அவரை அங்கை ரீச்சரென்றே அழைப்போம். அவரின் முழுப்பெயர் அங்கையற்கண்ணி. அங்கையற்கண்ணி என்ற பெயர் நீண்டு போனதால் அங்கை.
அங்கை - அழகான பெயர். அவ கூடத்தான் அழகு. யாரிடமும் தேவையில்லாமல் பேசமாட்டா. தானுண்டு தன் வேலையுண்டு என்பது அவரின் சுபாவம்.
அங்கை ரீச்சர் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஆசிரியையல்ல. தனிப்பட்ட முறையில் நடனம் பயிற்றுவித்த ஒரு ஆசிரியை. எங்கள் ஊரில் இருந்து 22 மைல் தள்ளிப் போய்தான் நடன வகுப்பெடுத்து வருவார். நடன ஆசிரியை என்பதால் அவரின் நடையிலும் ஒரு நளினமிருக்கும். அழகு ஒன்று நளினமாக நடந்து வந்தால் இளசுகளுக்கு எப்படியிருக்கும்? அவர் போகும் போதும் வரும் போதும் எங்கள் வீதிகளில் நிறைய சைக்கிள்கள் மெதுவாக ஓடும். ஒரு பக்கம் போன சைக்கிள் தேவையில்லாமல் மறுபக்கம் திரும்பி வரும்.
அங்கை ரீச்சரின் தம்பி சுதன் என்னுடன் தான் படித்தான். சுதன்தான் அங்கை ரீச்சரை பஸ் நிலையம் வரை கூட்டிக்கொண்டு போய் விடுவான். மாலையில் பஸ் நிலையத்தில் காத்திருந்து கூட்டிக் கொண்டு வீடு போவான். சுதனுடன் நானும் பல தடவைகள் அங்கை ரீச்சருக்காக பஸ் நிலையத்தில் காத்திருந்திருக்கிறேன். அங்கை ரீச்சர் என்னை அன்பாக தம்பி என்றே அழைப்பார். மாலையில் வரும்போது சுதனுக்கு மட்டுமல்ல எனக்கும் ஏதாவது இனிப்புகள் வாங்கி வந்து தருவார்.
அங்கை ரீச்சருக்கு ஒரு காதல் இருந்தது. அநேகமாக எல்லோருக்கும் அந்த விடயம் தெரியும். அவரின் பக்கத்து வீட்டிலிருந்த கார்த்திகேயண்ணைதான் ரீச்சரின் காதலன். அவரும் நிறைய அன்பானவர். மின்சார வாரியத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார். ரீச்சரின் பக்கத்து வீட்டுக்காரனாக இருந்தாலும் அவர்களது காதல் மிகவும் கண்ணியமாகவே இருந்தது. அவர்களுக்கு இடையில் காதல் இருந்ததாக ஊரில் பேசிக்கொள்வார்கள். ஆனால் அவர்களது காதலை யாராவது கேலி செய்தோ கேவலமாகவோ கதைத்ததாக இல்லை. வீதிகளில் அவர்கள் இருவரும் சந்திக்க நேர்ந்தாலும் வெறும் பார்வையுடன் விலகிச் செல்வார்கள். இத்தனைக்கும் இதுவே நான் பார்த்த முதல் கண்ணியமான காதல்.
ஓருநாள் நான் ரீச்சரைப் பார்த்தபோது அவரின்; முகத்தில் மகிழ்ச்சி மறைந்திருந்தது. ஏன் என்று நான் கேட்கவில்லை. கேட்கும் எண்ணமும் எனக்கிருக்கவில்லை. முகத்தில் மட்டும்தான் அவரது மகிழ்ச்சி மறைந்து போயிருந்தது. செயல்களில் எதுவித மாற்றமும் இருந்ததில்லை. திங்கள் முதல் வெள்ளி வரை நடன வகுப்புக்குச் சென்று வருவார் திரும்பி வரும்போது எனக்கும் சுதனுக்கும் ஏதாவது இனிப்பு வாங்கிவருவார். ஆனாலும் அவரது முகம் களையிழந்து இருந்தது தெரிந்தது.
