Monday, March 10, 2008

நாலுறூள்

ங்கில எழுத்துக்களைத் தொடுத்து அழகாக எழுதிப் பழகுவதற்கு நாலுறூள் அப்பியாசப் புத்தகம் அன்றைய காலத்தில் பாடசாலையில் கட்டாயமாக இருந்தது. ஆனால் எப்பொழுதும் வியாபார நிலையங்களில் இதற்குத் தட்டுப்பாடாகவே இருந்து வந்தது.

எனது விற்பனை நிலையத்தில் அந்தக் குறை வராமல் பார்த்துக் கொண்டேன். எனது நிறுவனத்தில் கோடு போடுவதற்கான இயந்திரம் ஒன்று இருந்ததால் இது என்னால் முடிந்தது. ஆனாலும் அது ஒன்றும் இலகுவான வேலையல்ல. நீண்ட நேரங்களை எடுத்து விடும். பொறுமைகளைப் பெரிதாகச் சோதித்து விடும்.

நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் நடுவில் இரு கோடுகள் நீலத்திலும், அதன் மேல் கீழ்ப் பகுதியில் இரு கோடுகள் சிவப்பிலும் இருந்தன. அன்றைய வசதியின் பிரகாரம் இந்தக் கோடுகளைப் போடுவதற்கு நீலக் கோடுகளுக்காக ஒரு தடவையும் சிவப்புக் கோடுகளுக்காக ஒரு தடவையும் என தாள்களை இரண்டு தடவைகள் இயந்திரத்தில் போடவேண்டி வரும். இதில் வேலை அதிகம் என்றாலும், இரு தடவைகள் தாள்களை ஓட விடும் போது மைகள் சிந்தி விட்டால் சேதாரமும் ஏற்படும். இந்தக் காரணங்களால்தான் அப்பியாசப் புத்தகங்கள் தயாரிப்பவர்கள் நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தைப் பற்றி அதிகம் கவனம் எடுக்கவில்லை.

ஆனாலும் மொத்த வியாபாரத்தைத் தவிர்த்து எனது நகரத்தில் உள்ள பாடசாலைகளுக்குத் தேவையான அளவு மட்டுமே தயாரித்து விற்பது எனத் தீர்மானித்து நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தை அளவாகத் தயாரித்துக் கொண்டிருந்தோம். அவற்றை வியாபார நிலையத்தில் மட்டுப் படுத்தப் பட்ட வகையிலேயே ஒருவருக்கு ஒன்று, இரண்டு என விற்பனை செய்து கொண்டிருந்தோம். மொத்த வியாபாரம் என்பது நாலுறூள் அப்பியாசப் புத்தகத்தில் இல்லை என விற்பனை நிலையத்தில் எல்லோருக்கும் அறியத் தரப் பட்டிருந்தது.

அன்று நான் விற்பனை நிலையத்தில்தான் இருந்தேன். விற்பனை சூடு பிடித்திருந்தது.

"ஒரு கொப்பிக்கு மேல் தர ஏலாது.. "என தில்லையண்ணா ஒரு சிறுமிக்குச் சொல்லிக் கொண்டிருந்தார்.

இது வழக்கமாக நாலுறூள் அப்பியாசப் புத்தகம் வாங்குபவர்களுடன் நடக்கும் ஒரு விசயம். அத்தோடு தில்லையண்ணா மிகவும் பக்குவமாகக் கதைத்து வியாபாரம் செய்பவர். எனவே நான் அதில் அக்கறை காட்டவில்லை. அந்தச் சிறுமி சலிப்புடன் செல்வதை அவதானித்து விட்டு எனது வேலையில் கவனம் செலுத்தினேன். மீண்டும் அதே சிறுமி.

தில்லையண்ணா சற்று இறுக்கமாகச் சொன்னார்.
"ஆரெண்டாலும் தரேலாது. ஒராளுக்கு ஒரு கொப்பிதான்."

சிறுமி கோபமாத் திரும்பிச் சென்றாள். அவளுக்காக காத்திருந்த கார் அவளையும் ஏற்றிக் கொண்டு வேகமாகச் சென்றது.

