Sunday, June 27, 2004

சந்தைக்கு வந்த கிளி

எனது கிராமம் நகரத்திலிருந்து இரண்டு மைல் தள்ளியே இருந்தது.
எனது கிராமத்திலே ஒன்றுக்கு மூன்று கடைகள் இருந்ததால் எங்கள் தேவை அங்கேயே பூர்த்தியாகிவிடும்.

முக்கியமான பொருட்கள் வாங்குவதாயிருந்தால் அல்லது வங்கி, அஞ்சல் அலுவலகம், சினிமா இப்படி ஏதாவதற்குப் போக வேண்டிய தேவை இருந்தால் மட்டுமே நகரத்துக்குப் போவோம்.

மரக்கறி, மீன்வகைகள்கூட கிராமத்திற்கு வந்துவிடும்.

இதில் மீன் கொண்டுவருபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கே வருவார்கள். அவர்கள் நகரச் சந்தையில் கொள்வனவு செய்து ஒவ்வொரு கிராமங்களாக விற்று வருவார்கள்.

குறிப்பிட்ட நேரத்துக்குள் விற்கப்படாவிட்டால் மீன்கள் பழுதடைந்து விடும். அதானால் எல்லா வியாபாரிகளும் எப்பொழுதும் ஓட்டமும் நடையுமாகவே இருப்பார்கள்.

இதற்குள் வியாபாரிகளுக்குள் போட்டியிருப்பதால் நான் முந்தி நீ முந்தி என்று ஓடியோடியே வியாபாரம் செய்வார்கள்.

இதில் குறிப்பிடப் படவேண்டியது என்னவென்றால் எல்லா வியாபாரிகளும் பெண்களாகவே இருப்பார்கள்.

ஓலைப் பெட்டியில் மீன்களை வைத்து மூடியபடியே சுமந்து வருவார்கள். மீன்பெட்டியைக் கீழே வைத்து திறந்தவுடன் எல்லோரும் இன்றைக்கு என்ன மீன் என்று ஆவலாக எட்டிப் பார்ப்பார்கள். அதுவரைக்கும் இன்றைக்கு என்ன மீன் சமைக்கலாம் என்பது அவர்களுக்கு ஒரு சஸ்பென்ஸாகவே இருந்திருக்கும். நிட்சயமாக நண்டு, இறால், கணவாய் என்பது இவர்களிடம் இருக்காது. அவைகளை வாங்குவதாயின் சந்தைக்குத்தான் போக வேண்டும்.

சந்தையில் அன்றைக்கு என்ன மீன் வகைகள் மலிவோ அது அவர்கள் பெட்டியில் நிறைந்து இருக்கும். சந்தையிலுள்ள விலையைவிட எப்படியும் இரண்டு மூன்று மடங்கு அதிகமாகவே அவர்கள் விலை சொல்வார்கள். அவர்கள் கூறும் விலைக்கு யாருமே வாங்கமாட்டார்கள். எல்லா அம்மாமார்களும் பேரம் பேசித்தான் வாங்குவார்கள்.

எனது வீட்டுக்கு அருகேயிருக்கும் ஒழுங்கையிலுள்ள அரசமரத்தடிதான் இந்த மினி சந்தை. இல்லத்தரசிகள் அந்த மரத்தடி நிழலில் காத்திருந்து அந்த வழியாகப் போகும் மீன் வியாபாரிகளை மறித்து மீன் வாங்குவார்கள். மரத்தடியில் வாங்குபவர் தொகை குறைவாயிருந்தால் வியாபாரி நிற்கமாட்டார். அவர் அடுத்த கிராமத்திற்குப் போக துரிதம் காட்டுவார்.

நான் பலமுறை அம்மாவுடன் இந்த இடத்திற்குப் போயிருக்கின்றேன். அம்மா பேரம்பேசி மீன் வாங்குவதை ரசித்துப் பார்த்திருக்கிறேன்.

ஒரு சனிக்கிழமை நண்டு வேணும் என்று அம்மாவைக் கேட்டேன். சந்தைக்கு யாரும் போனால் சொல்லிவிடுகிறேன் என்று அம்மா சொன்னா. ஆனால் சந்தைக்குப் யாரும் போவதாகத் தெரியவில்லை. எனவே நானே போய் வாங்கி வருவதாக அம்மாவிடம் சொன்னேன்.
அம்மா சிரித்துக் கொண்டே,
„ என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? உன்னை ஏமாத்தி பழுதானதெல்லாத்தையும் தந்து விடுவாளுகள்.. பிறகு அடுத்த கிழமை பாப்பம் „ என்றா.
ஆனாலும் நான் நம்பிக்கை தெரிவித்ததால், எனது விருப்பத்துக்கு குறுக்கே நிற்க விருப்பமில்லாமல் பணத்தைத் தந்து வழியனுப்பி வைத்தா.

நகரத்து மீன் சந்தை ஈக்களாலும், ஆட்களாலும் நிறைந்தே இருந்தது. ஏலம் கூறுவது, கூவி விற்பது, பேரம் பேசுவது என்று சந்தை சத்தத்தில் மூழ்கியிருந்தது.

கையில் பையுடன் உள்ளே நுழைகிறேன்.

தரையில் அமர்ந்து பெட்டியின் மூடிமேல் மீன்களை பரப்பி வைத்து பெண்கள் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்கள்.

நண்டு பரப்பி வைத்திருந்த பெட்டியின் முன்னால் போய் நின்றேன்.

"வா... ராசா.. நண்டு வேணுமே.. நல்ல நண்டு.. பொம்பிளை நண்டு .. மலிவா போட்டுத்தாரன்.. எத்தினை வேணும்..?"
வியாபாரியின் கனிவான பேச்சு என்னை வெகுவாகக் கவர்ந்திருந்தது.

அன்பான வரவேற்பு. நண்டுப் பெட்டியின் முன்னால் குந்தினேன்.

ஒரு நண்டின் காலைப் பிடித்துத் தூக்கிப் பார்த்தேன். பாரமாகத்தானிருந்தது.

" பாத்தியே.. நல்ல சதையிருக்கு.." சொல்லியபடியே என் கையில் இருந்த நண்டை வாங்கி மீண்டும் பெட்டியில் வைத்தார் வியாபாரி.

" என்ன விலை?"

விலையைச் சொன்னார்.

அம்மா பேரம் பேசி வாங்குவது நினைவுக்கு வந்தது.

வியாபாரி சொன்ன விலையை மனதுக்குள் இரண்டால் வகுத்துக் கொண்டேன்.
இப்போ அவர் சொன்ன விலைக்கு பாதி விலை கேட்டேன்.

பெரிதாக இடி விழத் தொடங்கியது.
இடிவிழுந்தால் அர்ச்சுனா.. அர்ச்சுனா.. என்று சொல்லிக் கொண்டு இரண்டு கைகளாலும் காதைப் பொத்த வேண்டும் என்று சொல்வார்கள். இங்கும் காதை இறுகப் பொத்திக் கொண்டு அசிங்கம்.. அசிங்கம் என்று சொல்ல வேண்டும் போலிருந்தது.

வியாபாரியின் வாயிலிருந்து விழுந்த வார்த்தைகள் இதுவரை நான் கேட்காத வார்த்தைகள். அத்தனையும் தமிழில்தான்.
தமிழில் இவ்வளவு கெட்ட வார்த்தைகளா?

கேட்டதில் காது வெட்கப் பட்டது. ஆகவே எழுதுவது இயலாது.

"...................... வந்திட்டார் bagஐயும் தூக்கிக் கொண்டு.................."

பேச்சின் அதிர்ச்சியால், குந்தியிருந்த நான் இப்போ பின்னால் கைகளை ஊன்றி கால்களை நீட்டி தரையில் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்.

சந்தையின் சத்தம் அடங்கியது போல இருந்தது. எல்லோரும் என்னையே பார்ப்பது போன்ற பிரமை.

கூனிக் குறுகியபடி மெதுவாக எழுந்து, காற்சட்டையில் ஒட்டியிருந்த மண்ணைக் கூடத் தட்ட முடியாதவயனாய் சந்தையை விட்டு வெளியே வந்தேன்.

" என்னாலையே இஞ்சை இவளுகளிட்டை கதைச்சு மீன் வாங்கேலாமலிருக்கு... நீ.. என்னத்தை வாங்கப் போறாய்..? ..."
அம்மாவின் வார்த்தைகள் காதில் ஒலித்தன.
ஓங்கி அழவேண்டும் போலிருந்தது. சந்தைக்கு வெளியேயும் ஆட்கள் நடமாட்டம் அதிகமாகவேயிருந்தது. தன்மானம் விடவில்லை அடக்கிக் கொண்டேன்.

பஸ் நிலையத்தில் எனது கிராமம் வழியாகப் போகும் 750 இலக்க பஸ் இற்குப் பின்புறமாக நின்று ஒரு பத்து வயதுச் சிறுவன் கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை யாரும் பார்த்திருக்க மாட்டார்கள்.

முல்லை

2 comments:

Jeevan said...

கேவிக் கேவி அழுது கொண்டிருந்ததை முல்லையை நான் பார்த்தது போல இருக்கே?

Mullai said...

இருக்காதே..
அந்தக் காலகட்டத்தில் நீங்கள் பிறந்திருக்க வாய்ப்பில்லையே...