Tuesday, May 27, 2008

தாயின் மடியில் தலை வைத்திருந்தால்...

எனது சிறு வயதில் எனது தந்தை காலமாகி விட்டதால், எனக்கு எல்லாமாக எனது தாயே இருந்தார். அப்பொழுதெல்லாம் எனது தாயார் நிற்கும் இடத்திற்கு பின்னால் சற்று எட்டிப் பார்த்தால் நான் நிற்பது தெரியும். எனது அம்மா போகும் இடம் எல்லாம் அவரது சேலையின் நுனியைப் பிடித்தபடி நான் போய்க் கொண்டிருப்பேன்.


ஒருநாள் பக்கத்து வீட்டு இரத்தினக்கா எனது அம்மாவைக் கூப்பிட்டுச் சொன்னார். " இவன் என்ன எப்ப பாத்தூலும் உங்கடை சாறியைப் பிடிச்சுக் கொண்டு திரியிறான். நாளைக்கு உங்களுக்கு ஏதும் ஆச்சுது எண்டால் என்ன செய்யப் போறான்? இப்பிடித்தான் தாயும் இல்லாமல் தகப்பனும் இல்லாமல் அங்கை ஒரு பிள்ளை பெரிய கஸ்ரப் படுறான்.. " என்று யாருடையதோ கதையைச் சொல்லிக் கொண்டிருந்தார். அம்மாவுக்கு வேண்டியவர்கள் யாரேனும் ஏதாவது சொன்னால் அதை அப்படியே ஏற்றுக் கொள்ளும் குணம் அம்மாவிடம் இருந்தது. அன்றும் அது அப்படியே ஆயிற்று.


இரவு படுக்கும் போது எனது முன்தலையைக் கோதி விட்டு என்னை நித்திரையாக்கும் எனது தாய் எனதருகில் படுக்கவில்லை. அன்று அம்மா என்னை விட்டுப் போகாமல் இருக்கும் வண்ணம் அம்மாவின் சேலை நுனியைப் பிடித்துக் கொண்டு அம்மாவைப் பார்த்த வண்ணம் தூங்கிப் போனேன். விடிந்து பார்த்த பொழுது அம்மாவின் சேலை நுனி என் கையில் இருந்தது. அம்மா படுக்கையில் இல்லை. சேலையை மட்டும் என்னிடம் தந்து விட்டு வேறொரு சேலையைக் கட்டிக் கொண்டு அவர் எழுந்து போய் விட்டிருந்தார். எனது தலையைக் கோதி என்னை நித்திரையாக்கும் அவரது பணி முற்றுப் பட்டுப் போயிருந்தது பின்னாளில் விளங்கியது.


சமீபத்தில் எனது தாயார் காலமான போது நியூசிலாந்து சென்று அவரது இறுதிக் கிரிகைகளில் பங்கு பற்றினேன். எல்லாம் முடிந்து அக்காவின் வீட்டில் இருந்த போது அக்கா சொன்னாள் "உனக்கு அம்மாவின் நினைவாக ஏதும் வேணும் எண்டால், அம்மாவின்ரை அறைக்குள்ளை இருக்கு எடுத்துக் கொள்". என்று.


நான் புறப்படும் போது நினைவாக அம்மாவின் அறைக்குள் சென்று அம்மாவின் பொருட்களை அலசத் தொடங்கினேன். அக்கா அம்மாவின் நகைகள், பொருட்கள் என என்னென்னவோ எடுத்துக் காட்டினாள். எனது மனம் ஒரு சேலை மீது நிலை கொண்டிருந்தது. அந்த சேலையை அம்மா தனது 85வது பிறந்த நாளில் அணிந்திருந்தார். கத்தரிப்பூ நிறமுமில்லாமல், மண் நிறமும் இல்லாமல் இரண்டும் கலந்த ஒரு அழகிய நிறச் சேர்க்கையில் அந்த சேலை இருந்தது. எனக்கு இது மட்டும் போதும் என்று அந்த சேலையை எடுத்துக் கொண்டேன்.


வெலிங்டனில் இருந்து ஓக்லன்ட் உள் ஊர் விமான நிலையத்தில் வந்து இறங்கினேன். அங்கிருந்து சர்வதேச விமான நிலையத்திற்குப் போவதற்கு ஒவ்வொரு இருபது நிமிடங்களுக்கு பஸ் சேவை இருந்தது. நான் அங்கு போய்ச் சேர்ந்த போது பஸ் போய் விட்டிருந்தது. இன்னும் இருபது நிமிடங்கள் காத்திருக்க வேண்டும் அல்லது நடந்து போக வேண்டும். தனியாக அங்கு காத்திருக்க மனது இசையவில்லை. நடக்க ஆரம்பித்தேன்.

தோளில் தொங்கும் பையில் அம்மாவின் சேலை இருந்தது. அன்று நான் சிறுவனாக இருந்த போது தனக்கு ஏதும் நடந்து விட்டால் தனித்து வாழப் பழகிக் கொள் என்று என்னிடம் தனது சேலையைத் தந்து விட்டு எட்டிப் போன அம்மா நினைவில் வந்தார். இன்று மட்டும் என்ன தனது சேலையைத் தந்து விட்டு என்னை விட்டுப் போயிருந்தார். நினைத்த போதே கண்களில் இருந்து கண்ணீர் கொட்டத் தொடங்கியது. உள் ஊர் விமான நிலையத்தை நோக்கிப் போய்க் கொண்டிருந்தவர்கள் என்னை ஒரு விதமாகப் பார்ப்பது தெரிந்தது. நான் எதையும் சட்டை செய்யவில்லை. எனது தோளில் இருந்து தொங்கிய அம்மாவின் சேலை இருந்த பையை கைகளால் பற்றியபடி நடந்து கொண்டிருந்தேன்.

1 comment:

Anonymous said...

Vanakkam,

No words to comfort you.



Warm regards.
Nithya
bangalore