"என்ன தில்லையண்ணா என்ன விசயம்?" பிரச்சினை ஒன்று உருவாகப் போகிறது என்ற அச்சத்துடன் கேட்டேன்.

"நாலுறூள் கொப்பி நூற்றைம்பது வேணுமாம். ஆளுக்கு ஒண்டுதான் தருவம் எண்டு சொன்னனான்." என்றார் தில்லையண்ணன்.

"தம்பி வந்திட்டுப் போனது ஜட்ஜின்ரை மகள். தாய்க்காரி இங்கிலிஸ் ரீச்சரா இருக்கிறா. ஒருவேளை வகுப்பிலை எல்லா பிள்ளைகளுக்கும் சேர்த்து வாங்கிறதுக்கு வந்திருக்கலாம்." என்று அப்புத்துரையண்ணை காதுக்குள் மெதுவாகச் சொன்னார்.

"காருக்குள்ளை ஆர் இருந்தவை? " அச்சத்துடன் கேட்டேன்.

"ஜட்சும் பெண்சாதியும்" சாதாரணமாகச் சொன்னார் தில்லையண்ணா.

"அண்ணை கேட்டது ஆரெண்டு தெரிஞ்சு கொண்டே இல்லை எண்டனீங்கள்?"
சற்று எரிச்சல் எனக்கு ஏறியிருந்தது.

"ஆராயிருந்தால் என்ன தம்பி? ஆளுக்கு ஒரு கொப்பிதான் எண்டால் ஜட்ஜ் என்ன புரொக்றர் என்ன? எல்லாம் ஒண்டுதான். " பேச்சு மாறாத தில்லையண்ணை சொல்லச் சொல்ல எனக்குத் தலையைச் சுற்றியது.

பாடசாலைப் பொருட்களின் விலை இதுதான் என்று நிர்ணயிக்கப்பட்டு, அதன் விலையில் இருந்து ஒரு சதமேனும் கூட்டி விற்றால் பெரும் அபராதம் கட்ட வேண்டும் என்ற இறுக்கமான சட்டம் இருந்த நேரமது. மேலும் விற்பனை நிலையத்தில் ஒரு பொருளை வைத்துக் கொண்டு இல்லை என்பது அதனிலும் மேலான குற்றம். அதுவும் நீதிபதியே வந்து பார்த்துப் போன விடயம். என்ன செய்வது என்று தெரியாமல் விழித்த போது, மூளை அறிவித்தது. இருக்கிற கொப்பிகளை அப்புறப் படுத்தி விடு என்று.

தில்லையண்ணாவிற்குச் சொன்னால் சரி வராது. போய்யே பேசாத மனிதர் அவர். வியாபாரம் என்றாலும் நேர்மை முக்கியம் அவருக்கு. எனவே அப்புத்துரையண்ணையிடம் சொன்னேன். "இருக்கிற நாலுறூள் கொப்பிகளை எடுத்துக் கொண்டு போய் என்னுடைய காருக்குள் வைத்து விடுங்கள்." என்று. "வீட்டுக்குப் போய் அண்ணனிடம் நடந்த விசயத்தைச் சொல்லி விடு" என்று மகாலிங்கத்திடம் சொன்னேன். அப்பொழுது எனது அண்ணன் எனது நகரத்தில் ஒரு சட்டத்தரணியாக இருந்தார்.

நிலைமை அறிந்து மகாலிங்கம் உடனடியாக வீட்டுக்கு ஓடினான். அப்புத்துரை அண்ணன் நாலுறூள் கொப்பிகளை கார்ட்போர்ட் பெட்டிகளுக்குள் வைத்துக் கட்டி மற்றவர்கள் அறியாமல் வெளியே நின்ற எனது வாகனங்களுக்குள் கொண்டு போய் வைத்துக் கொண்டிருந்தார். கடைசிப் பெட்டியை அவர் கொண்டு போய் வைத்து விட்டு வியாபார நிலையத்துக்குள் நுளையவும் பொலிஸ் ஜீப் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

"யாரடா இங்கே முதலாளி?"

