லண்டன் போயிருந்த போது, நீண்ட வருடங்களின் பின் றஞ்சித்தை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.
அதுவும் தற்செயலாகத்தான்.
அவன் லண்டனில்தான் வசிக்கின்றான் என்பது எனக்கு முன்னரே தெரியாது. தவிர அவனைப் பற்றி அறிந்து கொள்ள ஆர்வம் எனக்கு இல்லாதிருந்ததையும் நான் இங்கு ஒப்புக் கொள்ள வேண்டும்.
லண்டனில் தெரிந்தவர் ஒருவர் சொல்லத்தான் அவன் அங்கு இருப்பதை அறிந்து கொண்டேன்.
எதற்கும் இருக்கட்டும் என்று அவனைப் பார்த்து வரலாமென்று அவன் வீட்டுக்குப் போனேன்.
தோழமை மாறாத அதே நட்புடன் வரவேற்றான்
சமீபத்தில் நடந்த ஒரு வாகன விபத்தில் உயிர் பிழைத்து மீண்ட விசயத்தை விலாவாரியாகச் சொன்னான்.
றஞ்சித்தை எனக்கு ஒன்பது வயதில் இருந்தே தெரியும். இருவருக்கும் ஒரே வயதுதான்.
எனது ஊரிலிருந்து 22 மைல் தொலைவில்தான் அவனது ஊர் இருந்தது. அவனது ஊர் படிப்பு வாசம் குறைந்த பகுதியானதால் படிப்பதற்காக சிறு வயசிலேயே எங்கள் ஊருக்கு வந்துவிட்டான். எனது ஊரில் அவனது உறவினர் சிலர் இருந்தபடியால் எங்கள் ஊரில் தங்கிப் படிப்பது அவனுக்கு சிரமமாக இருக்கவில்லை.
இருவரும் ஒரே வகுப்பு.
அவன் கணக்கில் பூனை. நான் புலி.
நான் செய்யும் கணக்குகளை அப்படியே பிரதி எடுத்துக் கொள்வான்.
பாடசாலை முடிந்து மாலையில் என்னுடன்தான் சுற்றுவான். எங்களின் அடுத்த கூட்டு தேவதாஸ். தேவதாஸ் படிப்பது வேறு பாடசாலையானாலும் விளையாட்டு என்றால் எங்களுடன்தான்.
விளையாட ஒன்றும் இல்லையென்றால் மாசிலாமணியண்ணையின் வீட்டு மதிலில் இருந்து கதைத்துக் கொண்டிருப்போம்.
கடை கண்ணிக்குப் போவதற்கு அவர்களுக்கு எங்களது உதவி தேவைப்படும் என்பதால், நாங்கள் மதிலில் இருப்பதை அவரோ அல்லது மணியக்காவோ கண்டு கொள்வதில்லை.
மாசிலாமணியண்ணைக்கு ஒரு தம்பி இருந்தான். எங்களையொத்த வயதுதான் அவனுக்கும்.
அவனது பெயர் ஞாபகமில்லை. அவனை சின்னக்குட்டியென்றே நாங்கள் கூப்பிடுவோம்.
எப்போதாவது தமையனைப் பார்க்க தனது கிராமத்திலிருந்து வருவான். வந்தாலும் ஓரிரு தினம்தான் அங்கு தங்குவான். இம்முறையும் அவன் வந்திருந்தான்.
நாங்கள் மூவரும் மதிலில் இருந்துகொண்டே சமீபத்தில் பார்த்த ஆயிரத்தில் ஒருவன் படத்தைப் பற்றிக் கதைத்துக் கொண்டிருந்தோம்.
றஞ்சித் ஏறக்குறைய ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போலவே ஆகியிருந்தான். பனை மட்டையில் வாள் போல் சீவி செதுக்கி இடுப்பில் சொருகியிருந்தான்.
இடுப்பில் கைவைத்த வண்ணம் எம்.ஜி.ஆர். போஸ் கொடுக்கும் காட்சி அந்தப் படத்தின் கட்அவுட் ஆக இருந்தது. றஞ்சித்தும் அடிக்கடி அப்படி போஸ் கொடுப்பான்.
