Saturday, July 26, 2008

கடவுளின் கனி

கருணை என்கின்ற பொழுது கடவுளையும் முந்தி மனதில் நிற்பவள் தாய்தான். தாயைப் பற்றி நினைக்கும் போதே உள்ளம் குழந்தைத் தனத்துக்குத் தானாக வந்து போகிறது.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம். மணிக்கணக்கில் அல்ல வேண்டுமானால் நாள் முழுவதும் அவற்றை பராமரிப்பதில் நேரத்தை செலவிடுவார். மரங்களின் வளர்ச்சியில் குதூகலிப்பார். அவை பூக்கும் போது பூரித்துப் போவார். அவை காய்த்து கனி தரும் போது களிப்பெய்துவார்.


ஒரு தடவை வீட்டின் மதிற் சுவர் ஓரமாக எனது அம்மா ஒரு கொய்யா மரத்தை நட்டு வைத்தார். அவர் நட்டு வைத்த இடம் பூச் செடிகளுக்காக ஒதுக்கி வைக்கப் பட்டிருந்த இடம்.

"பூச்செடிகளின் மத்தியில் இது எதற்கு?" என்று கேட்டேன்.

"அவை பூக்க மட்டும்தான் செய்யும் இது காய்க்கவும் செய்யும்" என்று அவரிடம் இருந்து பதில் வந்தது.

அம்மாவின் செயற்பாடுகள் எதுவானாலும் அதற்கு வீட்டில் மறு பேச்சுக் கிடையாது. ஆகவே கொய்யா மரத்திற்கு வளர வாய்ப்பு இலகுவாகக் கிட்டியது. அம்மாவின் பராமரிப்பில் கொய்யாவுக்கு அதிக மகிழ்ச்சி போலும். வேகமாக வளர்ந்து மதிலை விட உயரமாக நின்றது. வெகு விரைவிலேயே இரண்டு கனிகளை வெளிக் காட்டியது. கொய்யாக் கனிகளைக் காட்டி எனது அம்மா பெருமைப் பட்டுக் கொள்வார். உண்மையிலேயே அவரின் பெருமையில் அர்த்தம் இருந்தது. கனிகள் ஏறக்குறைய ஒரு தேங்காயின் அளவுக்குப் பெருத்து மஞ்சளும், பச்சையும் கலந்து அழகான நிறச் சேர்க்கையுடன் இருந்தன. கொய்யா மரத்தைக் கடந்து செல்லும் போது பழத்தின் வாசனை பறித்துச் சாப்பிடு என்று சொல்லும்.

அம்மாவிடம் சொன்னேன், "அணில் கொறிக்கப் போகுது. இல்லை என்றால் பறவைகள் கொத்தப் போகின்றன" என்று.

"எதுவுமே நடக்காது" என்று உறுதியாகச் சொன்னார்.

"நானாவது சாப்பிடுகிறேன்" என்றேன்.

"பொறு, பழம் இன்னும் பெருக்க வாய்ப்பிருக்கு. உனக்குக் கிடைக்கும். ஆனால் முதல் பழம் கடவுளுக்கு. இரண்டாவதுதான் உனக்கு" என்று சிரித்துக் கொண்டே சொன்னார்.


ஒருநாள் காலை எனது அம்மா என்னை அவசரமாக அழைத்தார். ஓடிப் போய்ப் பார்த்தால் கொய்யா மரத்தடியில் சோகமாக நின்றார். அவரது சோகத்தைக் கண்டதும் எனது கண்கள் உயர்ந்து நின்ற கொய்யா மரத்தைப் பார்த்தன. அது தனது ஒரு கனியை தொலைத்திருந்தது. மதிலுக்கு மேலால் வளர்ந்திருந்ததால் வீதியால் போகிறவர் யாரோ பறித்து விட்டார்கள் என்பது தெளிவாயிற்று. கடவுளுக்கு நேர்ந்ததை களவாணி கொண்டு போய் விட்டான்.

எனது அம்மா எவ்வளவு கவலை அடைந்திருப்பார் என்பதை என்னால் உணர முடிந்தது.

"இனியும் பார்த்துக் கொண்டிராமல் அடுத்ததை பறிச்சு கடவுளுக்குக் குடுங்கோ" என்று சொல்லி விட்டு நான் போய் விட்டேன்.

அன்று மாலை வீடு திரும்பிய போது மேசையில் தட்டில் கொய்யாக் கனி வெட்டி வைக்கப் பட்டிருந்தது.

"கடவுளுக்குக் குடுக்கேல்லையா?" என்றேன்

"பேச்சு மாறக் கூடாது. இரண்டாவது கனி உனக்குத்தானே" என்று அம்மாவிடம் இருந்து புன்னகையுடன் பதில் வந்தது.

கடந்த04.04.2008 இல் எனது தாயார் மரணம் அடைந்த செய்தி வர துயரத்துடன் அவரது இறுதி நிகழ்வில் கலந்து கொள்ள நியூசிலாந்து சென்றிருந்தேன். எல்லாம் முடிந்து நியூசிலாந்தில் எனது சகோதரியின் வீட்டுத் தோட்டத்தில் காலைச் சூரியனை மலைகளின் உச்சியில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
அக்காவின் மகன் ஜனகன் சொன்னான் "இதில் இருக்கும் மரங்கள் அத்தனையும் அம்மம்மாதான் வளர்த்தார். அந்த அப்பிள் மரமும் அவர் வளர்த்ததுதான்"

வேலி ஓரமாக பூச் செடிகளுக்கு மத்தியில் இருந்த அப்பிள் மரத்தை நெருங்கிப் பார்த்தேன். மரம் ஒன்றும் உயரமாக வளரவில்லை. ஆனால் சிவந்த காய்கள் அதில் அழகாக இருந்தன. அம்மாவின் பிரியத்தில் அவை கனி தந்திருக்க வேண்டும் என்று மனது சொன்னது. அன்று கொய்யா. இன்று அப்பிள்.

எனது அம்மாவுக்கு மரங்கள் வளர்ப்பதில் அலாதிப் பிரியம்.

1 comment:

Unknown said...

This is written so beautifully! When I started reading it I had a smile on my face because I remember being told about this insident with the fruit. But at the end it left me with tears because it made me realize how horribly I miss this amazing person. She didn't just love us she even loved every single plant she planted and took care of it like her own babies. These plants replicated thir love in blossoming with beautiful flowers and fruits.

Theepa