நான் எதிர்பார்த்ததுதான். அப்பொழுது மாணிக்கராஜா என்பவர்தான் எங்கள் நகரத்தில் இரண்டாவது பொலிஸ் அதிகாரியாக இருந்தார். அதிகாரத்தை அதிகமாகவே காட்டுபவர். கொஞ்சமாக அவருடன் வாக்கு வாதம் செய்தால் போதும் பொறுமை காட்டாமல் கை கால்களால் பதில் சொல்லக் கூடியவர். மரியாதையை அவரிடமிருந்து எதிர்பார்ப்பது முட்டாள் தனம். நகரத்து ரவுடிகளை சட்டைக் கொலரில் பிடித்து இழுத்துச் செல்வதைப் பலமுறை பார்த்திருக்கிறேன். அவரது பெயரைக் கேட்டாலே சற்று உதறல் எடுக்கும். அப்படியானவர் எனது விற்பனை நிலையத்துக்கு முன்னால், அதுவும் உதவிக்கு நான்கு சிங்களப் பொலிசாருடன். அவர் சந்திக்க வேண்டிய ஆளாக வேறு நான் இருக்கிறேன்.

பாடசாலை முடிந்து விற்பனை களை கட்டியிருந்த நேரம். மாணிக்கராஜாவின் குரலைக் கேட்டவுடன் மெதுவாக வாடிக்கையாளர்கள் விலகிப் போகத் தொடங்கினார்கள்.

"என்னய்யா விசயம்?" அன்பாக அவரிடம் கேட்டது அப்புத்துரையண்ணன்.

"ஜட்ஜின்ரை மகளுக்கே கொப்பி இல்லை எண்டு சொன்னீங்களாம். என்ன துணிவடா உங்களுக்கு..? "

"இல்லை எண்டு சொல்லேல்லை. ஒண்டு தல்லாம் எண்டுதான் சொன்னனான்." தில்லையண்ணன் தனது நியாயத்தை நிலை நாட்ட வந்தார்.

"பொறுங்கோ அண்ணன்.. நான் கதைக்கிறன்... " அவசரப் பட்டு அவரைத் தடுத்தேன். அவர் வாய் தடுமாறி ஏதாவது சொல்லப் போக உதையை நான் எல்லவோ வாங்க வேண்டி வரும்.

"இஞ்சை பாருங்கோ.. கொப்பி ஒண்டுதான் இருந்தது. அதைத்தான் அவர் சொல்லியிருக்கிறார். மற்றும்படி வைச்சுக் கொண்டு நாங்கள் இல்லை எண்டு சொல்லேல்லை. "

சிறிது நேர அமைதி.

"எங்கையாவது கொப்பிகளை மாத்திட்டியோ?" சின்னதாக ஒரு நக்கல் அவரிடம் இருந்து வெளி வந்தது.

முன் எச்சரிக்கையாக அவரை விட்டு நாலடி தள்ளியே நின்றேன்.

"அப்பிடி ஒரு அவசியம் எங்களுக்கு இல்லை. ஏனெண்டால் நாங்களே கொப்பி செய்யிறனாங்கள். அவருக்குத் தேவை எண்டால் சொல்லுங்கோ, இண்டைக்குச் செய்து போட்டு நாளைக்கு குடுக்கிறம். "

"அதென்னடா நாளைக்கு.. கடைக்குள்ளை கொப்பி இருந்துதெண்டால்..." சொல்லிக் கொண்டே கடைக்குள் நுளைய முற்பட்டார்.

"ஐயா.. கொப்பி இல்லை ஐயா. " அப்புத்துரை அண்ணன் தைரியமாகச் சொன்னார்.

தில்லையண்ணன் குளப்பமாகப் பார்த்தார். வியாபாரம் மும்மரமாக நடந்து கொண்டிருக்கையில் அப்புத்துரை அண்ணன் எல்லாவற்றையும் அப்புறப் படுத்திய விடயம் தில்லையண்ணனுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

உள்ளே நுளைய முற்பட்ட மாணிக்கராஜா சற்றுத் தயக்கம் காட்டினார். இது எனக்கு சாதகமான ஒரு அறிகுறியைத் தந்தது.