சின்னக்குட்டி எங்களுடன் சேர்ந்து கொள்வதற்காக மதிலில் தாவி ஏறி றஞ்சித்துக்குப் பக்கத்தில் அமர்ந்து கொண்டான். ஏனோ றஞ்சித் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. சின்னக்குட்டியை மதிலைவிட்டு இறங்கச் சொன்னான். சின்னக்குட்டி மறுத்துவிட்டான். தான் தனது அண்ணன் வீட்டு மதிலில் உட்கார்ந்திருப்பதாகவும், தன்னை இறங்கச் சொல்வதற்கு றஞ்சித்துக்கு உரிமையில்லையென்பது அவனது வாதம். சின்னக்குட்டியின் இந்த வாதம் றஞ்சித்துக்கு கடுப்பேத்திவிட்டது.
ஒரு கட்டத்தில் றஞ்சித் சின்னக்குட்டியை மதிலில் இருந்து கீழே தள்ளிவிட்டு தானும் கீழே குதித்து ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர். போல் போஸ் கொடுத்துக் கொண்டு நின்றான்.
சின்னக்குட்டிக்கு அவனது தன்மானத்தை இழுத்துவிட்டது போன்ற நிலை. ஓடிப்போய் நிலத்தில் இருந்த ஓரு பனைமட்டைத் துண்டை எடுத்துக் கொண்டான்.
படத்தில் அட்டைக் கத்தியென்றால், இங்கே மட்டைக் கத்தி.
பட்..பட் என்ற சத்தத்துடன் மட்டைகள் மோதிக் கொண்டன.
படத்தில் சண்டை நடக்கும்போது எம்.ஜி.ஆரும் நம்பியாரும் பேசிக் கொள்வார்கள்.
நம்பியார்- மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா?
எம்.ஜி.ஆர் - சினம் கொண்ட சிங்கத்திடம் தோற்றோடும்.
புழுதிகள் கிளம்பின.
நானும் தேவதாசும் பல்கணியில் அதுதான் மதிலில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தோம்.
ஒரு கட்டத்தில் சின்னக் குட்டியின் மட்டையை றஞ்சித் கையால் பிடித்துவிட்டான்.
அடுத்து என்ன?
ஆவல் மிகுதியால் நாங்கள் இருவரும் தரையில் நின்றோம்.
சின்னக்குட்டியால் ஓடித் தப்பமுடியாது என்பது தெரிந்தது. ஓடினால் றஞ்சித் துரத்தித் துரத்தி மட்டையால் விளாசுவான் என்பது தெரிந்தது. றஞ்சித்தின் கடைவாயில் புன்சிரிப்பு. வெற்றிக் களிப்பில் கதாநாயகன்.
எதிர்த்துப் போராடுவதே சின்னக்குட்டிக்கு ஒரே வழியாக இருந்தது. றஞ்சித்தின் கையில் இருந்து தனது மட்டையை மீட்பதற்காக தனது பலத்தையெல்லாம் திரட்டி இழுத்தான்.
பயங்கரமான அலறல் சத்தம்.
கையைப் பிடித்தவண்ணம் றஞ்சித் கதறிக் கொண்டிருந்தான். அவனது உள்ளங்கையில் இருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது.
மட்டையில் கருக்கு இருந்ததை யாருமே கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அந்த அமளியில் ஓடிய சின்னக்குட்டி பிறகு அந்தப் பக்கம் வரவேயில்லை.
எங்கள் கதாநாயகன் உள்ளங்கையில் போட்ட தையலுடன் உடுப்பு மாத்தவே கஸ்ரப் பட்தெல்லாம் திரைமறைவுச் செய்திகள்.
“ஆக்சிடெண்ட்டிலை இவர் தப்பினதே பெரிய புண்ணியம். காரைப் பாக்கமாட்டீங்கள் அப்பிடி சப்பளிஞ்சு போச்சு. ஏதோ மனுசன் தப்பிட்டுது அது போதும் “
றஞ்சித்தின் மனைவி தேனீரைத் தந்து எனக்குச் சொன்னார்.
“எனக்கடா ஆயுள் கெட்டி. டபுள் ஆயுள்.. இஞ்சைபார் கையை“
தனது உள்ளங்கையை எனக்குக் காட்டினான்.
உண்மை ஆயுள் ரேகைக்குப் பக்கத்தில் அதை மிஞ்சும் வகையில் அதைவிட ஆழமாக பதிந்திருந்தது இன்னும் ஒரு ரேகை.
அட அது சின்னக்குட்டியின் கருக்கு மட்டை இழுத்த வடு.
Friday, June 11, 2004
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment