பார்."
சுப்பிரமணிய மாஸ்ரரின் அறிவுரையோடு எனது இரத்ததானம் வழங்கும் எண்ணம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அண்ணனை அம்மா கவனித்து உணவழித்த அந்த பாசமுள்ள காட்சிகள் மட்டும் இன்றும் வந்து போகும்.



Saturday, August 09, 2008

பெரிய மனது


அக்கா அணிந்திருக்கும் சங்கிலியில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரன் அழகானதாயிருக்கும். அந்தப் பென்ரனைச் சுற்றி தங்கத்தால் நுணுக்கமான முறையில் வேலைப்பாடுகள் செய்யப் பட்டிருக்கும். இதயம் போன்ற அமைப்பில் மின்னும் அந்தப் பென்ரனை சிறிய வயதிலேயே நான் ரசித்திருக்கிறேன் என்றால் அது எந்தளவு பெறுமதியானது என்பது விளங்கும்.
சிறிய வயதுதான். அந்த வயதில் அம்மாவுடன் ஒட்டிக் கொண்டு போவதென்றால் கொள்ளை ஆனந்தம். அந்தக் கால கட்டத்தில் அம்மாவிற்கு இரண்டு நிழல்கள் இருக்கும். வலது பக்கம் நான் இடது பக்கம் எனது அக்கா. அன்றும் அப்படித்தான் எங்களது நிழல்கள் தொடர அம்மா கந்தையாமாமா வீட்டிற்கு வந்திருந்தார்.
எனது தந்தையாரின் மாமன் மகன்தான் கந்தையாமாமா. எனது தந்தையார் எங்களது ஊரில் பெரிய மனிதனாக வலம் வந்தவர் அவரின் மறைவிற்குப் பின்னர் அந்த இடத்தைப் பிடிக்க பெரும் முயற்சி செய்தவர் கந்தையாமாமா. அவர் சிறிய வயதிலேயே ஓய்வூதியத்தை எடுத்து விட்டார். வீட்டின் முன்னால் கதிரையைப் போட்டுக் கொண்டு கிட்லர் மீசையோடு மிடுக்காக உட்காந்திருப்பார். கையில் வேப்பிலைக் கொத்தை எப்பொழுதும் வைத்திருப்பார். காலில் உள்ள எக்ஸிமாவில் ஈக்கள் மொய்க்காத வண்ணம் அந்த வேப்பிலைக் கொத்தால் கலைத்துக் கொண்டிருப்பது அவரது அன்றாடப் பணிகளில் ஒன்று.
ஈட்டில் இருந்த எங்களது காணி ஒன்றை மீட்டெடுக்க வேண்டிய காலம் நெருங்கிக் கொண்டிருந்தது. எனது தந்தையார் காலமாகிய நேரம். அவரது ஓய்வூதியம் வந்து சேர சில மாதங்கள் காத்திருக்க வேண்டிய நிலமை. இந்த நேரத்தில் காணிப் பிரச்சினை. அம்மா கந்தையாமாமாவிடம் சொன்னார், "ஒண்டு இரண்டு மாதத்திலை பென்சன் வந்திடும். இதுவரை தராத காசெல்லாம் சேர்த்து வரும். இந்தக் காணியை இன்னும் இரண்டு மூண்டு மாசத்திலை மீட்கிறம் எண்டு அவையளுக்கு ஒருக்கால் சொல்லி விடுங்கோ "
எனது தந்தையின் முகத்தை ஏறெடுத்துப் பார்த்துக் கதைக்கத் தயங்கும் கந்தையாமாமாவிடம் இருந்து உடன் பதில் வந்தது "அதென்னெண்டு.. அதெல்லாம் காசு வந்தாப்போலைதான் தெரியும்.. காசு வருமெண்டதை நம்பி என்னாலை போய்க் கதைக்கேலாது"
அந்த சின்ன வயதிலேயும் அவரது பேச்சு எனக்கு எரிச்சலைத் தந்தது. இரண்டு மாதத் தவணை கேட்பதில் இவருக்கென்ன குறைந்து போய்விடும். இரண்டு மாதத்திலை காசு வராட்டில் காணி போகட்டும். இதில் இவருக்கென்ன கௌரவக் குறைச்சல் என்று நினைத்துக் கொண்டேன். அம்மா எதுவுமே கதைக்கவில்லை. வீடு நோக்கி நடக்க ஆரம்பித்தார். இடமும் வலமும் நிழல்கள் தொடர்ந்தன.
அன்றும் நிழல்கள் இரு பக்கமும் தொடர அம்மா நடந்து கொண்டிருந்தார். இம்முறை நாங்கள் சென்றது எங்களது காணிக்குள். அது வேலி இல்லாத காணியானதால் அதனூடக ஒரு நடை பாதையை அமைத்து விட்டார்கள். சூசையப்பர் கோவிலுக்கு முன்னால் அந்தக் காணி இருந்நது. ஒற்றைப் பனைமரம் ஒன்று அங்கிருந்தது. அம்மா சொன்னார் "போற வாற ஆக்கள் போத்தல்களை எல்லாம் உடைச்சுப் போட்டிருக்கினம் எல்லாத்தையும் பொறுக்கி ஒரு கரையிலை போடுங்கோ" என்று. நானும் அக்காவும் அம்மாவுடன் சேர்ந்து போத்தல் துண்டுகளைப் பொறுக்கி ஒரு கரையில் வைத்துக் கொண்டிருந்தோம். அப்பொழுதுதான் கவனித்தேன் அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான பென்ரனைக் காணவில்லை. எங்கேயோ தொலைத்து விட்டு பேசாமல் இருக்கிறாளா என்று எனக்குள் எண்ணம் ஓடியது. எங்களுக்குச் சற்றுத் தள்ளி போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்த அம்மாவை நோக்கி மெதுவாக நகர்ந்து. "அக்கா பென்ரனை துலைச்சுப் போட்டாள்" என்று அம்மாவிடம் சத்தம் இல்லாமல் கோள் மூட்டினேன். அம்மா என்னை நிமிர்ந்து பார்க்காமல் சொன்னார் "அதை வித்துத்தான் இந்தக் காணியை மீண்டனான்" அம்மாவைப் பார்த்தேன் கண்கள் கலங்கியிருந்தன. அக்காவின் பக்கம் திரும்பினேன். அவள் ஏதும் நடக்காதது போல் பேசாமல் போத்தல் ஓடுகளைப் பொறுக்கிக் கொண்டிருந்தாள்.கந்தையாமாமா மட்டும் ஒரு வார்த்தை சொல்லியிருந்தால் எனது அக்காவின் கழுத்தில் தொங்கும் அந்த பிறவுன் நிறமான அழகிய பென்னரன் இன்னும் இருந்திருக்கும் என்று அந்த சின்ன மனது கவலைப் பட்டது.
அந்தக் காணியில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று எனது தந்தையார் விரும்பி இருந்தார். அதனால்தான் அம்மாவும் அந்தக் காணியில் அதிக ஈடுபாடு காட்டியிருந்தார். சூசையப்பர் கோவிலின் நிழல் அந்தக் காணியில் விழுவதாலும் சேமக்காலை அந்தக் கோவிலோடு அண்டியிருப்பதாலும் அந்தக் காணியில் வீடு கட்டி வாழ்வது நல்லதாக இருக்காது என்று ஊரார் சொன்னதால் அங்கு வீடு கட்டும் எண்ணத்தை அம்மா கைவிட்டு விட்டார்.
பின்னாளில் எனது பெரியம்மாவின் மகளின் திருமணத்திற்கு பணம் தேவைப்பட்ட போது எனது அம்மா அந்தக் காணியை விற்று அவர்களுக்குப் பத்தாயிரம் அன்பளிப்பாகக் கொடுத்திருந்தார். அந்த நேரத்தில் பத்தாயிரம் என்பது பெரிய தொகை. அதை அம்மா மகிழ்வோடு கொடுத்திருந்தார். அந்தத் திருமணத்திற்குப் பெரிய மனிதனாக வந்து முதற் பந்தியில் இருந்து உணவருந்தியவர் கந்தையாமாமா.