ஒருநாள் இரவு அங்கை ரீச்சரின் வீட்டுப் பக்கமாக துப்பாக்கிச் சத்தம் கேட்டது. ஊரெல்லாம் அல்லோலகல்லோலப் பட்டது. கொஞ்ச நேரத்தில் எல்லாமே அமைதியாகிவிட்டது. அன்று என்ன நடந்தது என்பது எனக்குத் தெரியாது. சின்னப் பையன் என்று எனக்கு யாரும் எதையும் சொல்லவில்லை. எப்படியாயினும் விடயத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் நிறைய இருந்தது.
அடுத்தநாளே விடயத்தை அறிந்து கொண்டேன். விடயம் இதுதான். கதைக்கு ஒரு வில்லன் வேண்டுமல்லவா. அதுவும் காதல் கதைக்கு வில்லன் இல்லாவிட்டால் சுவாரஸ்யம் இல்லாது போய்விடும். அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினனே வில்லனாக வந்தான். அதுவும் அங்கை ரீச்சரை விட அவருக்கு பதினான்கு வயது அதிகம்.
அங்கை ரீச்சரின் தாய்க்கும் தனது உறவினனை மணம் முடித்துக் கொடுப்பதிலேயே ஆர்வமிருந்தது. சினிமா காதல் மாதிரி இவர்கள் காதலும் முக்கோணக் காதலானதால் காதலனுக்கும் வில்லனுக்கும் இடையில் மோதல் ஆரம்பமானது. அதன் இறுதிக் கட்டமே கார்த்திகேயண்ணையின் துப்பாக்கி விளையாட்டு.
கார்த்திகேயண்ணையிடம் முயல் வேட்டைக்குக் கொண்டு செல்லும் துப்பாக்கி இருந்தது. முயல் வேட்டைத் துப்பாக்கி என்றால், சுடும் போது சன்னங்கள் சிதறிப் பாயும். அதில் ஒன்றாவது முயலில் படும் சாத்தியக் கூறு இருக்கும். இந்தத் துப்பாக்கியை வைத்துத்தான் கார்த்திகேயண்ணை விளையாட்டுக் காட்டினார். ஆளைப் பார்த்துச் சுடாமல் பயம் காட்டுவதற்காக வானத்தைப் பார்த்து சுட்டிருக்கின்றார். விளைவு சத்தம் கேட்டு ஊரெல்லாம் திரண்டு விட்டது.
கதையில் பயங்கர ஆயுதங்களை வில்லன்தான் வைத்திருப்பான். கதாநாயகன் வெறும் கையுடன் சென்று சண்டை செய்து எதிரியை வென்று காதலியை மீட்டு வருவான். ஆனால் நிலமை இங்கு வேறுவிதமாக இருந்தது. கதாநாயகன் கையில் ஆயுதமிருந்தது. இது ஊராருக்கு கார்த்திகேயண்ணையை வில்லனாக மாற்றிக் காட்டியது. ஆகவே முடிவு மங்களமாக இல்லாமல் அமங்களமாக இருந்தது. ஊராரின் ஆதரவு அங்கை ரீச்சரின் தாய்வழி உறவினருக்கே கிடைத்தது. பக்கத்தில் உள்ள பிள்ளையார் கோவிலில் இரவோடு இரவாக அங்கை ரீச்சருக்கு அவரது தாய் வழி உறவினர் தாலி கட்டி காதல் கதையை முடித்து வைத்தார்.
எனக்கு அங்கை ரீச்சரை நினைக்க அழுகையே வந்து விடும் போலிருந்தது. கார்த்திகேயண்ணையும் பாவம். இந்த விடயத்திற்குப் பிறகு ஊரில் யாருடனும் அவர் கதைத்ததை நான் காணவில்லை. அழகான அவரின் முகத்தில் தாடி வளர்ந்து கொண்டேயிருந்தது. அந்த அவரது அழகு முகத்தை பின்னாட்களில் முழுமையாக நான் பார்க்கவேயில்லை. அங்கை ரீச்சர் கூட நீண்ட நாட்களாக நடன வகுப்பு எடுக்கப் போகவில்லை. எனது சிறுபராயத்தில் உள்ள விளையாட்டுக்கள் படிப்புக்களுடன் இவர்களது விடயம் பல காலம் மறந்தே போயிற்று.
கொஞ்ச வருடங்களின் பின்னர் அங்கை ரீச்சரை மறுபடி நான் பார்த்தேன். ஆளே முழுவதுமாக மாறியிருந்தார். நடையின் நளினங்கள் இருக்கவில்லை. முகத்தில்; சிரிப்பு சிறிதளவேனும் இல்லை. கண்களின் கீழே புதிதாக வளையங்கள் விழுந்திருந்தன. கன்னத்தில் குழிகள் இருந்தன. கண்கள் குழிக்குள் இருந்தன.
"புருசன் பயங்கரக் குடிகாரன். பாவம் இரண்டு பெட்டைகளைப் பெத்துப் போட்டு உழைக்கப் போறாள். புருசன் சுகமா வீட்டிலையிருந்து குடிச்சுக் கொண்டிருக்கிறான். எப்பிடியிருந்த பெட்டை இப்பிடிப் போனாள். மனுசன் அடிக்கிறவன் போலை" என்று ஊரில் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.
இப்போ எல்லாம் அங்கை ரீச்சரைக் கூட்டிக் கொண்டு போவதற்கு சுதன் வருவதில்லை. தனியாக வந்து தனியாகவே அவர் போய்க் கொண்டிருந்தார். ஒருநாள் பஸ் தரிப்பிடத்தில் நான் நின்ற போது அங்கை ரீச்சர் நடன வகுப்பு எடுத்து முடித்து விட்டு வந்து பஸ்ஸால் இறங்கினார். தூரத்தில் நின்று பார்த்தால் ரீச்சரை அடையாளம் காண முடியாது. அந்தளவுக்கு அவரில் மாற்றம் இருந்தது. காலம் எப்படியெல்லாம் மனிதர்களைப் புரட்டிப் போடுகிறது. மனது கனமானது.
"தம்பி எப்பிடியிருக்கிறாய்..? உனக்கு ஒண்டும் வாங்கிட்டு வரேல்லையடா"
இதைச் சொல்லும்போது அவரின் கண்களில் ஏதோ மின்னுவது தெரிந்தது. வாகனங்களின் வெளிச்சம் கண்ணில் நிறைந்திருந்த கண்ணீரில் பட்டு தெறிப்பதைப் புரிந்து கொண்டேன்.
அந்த வயதில் நிலமைகளை சமாளிக்கும் பக்குவம் எனக்குத் தெரியாது. பேசாமல் நின்றேன்.
"படி.. நல்லா படி.. "எனது தோளில் தட்டிச் சொல்லிவிட்டுச் சென்றார்
அடுத்தநாள் காலையில் செய்தி கிடைத்தது அங்கைரீச்சர் விசம் குடித்து இறந்து போனார் என்று.
"அம்மா இனியும் என்னாலை ஏலாது" என்று சொன்னதுதான் அங்கைரீச்சர் சொன்ன கடைசி வார்த்தைகள் என அறிந்தேன். தாய்க்குக் கட்டுப்பட்ட அந்த உயிர் தாயின் மடிலிலேயே பிரிந்தது.
கார்த்திகேயண்ணையை நான் இங்கு வரும் போது கண்டிருக்கிறேன். அந்த அழகு முகத்தை மறைத்த தாடி நரைத்திருந்தது. இப்போ அவர் உயிருடன் இருந்தால் அவருக்கு ஒரு எழுபது வயதாவது இருக்கும்.
ஊருக்குப் போனால் கார்த்திகேயண்ணையைத் தேடிச் சென்று கதைக்க வேண்டும். அவரது வைராக்கியத்தைப் பற்றிக் கேட்க வேண்டும். காதலித்தவள் கிடைக்கவில்லை என்பதற்காக கல்யாணமே இல்லாமல் வாழ்ந்து என்ன கண்டீர்கள் எனக் கேட்க வேண்டும். ஊருடன் பகைத்தால் வேருடன் கெடும் என்பது உண்மையா எனவும் கேட்க வேண்டும்.
Wednesday, September 22, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
When I am through with the post, I had some feeling that is hard to describe. Sort of uneasiness is what is left. An excellent post Mullai.
Post a Comment