"இஞ்சை பாருங்கோ இப்ப வியாபாரம் நடக்கிற நேரம். தேவையில்லாமல் குளப்பத்தை ஏற்படுத்தாதையுங்கோ. கடைக்குள்ளை நுளையிறது எண்டால் அனுமதியோடை வாங்கோ."

சிவந்த அவரது முகம் இன்னும் சூடேறி கொதிப்பது தெரிந்தது. ஏதோ நடக்கிறது என்று அறிந்து வேடிக்கை பார்க்க ஒரு கூட்டம் வேறு கூடியிருந்தது. எனது வாய் உளறிக் கொட்டியதற்கு இப்பொழுது என்ன நடக்கப் போகிறது என்ற பயம் எனக்குள் இருந்து வியர்வையாக வெளியே கொட்டிக் கொண்டிருந்தது.

ஒரு தடவை தனது பார்வையை சுற்றி நோட்டம் விட்டவர், என்ன காரணமோ தெரியவில்லை. "பொறு வாறன். அரை மணித்தியாலத்துக்குள்ளை வாறன். ஒரு இடமும் போகக் கூடாது. கடையிலையிலேயே நிக்கோணும். இண்டோடை உன்ரை கடைக்கு சீல் வைக்கிறன்" எள்று உறுமி விட்டு ஜீப்பில் ஏறிப் போனார்.

சிறிது நேரத்தில் அண்ணனும், எனது அக்காவின் கணவரும் வந்தார்கள். அக்காவின் கணவரும் ஒரு சட்டத்தரணிதான். அவர் இலண்டனில் சொலிசிற்றேர்ஸ் முடித்து விட்டு ஊருக்கு வந்திருந்தார். இருவரிடமும் விசயத்தைச் சொன்னேன். ஆனால் மாணிக்கராஜாவின் குணாதிசயங்களை மட்டும் அவர்களிடம் மறைத்து விட்டேன். இருவரும் என்னிடம் தகவல்களைப் பெற்றுக் கொண்டு காவல் நிலையத்துக்கு மாணிக்கராஜாவைச் சந்திக்கச் சென்றார்கள்.

அரை மணித்தியாலங்கள் கடந்திருக்கும். மீண்டும் மாணிக்கராஜா கடைக்கு முன்னால் வந்து நின்றார்.

அப்புத்துரையண்ணன் என்னைக் கூப்பிட்டுச் சொன்னார்.
" தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார். "

அரை மணித்தியாலத்துக்குள் வருகிறேன் என்று சொல்லிப் போனவர் சொன்னபடி அரை மணித்தியாலத்துக்குள் வந்து நிற்கிறார். போனவர்கள் சொதப்பி விட்டார்களோ இல்லை இவரை அவர்கள் சந்திக்கவே இல்லையோ என்ற குழப்பத்துடன் எழுந்து முன்னுக்குப் போனேன்.

"என்னடா நீ..? இதுக்குப் போய் லோயர்ஸை அனுப்பியிருக்கிறாய். அவங்கள் என்னவோ வியாபாரம் நட்டம். பெயர் கெட்டுப் போச்சுது, மான நட்டம் எண்டு கனக்க கதைக்கிறாங்கள். ஜட்ஜ் சொன்னவர் எண்ட படியால் வந்து கேட்டன். கேக்காட்டில் பிழை எல்லோ? அவர் நாளைக்கு போய்க் விசாரிச்சனியோ எண்டு கேட்டால் என்ன சொல்லுறது? சரி இந்தப் பிரச்சினையை இதோடை விடு. நான் சமாளிக்கிறன். நீயும் ஆக்களைப் பாத்து வியாபாரம் செய்யப் பழகிக் கொள் லோயர்சுக்கும் சொல்லிவிடு, பிரச்சினை எல்லாம் முடிஞ்சுதெண்டு." சொல்லி விட்டு தோளில் தட்டி நட்பு பாராட்டி விட்டுச் சென்றார்.

அடுத்த நாள் காலையிலேயே அப்புத்துரை அண்ணனுக்கு பாடசாலைக்கு 150 நாலுறூள் கொப்பிகளைக் கொண்டு போய்க் கொடுக்க வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருந்தது.

No comments: